இலங்கை அரசியலில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது எட்ட முடியாத ஒன்றாக காணப்படுகிறது. சுதந்திர இலங்கை எதிர்கொண்ட மிகப் பிரதான சவால் மிக்க விடயமாக இலங்கை தமிழர்களது அரசியல் இருப்பு காணப்படுகிறது. இதற்கான தீர்வுகளை பல்வேறுபட்ட தரப்புகளால் உடன்பாடுகளும் பேச்சுக்களும் தீர்வு முயற்சிகளும் முன்வைக்கப்பட்டது. எதுவும் முழுமை பெறாத நிலையில் வர்க்க் மேலாதிக்க உணர்வோடும் தென்னிலங்கை ஆட்சியர்கள் அனைவரும் இனப் பிரச்சினைக்குரிய தீர்வை சாத்தியமற்ற ஒன்றாக மாற்றி இருந்தனர். முதல் தடவையாக இடதுசாரி இயல்பும் கருத்தியலையும் கொண்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. இது தமிழ் மக்களிடம் நம்பிக்கை ஊட்டும் எதிர்பார்க்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் கடந்த காலத்தை வைத்துக்கொண்டு அளவீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சமகாலத்திலும் அத்தகைய இடதுசாரி மனோநிலை என்பது சிங்கள பௌத்த எண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பது சமகாலத்தில் அதிகம் உணர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய அம்சத்தை நோக்கி உரையாடலையும் எண்ணத்தையும் பகிர்வதாக அமைய உள்ளது.
சமஸ்டி யாப்பும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களும் நடைமுறைப்படுத்துவதற்கு எமது ஆட்சி ஒரு போதும் இடம் அளிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 1926 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஸ்டி உரையாடப்பட்டு வருகிறது. ஆனால் உலகளாவிய ரீதியாக சமஸ்டி என்பது தேசிய இன பிரச்சனைக்கும் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் ஒரு நாட்டை கட்டமைப்பதற்கு உதவக் கூடிய ஒன்றாகவும் வடிவமைக்கப்பட்டது. இதன் தோற்றம் வரலாற்று காலம் முதல் அமைந்திருந்தாலும் 1776 அமெரிக்க அரசியலமைப்பின் வலுவான சமஸ்டி அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் சுவிஸ்லாந்து 1848 ஆம் ஆண்டு சமஸ்டியை அரசியலமைப்பை கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு மாற்றிக் கொண்டது. அது பின்னர் 1874 இல் புதுப்பிக்கப்பட்ட சுவிஸ்லாந்து மீளவும் சமஸ்டி முறைமையை உருவாக்கியது. இங்கே அமெரிக்காவும் சுவிஸ்லாந்தம் கூட்டாட்சி முறைமையில் இருந்து சமஸ்டி முறைமைக்கு தமது அரசியல் அமைப்புகளை வடிவமைத்து கொண்டன இதே மரபக்குள் ரஷ்சியாவும் தனது அரசியல் அமைப்பை 1917இல் மாற்றிக் கொண்டது. ரஷ்சிய புரட்சி என்பது இனங்களின் தனித்துவத்தை பேணுவதற்கான விண்ணப்பங்கோடு சுயநிர்ணயத்தையும் சுயாட்சியையும் வடிவமைத்துக்கொண்டது. துரதிஷ்டவசமாக 1924 லெனின் மரணத்தை அடுத்து அத்தகைய செய்முறை சோவியத்து ரஸ்சியாவில் பெயரளவில் இருந்தது அன்றி கோட்பாட்டு மறறும் நடைமுறை அர்த்தத்தில் காணப்படவில்லை.
இலங்கைத் தீவின் அரசியல் வரலாறு முழுவதும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்கு முறையின் கருவியாகவே அரசு காணப்பட்டது உயர் வர்க்கத்தின் நலன்களுக்கு உட்பட்ட அரச கட்டமைப்பானது அனைத்து தேசியங்களதும் இருப்பையும் நிராகரித்த அதே நேரத்தில் சர்வதேச மட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் எத்தகைய வளர்ச்சி நிலையையும் அடையாது துயரத்தை அனுபவித்துக் கொண்ட நாடாக விளங்குகிறது. அரைகுறை முதலாளித்துவ அரசுகளும் அவற்றின் நலன்களுமே இலங்கையில் மேலாதிக்கம் பெற்றிருந்தன தாராண்மை வாத யுகத்தையோ நவதாரண்மைவாத யுகத்தையோகொண்டிருக்காத இலங்கை அரைகுறை முதலாளித்துவத்தை இருப்பாக பிரதிபலித்தது. அதனை இலங்கையின் ஆட்சியாளர்களும் அதற்கு அமைவான ஆட்சி முறைமைகளும் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து விடுபடுவதற்கான உத்திகளோடு ஆயுதப் போராட்டத்தை இலங்கை தீவில் முதல் நிலைப்படுத்திய சக்திகளாக ஜனதா விமுத்தி பெரமுன அமைப்பு புரட்சியை தொடங்கியது. இரு தடவைகள் அப்புராட்சி எழுச்சி பெற்று அழிக்கப்பட்டது. அழிவின் விளிம்பிலிருந்து தோற்றுவிக்கப்பட்டதே தற்போதைய தேசிய மக்கள் சக்தியாகும். தேசிய மக்கள் சக்தி அடிப்படையில் ஜேவிபி எனப்படும் இடதுசாரி கட்சி ஒன்றின் வழிவந்த சக்தியாகவே கருதப்படுகிறது. ஆனால் இத்தகைய ஜேவிபியும் அதனால் எழுச்சி பெற்ற தேசிய மக்கள் சக்தியும் தென் இலங்கையின் முதலாளித்துவ அல்லது அரைகுறை முதலாளித்துவ சக்திகளுக்கு நிகரானதாகவே தனது கொள்கையை கட்டமைத்திருக்கின்றது என்பது அதன் கடந்த கால பதிவுகளிலும் சமகால அறிவிப்புகளிலும் காணப்படுகிறது. இதனால் இலங்கைத் தீவின் இனங்கள் புரிந்துணர்வோடும் ஆரோக்கியமான பொருளாதார சமூக இருப்போடும் பயணிக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை ஆழமாக விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது இட சாரிகள் என்பது மாக்கிய மற்றும் சோசலிச மரபுகளை கொண்ட சக்திகளை அவ்வாறு அழைப்பதுண்டு. அத்தகைய மரபுகளுக்குள் தமது கொள்கைகளையும் நடைமுறைகளையும் வடிவமைப்பவர்களே இடதுசாரிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர். அத்தகைய அடைமொழியை உள்ளடங்குகின்ற ஒரு சக்தி எப்போதும் பிற தேசிய இனங்களை அங்கீகரிப்பதிலும் அத்தகைய தேசிய இனங்களின் நலன்களை பாதுகாப்பதிலும் தங்கி இருக்கின்றது. அவ்வகை நோக்கு நிலை அவதானித்தால் இலங்கை தீவில் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் பிரதேசங்களும் தேசியங்களின் அடையாளங்களும் இலங்கையில் காணப்படுகிறது. சிங்கள மக்கள் பெரும் தேசியமாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஏனைய தேசியங்கள் சம வலுவுடன் பாதுகாப்புடன் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமையோடு இருப்பதற்கான வாய்ப்புகளை அடையாளப்படுத்துவது தேசியங்களின் நலனுக்கான பாதுகாப்பாக இலங்கைக்குள் இருக்க வாய்ப்பளிக்கும். இத்தகைய தேசியங்களுக்கு இடையிலான நீண்ட மோதலையும் முரண்பாட்டையும் அழிவுகளையும் எதிர்கொண்ட இலங்கை அத்தகைய முரண்பாடுகளுக்கு பின்னால் பாரபட்சமும் அங்கீகாரம் பெற்ற தன்மையும் தேசிய இனத்திற்குரிய அடையாளங்களை மதிக்காமையும் அடிப்படை காரணங்களாக அமைந்திருந்தன. அதிலிருந்து விடுபடுதல் என்பது தேசியங்கள் மீதான அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டு வருகின்ற விதத்தில் அதிகாரத்தினுடைய பங்கீடுகளை சுமூகபடுத்துகின்ற செய்முறை ஒன்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது சமஷ்டியை நோக்கி இலங்கை தீவு பயணிக்குமாக இருந்தால் அதன் இருப்பும் பொருளாதார வளர்ச்சியும் எதிர்காலமும் ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்புள்ளது. அதற்கான அடிப்படையை இடதுசாரிகளை நிராகரித்தால் இலங்கை தீவில் எதிர்காலம் நெருக்கடி மிக்கதாகவே அமைய வாய்புள்ளது.
இரண்டாவது ஒரு தேசிய இனத்தை அங்கீகரித்தல் என்பது அத்தேசிய இனத்தின் வாழ்வுரிமையை நிலத்தை பொருளாதாரத்தை பண்பாட்டை அங்கீகரிப்பதாகவே அமைத்துள்ளது. இடதுசாரி நோக்கு நிலையில் சுயநிர்ணயம் என்பதும் இனத்திற்குரிய இறைமை என்பதும் தனித்துவமானது. சுயநிர்ணயத்தின் அடிப்படையில் இலங்கை தீவின் தேசியங்கள் அணுகப்படுமாயின் அதன் விளைவுகளும் பயன்களும் ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்பு உள்ளது. சமஷ்டி என்பது சுயநிர்ணயத்தின்;பால்பட்ட சுயாட்சியின் அம்சமாகவே உலகளாவிய ரீதியிலும் அதன் அறிவியல் அர்த்தத்திலும் புரிந்து கொள்ளப்படுகிறது ஆகவே அத்தகைய புரிதலை முதன்மைப்படுத்த முயலுகின்ற சந்தர்ப்பங்களில் தேசங்களும் தேசியங்களும் தன்னிறைவான பொருளாதாரத்தை அடையவும் சமூக இணக்கப்பாடடையவும் வாய்ப்புள்ளது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்தவும் சுயநிர்ணயம் அவசியமானதாக காணப்படுகிறது. உலக நாடுகள் பல்லின தேசியங்களைக் கொண்ட அடையாளங்களை அவதானிக்கின்ற போது அவை ஒவ்வொன்றும் சமஸ்டி ஆட்சியை கட்டமைக்கப்படுகின்ற தன்மையினை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக கனடா சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் அத்தகைய பல்லின தேசிய பண்பினை பிரதிபலிக்கின்ற போது சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி மிக வலுவான தேசிய இனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற உத்தரவாதம் அளிக்கின்ற ஓர் அரசாங்க விளங்குகிறது இத்தகைய செய்முறை அந்த தேசங்களின் பல்லின தேசிய கட்டமைப்பையும் அதனூடான ஆட்சி முறைமைகளையும் அதன் மூலமாக அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளன. இடதுசாரிகள் பிரதேசங்களின் சுயநன்மையத்தையும் திறமையும் சுயாட்சியையும் அங்கீகரிப்பவர்களாகவே விளங்குகின்றனர். அத்தகைய அம்சங்களோடு பயணிக்க வேண்டிய தேசிய மக்கள் சக்தி கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று அரைகுறை முதலாளித்துவாதிகளை போன்று அரைகுறை சோஸலிஸ சத்திகளைப் போன்று சோஸலிஸத்தை உச்சரிப்பவர்களாக உள்ளனர். இலங்கைத்தீவின் அனுபவம் அதிலும் இடதுசாரிகளின் அனுபவம் அரைகுறையானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் இடதுசாரிகளின் வரலாறு முழுவதும் அவ்வகையான அனுபவத்தையே தந்துள்ளது. குறிப்பாக கொல்வின் ஆர்.டி.சில்வா மற்றும் என்.எம் பெரேரா போன்ற தலைவர்கள் அரைகுறை இடதுசாரிகளாகவே விளங்கினர். அவர்களது கொள்கைகளும் தேசிய இனங்கள் பற்றிய கொள்கைகளில் பலவீனமானதாகவே அமைந்ததோடு சர்வதேச மட்டத்தில் எழுந்த எத்தகைய நியதிகளையும் உள்ளடக்காத போலித்தனமான அரைகுறையான சோசியலிஸ்ட்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். அதனுடைய விளைவு இலங்கைத் தீவின் துயரமாக அமைந்தது. அத்தகைய துயரத்தின் இன்னொரு அங்கமாகவே இடதுசாரிகள் என்ற வடிவத்தில் தேசிய மக்கள் சக்தி சமஸ்டியையும் தேசிய இனத்தின் மீதான ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்த முயல்வதாகவே தெரிகிறது.
எனவே இலங்கை தீவின் எதிர்காலம் சரியான இடதுசாரி கொள்கைகளாலும் அரசாங்கத்தின் கொள்கைகளாலும் கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் கட்சிகள் சமஸ்டியை பிரதான சுலோகமாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் உச்சரிக்கின்றன. தென் இலங்கையோ சமஸ்கிருதியை ஏற்றுக்கொள்ள முடியாத என விவாதிக்கின்றது. இத்தகைய இரண்டு முரண்பட்ட நிலைகளால் கடந்த 70 வருடத்திற்கு மேற்பட்ட இன அரசியல் நகர்த்தப்பட்டு இருக்கின்றது. என்னுமோ ஒரு 70 வருட அரசியலை இவ்வாறு தான் தமிழ் அரசியல் சக்திகளும் தென் இலங்கை சக்திகளும் கொண்டு செல்ல போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதனால் இலங்கை இருப்பு துயரமான ஒரு விளைவையே தரக் கூடியதாக அமையும். இடதுசாரிகள் என்ற கோட்பாடும் சமஸ்டி என்ற எண்ணக்கருவம் ஒன்றோடு ஒன்று உலகளாவிய அனுபவத்தில் பிணைப்பு பெற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. துரதிஷ்டம் இலங்கை தீவின் அரசியலில் அரைகுறை இடதுசாரிகள் இருப்பதினால் அவர்களது எண்ணங்களும் கருத்தியலும் சமஸ்டிக்கு முற்றிலும் முரண்பாடு உடையதாக காணப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)