December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

இம்ரான்கான் மீதான துப்பாக்கிச்சூடும் பாகிஸ்தானின் வன்முறை அரசியலும்

தென்னாசியாவில் 1947இல் உதயமான பாகிஸ்தான் அரசியல், இராணுவ கட்டமைப்பினால் வடிவமாகியுள்ள வரலாற்றை கொண்டுள்ளது. இந்தியாவையும் இந்துமதத்தையும் எதிர் கொள்ளவும் பாகிஸ்தானிய தேசத்தை பாதுகாக்கவும் இராணுவமே அவசியம் என்ற நிலையை அந்த நாட்டு மக்களுக்கு ஆட்சியாளர் வெளிப்படுத்தினர். அத்தகைய சூழலை ஆட்சியாளர்கள் ஊக்குவித்தனர். இந்தியாவும் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்ட போதே அத்தகைய நிலை தோற்றம் பெற்றுள்ளது. அதனால் இராணுவத்தை ஊக்குவிக்கும் மரபும் அதனோடு கூடவே வன்முறைக்கான மரபும் வளர்ச்சியடைய வழிவகுத்தது. பாகிஸ்தானின் அரசியல் கலாசாரம் வன்முறையையும் இராணுவத்தையும் ஒன்றாக இணைத்துக் கொண்டதுடன், ஜனநாயக ஆட்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அதன் நீட்சியாகவே முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேரணியொன்றில் கலந்து கொள்ளும் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கட்டுரையும் பாகிஸ்தானின் வன்முறைக் கலாசாரத்திற்கு அடிப்படையாக அமைந்த அம்சங்களை விளங்கிக் கொள்ள முயலுகிறது.

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி இம்ரான்கானும் அவரது கட்சியான பிடிஐ த் தொண்டர்களும் பேரணிநடத்திவந்தனர். ஆறு நாட்களாக நடந்த பேரணி பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் சென்றடைந்த போதே இத்தகைய வன்முறை நிகழ்ந்தது. இம்ரான்கான் தனது பிரசார வாகனத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத நபரொருவரால் இயந்திரத் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு காயமடைந்துள்ளார். இத்தாக்குதலுக்கு பின்னால் ஆட்சி செய்யும் அரசாங்கம் இருப்பதாகவும் பிடிஐக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கம் இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் இத்தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தவரை அதன் நீண்ட வரலாறு முழுவதும் இராணுவத்தின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு ஆட்சி அதிகாரத்தை ஜனநாயவாதிகள் இழந்துவருகின்றனர். பாகிஸ்தானின் ஜனநாயகம் அர்த்தமற்றதாக மட்டுமன்றி வன்முறைக் கலாசாரத்தின் முழுவடிவமாக காணப்படுகிறது. இதற்கு பின்னாலுள்ள காரணங்களை தேடுவது அவசியமானது.

முதலாவது, இஸ்லாம் என்பது சமாதானமானது என வரையறுக்கப்பட்டாலும், அதனை உலகத்தின் ஆதிக்க சக்திகளும் இஸ்லாமிய மேலாதிக்க சக்திகளும் வன்முறையின் வடிவமாக மாற்றியுள்னர். அதன் பிரதிபலிப்பாகவே பாகிஸ்தானின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பலமான அடிப்படையை இந்தியாவின் அணுகுமுறை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் அதனை தொடர்ச்சியாக பேணவும் முனைகிறது. இந்தியா, பாகிஸ்தானின் எதிரி நாடு மட்டுமல்ல, அதன் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கேள்விக்குரியதாக்கி வருகிற நாடாகவும் காணப்படுகிறது. ஏறக்குறை 1947 முதல் அதனையே பாகிஸ்தான் தனது உணர்வாகவும் கொண்டுள்ளது. இதனால் வன்முறையை உணர்வாகவும் செயலாகவும் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக அத்தகைய நகர்வை முதன்மைப்படுத்தி வருகின்றனர். ஆனால் அத்தகைய வன்முறைக்குள் இறுதியில் பாகிஸ்தானின் அரசியல் மட்டுமல்லாது, ஆட்சியாளர்களின் இருப்பும் காணாமல் போவதைக் காணமுடிகிறது. குறிப்பாக அலி பூட்டோவும், பெனாசீர் பூட்டோவும் கொல்லப்பட்டது போல் இராணுவவாதியான சியா -உல் -ஹக்கும் அவ்வாறான வன்முறையாலேயே கொல்லப்பட்டார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இரண்டாவது, இந்தியாவும் -பாகிஸ்தானும் சுதந்திரத்துக்குப் பின்னர் பல போர்களை எதிர்கொண்டன. காஷ்மீரை மீட்டெடுக்கும் முயற்சியில் இரு நாடுகளும் 1947, 1956,1965 இலும் பங்களாதேஷ் பிரிவினைக்காக 1971 இலும் கார்கிலில் 1998 இலும் பாரிய போர்களை எதிர்கொண்டு அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தன. இரு நாட்டுக்குமான போர்களில் பாகிஸ்தானே அதிக இழப்பையும் அழிவையும் சந்தித்தது. மீளமுடியாத நெருக்கடிக்குள் பாகிஸ்தானின் இருப்பு விளங்கியதுடன் பொருளாதாரம் அனைத்தும் பாரிய பாதிப்பினை எதிர்கொண்டது. பாகிஸ்தானின் தேசிய பொருளாதாரத்தின் 28 சதவீத ஒதுக்கீடாக ஆரம்பத்தில் காணப்பட்ட இராணுவச் செலவானது படிப்படியாக குறைந்தாலும் தற்போது 4 சதவீதத்திற்கும் அதிகமாக இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இராணுவத்தின் ஒதுக்கீடு குறைந்தாலும் இராணுவ ரீதியான வளர்ச்சியும் ஆயுத தளபாடங்களின் குவிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு இந்தியா மீதான அச்சமே பிரதாக காரணமாகக் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவிடம் எதிர்கொண்ட தோல்விகளும் அதற்கு எதிரான நகர்வுகளும் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டுகிறது. அதன் நடவடிக்கையில் ஒன்றாகவே அணுவாயுத தயாரிப்பில் பாகிஸ்தானின் வெளிப்பாடு சாத்தியமானது.

மூன்றாவது, பாகிஸ்தானின் புவிசார் அமைவிடமானது இராணுவ முக்கியத்துவத்தை மட்டும் கொள்ளாது இஸ்லாமிய நாடுகளின் நிலத் தொடர்ச்சியையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான தரைத் தோற்றத்தையும் பிரதிபலிக்கின்றது. வன்முறைக்கான நிலத் தோற்றத்தைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளது அரசியலை பாகிஸ்தானும் கொண்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஈரான் மற்றும் துர்க்ெமனிஸ்தான் போன்ற நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதனால் இஸ்லாமிய கலாசாரத்தை அரசியலிலும் இராணுவத்திலும் கடைப்பிடிக்க முனைகிறது. அத்தகைய இயல்புகளைக் கொண்ட பிராந்திய நாடுகளது பண்பாட்டினைப் பின்பற்றும் பாகிஸ்தான் உண்மையான இஸ்லாத்தின் இயல்புகளை நிராகரித்துவிட்டு இஸ்லாமிய மேலாதிக்க சக்திகளது இயல்பினை பின்பற்றி வருகிறது. அதுவே வன்முறைக்கும் மோதலுக்கும் வழிவகுத்து வருகிறது.குறிப்பாக மத எதிர்ப்புவாதக் குழுக்களும் தீவிரவாத அமைப்புகளும் சமூகத்தின் இருப்பாக மாறியுள்ளதுடன் அதுவே உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது. அதனை முதன்மைப்படுத்தும் பிரதான நாடுகளின் மையப்பகுதியாக பாகிஸ்தான் காணப்படுகிறது. ஏனைய மதங்கள் மீது அதிக எதிர்ப்புணர்வை கட்டிவளர்க்கும் மதத் தீவிரவாதம் வன்முறையை இயல்பான பண்பாக கொண்டுள்ளது. வன்முறையே அதன் பாதுகாப்பு எனக்கருதுகிறது.

நான்காவது, நாட்டின் பிராந்திய அணுகுமுறை மட்டுமன்றி உலகளாவிய போக்கிலும் பாகிஸ்தானின் அரசியல் வன்முறைக்கான ஊக்குவிப்பை எதிர்கொள்கிறது. இம்ரான்கான் ஊழல்வாதி எனக்குறிப்பிட்டு ஆட்சியை இழக்கும் போது அமெரிக்கா மீதும் மேற்குலகத்தின் மீதும் இம்ரான்கான் குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக சீனாவுடனான நெருக்கத்தை அதிகம் கொண்டுள்ள இம்ரான் ரஷ்யாவுடனும் சமதையான உறவை பின்பற்றியிருந்தார். அதனால் அமெரிக்காவுடன் வெளிப்படையான முரண்பாடுகள் இல்லாது விட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் முரண்பாடுடைய நிலை தவிர்க்க முடியாது வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய அவரது ஆட்சி இழப்புக்கு அத்தகைய உலக அரசியல் போக்கே காரணமாக அமைந்திருந்தது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் குவாடர் துறைமுக ஒத்துழைப்பு, கொரகரம் உயர்பாதை, பொருளாதார ஒத்துழைப்பு என்பன பாரிய நெருக்கத்தைக் கொண்டுள்ளன. இதற்கு எதிராக அமெரிக்க உட்பட்ட மேற்கினது அணுகுமுறை வளர்ச்சியடைந்ததன் விளைவாக பாகிஸ்தானின் ஸ்திரமான ஆட்சி ஆபத்தான நிலைக்குள் நகருகிறது.

ஐந்தாவது, இம்ரான்கான் மீதான துப்பாக்கிச்சூடு தேர்தலுக்கான அவரது ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளதாகவே உணரப்படுகிறது. போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துச் செல்கிறது. அதேநேரம் தற்போதைய ஆட்சியை தொடரும் பாகிஸ்தான், பிரதமரின் அதிகாரத்திற்கு எதிராக பலமான மக்கள் எழுச்சியொன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாசிய நாடுகள் அனைத்துமே ஊழல் ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளாகவே காணப்படுகின்றன. அதில் பங்களாதேஷுக்கு அடுத்த நிலையிலுள்ள பாகிஸ்தான் வன்முறையாலும் இராணுவவாதத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதாவது ஊழல், வன்முறை, இராணுவம் என்பவற்றுடன், பாகிஸ்தானிய உயர்வர்க்கம் இத்தகைய இயல்புகளுக்கு சலாம் போடும் நிலையிலேயே விளங்குகின்றது. அதனால் ஆட்சியின் முழுமையையோ அல்லது ஜனநாய ரீதியிலான ஆட்சிமாற்றத்தையோ கண்டு கொள்வது பாகிஸ்தானில் கடினமானது. அதற்கு அடிப்படையில் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா ஏற்படுத்திய கட்டமைப்புக்களே காரணமாகும். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ஆட்சி அதிகாரமும் இராணுவத்தாலும் வன்முறையாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய சிந்தனையாளர் ஹம்சா அலவி குறிப்பிடுவது போலவே காணப்படுகிறது. பாகிஸ்தானை ஆளும் வர்க்கத்தை இராணுவம் தனது நலனுக்கு ஏற்ப கையாளுவதும் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதும் நிதர்சனமாகவுள்ளது.

எனவே இம்ரான்கான் மீதான துப்பாக்கிப் பிரயோகம் பாகிஸ்தானை ஆளும் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டை அதிகரித்துள்ளது. அவ்வாறே உலகளாவிய சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்ற குரல்களும் எழுப்பப்படுகின்றன. இவை அனைத்துமே இம்ரான்கானின் தேர்தல் வெற்றிக்கான முதலீடாக அமைய வாய்ப்புள்ளது. இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தானைப் பொறுத்தவரை வழமையானவையாகவே தெரிகின்றன. கடந்த காலம் முழுவதும் அத்தகைய வன்முறைக்குள்ளாலேயே பாகிஸ்தானின் அரசியல் நகர்ந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)