ஈழத்தமிழர் அரசியலில் சர்வதேச அமைப்புக்களின் பங்களிப்பு பற்றிய அதிருப்தியும் சந்தேகங்களும் என்னுமே மறைந்து போனதாக அதரியவில்லை. அதற்கான காரணம் முள்ளிவாய்க்கால் போர் அரங்கேற்றப்படுகின்ற போது சர்வதேச நாடுகள் மட்டுமின்றி சர்வதேச நிறுவனங்களும் அந்த மக்களுக்கு எதிராக செயல்பட்டன என்ற குற்றச்சாட்டு ஈழத்தமிழர்களிடம் உண்டு. ஐக்கிய நாட்டு சபையில் முன்னாள் பொதுச் செயலாளர் பாங்கீமூன் வருகையும் போரின் காட்சிகளை கண்டு கொள்ளாதது மட்டுமன்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு சார்பாக நடந்து கொண்டமையும் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியதோடு ஐக்கிய நாடு சபையின் தொண்டு நிறுவனங்களும் ஏனைய நாடுகளின் தொண்டு நிறுவனங்களும் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை கைவிட்டு மிக மோசமான மனித சிதைவுகளை ஏற்படுத்த வழி வகுத்திருந்தனர். இத்தகைய சூழலுக்குள்ளே கடந்த 16 வருடங்கள் சனல்-4 காட்சிகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் சர்வதேச அரசுகளுக்கு இடையிலான இழுபறிகள்; என பல அம்சங்கள் ஈழத்தமிழர்களுக்கு எந்த விதமான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இக் கட்டுரையும் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டக்ன் இலங்கை வருகை தரக்கூடிய வாய்ப்புக்களை தேடுவதாக அமையவுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியலில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் ஒரு நீண்ட வரலாற்றுத் துயரத்தை ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தியுள்ளது. இக்காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான திட்டமிடப்பட்ட படுகொலைகளை வடக்கு கிழக்கு முழுவதும் நிகழ்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகள் குடியேற்றங்கள் என்பவற்றை தொடர்ச்சியாக இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புதிய அரசாங்கம் மாற்றங்களை மேற்கொள்ளும் என்ற எடுகோளின் அடிப்படையில் சர்வதேச சமூகம் மீண்டும் ஒரு மென்போக்கான அணுகுமுறையை கையாள முனைகிறது. தேசிய அரசாங்கம் ஆட்சி அமைத்த போதும் நல்லாட்சி என்ற போர்வையில் ஒரு மென்போக்கை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கடைப்பிடித்தது. ஆனால் அதனால் மாற்றத்தையும் ஈழத்தமிழர் அரசியலில் நிகழவில்லை. ஈழத்தமிழரது கோரிக்கை என்பது இலங்கை தீவின் சமத்துவமான இறைமை கொண்ட வடகிழக்கை தாயகமாகமாகக் கொண்ட சுயாட்சி முறையை அடைவதேயாகும். முள்ளிவாய்க்கால் போருக்கு பின்னர் கடந்த 16 வருடங்கள் அத்தகைய கோரிக்கையை தென் இலங்கை ஆட்சி மட்டுமல்ல சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்திகளும் முன்வைத்துள்ளனர். இதில் எந்தத் தரப்பும் கவனம் செலுத்தாதது மட்டுமல்ல தீர்வற்ற ஒரு செய்முறையை உருவாக்கியுள்ளது. 1979இல் இருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவ முகாம்களை கொண்டிருந்த ஆட்சியாளர்கள் படுகொலைகளையும் அடக்குமுறைகளையும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ச்சியே வந்தனர். அதற்கான ஆதாரங்கள் புதைகுழிகளின் மூலம் வெளிவருகின்றபோது அதன் மீதான விமர்சனங்களை போலித்தனமாகவும் நம்பகத்தன்மையற்றது என்றும் புதிய அரசாங்கமும் அதாவது இடதுசாரி அரசாங்கமும் மறைத்து செயல்படும் முனைகிறது. இலங்கையின் நீதி அமைச்சர் புதைகுழிகள் பற்றிய தகவல்கள் வதந்திகள் என்றும் ஆதராமற்றவை என்றும் பிரஸ்தாபிக்கும் அளவுக்கு இலங்கை தீவின் அரசியல் தமிழர்களுக்கு எதிரானது என்பதை கட்டமைத்து இருக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் இலங்கை வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் கடந்த கால அனுபவங்கள் வருகை தரும் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அதிகாரிகளையும் தமது நலனுக்கு ஏற்ற வாகை பயன்படுத்திவிட்டு தப்பிக்கொள்ளுகின்ற ஆட்சி முறையாளர்களேகாணப்படுகின்றனர். எனவே மீளவும் அத்தகைய செய்முறை ஒன்று நிகழாமல் இருப்பதற்கு தமிழர்களின் பக்கத்திலும் தென் இலங்கையின் ஆட்சியாளர்களின் பக்கத்திலும் அதிக கவனம் தேவைப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ள முயற்சிப்பது அவசியமானது.
முதலாவது தென்னிலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுடைய அரசியலை பலவீனமான தாக்குவதும் அதன் கடந்த கால துயரங்களை மூடிமறைப்பதுவும் அவர்களது உத்தியாக காணப்படுகிறது. சர்வதேச நாடுகளிடமும் தொண்டு நிறுவனங்களிடமும் மனித உரிமை பேரவை இடமும் அவர்கள் வெளிப்படுத்தும் உரையாடல்கள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்த செம்மணி போன்ற இனப்படுகொலை விடயங்களை மூடி மறைக்க முயல்வது இலங்கை தீவின் அரசியலில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை என்பதை கோடிட்டுகாட்டுகிறது. ஆயுதங்கள் அற்ற அப்பாவித்தனமான தமிழர் மீது செம்மணி புதைகுழி வெளிப்படுத்தும் செய்தியைப் போன்றே வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவ முகாம்களும் அவற்றின் நடவடிக்கைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. இராணுவத்தின் படுகொலைகளை இராணுவ சாட்சியாளர்களே வெளிப்படுத்துகின்ற நிலையில் அரசாங்கம் அவற்றை மூடி மறைக்கும் முயலுகிறது. இதுவே ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு உள்ள பிரதான சவாலாகும். இந்த அரசாங்கத்தோடு சேர்ந்து ஈழத்தமிழர் உடைய இன விடயத்தில் அவர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பினை தென்னிலங்கை ஒருபோது அனுமதிக்காது என்பதை அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளிப்படுத்துகின்ற செய்திகளில் கண்டுகொள்ள முடிகிறது. சர்வதேச மட்டத்தில் தமிழர் உடைய அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் மட்டுமின்றி இன பாகுபாடும் சமத்துவ இம்மைக்கான செய்முறைகளும் புதிய அரசாங்கத்திடமும் காணப்படுகிறது என்பதை ஐநாவின் மனித உரிமை ஆணையாளருக்கு முன் வைப்பது அவசியமானது. தேன் இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை தொடர்ந்தும் மறைப்பதன் மூலம் இனப்பாகுபாட்டையும் விரோதத்ழைதயும் பின்பற்றுவதாகவே தெரிகிறது.
இரண்டாவது தமிழர்களின் அரசியல் தலைமை முழுமையாகவே சர்வதேச விசாரணை வேண்டுமென்று கோரிக்கையை முன் நகர்த்திச் செல்கின்றனர். இத்தகைய நகர்வுகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு வகை வாய்ப்பாகவே ஐநாவின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கையின் விஜயம் அமைந்திருக்கிறது. அதனை சரிவர பயன்படுத்துவதும் மனித உரிமை ஆணையாளரோடு தமிழரின் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதும் இங்கு நிகழ்ந்த படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் உரிமை மீறல்களையும் முன்வைப்பது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களதும் சிவில் தரப்புகளதும் பிரதானமான பணியாகும். ஐநாவின் மனித உரிமை ஆணையாளரை எதிர்ப்பதோ அல்லது அவர் மீது விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து தமிழர் விவகாரங்களை எவ்வாறு வெளிக்கொண்டுவர முடியும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்துப் படுகொலைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். வெளிப்படையாக கூறுவதாயின் ஆணையாளரை அணுகுவதும் கையாளுவதும் சரியான வழிமுறைகளைப் பிரயோகிப்பதிலுமே விடயம் தங்கியுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புக்களதும் பிரதான பங்காக உள்ளது. இந்த விடயத்தில் ஆழமான கவனத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். சர்வதேசின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் சர்வதேசத்தில் அணுகுமுறைகளை பேணுவதோடு அத்தகைய அணுகுமுறைகள் தமிழருடைய நியாயப்பாடுகளை வெளிப்படுத்த தவறுதல் கூடாது. அது அரசியல் ரீதியான பலவீனத்தை ஏற்படுத்தும். தமிழருடைய விவகாரம் ஒரு மனித உரிமை விவகாரம் இல்லை என்பது தெரிந்த விடயமாக இருந்தாலும் மனித உரிமை மீறல் என்பதும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய ஒரு அம்சம் என்பதை பதிவு செய்யப்பட வேண்டும். தமிழர் நீண்ட நெருக்கடி மிக்க அரசியல் போராட்டத்தை நிகழ்த்தியவர்கள் என்ற அடிப்படையில் நியாயமான கோரிக்கை தென்னிலங்கை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உலகத்திடம் ஒப்படைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் சர்வதேச அரசியலோடு பின்னிப்பிணைந்தது என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டும். மனித உரிமை பேரவையின் ஐக்கிய நாடு சபையும் உலக நாடுகளும் நமது நலனுக்கானது என்பதை அடையாளம் கண்டு கொண்டு அத்தகைய நலனுக்குள்ளால் தமிழர்களுடைய நலன்களை எவ்வாறு சந்திக்க வைப்பது என்ற நோக்கு அவசியம். இதனால் அவரது வருகையை சரியாக பயன்படுத்துவது கையாளுவதும் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
எனவே ஐநா மனித உரிமை ஆணையாளரின் வருகை சர்வதேசத்தின் நலங்களுக்கானதாக இருந்தாலும் ஈழத்தமிழர்கள் தமது எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பாக வடிவமைக்க வேண்டும். எனவே அதனை சரியாக பிரயோகிப்பது அல்லது பயன்படுத்துவது தமிழர் உடைய அரசியல் பக்கம் சிவில்சமூகங்களின் செயல்பாடு முக்கியமானதாக அமையும். காணாமல் போனோர் நீண்ட போராட்டத்தை நிகழ்த்துகின்ற தரப்புக்கள் இந்த இடத்தில் அதிக கரிசனை கவனமும் கொண்டு மனித உரிமை ஆணையாளரை அணுகுதல் வேண்டும். அதற்கான முன்னயத்தங்களை காணாமல் போனோர் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கின்றன அவை ஒரு ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுத்துவதற்கு பாராளுமன்ற அரசியல் சக்திகள் பங்களிப்பு மேற்கோள்கள் வேண்டும். அத்தகைய கூட்டான உழைப்பே ஆரோக்கியமான அரசியலை வடிவமைக்க உதவும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)