அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஆசிய-பசுபிக் விஜயம் வெளிப்படுத்தும் அரசியல்

1990ஆம் ஆண்டு அமெரிக்க பிரபலமான ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரான ஜோசப் நை மென்அதிகார கோட்பாட்டை பிரகடனப்படுத்தினார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிற்பாடு உலக ஒழுங்கானது மென் அதிகாரத்தை அடிப்படையாக கொண்டே உருவாகப்போகிறதென அவரது கோட்பாடு முன்வைத்ததோடு வன்அதிகாரம் முடிவுக்கு வந்து விட்டதென வாதிட்டார். அத்தகைய மென் அதிகாரத்தை 2000ஆம் அண்டு முதல் கடைப்பிடித்து வரும் சீனா உலகளாவியரீதியில் நாடுகளை அணிகளாகவும், நட்புக்களாகவும் இணைத்து கொள்வதில் வர்த்தகம், சந்தை, நன்கொடை, கடன் போன்றவற்றோடு அனைத்து நாடுகளையும் சமவலுவுடைய நாடென கருதும் றுin-றுin உபாயத்தை உள்ளடக்கி உலகத்தை தன்வசம் ஈர்த்துக்கொண்டது. இதன்போக்கானது வன்அதிகார நாடுகளுக்கும் அவற்றின் அணுகுமுறைகளுக்கும் சவால்மிக்கதொன்றாக மாறியது. இத்தகைய மென்அதிகாரத்தின் வீச்சு எல்லையே போரற்ற உடன்பாட்டை அடிப்படையாகக்கொண்ட அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் படை விலகலும் தலிபான்களின் முற்றுகையுமாகும். இத்தகைய முற்றுகையும் படை விலகலும் எதிர்பாராத நிகழ்வு என்பதை ஆப்கானிஸ்தானின் பதிவுகள் காட்சிப்படுத்துகின்றன. இத்தகைய படைவிலகலால் அமெரிக்க அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி, ஐரோப்பியரும் தென்பூகோள நாடுகளும் அமெரிக்காவின் தலைமை பற்றிய சந்தேகங்களை எழுப்ப தொடங்கியுள்ளன. இக்கட்டுரையும் அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் அரசியலை தேடுவதாக உள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை வெளியேற திட்டமிட்டமை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்-இன் காலத்தில் இருதரப்புக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமாகும். அவ்வாறு அமெரிக்க படை விலகல் நீண்ட நோக்கில் அமெரிக்காவிற்கு இலாபகரமானதென்றும் அமெரிக்கா தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டே வெளியேறுகிறதென்றும் ஒருசாராரின் வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற போது இன்னொரு தரப்பினர் அமெரிக்கா படை விலகல் தோல்வி என்றும் உலக வல்லரசு நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்றும் அதன் வீழ்ச்சிக்கான அடையாளமென்றும் வாதிக்கின்றனர். குறிப்பாக அசிய நாடுகள் மத்தியில் அதிருப்தியும் சந்தேகமும் அமெரிக்க தலைமை மீதான நம்பிக்கையீனமும் வலுவடைய தொடங்கியுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் மற்றும் அதேபோன்று அமெரிக்க செனட்டர்கள், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க படை விலகலை அமெரிக்க வல்லரசின் தோல்வியென்றே மதிப்பிட்டனர். இதனால், அமெரிக்காவிற்குள்ளும் ஏனைய பிராந்தியங்களில் அமெரிக்கா மீதான தோல்வி முகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய தோல்வி முகத்தின் பிரதானமாக அமெரிக்காவிற்கு நெருக்கடிமிக்க பிரதேசமாக ஆசிய பசுபிக் பிரதேசம் மாறத்தொடங்கியுள்ளது. அதற்கான அடிப்படை காரணம், தென்சீனக்கடலும் ஆசிய-பசுபிக் பிராந்தியம் மீதான சீனாவின் செல்வாக்குமாகும். இப்பிராந்தியத்தை நோக்கி சீனாவின் விஸ்தரிப்பு இலகுவாக அமைந்திருப்பதோடு அதனை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குள்ளும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்தான வெளியேற்றத்துக்கு பின்னர் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. எனவே தான் அமெரிக்க துணை ஜனாதிபதி வெளிநாடுகளுக்கான தனது இரண்டாவது பயணத்தை ஆசிய-பசுபிக் நோக்கி நகர்த்தியுள்ளார். இத்தகைய நகர்வு தென்சீனக்கடலையும், தைய்வானையும், இந்தோ-பசுபிக் உபாயத்தையும் பாதுகாக்கும் நோக்கிலும், சீனாவிற்கான நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கிலும் இத்தகைய நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை வெளியேறிய பிற்பாடு துணை ஜனாதிபதி ஆசிய-பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தில் முதலாவது இலக்காக சிங்கப்பூர் பயணம் செய்துள்ளார். சிங்கப்பூரும் அமெரிக்காவும் மிக நீண்ட நட்புறவு கொண்ட நாடுகளாகும். பொருளாதார செழிப்பை அதிகம் கொண்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் கமலா ஹாரிஸின் முதலாவது தெரிவாக அமைந்ததற்கு பிரதான காரணம் சிங்கப்பூர்-அமெரிக்க நட்புறவாகும். கமலா ஹாரிஸ் சிங்கப்பூரில் உரையாற்றுகையில், இந்தோ-பசுபிக் நாடுகளுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தும் விதத்தில் எனது பயணம் ஆரம்பித்துள்ளது. அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கின்றது. எனவே எங்கள் நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை பாதுகாக்க வேண்டிய கடமை அமெரிக்காவிற்கு உண்டென குறிப்பிட்டார். இவ்வாறு கமலா ஹாரிஸின் வெளிப்படுத்தகை அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய கருத்துக்களிலிருந்து முரண்படுவதோடு தற்போதும் அமெரிக்கா உலகத்திற்கு தலைமை தாங்குகிறது என்பதை உரையாடல் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் கமலா ஹாரிஸின் வார்த்தைகளில் தெரிகிறது. எனவே உலகளாவியரீதியில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்வதே அவரது விஜயத்தின் நோக்கமாக தெரிகிறது.

இரண்டாவது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிங்கப்பூரில் உரையாடிக்கொண்டிருக்கையில் அமெரிக்க உளவுத்துறையாக சி.ஐ.ஏ-இன் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் தலிபான்களின் தற்போதைய அரசியல்துறை தலைவரான அப்துல் ஹனி பராதரை காபூலில் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்கள் இக்கட்டுரை எழுதும் வரை வெளியாகாத போதும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஒக்டோபர்-31 என்பதை காலநீடிப்பு செய்வதற்கான நகர்வாக அமைந்திரக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்க புலனாய்வு துறையின் இயக்குனர் அத்தகைய நடவடிக்கைகளுக்கு தலிபான்களை சந்தித்திருப்பாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது. அதனை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரை கூட அனுப்பி அமெரிக்க அவ்விடயத்தை நகர்த்தி இருக்கும் ஆனால் சி.ஐ.ஏ-இன் இயக்குனர் நகர்ந்திரப்பது இருதரப்புக்குமான உள்ளார்ந்த ரீதியில் வேறொரு தனித்துவமான விடயம் நிகழுகின்றது என்பதை உணர்த்துகின்ற அதேநேரத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஒருவகை பிரச்சாரத்தை சி.ஐ.ஏ-இன் இயக்குனரும் மேற்கொள்கின்றாரா என்ற சந்தேகத்தை வலுவாக உருவாக்குகிறது. காரணம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரத்திற்கு உளவியல்ரீதியிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய உளவியல் போரை எதிர்கொள்வதற்கான நகர்வுகளையே அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வருகிறது.

மூன்றாவது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் சிங்கப்பூர் உரையாடல் தென்சீனக்கடலிலிருந்து சீனா வெளியேற வேண்டுமெனவும் சர்வதேச விதிகளுக்கு முரணாக சீன செயற்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அமெரிக்கா உடபட மேற்குலக நாடுகளின் தென்கிழக்காசிய நாடுகளுடனான 43சதவீதம் வர்த்தகம் தென்சீனக்கடலூடாகவே நிகழுகின்றது என்றும் அதுமட்டுமன்றி ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களுக்கான விநியோகம் தென்சீனக்கடல் வழியாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிய வருகிறது. எனவே தென்சீனக்கடல் மீதான ஆதிக்கம் அமெரிக்காவிற்கு அவசியமானதென்றும் அப்பிராந்திய நாடுகளுடனான வர்த்தகம் அமெரிக்க மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுடனும் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்குரிய வியடமாகும். அதுமட்டுமல்லாது சீனாவின் ஏனைய பிராந்தியங்கள் மீதான வெற்றிகரமான நகர்வுகளை தென்சீனக்கடலை கட்டுப்படுத்தவதன் மூலம் தடுத்த நிறுத்த முடியுமென அமெரிக்க கருதுகின்றது.

நான்காவது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிங்கப்பூருக்கு அடுத்ததாக வியட்நாமுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் அதிகம் முரண்படும் நாடாக வியட்நாமே காணப்படுகிறது. பனிப்போர்க் காலத்தில் அமெரிக்க எதிர்ப்புவாதத்தை கொண்டிருந்த வியட்நாம் புதிய உலக ஒழுங்கிற்கு பின்னர் அமெரிக்காவின் நட்பு நாடாகவும் சீனாவின் எதிரி நாடாகவும் மாறி கொண்டது. அமெரிக்கா வியட்நாமை தளமாக கொண்டு பல்வேறு வர்த்தக இராணுவ உபாயங்களை மேற்கொண்டு வருகிறது. அதனால் வியட்நாமை மையப்படுத்தி சீன எதிர்ப்புவாதத்தை வலுப்படுத்தும் முனைப்பில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளும் வியட்நாம்-இந்தியா போர் ஒத்திகைகளும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை பலப்படுத்தி வருகிறது. தென்சீனக்கடலை நோக்கி இரண்டு சீன போர்க்கப்பல்கள்  INS Ranvijay, INS Kora (ஆகஸ்ட்-15) இந்தியா வியட்நாமுடன் இணைந்து போர் ஒத்திகை செய்வதற்கு அனுப்பியிருந்தது கவனிக்கத் தக்கது.

ஐந்தாவது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸினுடைய சிங்கப்பூர் உரை அமெரிக்காவும் பிராந்தியரீதியிலான தூரநோக்கு மனித உரிமைகளையும் சர்வதேச சட்ட விதிகளையும் அமுல்படுத்துவதோடு ஆசியாவின் மைய நாடு அமெரிக்கா என்பதையும் உறுதிப்படுத்துவதென குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு அசிய-பசுபிக் வர்த்தக குழுவின் (APEC) அங்கத்துவம் பெறும் 21 நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கும் என்றும் குறிப்பிட்டதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நிர்வாகத்தின் பிராந்திய கொள்கை வளங்களையும் அதற்கான பகிர்வுகளையும் முதன்மைப்படுத்துவதே அன்றி பழைய பாதுகாப்பு முறைமையான படைக்குவிப்புக்களை அல்ல என்றார். தற்போது அமெரிக்க நிர்வாகத்தக்குள்ள பிரதான சவால் சீனாவின் புவிசார் அரசியல் போட்டியாகும். அதில் தென்கிழக்காசிய நாடுகள் மிகமுக்கியமானவை என்றும் இந்நூற்றாண்டின் பிரதான பங்கெடுப்பு நாடுகள் என்றும் குறிப்பிட்டார். எனவே கமலா ஹாரிஸின் உரை பிராந்தியரீதியில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் கொள்கை மாற்றங்களை அடையாளப்படுத்தியிருக்கும் அதேவேளை ஆப்கானிஸ்தான் படைவிலகலை நியாயப்படுத்தும் வகையில் நகர்கிறார் என்பதை கோடிட்டு காட்டுகிறது.

எனவே, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஆசிய-பசுபிக் விஜயமானது ஆப்கானிஸ்தான் படை விலகலால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரிசெய்வதாக அமைந்தள்ளது. அத்தகைய நடவடிக்கை உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுவிட்டாலும் ஆசிய-பசுபிக் நாடுகளுக்கு அமெரிக்காவின் தலைமைத்துவத்தை மீள உறுதிப்படுத்தி செல்வதாக அவரின் நகர்வு அமைந்துள்ளது. அதுமட்டுல்லாது பிராந்தியரீதியில் அமெரிக்கா எத்தகைய கொள்கையை கடைப்பிடிக்கப்போகின்றது என்பதை கோடிட்டு காட்டும் முயற்சியில் அவரது கருத்து அமைந்துள்ளது. ஏறக்குறைய சீனா பின்பற்றும் மென்அதிகார கொள்கையை நோக்கி அமெரிக்கா நகர்கின்றது என்பதை ஆப்கானிஸ்தான் வெளியேற்றத்துக்கு பின்னரான அமெரிக்க நடவடிக்கைகள் உறுதி செய்கிறன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)