July 10, 2025
அரசியல் கட்டுரைகள்

காலவரையறையின்றி உக்ரையின்-ரஷ்சியப் போர் நகரப்போகிறதா?

உக்ரைன்-ரஷ்சியப் போர் புதிய பரிமாணம் எடுத்துள்ளது. ஒருபுறம் சமாதான உரையாடல்கள் அதற்கான முயற்சிகளும் அமைய மறுபக்கத்தில் உக்ரையின் தொடக்கிவைத்துள்ள போர் பரஸ்பரம் இரு நாடுகளும் தீவிரப் போரை அரங்கேற்றி வருகின்றனர். ஐரோப்பியர்களுக்காக உக்ரைனியர்கள் கொல்லப்படுகின்ற ஒரு வரலாற்று துயரத்தை ஜெலன்ஸ்கியின் தலைமையில் நிகழ்ந்து வருகிறது. இது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்குமான அனுபவமாகவும் அரசியலாகவும் மாறிவிட்டது. இதன் பின்தளங்கள் முழுவதும் மேற்குலகமும் அமெரிக்காவும் சேர்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோவை பாவித்து தடுத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தும் சமாதானம் எதுவென்பது தெளிவாக தெரிகிறது. அத்தகைய பார்வைக்குள்ளேயே உக்ரையின் விவகாரமும் சமாதான முயற்சிக்களும் காணப்படுகிறது. இரு நாடுகளது போர் உத்திகளும் எல்லா சமாதான வாய்ப்புகளையும் தகர்த்து வருகிறது. இக்கட்டுரையும் உக்ரைன்- ரஷ்சிய போரின் அண்மையாக மாற்றங்களை அவதானிப்பதுடன் அதன் விளைவுகளை தேடுவதுமாக உள்ளது.

கடந்த 04.06.2025 அன்று ரஷ்சியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து பாரிய தாக்குதலை நடத்தியது உக்ரையின். ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் ரஷ்சியாவின் எல்லைக்குள் நகர்ந்து தாக்குதலை நடத்தியதோடு ரஷ்சியாவின் 41 போர் விமானங்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. அதனை மேற்குலக ஊடகங்கள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. அந்த அளவுக்கு உக்கரையனின் தாக்குதல் அமைந்திருந்தது. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போரை அரேபிய நாடுகள் திட்டமிட்ட போது இதே போன்ற தாக்குதலை எகிப்திய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டிருந்தது. அதன் மூலம் அந்தப் போரை முறியடிக்க இஸ்ரேலியர் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறான ஒரு நகர்வை இந்தப் போரில் உக்கரையில் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துவருகின்றனர். ஆனால் அத்தகைய சூழலை ரஷ்சியா எதிர் கொள்ளும் நிலையிலேயே உக்ரையினின் நடவடிக்கை உள்ளது. எகிப்தைப் போன்று போரை தலைகீழாக மாற்றுமா உக்ரையின் தாக்குல் என்பது கேள்விக்குரியதே. குhரணம் ரஷ்சியா பலமான ஆயுததளபாடங்களை தயார் செய்யும் ஏற்றுமதி செய்யும் நாடு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அதன் பதில் தாக்குதல் மிகத் தீவிரமாக அமையும் என்று ஆரம்பத்திலிருந்தே ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்திருந்தார். அப்படியான சூழலில் உக்ரேனின் நடவடிக்கை சமாதான பேச்சுக்களை முற்றாகவே சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது. இதற்கான பதிலை 07.06.2025 அன்றைய தினம் ரஷ்சியா திருப்பி தாக்குவதன் மூலம் சிலந்தி வலைத் தாக்குதலை முறியடிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. உக்ரைன் பிராந்தியங்கள் முழுவதும் 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களும் 50க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய துர்ர ஏவுகணைகளும் ரஷ்சியாவால் பயன்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. இது உக்ரைனுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாக உக்ரையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்சியா தம்மை தாக்கி உள்ளதாக குறிப்பிடுகின்ற ஜெலன்ஸ்கி ஏற்கனவே ரஷ்சியா மீதான தாக்குதலை நடாத்திய போதும் அதன் வெற்றி பக்கத்தை அப்போது உலகம் முழுவதும் முன் வைத்திருந்தார். மீளவும் அதற்கான பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது திணறுகின்றார். தற்போது ஜெலன்ஸ்கி முன்வைக்கும் விவாதம் ரஷ்சியா பொதுமக்களை தாக்கி அழித்துள்ளது எனவும் தாம் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும். இவ்வாறான விவாதத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் ரஷ்சிய தரப்பு உக்ரைன் ரஷ்சியப் பொதுமக்கள் மீதான தாக்குதலை பட்டியலிட்டுள்ளது. போர் என்ற வரையறைக்குள் பொதுமக்களும் உள்ளடக்கப்படும் என்பதை ஜெலன்ஸ்கி அறியாதவராக இருப்பதே வினோதமாக உள்ளது. இது பரஸ்பரம் போரை நீடிப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. அதற்கான உபாயங்களை உகரைனே வகுத்துச் செல்வதாகவே தெரிகின்றது. இதனை உக்ரையினா அல்லது மேற்கு ஐரோப்பாவா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானது.

முதலாவது, உக்ரைன் தரப்பு தாக்குதலில் சமாதான முயற்சிகளை முற்றாகவே நிராகரிக்கும் விதத்தை நிகழ்த்தியிருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.காரணம் உக்ரையின்-ரஷ்சிய பிரதிநிதிகள் துருக்கியில் சமாதான உரையாடலை மேற்கொண்டிருக்கின்ற போது ரஷ்சியா போர் விமானங்களை இலக்கு வைத்து உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. எனவே இந்த போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கம் உக்ரையின் தரப்பிடம் இல்லை என்பது மட்டுமன்றி ஐரோப்பிய தரப்பிடமும் இல்ல என்பதை உணர்த்துகிறது. உக்ரையின் தாக்குதலுக்கு பின்னூட்டலாக மேற்கு ஐரோப்பாவே இருந்துள்ளது. இதனை ஜெர்மனிய சான்சலர் Friedrich Merz கூற்று உணர்த்துகிறது. அதாவது ரஷ்சியாவின் இராணுவ மறுசீரமைப்பு பிரச்சாரத்தின் அளவை அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவில்லை. ரஷ்சியாவுக்குள் என்ன நடக்கின்றது என்று அவர்களுக்கு முழுமையாக தெரியாதுள்ளது என்று டொனால்ட் ட்ரம்ப்க்கு தெரிவித்திருந்தார். ஐரோப்பாவை பொறுத்தவரை ரஷ்சியாவின் எழுச்சியும் மேற்கு ஐரோப்பிய நலன்களை பாதிப்பதாகவே அமையும் என்ற அச்ச உணர்வே பிரதான காரணமாகும். அதனால் ரஷ்சியை பலவீனப்படுத்த உக்ரையினையும் அதன் மக்களையும் அதனுடைய உட்கட்டமைப்புகளையும் முழுமையாக பிரயோகித்து நெருக்கடியை கொடுப்பது என்பது பிரதான நோக்கமாக உள்ளது. அத்தகைய நோக்கத்தை அடையும் விதத்தில் ஐரோப்பியர்கள் ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். அமெரிக்கா வெளியேறிய பிற்பாடு உக்ரையினது இருப்பையும் அதன் பொருளாதாரத்தையும் ஐரோப்பிய நாடுகளில் நிவர்த்தி செய்து வருகின்றன. எனவே தற்போது ஐரோப்பாவுக்காகவும் உக்ரேனியர்கள் போரிடுகின்றனர். ஐரோப்பாவின் நலன்களை பாதுகாக்கும் நிகழ்ச்சிக்குள் உக்ரையின் விளங்குகிறது.

இரண்டாவது, ரஷ்சியர்களைப் பொறுத்தவரை இப்போர் கிழக்கு ஐரோப்பா நோக்கிய மேற்கோப்பாவின் படையெடுப்பையும் மேற்குலகத்தின் விஸ்தரிப்பையும் முறியடிப்பதே அதன் பிரதான நோக்கமாக உள்ளது. அதிக தேசிய இனங்களையும் தேசிய பிரச்சினையையும் தேசிய அரசுகளை அதிகம் கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக கவனம் கொண்டு மேலாதிக்கம் செய்ய திட்டமிடுகின்றன. அதற்கான அடிப்படை காரணம் ரஷ்சியா இருதய நிலம் என்பதாகும். அத்தகைய இருதய நிலத்தின் மீது எப்போதும் கவனம் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கான அடிப்படை அது எப்போதும் உலகத்தில் எழுச்சி பெறக் கூடிய சக்தியாக மாறும் வலுவை கொண்டது என்றும் அளவீடு செய்துள்ளனர். இதனால் ரஷ்சியாவும் அதன் பிராந்திய அரசுகளும் பாரியளவிலான பொருளாதார வளர்ச்சியையோ இராணுவ வளர்ச்சியையோ அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமும் கரிசனையும் கொண்டவர்களாக ஐரோப்பியர்கள் காணப்படுகின்றார். ஆனால் ரஷ்சியாவை பொறுத்தவரை இப்போர் பிராந்தியத்தை ரஷ்சியாவுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பதும் மேற்குலகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதும் மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் மேற்கொள்ளும் அனைத்து உத்திகளையும் தகர்த்து அழிப்பது என்றும் திட்டமிட்டுள்ளது. தனது பொருளாதார இருப்புக்களையும் முன்னே சோவியத்யூனியன் இருப்பையும் தகர்த்தெறிந்த மேற்குலகத்தை மீளவும் எதிர்கொள்ள வேண்டிய எண்ணத்தோடு ரஷ்சியாவின் போரூத்திகள் நிகழ்ந்து வருகின்றன. ரஷ்சியா ஒரு வலுவான இராணுவ ஆயுத தளபாடங்களைக் கொண்ட அரசு என்ற அடிப்படையில் செயல்படுகிறது. அது தற்போது உக்ரையினுக்கு ஏற்படுத்தி இருக்கின்ற தாக்குதல் என்பது ஒரு ஆரம்பமே என ரஷ்சிய ஊடகங்கள் கருத்து முன்வைக்கின்றன. தாக்குதல் தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் உக்ரேனியர்கள் அச்சமடைகின்றனர். ஆனால் இத்தாக்குதலுக்கான அடிப்படை தோற்றுவித்தவர்கள் உக்ரேனியர்கள் என்பது நன்கு தெரிந்த விடயம். ஊக்ரையினிய பொது மக்கள் ஊடகங்கள் முன் உரையாடுகின்றபோது மோசமான தாக்குதலுக்கு உக்ரையினிய அரசாங்கமே வழிவகுத்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேற்கு ஊடகங்களும் உலகளாவிய ரீதியான ஊடக பரப்பும் உக்ரையின் மீதான குற்றச்சாட்டுகளை அதிகப்படுத்துகின்றன. குறிப்பாக சமாதான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தாக்குதலை நிகழ்த்தியது அது ஒரு நிறுத்தப்பட முடியாது என்பதற்கான அடிப்படையாக வைத்திருக்கின்றது.

எனவே இப்போது சமாதான பேச்சுவார்ர்த்தை என்பது அல்லது போருக்கான முடிவென்பது சாத்தியமற்றது. மேற்கு உலக நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய போர் அவசியமெனக்கருதுகின்றன. ரஷ்சியாவின் அணுகுமுறையை தடுத்து நிறுத்துவதற்கான சுவராக உக்ரைனை பாவிக்க திட்டமிட்டுள்ளனர். இது உக்ரையினின் உட்கட்டமைப்பும் காலப்போக்கில் அழிவுகளுக்கு உள்ளாகின்ற துயரத்தை எதிர்நோக்குகின்ற நிலை தவிர்க்க முமுடியாததாகும். இப்போர் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது மட்டுமின்றி இதனால் ஏற்படக்கூடிய ஐரோப்பிய சிதைவு என்பது மீளவும் ஒரு புதிய வடிவத்தை உலகம் சந்திப்பதற்கான முனைப்பை கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)