அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் முடிவு ஈழத்தமிழர் எழுச்சியை உறுதி செய்துள்ளது!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை தீவில் பாரிய மாற்றங்களை தொடக்கியுள்ளது. தென்இலங்கையில் ஒரு புதிய சகாப்தத்தை கட்டியெழுப்பும் விதத்தில் தேர்தல் முடிவுகள் அமையப்பெற்றுள்ளது. அதேபோன்று வடக்கு, கிழக்கிலும் தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்றுக்கொண்ட இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரம் வாக்குகள் மாற்றத்தை நோக்கிய கருத்தாக அமைந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்னிலங்கை ஜனாதிபதி 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், விருப்பு வாக்குகளின் அடிப்படையிலும்  அறுதிப் பெரும்பான்மையற்று சாதாரண பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். அதுமட்டுமன்றி இடதுசாரிகளின் பாரம்பரியத்துக்குள்ள கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற மரபோடும், புதிய மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் வெளிப்படுத்துகின்ற அல்லது ஏற்படுத்த தொடங்கியுள்ள கட்சி என்ற அடிப்படையிலும் தென்னிலங்கை மக்கள் புதிய மரபுக்குள் அணி திரட்டப்பட்டுள்ளார். அது மிகவேகமாக இலங்கைத் தீவையும் பிராந்திய அரசியலையும், புவிசார் அரசியலையும், பூகோள அரசியலையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரை தமிழ்ப் பொது வேட்பாளர் அடைந்த வெற்றியானது எத்தகையது என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் நடந்து முடிந்த தேர்தல் வாக்கு சதவிகிதத்தை அளவீடு செய்கின்ற போது தென்னிலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் என்று கருத்தும், அதனால் தமிழ்ப் பொது வேட்பாளர் மீதான விமர்சனமும் அதீதமாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. குறுகிய கால இடைவெளியில் இத்தகைய அடைவை தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்றிருப்பது என்பது பொதுக்கட்டமைப்புக்கும், அது சார்ந்து உழைத்த மக்களுக்கு தனித்துவமான அடையாளமாக பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளது. ஒரு தேர்தலின் வெற்றி என்பது அரசை அமைப்பதிலும் அதனை நோக்கி வாக்குகளை குவிப்பதிலும் தங்கி இருந்தன. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பவர் அத்தகைய செய்முறை எதிர்கொள்ளும் தனது கோரிக்கைகளை கட்டமைக்காத ஒருவராகவும், வடக்கு-கிழக்காக தமிழ்த் தேசியமாக, சாதாரண மக்களின் பிரச்சனையின் அடையாளமாக, அரசியல் தீர்வின் அடையாளமாக, ஐக்கியத்தின் வடிவமாக தன்னை வெளிப்படுத்தி இருந்தார். அவை அத்தகைய வெளிப்பாடுகளின் பிரதிமைகள் இத்தேர்தலில் சரியான அடைவை எட்டி இருக்கின்றது. அத்தகைய அம்சங்களை புரிந்து கொள்வதற்காக இக்கட்டுரை முயற்சிக்கிறது.

முதலாவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் வழக்கு-கிழக்கு சார்ந்த ஐக்கியத்தை 2009க்கு பின்னர் அரசியல் கட்சிகளும் இணை அமைப்புகளும் அடைய முடியாத ஒன்றை வெளிப்படையாக அடைந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை முன்னிறுத்துகின்ற போது, வடக்கு மக்கள் கிழக்கு மக்களோடு எவ்வாறான உணர்வுகளை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். அது முதல் தரமான தனித்துவமான வெற்றிகரமான விடயமாக தெரிகின்றது. யாழ்ப்பாண மக்கள் மீதும் வடக்கு மக்கள் மீதும் கிழக்கில் இருக்கும் சில அரசியல் கட்சிகளும் தென்னிலங்கையோடு சேர்ந்து பயணிக்கும் தரப்புகளும் முன்வைத்த விமர்சனத்தை முழுமையாகவே தமிழ்ப் பொது வேட்பாளர் உடைத்துள்ளார். கடந்தகால தாயகக் கோட்பாடு மீதான விமர்சனங்களுக்கு முன்னால், தமிழர்களுடைய வாக்குகள் வடக்கு-கிழக்காக தாயகமாக தன்னுடைய வாழ்விடத்தின் பேரால் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இது ஒரு ஆரம்ப செய்முறையாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாவது, தமிழ் மக்கள் நீண்ட காலமாக அரசியல் உரிமைக்கான போராட்டத்தை அதன் வாயிலாக தமது நிலை இருப்பையும், வாழ்விட இருப்பையும், வாழ்விட உரிமையும் உத்தரவாதப்படுத்துவதற்கு போராடியவர்கள். தொடர்ந்தும் அதற்காகவே தமது போராட்டங்களை வெளிப்படுத்துகின்றார்கள். அதனால் அத்தகைய இருப்பை தேசியமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பொது வேட்பாளருக்கு வழங்கிய வாக்கு என்பது அவர்களின் இருப்பையும், தேசிய உணர்வையும் பலவீனமாக கருதும் அணுகுமுறைகளை முற்றாகவே நிராகரித்துள்ளார்கள். இவ்நிராகரிப்புக்கு பின்னால் தேசியம் என்று அழைக்கப்படும் மக்கள் கூட்டத்தின் விருப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரம் வாக்கு என்பது அத்தகைய இலட்சியத்திற்கான ஒரு வெளிப்படுத்துகையே ஆகும். அவ்வெளிப்படுத்துகையில் பிரதேசம் சாதியம், வர்க்கம், மதம் என்பன கடந்து அவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே தேசியத்தின் அடிப்படையயில் மக்கள் கூட்டமாக தனது சுய நிர்ணயத்தின் அடிப்படையில் அவ்வெளிப்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.

மூன்றாவது, வடக்கு-கிழக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியல் அபிலாசையை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுயநிர்ணயம் என்பது பிறர் வழங்கும் ஒரு பொருள் அல்ல. அத்தகைய அம்சத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில் சுயத்தின் அடையாளங்களோடு நிர்ணயத்தை தாம் கொண்டுள்ளோம் என்பதை தான் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2009க்கு பின்னர் வடக்கு-கிழக்கில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் தன்னை தான் ஆளுவதற்கும், தனது எல்லைக்குட்படுத்தப்பட்ட விதத்தில் இருப்பினையும் வாழ்வினையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உரிமை உண்டு என்பதை அடையாளப்படுத்தி உள்ளார்கள். இது வடக்கு-கிழக்காக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுயநிர்ணயத்தின் பெயரில் முன்வைக்கப்படுகின்ற போலி அடையாளங்களை இது நிராகரிக்க முயற்சித்து இருக்கிறது. சுயநிர்ணயம் என்பது ஈழத்தமிழர்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான அடையாளமாக இலங்கை அரசியலமைப்புக்குட்பட்ட தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனால் வடக்கு-கிழக்கு தனியான ஜனநாயக உரிமைகளுக்கு ஊடாக அல்லது வாக்களிப்பின் ஊடாக அத்தகைய தகவலை முன்கொண்டு வந்துள்ளது.

நான்காவது, வடக்கு-கிழக்கு மிக நீண்ட காலமாக கூறிவரும் அரசியல் தீர்வை போலித்தனமாக அன்றி, கட்சிகளின் விரிவாக அன்றி, கட்சி உறுப்பினர்களின் நலனுக்காக அன்றி ஒரு பொதுக் குறியீட்டின் பெயரால் அத்தகைய இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தமது கோரிக்கை சாத்தியப்படவில்லை என்பதையும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதையும் இத்தேர்தல் மூலம் உணர்த்தியுள்ளனர். தவிர்க்க முடியாமல் அத்தகைய முடிவுகளை புரிந்து கொள்வதும், சமகாலத்திலும் அத்தகைய அடைவை அல்லது அரசியல் தீர்வை வெளிப்படுத்துவதற்கான கருத்தியல் தளமும் நடைமுறையும் தம்மிடம் உண்டு என்பதை மீளவும் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இத்தகைய செய்முறைக்கான பங்களிப்பைச் செய்த ஒவ்வொரு வாக்கும் ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி இருக்கின்றது. நடந்து முடிந்த 2009க்கு முற்பட்ட ஆயுதப் போராட்டத்தில், அனைத்து ஆயுதப் போராட்ட அமைப்புகளும் ஒன்றிணைத்து பார்க்கின்ற போது 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட அல்லது 50 ஆயிரத்துக்கு உட்பட்ட போராளிகளே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அவ்வாறே அறுபத்தைந்து லட்சம் வாக்குகளை பெற்ற ஒரு ஜனாதிபதியை, இரண்டு லட்சத்துக்கும் மேற்படாத மக்கள் திரண்டு ஆட்சியில் இருந்து அகற்றினார்கள். அதே தர்க்கத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே இரண்டு லட்சத்து இருத்தாறாயிரம் வாக்குகளும் காணப்படுகின்றன.

ஐந்தாவது, ஈழத்தமிழர்கள் குறியீடாக முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அளித்த வாக்கு பிராந்திய, சர்வதேச அரசியல் சக்திகளை கவனத்துக்கும் திசைப்படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கியம் இல்லாத உதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஈழத் தமிழர்களே ஒன்றிணைந்திருப்பதும், அதனை நோக்கி சர்வதேசம் பிராந்தியம் பூகோள தளம் அனைத்தும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பற்றி கரிசனை கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக மாற்றி உள்ளது. அத்தகைய நிலை ஒரு ஆரோக்கியமான அரசியல் இருப்பை தென்னிலங்கை மக்களை போன்று சமமான உரிமையும் இறைமையும் உடைய அதிகாரத்தை அனுபவிக்கக் கூடிய விதத்திலான ஒரு தீர்வை நோக்கிய வடிவத்தை அடைவது என்பது தவிர்க்க முடியாது என்பதை அடையாளப்படுத்தி உள்ளது.

எனவே, ஈழத்தமிழர்கள் பொது வேட்பாளர் மூலம் அதிகமான பயன்களை தேசிய இனமாக, தாயகமாக,வடக்கு-கிழக்காக, சுயநிர்ணயமாக உத்தரவாதப்படுத்தியுள்ளார்கள். இதனை நோக்கி ஈழத்தமிழர்கள் வளர்த்தெடுக்கப்படுவதும் கட்டமைக்கப்படுவதும் அவசியமானது ஆகும். அதற்கான ஒரு அடிப்படை தமிழ் பொது வேட்பாளர் என்ற குறியீடு தந்துள்ளது. போலித்தனமான விமர்சனம் என்ற போர்வையில் நிகழ்த்தப்படுகின்றன புத்திபூர்வமற்ற விவாதங்களை விடுத்து ஒரு ஆரோக்கியமான அரசியல் இருப்பை கட்டுவதற்கு தமிழ் மக்கள் தங்களுக்குள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருப்பது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும். இலங்கையின் அணுகுமுறையில் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஆட்சி முறைமையில் காணப்படுகின்ற மாற்றத்தை பற்றிய நோக்கு நிலையானது ஈழத்தமிழர்களையும் நோக்கி சமகாலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பொது வேட்பாளர் கோடிட்டு காட்டி உள்ளது. எனவே பொதுவேட்பாளர் வெற்றி என்பது வாக்குகளின் எண்ணிக்கையை கடந்து ஈழத்தமிழர்களுடைய தேசிய இருப்பின் வடிவமாக இனம் காணப்பட்டுள்ளது. தேசியம் என்பது போலித்தனமானது; தனிப்பட்ட நலன் சார்ந்தது; கட்சிகளின் விருப்புச் சார்ந்தது என்ற கருத்தாக்கமே 2009க்கு பின்னர் ஈழத்தமிழரசியலில் கட்டமைக்கப்பட்டது. மாறாக அது மக்களின் எழுச்சி சார்ந்தது, அந்த எழுச்சிக்கான ஆரம்ப விடிவாகவே தமிழ் பொது வேட்பாளர் 2009க்கு பின்னர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகைய வெற்றிகளை முன்னிறுத்துகின்ற போது அதன் மீது வைக்கப்படுகின்ற அனைத்து விமர்சனங்களும் போலித்தனம் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)