ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் இலங்கையும் நேரடியாக தொடர்பு படுத்தி உள்ளது. இலங்கை நோக்கி நகரும் ஈரானிய போர்க்கப்பல்களும் கப்பல்களும் அதற்கான அடிப்படையைத் தோற்றுவித்துள்ளன. ஈரானிய கப்பல்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் கொடுப்பது என்பது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக உள்ளது. ஈழத்தமிழருக்கு எதிரான போரில் உலக நாடுகளின் பங்களிப்பை போன்று ஈரானும் இலங்கைக்கு பாரிய இராணுவ உதவிகளை வழங்கியிருந்தது. இதனால் ஈழத் தமிழர்கள் ஈரான் மீதான நடவடிக்கை அதிகம் மௌனமாக கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். ஆனால் ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஈழத்தமிழர்களின் அரசியலில் அதிக அனுபவங்களை தந்திருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் தமது இறுதி கட்டப் போரில் எந்த அரசின் ஒத்துழைப்பு இன்றி அழித்தொழிக்கப்பட்டனர். உலகில் உள்ள அனைத்து அரசுகளோடும் இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருந்த ஒத்துழைப்பும் நட்புறவும் நலங்களுக்கும் இடையிலான புரிதலும் ஈழத்தமிழர் மீதான தாக்குதலை ஒன்றிணைந்து மேற்கொள்ள உதவியது. தற்போது போரில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் (உக்ரையின்-ரஷ்சியா, இஸ்ரேல்-அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பாகிஸ்தான்-இந்தியா போன்ற பல) ஈழத்தமிழரின் போராட்டத்தை அழித்தொழிப்பதில் கைகோர்த்திருந்தனர். அதனாலேயே ஈழத்தமிழர்கள் உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் விரோதிக்கும் மனோநிலையை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
இதற்கு மறுவலமாக இத்தகைய அரசியல் களத்தை ஈழத்தமிழர்கள் மதிப்பீடு செய்ய அல்லது புரிந்து கொள்ள தவறுகின்றனர். காரணம் ஈழத்தமிழர்கள் போரில் பலியிடப்படுகின்ற போது உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அனுதாபத்துக்கு ஏனும் போரை நிறுத்த முயலவில்லை. இதுவே போர் முடிந்து 16 வருடங்கள் ஆகியும் புரிந்து கொள்ள தவறுகின்ற விடயமாக உள்ளது. ஈழத்தமிழர்களோடு தமிழகம் மட்டுமே அப்போரை எதிர்கொண்டது. ஏறக்குறைய 16 இளைஞர்கள் தீக்குளித்து தியாகங்களை ஈழத்தமிழருக்காக அர்ப்பணித்தனர். போர் வன்னி பெருநிலப்பரப்பில் நிகழ்த்தப்பட்டிருந்த போது வடக்கு-கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் எந்த ஒர் எதிர்ப்பு நடவடிக்கையும் நிகழவில்லை. போரை தடுத்து நிறுத்துவதற்கு எத்தகைய செயல் வடிவமும் முன் வைக்கப்படவில்லை. வடக்கு கிழக்கின் இதர பகுதிகளில் இருந்து மக்களோ அரசியல்வாதிகளோ சிவில் அமைப்புகளோ மௌனமாக கடந்து சென்றனர். காரணம் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் வடக்கு-கிழக்கு பிரதேசம் அகப்பட்டிருந்தது. அதனை எதிர்கொள்ள முடியாது மௌனித்து போகினர். தமிழகமும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் மட்டுமே போரை நிறுத்துவதற்கு போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் பாரிய போராட்டங்களை நிகழ்த்தினர். தங்களால் முடிந்ததை மேற்கொண்டனர். தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தமது அரசியல் இலாபங்களுக்கான செயல்படுகின்ற போது தமிழக மக்கள் ஈழத்தமிழரின் துயரத்தில் பங்கெடுத்தவர்களாக காணப்பட்டனர்.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மக்கள்-மக்கள் உறவு என்பது முதன்மையானது. அது வெளியுறவின் ஓர் இயங்குதிறன் மிக்க அலகாகும். அத்தகைய உறவு ஒன்று குள்ளேயே அரசற்ற ஈழத்தமிழர்கள் தமிழக மக்களோடு நெருக்கமான உறவை கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 1991ஆம் ஆண்டு சிறிபெரும்புத்தூரில் நிகழ்ந்த துயரத்திற்கு பின்னர் ஈழத்தமிழருக்கும் தமிழகத்துக்குமான உறவில் விரிசலை தந்தது. இந்த உறவில் ஏற்பட்ட நெருக்கடியை 2009 போர் ஓரளவு தனித்ததென்றே கூற வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்கள் அவர்களின் சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகள் நலன் பேணும்குழுக்கள் என தமிழக மக்களோடு நெருக்கமான உறவை பிரதிபலிப்பவர்களாக காணப்படவில்லை. இதுவே ஈழத் தமிழர் தமது அரசியல் ரீதியான நலன்களை அடைவதில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பின்னால் இருந்த பிரதான காரணம். இலங்கை தீவின் இனப்பிரச்சினை என்பது சர்வதேச பரிமாணம் மிக்கது. உள்நாட்டில் தீர்வு இல்லை என்ற நிலை ஏற்படுகின்ற போதே இனங்களின் பிரச்சனை மேலெழுகின்றது. அவ்வாறான சூழலிலேயே உலக நாடுகளின் ஒத்துழைப்பும் இனங்களின் அரவணைப்பும் ஈழத்தமிழர்க்கு அவசியமானதாக உள்ளது. உலக நாடுகளோடும் உலக நாடுகளின் மக்களோடும் மக்களின் அமைப்புக்களோடும் ஏதோ ஒரு அடிப்படையில் புரிந்துணர்வை கட்டமைப்பதும் ஒன்றிணைந்து செயல்படுவதுமே ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுக்கு உதவக் கூடிய வழிமுறையாகும்.
போர் முடிந்த கடந்த 16 வருடங்களுக்குப் பின்னரும் தமிழக எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு ஈரானிய எதிர்ப்பு உக்கரையின் எதிர்ப்பு என எதிரிகளை கட்டமைப்பது ஈழத்தமிழர்களின் அரசியலின் பிரதான நகர்வாக இருக்கின்றது. இத்தகைய நகர்வு ஈழத்தமிழரின் அரசியலை மோசமான நிலைக்குள் கொண்டு செல்ல கூடியதாகவே மேலும் மேலும் கட்டமைக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அகிம்சை போராட்டமும் தோல்வி அடைந்தமைக்கு ஈழத்தமிழர்களே காரணம். ஈழத் தமிழர்கள் தமது அயல் நாட்டையும் அதுக்கு அப்பால் உள்ள சக்திகளையும் எதிரிகளாகவே கட்டமைத்து வைத்துள்ளனர். உலகத்தில் ஒத்துழைப்பும் உதவியும் ஒன்றே ஓரினத்தின் அரசியல் தீர்வுக்கு வழியாகும். உலக நாடுகளின் ஒத்துழைப்பின்றி அரசின் எல்லைக்குள் நிகழும் எத்தகைய போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலாற்றில் கண்டுகொள்ள முடியவில்லை. அதிலும் 21ம் நூற்றாண்டு அரசியல் வலிமையான சக்திகளின் தீர்மானங்களுக்கு உள்ளால் மட்டுமே இனங்களின் பிரச்சனைகளின் தீர்வுகள் சாத்தியமாகிறது. அதனைப் புரிந்து கொள்ள தவறுகின்ற வழிகாட்டிகளும் அதை பின்தொடர்கின்ற மக்களும் ஈழத்தமிழர்களாக இருக்கும் வரை எத்தகைய மாற்றத்தையும் ஈழத்தமிழர்கள் அடைய முடியாத நிலை ஏற்படும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் விடுதலை என்பது அல்லது அரசியல் தீர்வு என்பது முன்னாள் சோவியத்யூனியனுக்கும் தற்போதைய ரஷ;;சியாவுக்கும் எதிரான மேற்கு ஐரோப்பிய- அமெரிக்கா கூட்டின் ஒத்துழைப்பினாலே சாத்தியமானது. அவ்வாறே ஆசியா ஆபிரிக்க நாடுகள் முழுவதும் அரசியல் தீர்வுகளைப் பெற்ற இனங்கள் ஏதோ ஒரு சர்வதேச சக்தியின் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்று இருக்கின்றன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியா கூட்டு தாக்குதல் ஈழத்தமிழர்க்கு அதிக பாடங்களை தந்துள்ளது. நேரடியாக ஈரானோடு போரில் பங்கெடுக்காத அரசுகளாக சீனா பாகிஸ்தான் வடகொரியா ரஷ்சியா காணப்பட்டாலும் மறைமுகமாக ஈரானின் நண்பர்களாகவே விளங்குகின்றனர். ஈரான் தோற்கடிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டாலும் ஐ.நா.பாதுகாப்புச் சபையிலும் உலக அரங்கிலும் அந்த நாடுகளில் கரிசனை ஈரான் சார்ந்ததாகவே விளங்குகிறன. ஈரான் தனது அண்டை நாடுகள் அனைத்தும் மீதும் தாக்குதல் நிகழ்த்துவது என்பது அமெரிக்க தளங்களையும் இஸ்ரேலிய ஒத்துழைப்பையும் தகர்ப்பதற்காகவே. அதனால் அந்த நாடுகளில் இருக்கும் மக்களை ஈரான் அரவணைத்துக் கொண்டு செல்கிறது. இதுவே ஈரானின் வலுவான பக்கமாகும். இது அராபியர்கள் மத்தியில் உணரப்படுகிறது. ஈரான் முழுமையான வெற்றி கொள்ளப்படுவதென்பது அராபியர்களின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகின்ற நிலை ஒன்றை ஈரானியர்கள் தோற்றுவித்து வருகின்றனர். போரின் முதல் நாளே அமெரிக்க தரப்பு வெற்றி பெற்றிருந்தது. அத்தனை இழப்புகளுக்கு பின்னரும் ஈரான் போரை தொடர்வது என்பது அவர்கள் கொண்டிருக்கும் உத்திகளிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் ஆகும். காட்டிக் கொடுப்புகளும், குழிபறிப்புகளும் சகோதரப் படுகொலைகளும் நிரம்பிய நிலையிலும் ஈரானிய ஆட்சியாளர்கள் இதுவரை பாதுகாப்பாக தேசத்தையும் ஆட்சியையும் தக்கவைத்துள்ளனர். ஈழத்தமிழர்கள் இதில் எதனையும் தமது அரசியல் இருப்புக்காக கட்டமைக்காமல் இருந்தனர். இவையே ஈழத்தமிழர் அரசியலை பலவீனப்படுத்தியது. தமிழ் கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட அமைப்புகளும் சரி ஈரானைப் போன்று மாற்றீடுகளையோ நீட்சியையோ நட்புக்களையோ முதன்மைப்படுத்தவில்லை. மாறாக தமது இருப்பை மட்டுமே முதன்மைப்படுத்தினர். இது 2009 பின் மோசமடைந்தது. இதன் விளைவே ஈழத்தமிழரின் அரசியல் தோல்வி முகத்தை காண்பதற்கான அடிப்படையாகும்.
எனவே ஈரான் மீதான தாக்குதலை கடந்து செல்வதற்கு அப்பால் அதன் அனுபவங்களை ஈரானிய ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளை ஈழத்தமிழர்கள் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டியகாலப் பகுதியாக விளங்குகிறது. இப்போது எத்தரப்பு தோற்றாலும் வெற்றி பெற்றாலும் பறவாயில்லை. ஆனால் ஒட்டுமொத்த போரும் ஈழத்தமிழரின் அரசியல் மாற்றத்திற்கு உள்ளாக கூடிய அனுபவங்களை தந்துள்ளது என்பதே முக்கிய செய்தியாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
