அரசியல் கட்டுரைகள்

தையிட்டி பௌத்த விகாரையும் ஈழத்தமிழர் அரசியலும்

இலங்கைத் தீவின் அரசியலில் மீண்டும் ஒரு குழப்பகரமான இன சிக்கல் ஒன்றை தையிட்டி பௌத்த விகாரை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகின்றது. இலங்கையின் புதிய அரசாங்கம் இனவாதமற்ற அணுகுமுறைகளை கொண்டிருக்கப் போவதாக தெரிவித்து வருகின்ற சூழலில் தையிட்டி விகாரை நெருக்கடி நிலையை உருவாக்கி இருக்கின்றது. இதன் மூலம் மீளவும் இன மோதல் ஏற்பட்டு விடுமா என்ற குழப்பம் பலதரப்புகளிடம் காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிக நீண்ட காலமாக தையிட்டி விகாரைக்கு எதிராக போராடி வருகின்ற சூழலில், அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இக்கட்டுரையும் தையிட்டி விகாரை ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளை தேடுவதாக உள்ளது.

ஈழத் தமிழருடைய அரசியல் போராட்டங்களினால் வடிவமைக்கப்பட்டது. மிக நீண்ட காலமாக ஈழத் தமிழர்கள் தமது இருப்பையும் அது சார்ந்திருக்க கூடிய இறையாண்மையும் பாதுகாப்பதற்கு தொடர்ச்சியான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். முன்பின் முரணான அம்சங்கள் காணப்பட்ட போதும், அரசியலை உறுதிப்படுத்துவதற்கு போராட்டமே வழிமுறை என்பதை முன்னெடுத்து வந்துள்ளனர். அத்தகைய போராட்டம் எந்த இனத்துக்கோ அல்லது எத்தகைய மதத்துக்கோ எதிரானது அல்ல. ஈழத் தமிழர் தமது இருப்பை பாதுகாப்பதற்கான போராட்டமாகவே காணப்பட்டது. ஆயுதப் போராட்டமும் சரி அகிம்சை ரீதியான போராட்டமும் சரி ஈழத்தமிழர்களின் இருப்பிடத்தையும், மொழியையும், பண்பாட்டையும், அதற்கே உரித்தான பொருளாதாரத்தையும் பேணுவதும் பராமரிப்பதுமே எதார்த்தமாகும். அத்தகைய போராட்டத்தை ஈழத்தமிழர்கள் முன்னெடுப்பது எந்த மதத்துக்கோ இனத்துக்கோ எதிரானது அல்ல. இதன் அடிப்படையில் தையிட்டி விகாரை தொடர்பில் எழுந்திருக்கும் குழப்பகரமான விவாதங்களை விளங்கிக் கொள்ளுதல் அல்லது குழப்பங்களை தீர்த்துக் கொள்ளுதல் தவிர்க்க முடியாது. அதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது, கையிட்டி விகாரை சட்டரீதியான அம்சமாக கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஈழத்தமிழர் உடைய அரசியல் சட்ட ரீதியான அம்சங்களுக்குள் உட்பட்டது கிடையாது. ஒரு சட்டத்தை அங்கீகரிக்கும் நியாயத்தை ஏற்றுக் கொள்ளும் அதற்கான வியாக்கியானங்களை மதிப்பளிக்கும் தரப்புக்களோடு மட்டுமே சட்டரீதியாக விவாதிக்க முடியும். இலங்கைத் தீவை பொறுத்தவரையில் சட்டமும் அதன் நடைமுறையும் பெரும்பான்மை மக்களின் நலனுக்கானது அன்றி, ஈழத்தமிழர்களுக்கானதாகவோ முஸ்லிம்களுக்கானதாகவோ அல்லது மலையகத் தமிழர்களுக்கானதாகவோ உருவாக்கப்படவில்லை. அத்தகைய இனங்கள் பாதிக்கப்படுகின்ற போதும், அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படுகின்ற போதும் சட்டம் எந்த செய்முறையையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி தையிட்டி விகாரைக்குரிய நிலம் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற போது, அதற்கான சட்ட பத்திரங்கள் இராணுவத்துடன் இருக்கின்ற சூழலில், அந்த நிலத்தை இராணுவத்துக்கு பாரப்படுத்திய சூழலில் அது சார்ந்த விவாதங்கள் முன்வைக்கப்படுகிறது. சட்ட ரீதியாக கட்டப்பட்டது என்று நியாயப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இலங்கைத் தீவை பொருத்தவரையில் பௌத்தம் சட்டதத்திற்கு உட்பட்ட மதமாக பேணப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. அது எந்த சட்டத்துக்கும் கட்டுப்பட்டது கிடையாது. அதன் நகர்வுகள் ஒவ்வொன்றும் அரசு சார்ந்ததாகவும் அல்லது பௌத்த விகாரைகள் சார்ந்ததாகவும் அல்லது இராணுவம் சார்ந்ததாகவுமே அமைந்துள்ளது. இதற்கு அப்பால் இலங்கைத் தீவின் அரசியலில் பௌத்த மதம் அதன் செல்நெறிகளுக்கு அப்பால் ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு கடந்த வரலாறு முழுவதும் செயல்பட்டிருக்கின்றது. அதற்கான ஆதாரங்கள் அதிகம் சிங்கள பெரும்பான்மை வரலாற்று பேராசிரியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அத்தகைய சூழலில் தையிட்டி விகாரை ஓர் அரசியல் பரிமாணம் கொண்டது. அத்தகைய அரசியல் பரிமாணத்தை எதிர்த்து தமிழ் மக்கள் கூட்டாக செயல்படுதல் என்பது அவர்களது இருப்புச் சார்ந்த அடிப்படையாகும். பௌத்த மதத்தை பின்பற்றாத பிரதேசம் ஒன்றில் விகாரை அமைப்பது என்பது பிற மதங்கள் மீதான ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது. இவ்வாறு பல விகாரைகள் வடக்கு கிழக்கு அமைக்கப்படுவதும், அதனை மையப்படுத்தி பெரும்பான்மை மக்களை குடியமர்த்துவதும், அதனூடாக நிலத்தின் மீது தமிழர் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நிராகரிப்பதாகவே காணப்படுகிறது.

இரண்டாவது, தையிட்டி விகாரை ஈழத் தமிழரது அரசியலலோடும் கலாச்சார நியாதிகளோடும் அதிக முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது. ஈழத்தமிழர் பண்பாட்டு குறியீடுகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற கோயில்களும் தேவாலயங்களும் அழிக்கப்பட்ட சூழலில் விகாரங்களை அமைப்பதும், பாதுகாப்பு அளிப்பதும் இனரீதியான இருப்பின் நியாயப்பாட்டை நிராகரிப்பதாகவே தெரிகிறது. இலங்கைத் தீவு இனவாதமற்ற தேசியத்தைக் கொண்டது என்ற நியதியை புதிய அரசாங்கம் பல்வேறுபட்ட தளத்தில் முதன்மைப்படுத்தி வருகின்ற போதும், நடைமுறையில் அதிக குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தையிட்டி விகாரை ஏற்படுத்த முனைகிறது. ஈழத்தின் பௌத்த மதம் தமிழ் மக்களால் பேணப்பட்டது என்பதற்கு அல்லது பின்பற்றப்பட்டது என்பதற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் வடக்கு-கிழக்கில் காணப்படுகின்றது. அதனை நிராகரித்து விட்டு அதற்கு உரித்துடைய பண்பாட்டுக் கோலங்களை கையகப்படுத்துவதன் மூலம் பௌத்தத்தை பெரும்பான்மை மக்களின் பௌத்தமாக அடையாளப்படுத்த முனைவது என்பது நியாயமற்ற செய்முறை ஆகும். பௌத்தம் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் குறியீடாக இருக்கின்றது என்பது ஒரு புறம் அமைய மரபார்ந்த ரீதியில் கடந்த வரலாறு முழுவதும் தமிழ் மக்களும் பௌத்தத்தை பின்பற்றி இருக்கின்றார்கள். அதற்கான ஆதாரங்களை கந்தரோடை மற்றும் யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற புராதன அடையாளங்கள் உறுதிப்படுத்துகின்றன. அது தமிழ் மக்களுக்கு உரித்தானது. இலங்கைத் தீவின் அரசியலை பௌத்த மதம் ஆக்கிரமித்தது போன்று நிலத்தையும் நிலம் சார்ந்திருக்க கூடிய இனத்தையும், இனத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் ஆக்கிரமித்தல் என்பதே இங்குள்ள பிரதானம் முரண்பாடாகும். தையிட்டி விகாரை மத அடையாளங்களுக்குள்ளால் அளவீடு செய்து விட்டு போக முடியாது. மாறாக அது ஒரு வகையில் அரசியல் குறியீட்டின் அடையாளமாகும். அவ்அடையாளத்தை முதன்மைப்படுத்திய போராட்டங்களும் அவற்றுக்குரிய செய்முறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவது என்பது முரண்பாடுகளை தோற்றுவிக்கும் இன வன்முறையை உருவாக்கும் என்ற விவாதம் அபாயமானது. மற்றும் போலித்தனமானது. அவ்வாறு ஒரு இனம் மௌனமாக செயல்படுமாயின் அதன் இருப்பு காணாமல் போகும். எதிர்வினை ஆற்ற வேண்டிய இடத்தில் நியாயமானதும் அறத்துக்கு உட்பட்ட விதத்திலும் அதனை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது. இன ரீதியான எண்ணங்களோடு தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நிகழ்த்தப்பட கூடாது. அவ்வாறான நோக்கு நிலையில் அதனை அளவீடு செய்வதும் பொருத்தமற்றது. ஈழத் தமிழர்கள் தமது வாழ்விடத்தை பாதுகாப்பதற்காகவே அல்லது தக்கவைத்துக் கொள்வதற்காகவே முயலுகிறார்கள். அது ஒருபோதும் பிற இனத்தையும் பிற மதத்தையோ எதிர்ப்பதாகவோ நிராகரிப்பதாகவோ அமையாது. மாறாக ஈழத்தமிழர்களுடைய வாழ்விடம் மீது மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளே அந்த இனத்தின் இழப்பையும் அதன் நியாயப்பாடுகளையும் நிராகரிப்பதாக அமைந்து விடும்.

எனவே தையிட்டி விகாரைக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானதும் கனதியானதும் தவிர்க்க முடியாததுமாகும். போராட்டத்தில் பல்வேறுபட்ட தரப்புகள் இணைந்து இருப்பது என்பது அதன் அரசியல் ரீதியான வலுவை பாதுகாப்பதற்கான செய்முறையாகவே காணப்படுகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நீண்ட காலமாக போராட்டத்தை நிகழ்த்தி வந்த போதும் அதனுடைய முழுமையும் திரட்சியும் தற்போது முதன்மை அடைந்திருக்கிறது. அதற்கான வாய்ப்பை உருவாக்கிய அரசியல் கட்சிகளை அதற்கான செயல்பாடுகளை முதன்மைப்படுத்துகின்ற சிவில் அமைப்புகளும் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது என்பது ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டத்தின் ஒரு புதிய திசையை உருவாக்கி இருக்கின்றது. கட்சிகளின் நலன்கள் அங்கு முதன்மைப்படுத்தப்படுவதை விட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கு முனைந்திருப்பது அவசியமானது. தென்னிலங்கையின் ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற நோக்கத்தோடு அத்தகைய போராட்டங்கள் வடிவமைக்கப்படவில்லை. அவ்வாறு வடிவமைப்பதும் பொருத்தமற்றது. மாறாக ஈழத் தமிழர்களுடைய இருப்பினதும் இறைமையினதும் உத்தரவாதத்தை ஏற்படுத்துவது, இத்தகைய போராட்டத்தின் நியாயப்பாடாக தெரிகின்றது. இதனை கைவிட்டு ஈழத்தமிழர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாது என்பது நியாயமான செயல்பாடாக தெரிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)