November 7, 2025
அரசியல் கட்டுரைகள்

சமாதான உடன்பாட்டின் ஒப்புதலும் அமெரிக்க-இஸ்ரேலிய நலன்களும்?

இஸ்ரேல்-ஹமாஸ் போரானது பாலஸ்தீன மக்களிற்கு நீண்ட துயரை மற்றும் முடிவில்லாத பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, யூதர்களின் அரசியல் இருப்பையும் அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதேநேரம் போர் ஒரு ஆரோக்கியமான முடிவை நோக்கி உலகத்தை நகர்த்துவதில் வெற்றிகொண்டுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதற்கான உலக சூழல் ஒன்றை 2023, ஆகஸ்ட்-7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் இருப்பில் மாற்றத்தை நோக்கிய நகர்வு ஒன்று சமாதான உடன்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் சமாதான உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் அது ஏற்படுத்தி உள்ள விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த இருபது அம்சத் திட்டத்தின் கீழ், பல நாட்களாக இடம்பெற்ற ஹமாஸ்-இஸ்ரேல் போரில் சமாதான உரையாடல் போர் நிறுத்தத்திற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் போரின் விளைவுகளினால் சமாதான அல்லது போர் நிறுத்த உடன்பாட்டை நிறைவானது ஒன்றாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். அதே மனோநிலை யூதர்களிடமும் ஏற்பட்டிருக்கின்றது. ஹமாஸ் பிடித்துச் சென்ற யூதப் பணயக் கைதிகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு ஒன்றையும் போர் நிறுத்த உடன்பாடு தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அத்தகைய நம்பிக்கையின் விளைவுகளை தேடுவது அவசியமானது.

முதலாவது யூதர்களைப் பொறுத்தவரை ஹமாசின் தாக்குதல் பாரிய நெருக்கடியாக அமைந்தாலும், ஈரானிய தாக்குதலும் ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி குழுவினரின் தாக்குதல்களும் பாரிய நெருக்கடியை தந்திருக்கின்றது. இஸ்ரேல் அரசாங்கம் அரசியல் ரீதியில் காசா நிலப்பரப்பு யூதர்களின் இருப்பை பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தை முன்வைத்திருந்ததோடு, காசாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான போராக கருதி செயல்பட்டது. ஆனால் நடைமுறையில் காசாவை அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களும் தம்முடைய செல்வாக்கில் இருத்தல் வேண்டும் என்ற வலியுறுத்தல்களை தொடர்ந்து, இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் இலக்கு தோல்விக்கான சூழலை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் யூதர்களையும் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தையும் முழுமையாக விலகியதாக காசா மக்கள் நம்பி செயல்படுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே உள்ளது. காரணம் யூதர்கள் எப்போதும் தாக்குதல் மனோநிலையை தற்காப்பு போருக்கான உத்திகளை கொண்டவர்கள். அதனால் போர் நிறுத்த உடன்பாட்டின் மீது பாலஸ்தீனியர்கள், ஹமாஸ் மற்றும் அராபிய நாடுகளுக்கு நம்பிக்கை அரிதாகவே காணப்படுகிறது. ஆனாலும் இத்தகைய போர் நிறுத்த உடன்பாடு ஹமாசுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மட்டுமன்றி யூதர்களுக்கும் தேவையான ஒன்றாக காணப்படுகிறது. யூத இராணுவம் காசா நிலப்பரப்புக்குள் நுழைந்தபோது எதிர்கொண்ட அழிவு பாரிய அளவாக இருக்கின்றது என இராணுவ நோக்கு ஆய்வுகள் உணர்த்துகிறது. அதனாலேயே இப்போர் நிறுத்தம் இருதரப்புக்கும் அவசியமானதாக காணப்படுகிறது. பாலஸ்தீனியர்களின் பாதிப்பு உள்கட்டுமான அமைப்பு முறைகளின் அழிவு போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று ஈரானின் தாக்குதலினால் இஸ்ரேலிய நிலப்பரப்பும் யூதர்களும் யூதர்களுடைய இராணுவமும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இதுவே போர் நிறுத்தத்துக்கான தேவையாக அமைந்திருந்தது.

இரண்டாவது பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில் இப்போர் நிறுத்தம் அவர்களுக்கான மனித அழிவுகளில் இருந்தும் உட்கட்டமைப்பு அமைப்புகளிலிருந்தும் பாதுகாக்கின்ற அதேவேளை ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி குழுக்கள் மேலெழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியது. அவர்களின் உட்கட்ட அமைப்புகள் இராணுவ கட்டமைப்புகள் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புகள் குவிப்பதற்கான சூழல்கள் என்பன முற்றாகவே முறிந்து போயிருந்தது. ஹிஸ்புல்லா என்ற அமைப்பை அதன் தாக்குதல்களை கண்டு கொள்வது கடினமாக அமைந்துள்ளது. ஆனாலும் அந்நிலப்பரப்பு இத்தகைய ஆயுதக் குழுக்களையும் இராணுவ யுக்திகளையும் இயல்பாகவே கொண்டிருக்கின்றது என்ற அடிப்படையில் போர் நிறுத்தம் வாய்ப்பாகவே காணப்படுகிறது. உலக வரலாற்றில் சமாதானங்களும் போர் நிறுத்தங்களும் போருக்கான தயாரிப்பாகவே கருதப்படுவதுண்டு. அத்தகைய ஒரு நிலைக்குள்ளேயே பாலஸ்தீனம் அல்லது அரேபிய தரப்புகள் போர் நிறுத்தத்தை பயன்படுத்த தயாராகின்றன. அவ்வாறே ஹமாசும் காசாவில் இருந்து வெளியேறுவது என்பது அதற்கான ஒப்புதலை போர் நிறுத்த உடன்பாட்டில் எட்டியது என்பதும் இஸ்ரேலிய தரப்பு தனது இராணுவத்தை காசாவில் இருந்து விலக்கிக் கொள்வதற்கு உடன்பட்டு இருப்பதும் அதீதமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரு தரப்பும் போர் நிறுத்த உடன்பாட்டின் அவசியத்தை உணர்ந்திருக்கின்ற அதேவேளை மேலும் ஒரு போருக்கான தயாரிப்பை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்தே இரு தரப்பும் உத்திகளையும் நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

மூன்றாவது இப்போர் நிறுத்த உடன்பாட்டில் மூன்றாவது சக்தியாக விளங்கும் அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க வெளிவிவகார கட்டமைப்பும் அதிக முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. உலக சமாதானத்தை பற்றிய உரையாடல் காசா மக்கள் படும் துயரங்களும் யூதர்கள் அடைந்திருக்கின்ற நெருக்கடிகளும் அமெரிக்காவை அல்லது ரொனால்ட் ட்ரம்பை போர் நிறுத்தம் தொடர்பிலான நகர்வுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. இதுவே போர் நிறுத்த உடன்பாட்டின் தேவையை அமெரிக்க தரப்பு மேற்கொள்வதற்கான பின்புலமாக தெரிகின்றது. அதேவேளை போர் நிறுத்த உடன்பாட்டின் பின்புலங்களை அவதானிக்கின்ற போது அமெரிக்கா வரியாளர்களும் பொருளாதார நெருக்கடியும் மேல் எழுவதற்கான வாய்ப்புகளை மேற்குலகத்துக்கு ஏற்படுத்துகின்ற தளத்திலும் இத்தகைய பிரபல்யம் யூதர்களுக்கு மட்டுமன்றி அமெரிக்கர்களுக்கும் அவசியமானதாக தெரிகின்றது. இதனாலேயே அமெரிக்கா உலகளாவிய ரீதியில் சமாதானத்தை எட்டுவதும் சமாதானத்தின் ஊடாக ஏற்படுகின்ற அமைதியை காசாவின் நிலப்பரப்பில் சாதகமாக்கிக் கொள்வதும் அமெரிக்க நலன்களை மேற்காசியாவில் உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் இஸ்ரேல் மற்றும் அரேபிய நாடுகளிடமிருந்தும் காசாவின் போர் அழிவுகளில் இருந்தும் மீட்டெடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. காசாவின் மீதான இஸ்ரேலிய போர் என்பது முழுமையாகவே மேற்குலகத்தின் ஜனநாயகம் தாராண்மைவாதம் மற்றும் நவதாரண்மை வாதம் என்ற அனைத்தும் தோல்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய தோல்வி என்பது முழு உலகத்தின் மீதான மேற்குலகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவே தெரிகின்றது. இதனாலேயே போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் அத்தகைய துயரங்களை அத்தகைய நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதற்கான சூழலொன்றை உருவாக்கி இருக்கின்றது.

எனவே போர் நிறுத்த உடன்பாட்டின் உள்ளடக்கம் ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் போர் நிறுத்த உடன்பாட்டின் ஊடாக காசா நிலப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அதில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் நலன்களை உத்தரவாதப்படுத்துவதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. அரேபிய நாடுகளை பொறுத்தவரையில் இத்தகைய போர் நிறுத்த உடன்பாடு ஒரு ஆரோக்கியமான அரசியல் இருப்பையும் மேல் எழுவதற்கான வாய்ப்புகளையும் மீளமைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் தந்திருக்கின்றது. அதேநேரம் அமெரிக்க இஸ்ரேலிய நலன்களை போர் நிறுத்த உடன்பாடு சாதகமானதாக மாற்றியிருக்கின்றது. அதிக நலன்கள் அடையப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றை போர் நிறுத்த உடன்பாடு தந்திருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)