அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிக முக்கியத்துவத்தையும் மாற்றங்களையும் டொனால்ட் ட்ரம்ப்மின் வெற்றி வெளிப்படுத்துகின்றது. டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெற்ற வேட்பாளராக அமெரிக்காவில் பார்க்கப்படுகின்றனர். அமெரிக்கா வரலாற்றிலே இவ்வாறு ஒரு ஜனாதிபதி தோல்வி அடைந்து பின்னர் வெற்றி பெற்ற பதிவு செய்தமை நிகவில்லை. அது மட்டுமன்றி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட ஊடக முக்கியத்துவத்தையும் சர்வதேச முக்கியத்துவத்தையும் தகர்த்து அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கான காரணங்களை அதன் முக்கியத்தையும் தேடுவதாக உள்ளது.
முதலாவது டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஓர் ஆசிய நாட்டவர் என்ற அடிப்படையில் அமெரிக்க வாக்காளர் மத்தியில் அதிகமான முக்கியத்துவத்தை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்கர்கள் கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்கினாலும் இதுவரை அவர்களை தமக்கு சமமானவர்களாகவும் அங்கீகாரம் மிக்கவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் கருதவில்லை. அவ்வாறுதான் ஆசிய நாட்டவர் பொறுத்தும் அமெரிக்கர்களிடம் உள்ள பதிவாக உள்ளது. அத்தகைய சூழலுக்குள்ளேயே கமல ஹரிஸ்ன் தேர்தல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவரது அதீத எதிர்பார்ப்பை விட தேர்தலில் அவர் வெல்ல வேண்டும் என ஆளும் தரப்பு கருதியது. காரணம்; அமெரிக்க நிர்வாகத்தினாலும் ஆளும் வர்க்கத்தினாலும் டொனால்ட் ட்ரம்ப் இலகுவில் கையாள முடியாதவர் என்ற எண்ணம் காணப்பட்டது. கமலா ஹரிஸ் ஜோ பைடனுக்கு பின்னர் தமது விருப்புக்கு ஏற்ற வகையில் கையாளக் கூடியவர் என்றும் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகக் கூடியவர் என்றும் கருதியதுடன் ஆசிய நாட்டவர் என்பது அதற்கு இசைவானவர் என்றும் கருதினர்.
இரண்டாவது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு பெண் ஜனாதிபதி ஆவது என்பது கடினமான இலக்கு என்பதை பல தடவை அமெரிக்கா வாக்காளர்களும் தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களும் நிறுவியுள்ளனர். 1872 விக்ரேறியா வூட்ஹால்(Vigtoria Woodhull) 2016 ஹில்லாரி கிளின்டன்(Hillary Clinton), 2024 கமலா ஹரிஸ்(Kamala Harris) ஆகியோர் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெண் ஜனாதிபதி வேட்பாளர்கள். மூவரும் தோற்றுள்ளனர். அமெரிக்கா ஜனநாயகம் வரையறைகளைக் கொண்டு இயங்குகிறது மட்டுமின்றி அது வழங்கும் உரிமையும் அங்கீகாரமும் வரையறைக்கு உட்பட்டது என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை கமலா ஹரிஸ்க்கு எதிரான வாக்குகளை கருத்தில் கொள்ளும்போது புரிந்து கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால் ட்ரம்ப் மக்களாலும் தேர்தல் கல்லூரியினாலும் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். எனவே அமெரிக்க வரலாறும் முழுவதும் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வரையறுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முதன்மையானவர்களாக உள்ளனர். ஆமெரிக்க ஆட்சியும் அதிகாரமும் அடையாளப்படுத்தும் ஜனநாயம் எதுவென்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. அரசியல் இலக்கணத்தை (Grammar of Politics) எனும் நூலை எழுதிய சிந்தனையாளரான ஹெரோல் லஸ்கி (Harold Laski) உலக அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஆண் மேலாதிக்க அரசியல் அமைப்பு என்றே தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதற்கு விதிவிலக்கானது இல்லை. அவ்வாறு அமெரிக்காவின் ஜனநாயகத்தின் வரையறைக்குள்ளேயே ஜப்பான் மீதான இரண்டு அணு குண்டுகளை அமெரிக்க ஜனநாயகம் வீசியது என்பதும் அதன் ஜனநாயகத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எனவே ஜனநாயகம் என்பது பெண்களுக்கானதோ ஆட்சியாளர்களுக்கானதோ தேசத்துக்கானதோ தேசியத்திற்கானது அல்ல மாறாக ஜனநாயகம் அந்த தேசத்தின் நலனுக்கான நலனை முதன்மைபடுத்திய ஜனநாயகம் கட்டமைக்கப்படுகிறது.
மூன்றாவது டொனால்ட் ட்ரம்ப்ன் வெற்றிக்கு அடிப்படையில் அவரது பொருளாதார கொள்கைகள் வலுவான காரணம் என்று மேற்குலக ஊடகங்கள் விவாதிக்கின்றன. குறிப்பாக அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில் இருக்கின்றது என்பதை வெளிப்படையாக உறுதிப்படுத்தும் ரெனால்ட் ட்ரம்ப் அதனை சரி செய்வதற்கான உத்திகளை தனது தேர்தல் பரப்புரையில் முதன்மைப்படுத்தி இருந்தார். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். மாறாக கமலா ஹரிஸ் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளையும் கடந்த காலத்தில் ட்ரம்ப்ன் நடத்தை மீறல்களையும் விவாதித்திருந்தனர். நடத்தை மீறல்கள் அந்த நாட்டைப் பொறுத்தவரையில் அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் சாதாரணமானவையாகவே பார்க்கப்பட்டது. பதினெட்டாம் 19ஆம் நூற்றாண்டு சூழலை தற்போது காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மரபுக்குள் நிற்கும் வேட்பாளர்களை விடுத்து புதியவற்றை சிந்திக்கும் வாக்காளர்கள் காணப்படுகின்றனர். புதியதற்கும் நவீனத்திற்கும் முக்கியத்துவத்தை கொடுத்தல் என்ற உபாயம் அமெரிக்க மக்களிடம் காணப்படுகிறது. அதனால் அவரது வெற்றியை கமலா ஹரிஸ்னால் தடுக்க முடியவில்லை
நான்காவது இஸ்ரேலிய அமெரிக்க நட்புறவானது மிகப்பலமானது. இஸ்ரேலின் இருப்பையும் அதன் தொடர்ச்சியையும் பாதுகாக்கின்ற நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு வருகை தந்த போது கமலஹரிஸ்ன் அணுகுமுறை சற்று நெருடல் மிக்கதாக இருந்தது. அது மட்டுமன்றி பலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் ஆயுதங்களையும் வழங்கி போரை முதன்மைபடுத்தும் அமெரிக்கா இஸ்ரேலிய பிரதமரை கையாண்டவிதம் அதிக குழப்பமானதாகவே அமைந்திருந்தது. ஆனால் கமலா ஹரிஸ் தந்திரோபாய ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இஸ்ரேலியப் பிரதமரை தவிர்த்தார் என்பது அமெரிக்கவாழ் யூதர்களுக்கு அதிக வெறுப்பைத் தந்திருந்தது. தனிப்பட்ட ரீதியில் சந்தித்து உரையாடுகிற போதும் சில எச்சரிக்கைகளை மறைமுகமாக விடுத்திருந்தார். இது அமெரிக்க வாழ் யூதர்களையும் யூத முதலாளிகளையும் அதிகமாக பாதித்தது. அமெரிக்கா ஜனாதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நிதி பங்களிப்பை அதிகம் வழங்குபவர்களாக யூத செல்வந்தர்களை காணப்படுகின்றனர். இதனால் யூதர்கள் பெரும் அளவுக்கு கமலா ஹரிசை நோக்கிய எதிர்ப்பு வாதங்களை முதன்மைப்படுத்தியதோடு டொனால்ட் ட்ரம்ப்ன் வெளிப்படையான இஸ்ரேலுக்கு அனுசரணையும் ஆதரவும் தெரிவித்திருந்தார். ஈரானுடைய அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தேர்தல் பரப்புரையிலேயே தெரிவித்தார். ஏற்கனவே ஈரானிய தளபதி மற்றும் அணு விஞ்ஞானி போன்றவர்களை அவரது ஆட்சிக் காலத்தில் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு கொலை செய்திருந்தது அதனால் யூதர்கள் ரொனால்ட் ட்ரம்ப்பில் அதிக நம்பிக்கை வைக்க காரணமாக அமைந்திருந்தது. இது மிகப் பிரதானமாக தேர்தலில் பிரதிபலித்தது. யூதர்கள் கண்டுகொண்ட முக்கியத்துவம் இஸ்ரேலை பாதுகாப்பதும் அராபியர்களை தோற்கடிப்பதும் என்பதாகும். இதுவே பிரதான கொள்கையாக காணப்பட்டது. ட்ரம்ப்ன் ஆட்சி காலம் யூதர்களுக்கு சார்பாகவே அமைந்திருந்தது. அதனால் அமெரிக்க வாழ் யூதர்கள் டொனால்ட் மீதான நம்பிக்கையை அதிகம் கொண்டிருந்தனர்.
ஐந்தாவது டொனால்ட் ட்ரம்ப்ன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாக கமலா ஹரிசின் ஜனநாயக கட்சியினராலும் வெளிப்படுத்தப்பட்டது. நீதிமன்றங்கள் வரை அவர் மீது அவமதிப்புகள் முதன்மைப்படுத்தப்பட்டது. அமெரிக்கர்களை பொருத்தவரை அல்லது வெள்ளை இனத்தவர்களை பொறுத்தவரையில் அவ்வகை அம்சம் என்பது சாதாரணமான விடயமாகவே கருதுகின்றனர். ஏற்கனவே அமெரிக்கா ஜனாதிபதிகளினுடைய வரிசையில் கிளின்டன் மிக முக்கியமான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரது ஆட்சி காலம் நெருக்கடி அற்றதாகவும் அதற்குப் பின்னர் அவருடைய மனைவி கிளாரி கிளின்டன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்ததும் அமெரிக்க மக்களின் அரசியல் கலாச்சாரத்தில் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒர் அம்சமாகவே உள்ளது. எதிர்த்தரப்பினர் தமக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அதிகம் முதன்மைப்படுத்தினார் அதனையே பிரச்சார புத்திகளாக கொண்டிருந்தனர். ஆனால் மக்களோ அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் அவர்களது அரசியல் ரீதியான அணுகுமுறைகள் என்பனவற்றை முதன்மைப்படுத்தி அவதானித்தனர். ஏற்கனவே ஜோ பைடன் நிர்வாக ரீதியில் பலவீனமானவராக இருந்ததும் அவரது அணுகுமுறைகள் அமெரிக்க தேசியத்தின் நலனை பலவீனப்படுத்துவதாக இருந்ததுடன் ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்தவராகவே தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். அதனால் அத்தகைய நிர்வாகம் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்து இருந்தனர். இதுவே ரொனால்ட் ட்ரம்ப்ன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. டொனால்ட் மிக மோசமான அணுகுமுறைகளையும் பின்பற்றங்களையும் கொண்டிருந்த போதும் அந்த மக்கள் அந்த தெரிவை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அது டொனால்ட் ட்ரம்ப்பிடம் அதீதமாக நிர்வாக திறன் பொருளாதாரக் கொள்கை அரசியல் ரீதியான வெளிப்படைத்த தன்மை என்பனவற்றை தெளிவாகவே அடையாளம் கண்டுள்ளனர். அதனை நோக்கி அமெரிக்கர்கள் இத்தேர்தலை எதிர்கொண்டனர் அமெரிக்கா ஜனாதிபதி என்பவர் உலகளாவிய ரீதியில் இருக்கும் மாநிலங்களுக்கு தலைமை தாங்குகின்ற ஒரு தேசத்தை தலைவராகவே காணப்படுகின்றார். அதனால் அவர் ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக இருத்தல் வேண்டும் என்பதில் அமெரிக்க மக்கள் என்றுமே தெளிவாக உள்ளது. அதனையே எலான் மாஸ்ம் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆறாவது ட்ரம்ப்ன் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மைப்படுத்திய இன்னொரு வடிவமாக ரஷ;சிய-உக்ரையின் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பவை தொடர்பான தெளிவான கொள்கைகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு பின்னால் ரஷ்சிய-உக்ரையின் போரை அவர் அடையாளம் கண்டறிந்தார். இதனால் ரஷ்சிய ஜனாதிபதி புட்டினுடனான நெருக்கம் போரை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என கருதுகின்றார். அதனை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவ்வாறே இஸ்ரேல்-ஹமாஸ் போரையும் மட்டுப்படுத்துவதோடு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் அமெரிக்க கூட்டுக்கும் நெருக்கடி தர கூடிய நாடுகளையும் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் முடிவுக்கு கொண்டு வரும் உத்திகளோடு அவர் தனது தேர்தல் பரப்புரைகளை நகர்த்தியுள்ளார். இதனால் அவரது வெற்றி இலகுவானதாகவும் சாத்தியமானதாகவும் அமைந்தது. மேற்கு ஐரோப்பியர்களைம் கிழக்கு ஐரோப்பியர்களைம் அதிகம் பொருளாதார பாதிப்புகளை முடிவுக்கு கொண்டுவரும் ஆட்சியாளர் அமெரிக்க மக்களுக்கு அவசியமானவராக காணப்பட்டனர் அது மட்டுமன்றி ரஷ்சிய-அமெரிக்கா பகைமையை முதன்மைப்படுத்துவதை அல்லது பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்க நெருக்கடிக்குள் அகப்பட்டு இருப்பதையும் முடிபுக்கு கொண்டுவர அமெரிக்க மக்கள் அதிகம் முதன்மைப்படுத்தினர். அமெரிக்காவின் பொருளாதார இருப்பு அமைதிக்கான வாய்ப்பு என்பதாக பாதிக்கப்படுகிறது என அமெரிக்க மக்கள் அதிகம் கருதுகின்றனர். இதனாலேயே அவர்கள் வெளிப்படையாக போரை நிறுத்துவதற்கான வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பை அடையாளம் கண்டார்கள். வெளிப்படை தன்மையை அதற்கான அடிப்படை என்பதை அந்த மக்களின் வாக்களிப்பு கலாசாரம் உணர்த்துகின்றது.
ஏழாவது, இத்தகைய காரணங்களுக்கு அப்பால் டொனால்ட் ட்ரம்ப்பிடம் இருக்கும் தனித்துவ மனோநிலையே இத்தேர்தலை அவர் வெற்றி கொள்வதற்கு வழி வகுத்துள்ளது. தான் கவர்ச்சிகரமான தலைவராகவும் எல்லோரோடும் இணைந்து பயணிக்கின்ற ஒருவராகவும் காணப்பட்டதுடன், இரு தடவை அவர் மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பி கொண்டதும் அவரது வெற்றி வாய்ப்பை மேலும் பலப்படுத்தியது. அவர் மீது அமெரிக்கா மக்கள் அதிகமான அனுதாபத்தையும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தாலும் துப்பாக்கிதாரிகளாலும் ஜனநாயக கட்சியினராலும் அவமதிக்கப்பட்ட போதெல்லாம் அவர் அதனை எதிர்கொண்ட விதம் அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நபராக தென்பட்டது. அதனுடைய விளைவு அவரது வெற்றிக்கான மிகப் பிரதான முதலீடாக உள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும் அவமதிப்புக்கு சரியான விலை ஒன்றை அந்த மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கி இருந்தார்.
எனவே ஜனாதிபதி ட்ரம்ப்பின் வெற்றி என்பதை விட எதிர் கட்சியின் வேட்பாளரான கமலஹரிசின் தோல்வி என்பது பல்வேறு காரணங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிய ஊடகங்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த முகநூல் பங்குதாரர்களும் அதிக வெற்றியாளர்களாக கருதி இருந்தார்கள். ஆனால் அமெரிக்கர்களுடைய மனோநிலையை அளவீடு செய்வதில் அத்தகைய பங்குதாரர்கள் பலவீனமானவர்களாகவே காணப்பட்டனர். இன அடிப்படை எப்போதுமே அமெரிக்க மக்களிடம் அதிலும் வெள்ளை இன மக்களிடம் ஆழமாக பதிந்துள்ளது ரிஷிசுனக் பிரித்தானிய பிரதமராக வருகைதந்தது என்பது கட்சியின் ஆதரவின் அடிப்படையில் அன்றி மக்களுடைய ஆதரவின் அடிப்படையில் அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)