அரசியல் கட்டுரைகள்

சர்வதேச வல்லரசுகளின் நலன்களுக்கும் மக்கள் போராட்டத்துக்குமான இழுபறி!

தென்னிலங்கை அரசியல் களம் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை விடுத்து அரசியல் நெருக்கடியால் சூழப்பட்டுள்ளது. பிரதானமாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு ஆதரவான தரப்பும் அதனை முறியடித்து இலங்கைத்துpவில் உள்ள அனைத்து தேசியங்களின் சமத்துவமான வாய்ப்பை முன்னிறுத்தும் நோக்கு நிலையும் தமக்குள் மோதிக்கொள்வதை காண முடிகிறது. அதாவது, அரசியலமைப்பு ஆதாரமாகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் இரு அணிகளாக ஆட்சி தரப்பும் போராட்டக்குழுவின் ஒரு தரப்பும் செயற்பட போராட்டத்தை முன்னிறுத்திய தரப்பானது தெளிவான முறைமை மாற்றம் பற்றிய அணுகுமுறையோடு தென்னிலங்கை களம் பரிமாணம் பெற தொடங்கியுள்ளது. இத்தகைய பரிமாணத்துக்கு பின்னால் இயங்கும் அரசியலையும் அரசியல் சக்திகளின் அணுகுமுறைகளையும் இக்கட்டுரை அவதானிக்க முடிகிறது.

ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்திருந்தார் என்பது இறுதியாக வெளிவந்த வர்த்தகமானி தெளிவுபடுத்துகிறது. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்பவர் முடிக்குரிய மன்னனாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு எற்பவே சட்டமும் சட்டத்திற்கு அமைவான பலவீனங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதனையே ஜூலை-13அன்று வெளியாகிய வர்த்தகமானி நாட்டுக்குள் மட்டுமல்ல நாட்டை விட்டு வெளியேறிய பிற்பாடும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரயோகத்துக்குள் உட்படுத்த முடியுமென்பதை இலங்கை அரசியலமைப்பு உலகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது. அதன்பிரகாரமே போராட்ட குழுவினருக்கும், அரசியலமைப்புக்கு உட்பட்டு உரையாடுபவர்களுக்கும் இடையில் முரண்பாடு தீவிரம் பெறுகிறது. அதுமட்டுமன்றி ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்புக்களையும் பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாரான்மைவாதியாகவும், போராட்டக்காரர்களை ஆதரிப்பவராகவும் அடையாளம் காட்டிக்கொண்டவர் அத்தகைய நிறைவேற்றதிகாரத்துக்கு உட்படுகின்ற போது சர்வதிகார அணுகுமுறையையே வெளிப்படுத்தியிருந்தார். எனவே போராட்டக்கார்கள் முன்வைக்கும் புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடல் நிறைவேற்றதிகார தளத்திலிருந்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய அரசியல் நெருக்கடியின் ஓர் அங்கமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வெளியேற்றப்படுவதற்கான போராட்ட காலம் முழுவதும் அறிக்கைகளையும் செய்திகளையும் சந்திப்புக்களையும் வெளிப்படுத்திய அமெரிக்க தூதரகம் 13.07.2022அன்று நிகழ்ந்த போராட்டம் சார்ந்தோ இராணுவ பொலிசாரின் அணுகுமுறைசார்ந்தோ எவ்வித அறிவுப்புக்களையும் வெளியிடாதது இலங்கைத்தீவின் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்க முனைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது, ஜனாதிபதி கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் பதில் ஜனாதிபதியாக கடமையை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தின் விசுவாசியாகவும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் நலன்களையும் உத்தரவாதப்படுத்துவார் என்ற அடிப்படையில் அத்தகைய நகர்வு வெளிப்படையான செய்திகளை தந்துள்ளது. மீண்டும் ராஜபக்ஷhக்களின் ஆட்சியதிகாரத்தை அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் தோற்கடித்துள்ளதா என்ற சந்தேகம் நியாயமானதாகவே தென்படுகின்றது. 2015ஆம் ஆண்டு எவ்வாறு ராஜபக்ஷhவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் அமெரிக்க-இந்திய தலையீடு இருந்ததோ அவ்வாறே சமகால களமும் அவதானிக்க முடிகிறது.

எனவே, தாரண்மைவாதத்தின் ஜனநாயக முகாம் 13.07.2022அன்று எவ்வாறானதென்பது உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டக் காலப்பகுதி முழுவதும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை என்பன ஜனநாயக போராட்டத்தை ஆதரித்தே அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால், 13.07.2022 போராட்டத்தை பற்றி எவ்விதமான கருத்து நிலையினையும் வெளிப்படுத்தாது மட்டுமன்றி தூதரகங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. அவ்வாறாயின் போராட்ட சக்திகள் எவ்வகையான நாடுகளால் கையாளப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

இது புவிசார் அரசியல்ரீதியில் நோக்குகின்ற போது இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடி களத்தில் இந்தியாவின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதரகமும், இந்திய வெளிவிவகார அமைச்சும் போராட்டக்களத்தை சார்ந்து வெளிப்படையான ஆதரவை தெரிவிக்காத போதும் இலங்கை மக்களோடு இந்தியா ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் இலங்கை மக்கள் பக்கமே தமது ஆதரவெனவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு பின்னால் இந்திய புலனாய்வு துறை செயற்பட்டதாகவும், தென்மாநிலத்தை நோக்கி ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தை தரையிறக்க உடன்பட்டதாகவும், பின்னர் அரசியல்ரீதியான நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதால் மாலைதீவை தெரிவு செய்ததாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மாலைதீவினுடனான இந்தியாவின் நெருக்கம் இந்நடவடிக்கை மூலம் மேலும் உறுதிப்படுத்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் அரசியல்வாதிகளில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிட்டது போல் ராஜபக்ஷhக்கள் விரும்பும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பி ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலும் அவசியமாகும். அவ்வாறாயின் போராட்டக்காரர்களுனான இந்திய உறவு இரண்டாம் பட்சமானதாகவே தெரிகின்றது. இதனையே 1971இலும், 1989இலும், 2009இலும் இந்தியா மேற்கொண்டது என்பதை ஆதாரத்துக்காக கூறுவது பொருத்தமானதாகும்.

அவ்வாறான சூழலில் தற்போதைய பதில் ஜனாதிபதியாக கடமையாற்றும் ரணில் விக்கிரமசிங்காவையும் இந்தியா ஆதரிக்கும் என்பது புரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகும்.
அவ்வாறாயின், போராட்ட அணி ஜனாதிபதி கோத்தபாயாவின் வெளியேற்றத்தோடு கட்டுப்பட்ட செயற்படும் என்ற எதிரபார்க்கை அமெரிக்க உட்பட்ட மேற்கிடமும் இந்தியாவிடமும் இருந்துள்ளதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது. அதிலும் குறிப்பாக அமெரிக்க மேற்கு தரப்பிடம் ராஜபக்ஷhக்கள் வெளியேற்றப்படுவதுடன் போராட்டம் முடிவுக்கு வருமென கணக்கு போட்டுள்ளார்களா? அதற்கான முடிவுகளையே 13ஆம் திகதி நிகழ்தகவுகள் உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறாயின் அலரிமாளிகை நோக்கியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பதவி விலகல் நோக்கியும் போராட்டக்காரரின் அணுகுமுறையை தீவிரப்படுத்திய தரப்பு சீனாவா என்ற குழப்பம் நியாயமானதாகவே உள்ளது. இதற்கான அடிப்படை காரணம் போராட்டக்களத்தை நிரப்பீடு செய்துள்ள பெரும்பாண்மை தரப்பு பல்கலைக்கழக மாணவர்களையும் இலங்கையில் காணப்பட்ட இடதுசாரி மனோநிலையை கொண்ட தீவிர செயற்பாட்டாளர்களும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் ஏறக்குறைய இந்திய-அமெரிக்க-மேற்கு தரப்போடு இணங்கி செயற்படுவதை விட சீனாவோடு ஒன்றிணைந்த பயணிப்பதற்கு வாய்ப்பான சூழல் காணப்படுகின்றது. அதற்காக சீனா சோசலிச நாடென்றோ இலங்கையில் எழுச்சி பெற்றுள்ள தரப்புக்கள் சோசலிஷ;ட் என்றோ வாதிட்டு விட முடியாது. மாறாக இப்போராட்ட அணி அலரிமாளிகையையும் பாராளுமன்றத்தையும் நோக்கி நகர்வதன் மூலம் அரசியலமைப்பை முற்றாக நிராகரிக்கின்றார்கள். அடுத்து எஞ்சியிருப்பது நீதித்துறை மாத்திரமே ஆகும். ஏறக்குறை கிளர்ச்சியின் எல்லையை கடந்து பயணிப்பதற்கும் ஒரு முழுமையான கட்டமைப்பை நோக்கி செயற்படுவதற்கும் போராட்ட அணி தயாராகி விட்டது. அவ்அணியில் தலைமை அடையாளப்பபடுத்தப்படாத போதும், சரியான கருத்தியல் உருப்பெறாத போதும் அத்தகைய அம்சத்தை நோக்கி பயணிக்க தயாராகுகிறது. நிச்சயமாக இத்தகைய போராட்டம் புரட்சிகரமானதாக மாற்றப்பட வேண்டும். கிளர்ச்சியிலிருந்து புரட்சியை நோக்கி பயணிப்பதில் இப்போராட்ட அணியிடம் அனைத்து வகையான உள்ளார்ந்த எண்ணங்களும் கருத்தியலும் கட்டமைக்கப்பட முடியும். அவ்வாறு கட்டமைப்பின் இலங்கைத்தீவின் அஅனைத்து மாற்றங்களையும் ஒரு ஆரோக்கியமான புரட்சியினூடகவே சாத்தியப்படுத்த முடியும். உலகப்புரட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வகையான எண்ணங்களுடனேயே முழுமையபன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, காலிமுகத்திடல் போராட்ட அணியின் முன்னோக்கிய பாய்ச்சலை ஏற்றுக்கொள்ளாத சர்வதேச சக்திகளும் அவற்றுக்கு மௌனமாக பதிலளிக்கும் சக்திகளும் இக்காலப்பகுதியை தமது நலன்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ள முயலுகின்றது. அதனோர் அங்கமாகவே அமெரிக்க-சீன-இந்திய மற்றும் மேற்கு நாடுகள் இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக அறிக்கை விடுவதனை காண முடிகிறது. எனவே, போராட்ட அணி இலங்கையில் ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான சூழலை அவர்களது அறிக்கைகள் உணர்த்துகின்றது. இலங்கைத்தீவு ஜனநாயகம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதே தேசியங்களின் சமத்துவத்தையும் இறையாண்மையையும் சுயநிர்ணயத்தையும் உத்தரவாதப்படுத்தக்கூடியது. அதனை நோக்கிய மக்கள் போராட்டக்குழுவின் சிந்தனை அரசியலமைப்புக்க வெளியே புரட்சிகரமான அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவே சாத்தியமாகக்கூடியது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-(நன்றி: தினக்குரல்)