அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயமும் முதுகெலும்பற்ற தமிழ் தரப்பின் அரசியல் உத்தியும்!

புதிய உலக ஒழுங்குக்கான நகர்வுகள் பிராந்திய அரசுகளின் தனித்துவத்தை முதன்மைப்படுத்திவருகிறது. அதில் வலிமையானதாக புவிசார் பொருளாதாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொவிட்-19 பின்னரான உலகம் அத்தகைய புவிசார் பொருளாதாரத்தை பலப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. அதனை மேலும் ரஷ்சிய-உக்ரையின் போர் வலுப்படுத்தியது. அதன் தளத்துக்குள்ளேயே தென்னாசியாவின் அரசியலில் இந்தியாவின் வளர்ச்சி பிராந்தியத்தில் மட்டுமல்லாது பூகோள ரீதியானதாகவும் எழுச்சியடைந்துவருகிறது. 2075 இல் இந்தியாவின் ஜிடிபி 51 ரில்லியன் அ.டொலராகும் எனவும் அதில் சீனா 57 ரில்லியன் அ.டொலருடன் முதல்தர பொருளாதார சக்தியாக உலகளாவிய மட்டத்தில் விளங்கும் எனவும் உலகவங்கி மதிப்பீடு செய்துள்ளது. அதனால் இந்தியாவின் பிராந்திய பலம் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசியலில் இந்தியாவின் பங்கு பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் அடைவதாகவும் கணிப்பீடுகள் உண்டு. அதற்கமைவாகவே இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்று ஒரு வருடத்தினை கடந்து இந்தியாவுக்கு தனது விஜயத்தை அடுத்துவரும் 21.07.2023 இல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அவரது விஜயத்திற்கான தயாரிப்புகளை இந்தியத் தரப்பும், தென் இலங்கையும் வடிவமைப்பது போன்று ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் புலமைத் தரப்புக்கள் தமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்டியவிதத்தில் உத்திகளை வரைந்து செயல்படுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய உத்திகளின் போக்கினை தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் தமிழ் தரப்புக்களின் இந்தியா நோக்கிய விண்ணப்பங்களை அவதானிப்போம்.

முதலாவது, பழைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் இலங்கை-இந்திய உடன்படிக்கையனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கைக்கான இந்தியத் தூவர் கோபால் பால்கேயிடம் கோரியுள்ளார். அது ஒர் இராஜதந்திர வார்த்தையாக அமைந்தாலும் நடைமுறையில் அதிக முக்கியத்துவம் பெற்றதாகவே தெரிகிறது. இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு கிழக்கு இணைப்பும், தமிழர் பாரம்பரிய வாழ்விடம் வடக்கு கிழக்கு என்பதையும் அங்கீகரித்த ஓருடன்பாடாக இந்திய-இலங்கை உடன்பாடு காணப்படுகிறது. அதனால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற கோரிக்கை நியாயமானதாக தென்படலாம். ஆனால் அதிலொன்றாக 13 ஆம் திருத்தமும் உள்ளது என்பதை மறந்துவிட முடியாது. மறைமுகமாக 13 பற்றிய உரையாடலையும் சம்பந்தன் முன்மொழிவதாகவே தென்படுகிறது.

இரண்டாவது, புதிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் 13 ஆம் திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டு:ம் எனற கோரிக்கையை மீண்டும் ஒரு தடவை அழுத்தி கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையின் ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டும் விதத்தில் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சார்ந்து நரேந்திர மோடி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் இரண்டாவது வலியுறுத்தலாகவே தெரிகிறது. முதலாவது வலியுறுத்தலுக்கு என்ன ஏற்பட்டதென்ற தெளிவு தரப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டாட்சியை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமைய இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளது. திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என கோரியுள்ளது. இந்தியா மீதான அதிக விமர்சனத்தை கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காலத்தின் தேவையை முன்னிறுத்தி செயல்பட முனைந்துள்ளது. இது ஒர் ஆரோக்சகியமான அரசியல் செயல்பாடாக அமைந்த போதும் அதற்கான உத்திகளை கட்டமைத்து அதனை அடைவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். சமஷ;டிக் கட்சியே தமது கோரிக்கையை மறந்து பதின்மூன்றாவது திருத்தத்தை ஆதரிக்க முயலும் போது அகில இலங்கை எனக்குறிப்பிட்ட தரப்பு கூட்டாட்சியை முதன்மைப்படுத்துவது ஆரோக்கியமானதே.
நான்கு, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் சாதகமான மாற்றங்களுக்கான ஒரு புள்ளியாக அமையும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்குரிய பூர்வாங்க வேலைகளை மேற்கொள்ளும் விதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னதாக நாம் முன்னேறக் கூடிய பங்காளித்துவத்தின் முக்கிய பகுதிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொருளாதார பங்காளித்துவத்தின் கூட்டாண்மையின் கூறுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை வெற்றி அடையச் செய்வதே எமது இலக்காகும். அவர் நன்கு அறியப்பட்ட தலைவர் என்பதோடு இந்திய-இலங்கை உறவில் வலுவான ஆதரவாளராவார். கடந்த 16 மாதங்களாக இலங்கை கடந்துவந்த சவால்களில் நாம் சிறப்பாக இணைந்து பணியாற்றியதோடு ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளோம். இந்தியாவில் ஜனாதிபதிக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரானின் அறிவிப்புக்கு பின்னர் ஜனாதிபதி மீதான அழுத்தம் எத்தகையதாக அமையும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதென்ற நியதிக்குள் இயங்குகின்ற மரபைக் கொண்டது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை வெற்றிகரமானதாக ஆக்குவதே வினய் மோகன் குவாத்ரான் இலங்கை வருகைக்கான காரணமாகும். அதிலும் பொருளாதார ஒத்துழைப்பினை முதன்மைப்படுத்துவதுடன் பல உடன்பாடுகளையும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் உருவாக்க இந்தியா முயலுகிறது என்பதை வினய் மோகன் குவாத்ரா கோடிட்டுக் காட்டியுள்ளார். எனவே பரஸ்பரம் இரு தரப்பும் ஒத்துழைப்பை நோக்கி நகர முயலுகிறது. இந்தியாவை திருப்தரிப்படுத்துவதன் மூலம் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல அரசியல் இராணுவ விரிசல்களையும் கையாள முடியுமென தென் இலங்கை கணித்துள்ளது. அதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தென் இலங்கை கையாள ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவைப் பொறுத்தவரை இலங்கையின் பொருளாதா மீட்சியை சாத்தியப்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியாக மீதிக் காலம் பதவிவகிக்க வேண்டும். அத்தகைய இலக்கினை சாத்தியப்படுத்த இந்தியாவுடனான நட்பு அவசியமானது. அதனை அடைவதற்கு தற்போதைய விஜயம் மிகப் பொருத்தமானதாக கருதுகிறார். இத்தகைய காலத்திற்காகவே அவர் காத்திருந்தது போல் நிகழ்வுகள் அனைத்தும் நகர்கிறது. இந்தியா ஜனாதிபதியை காலம்தாழ்த்தி அழைத்ததன் மூலம் தனது இலக்கினை அடைந்துவிடலாம் எனக்கணக்குப் போட்டுள்ளது. அதனால் அதிகமான உடன்பாடுகளையும் ஒத்துழைப்புக்கான சமரசங்களையும் ஜனாதிபதியின் விஜயம் ஏற்படுத்த முயலும். இரு நாடுகளது புரிதலும் ஒத்துழைப்பும் அதிகரிப்பதுடன் சீனா சார்ந்து இந்தியாவுக்குள்ள குழப்பங்கள் ஜனாதிபதியினால் தீர்க்கப்படுவதாக தெரியும். ஆனால் அது உண்மையானதாக அமையாது. இந்தியாவை கையாண்டு கொண்டு சீனாவுடன் உறவை எப்படிப் பலப்படுத்துவதென்பது ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்தவிடயம். அத்தகைய தந்திரம் அனைத்தையும் கைவரப் பெற்றவராக ரணில்விக்கிரமசிங்ஹாவின் கடந்தகாலம் அமைந்திருந்தது. அதனால் மீளவும் இந்’தியாவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனையும் மீறி இந்தியா இலங்கை ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து வெற்றி பெற்றுவிட்டால் அதுவும் தென் இலங்கைக்கு மட்டுமல்ல ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு இலாபமானதே. இந்தியாவும் சீனாவும் அடுத்துவரும் தசாப்தங்களில் வலுவான பொருளாதா சக்திகள். அதனால் இரு சக்திகளிலும் ஆபத்துக் குறைந்த சக்தியுடன் உறவு கொள்வதென்பது தென் இலங்கைக்கு ஆரோக்கியமானதாகவே அமையும். இந்தியாவுடனான அரசியலையும் சீனாவுடனான அரசியலையும் கையாளும் வல்லமை தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

இத்தகைய நிலையிலேயே ஈழத்தமிழரது அரசியல் வெளி வெறுமையாகவும் கையாளப்பட முடியாத தகமையற்றவர்களது இயல்பூக்கத்திற்குள்ளும் அகப்பட்டுள்ளது. ஈழத்தமிழரது அரசியலானது இந்தியா பொறுத்து இருவழிமுறையை மட்டுமே கொணட்டது. ஒன்று, முழுமையாக சரணடைவது. இரண்டு, முழுமையாக எதிர்ப்பு அரசியலை வெளிப்படுத்துவது. இது இரண்டுமே தோல்விக்கான அடையாளமாகவே உள்ளது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வளர்ச்சியடைவதையே உலகளாவிய அறிவியல் அனுபவமாக காணமுடிகிறது. அதுவே வளர்ச்சியுமாகும். இதில் தற்போதுள்ள நகர்வுகளை பார்த்தால் ஈழத்தமிழரது அரசியல் வெறுமையடைந்துள்ளது வெளிப்படையானது. இதனையே கடந்த தசாப்தங்கள் முழுவதும் உணரக் கூடியதாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அறிவியல் பலமும் அத்தகைய சரணாகதி அரசியலுக்குள் அகப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான அபத்தமாகும். இதன் தோல்வியே ஈழத்தழிழது அரசியல் தோல்விக்கான அடிப்படையுமாகும். கோரிக்கை இல்லாததை கோரிக்கை என்றும் பிராந்திய சர்வதேச நலனுக்குரியதை ஈழத்தமிழரது நலனுக்குரியதென்றும் கருதுகின்ற நிலை இருக்கும் போது ஈழத்தமிழரது அரசியலை எவ்வாறு முதன்மைப்படுத்த முடியும். ஆனால் சமகாலத்திலும் சமானிய ஈழத்தமிழன் தெளிவாகவும் உறுதியாகவும் தனது அபிலாசைகளை நோக்கி செயல்திறனுடன் காணப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத பதிவாகும். அரசுகளின் நலனுக்கு பின்னால் செயல்படும் சக்திகளின் விருப்புக்குள் அகப்பட்டதல்ல அத்தகைய சமானியனின் அரசியல் அபிலாசை. அத்தகைய அபிலாசையை நோக்கி பயணிப்பதே ஈழத்தமிழனது தேசியமாகும்.

எனவே இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு ஏதோவெரு தீர்வினை நோக்கி இந்தியாவும் ஏனைய சக்திகளும் நகர முயலும் போது அதனை அடைவதற்கான வாய்ப்புக்களை மேற்கொள்ள வேண்டிய சக்திகளும் புலமையாளர்களும் மீளவும் சாத்தியமற்ற ஒன்றுக்காக கோசமிடுவதும் உரையாடுவதும் வங்குரோத்து அரசியலாகவே தெரிகிறது. இந்தியாவும் இலங்கையும் சமரசத்திற்கு தயாராகும் போது ஈழத்தமிழர் அத்தகைய சமரசத்திற்குள் அகப்பட்டு சிதையும் நிலையையே மீளவும் ஒரு தடவை கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான புறச்சூழல் தயாராகிவிட்டது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் அது முழுமையடையும். அதற்கு ஈழத்தமிழரது அரசியல் மட்டுமல்ல புலமையும் சேர்ந்து பங்காற்றுகிறது.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)