அரசியல் கட்டுரைகள்

முன்னாள் கடற்படைத் தளபதி மீதான அமெரிக்கத் தடையும் இலங்கைத் தீவின் அரசியலும்?

உலக வல்லரசுகள் ஈழத்தமிழரை முன்னிறுத்திக் கொண்டு தமது நலன்களை வெற்றிகரமாக கையாண்டு வருகின்றன. அகிம்சைப் போராட்டத்தை தமக்கு ஏற்ப பயன்படுத்திய போக்கு ஆயுதப் போராட்டத்திலும் கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. வல்லரசுகளின் கூட்டு நலன்களை பாதிக்கும் விதத்தில் முன்னெடுக்க்கப்பட்ட அனைத்து போராட்டங்களையும் கூட்டாக அழிப்பதில் அத்தகைய நாடுகள் வெற்றி கண்டன. இதனை தற்போது தென் இலங்கையில் எழுந்துள்ள அதிகாரப் போட்டியில் ஒரு தரப்பான ராஜபக்ஷாக்களை கையாள முனைவதாகத் தெரிகிறது. அத்தகைய நகர்வையும் ஈழத்தமிழரது மனித உரிமையின் பெயரால் மேற்கொள்ளப்படுகிறதென்பது கவனத்திற்குரியதாகும். இக்கட்டுரையும் அண்மையில் அமெரிக்கா இலங்கையின் முன்னாள் கடற்படைத்தளபதியும் வடமேல் மாகாண ஆளுனருமான வசந்த கருணாகொடவை கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொண்டமையின் நோக்கத்தை தேடுவதாக உள்ளது. அதாவது வல்லரசுகளது அசைவுகள் ஒவ்வொன்றும் இலங்கைத் தீவு சார்ந்நததாக அமைந்தாலும் பிராந்தியம் சார்ந்தும் உலகளாவிய நகர்வு சார்ந்தும் தாக்கம் செலுத்தக் கூடியவை என்பதை அளவீடு செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படைத் தளபதியாக பதவிவகித்த போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கருணாகொட வெளிநாட்டுச் செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச் சட்டம் 2023 பிரிவின் 7031 இன் கீழ் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வசந்தகருணாகொடவும் அவரது மனைவியான ஸ்ரீமதி அசோக கருணாகொடவுக்கும் அமெரிக்காவுக்கு நுழைவதற்கு தடைவிதித்துள்ளதாக அத்திணைக்கழம் தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி மனித உரிமைகளை நிலைநிறுத்துவது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிபுக்கு கொண்டுவருதல் பாதிக்கப்பட்டவர்கள் தப்பியவர்களின் துயரங்களை அங்கீகரித்தல் இலங்கையில் குற்றமிழைத்தவர்களுக்க எதிராக பொறுப்புக் கூறப்படுதல் போன்றவை குறித்து அர்ப்பணிப்பை அமெரிக்கா மீள வலியுறுத்துகிறது என இராஜாங்கத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு எதிரான கருத்துக்களை முதன்மைப்படுத்தி இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜீலி சுங்க்கு முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கருணாகொட கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. இத்தடை தனது நீண்டகால சேவைக்கும் தனது குடும்பத்தினரது உரிமையை பாதித்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இத்தகைய விடயம் எதுவாக அமைந்தாலும் அமெரிக்கா ஏன் முன்னாள் இராணுவத் தளபதிக்கு தற்போது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்று, இலங்கைத் தீவு அமெரிக்காவின் இந்துசமுத்திர நலன்களுக்குட்பட்டது. அத்தகைய நலனில் பாதிப்பினை ஏற்படுத்தும் நகர்வையே விடுதலைப் புலிகளது நடவடிக்கை ஏற்படுத்தியிருந்தது. அதாவது அமெரிக்க நலனில் அக்கறையுள்ள ரணில்விக்கிரமசிங்ஹாவை ஆட்சியில் அமரவிடாது தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம் தடுத்து சீன சார்புள்ள மகிந்த ராஜபக்ஷாவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். விடுதலைப் புலிகள் ரணில்விக்கிரமசிங்ஹாவை தோற்கடிப்பதை இலக்காக கொண்டிருந்தார்களே அன்றி இந்துசமுத்திர அரசியலையோ பிராந்திய அரசியலையோ பூகோள அரசியலையோ கணக்குப் போடத்தவறியிருந்தனர். இதற்கான விளைவையே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டனர். இந்துசமுத்திர அரசியல் சுழிக்குள் சிக்குண்டு விடுதலைப்புலிகளது ஆயுதப் போராட்டம் முடிபுக்கு வந்தது. விடுதலைப் புலிகளை அழிவுக்கு உள்ளாக்கிய போது அனைத்து வல்லரசுகளும் ஆயுதம் வழங்கி ஆலோசனை கொடுத்து போரை இலங்கை ஆட்சியாளர்கள் வெற்றிபெற உதவின. ஆனால் போரின் வெற்றியை அமெரிக்கர்களும் இந்தியர்களும் அடைய முன்பே சீனார்கள் ராஜபக்ஷா அரசாங்கத்துடன் இணைந்து அனுபவிக்கத் தொடங்கினர். ஹம்பாந்தோட்டத் துறைமுகம் மற்றும் மதத்தள விமான நிலையம் என பல விடங்களில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைய வழிவகுத்தது. படிப்படியாக இந்து சமுத்திரத்தின் முத்து சீனாவின் முத்தாகியது. அதனால் இந்து சமுத்திரத்தின் மீதான அமெரிக்காவின் நலன் பாதிப்படைந்ததுடன் சீனா இந்து சமுதர்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் நகர்த்தியது. இதனை முறியடிப்பதற்கே 2015 இல் அமெரிக்க-இந்திய கூட்டு ஒரு ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்தியது. அது 2020 இல் மீளவும் தோல்விகாண சீனாவின் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. அதனை துடைத்தொழிப்பதற்கே மீண்டும் ஒரு போராட்டம் தேவைப்பட்டது. அதுவே அரகளய என அழைக்கப்படும் மக்கள் எழுச்சியாகும். அத்தகைய போராட்டத்திற்கு பின்னால் இந்தியாவை விட அமெரிக்காவே முதன்மையாகச் செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவம்சா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கும் சிங்களத் தீவிர அரசியல்வாதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று ஆரம்பித்துள்ளது. அது முன்னாள் கடற்படைத் தளபதியையும் ஏனைய இறுதிப் போரில் செயல்பட்ட இராணுவ அதிகாரிகளையும் பாதுகாக்கும் செயல் மூலம் மீளவும் வெதமுல்லையின் அரசியலை நியாயப்படுத்த ஆரம்பித்தள்ளது. இது அமெரிக்காவுக்கும் ராஜபக்ஷhக்களுக்குமான மோதலாகவே வெளிகிளம்புகிறது.

இரண்டு, இந்துசமுத்திர அரசியல் பொறியில் விடுதலைப்புலிகள் முதலில் வீழ்த்தப்பட்டார்கள். அடுத்து ராஜபக்ஷாக்கள் அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது. அத்தகைய அரசியலை 2015 இல் வீழ்த்திவிட்டு தாம் வெற்றி பெற்றதாக மேற்கு செயல்படும் போதே ராஜபக்ஷாக்கள் மீண்டும் எழுச்சியடைந்தார்கள். அதனையும் உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் மூலமே கைப்பற்றினார்கள். ராஜபக்ஷாக்களின் ஆட்சியை மீள எழவிடாது பாதுகாக்க வேண்டுமாயின் மனித உரிமை மீறலை மீள மீள அம்பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இலங்கைத் தீவின் இறைமை ஒருமைப்பாட்டை உச்சரிக்கும் அமெரிக்கத் தூதுவர் மறுபக்கத்தில் மனித உரிமை மீறலையும் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தையும் வெளிப்படுத்திவருகிறார். இந்தோ-பசுபிக் அரசியலுக்கூடாகவே மனித உரிமை மீறலும் இலங்கையின் ஒருமைப்பாடும் அளவிடப்படுகிறது. கடற்படைத்தளபதி மீதான நடவடிக்கை ராஜபக்ஷாக்கள் மீதான எச்சரிக்கையாகவே உள்ளது. வெதமுல்ல அரசியல் மீண்டெழக்கூடாது என்பதில் அமெரிக்கத் தரப்பு தெளிவாக உள்ளது. இதற்கூடாக தற்போதைய பாராளுமன்ற ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியாக்குவதில் மேற்கு கவனமாக உள்ளது. அவ்வகைச் சூழல் சாத்தியப்படுமாயின் அடுத்துவரும் ஐந்தாண்டுகள் அமெரிக்காவின் நலனுக்குள் இலங்கை இயங்கும் என்பதே அமெரிக்கத் தரப்பின் கணிப்பீடாக உள்ளது. அது இந்து சமுத்திரத்தின் மீதான அமெரிக்க செல்வாக்கினை பாதுகாக்க உதவுவதுடன் சீனாவின் இந்து சமுத்திர அரசியலையும் பசுபிக் சமுத்திர அரசியலையும் நெருக்கடிக்குள் கொண்டுவரலாம் என கணக்குப் போடுகிறது. ஆனால் இந்தக் கணக்கு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் சீனா, ரஷ்சியாவின் அணிக்குள்ளே இந்தியாவும் டொலருக்கு எதிரான ரூபாயினதும் ரூபிளினதும் ஒத்துழைப்பு யுவானை பாதுகாக்கும் என்ற தகவல் வலுவடைந்து வருகிறது. பூகோள அரசியலென்பது வெறும் இராணுவ அரசியல் போட்டியல்ல. அது ஓர் அரசியல் பொருளாதாரப் போட்டியும் கூட. இதில் அமெரிக்காவும் மேற்கும் ரஷ்சிய-உக்ரையின் போருக்கு பின்னர் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனையெல்லாம் கடந்து இலங்கைத் தீவை அமெரிக்க இழக்க முயலாது என்பதையே அண்மைய நகர்வுகள் காட்டுகிறது.

மூன்று, மறுபக்கத்தில் சீனாவின் இலங்கை நெருக்கம் அதீதமானது. அது மட்டுமல்ல இந்தியாவையும் மேற்கையும் கையாளுவதற்கு சீனாவின் உறவு தென் இலங்கைக்கு அவசியமானது. தற்போதைய தோற்றப்பாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத் தீவு அரசியல் நெருக்கடிக்குள்ளும் அகப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டுவருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மிகப் பொருத்தமானவர் என வெதமுல்ல அரசியலும் கொள்கைவகுப்பாளர்களும் தென் இலங்கை புலமையாளர்களும் கருதுகின்றனர். அதனை ஜனாதிபதி கச்சிதமாக மேற்கொண்டுவருகிறார். அதாவது அமெரிக்காவையும் சீனாவையும் இந்தியாவையும் சரிவரக் கையாளுகிறார் என்பதே இதன் புரிதலாகும். இதில் வெற்றிபெறப் போவது எந்தத் தரப்பு என்ற கேள்வி எழுந்தாலும் தென் இலங்கைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனோடு சீனாவுக்கு சாதகமான நிலை அதீதமாக காணப்படுகிறது. உலகளாவிய ரீதியிலும் இந்துசமுத்திர பரிமாணத்திலும் சீனா அதிக மாற்றங்களை அடைந்துவருகிறது.
நான்கு, கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட மீதான அமெரிக்க தடையால் ஈழத்தமிழருக்கு ஏதும் வாய்ப்பு கிடைத்துள்ளதா என்ற கேள்வி நியாயமானதே. நிச்சயமாக அமெரிக்காவின் பிராந்திய சர்வதேச நலனுக்கானதாகவே உள்ளது. ஆனால் ஈழத்ததமிழர் தம்மீதான நடைமுறைகளை உருவாக்கும் வாய்ப்புக்கள் அற்றுப் போகவில்லை என்பதை கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கைத் தீவு மீதான சீன-அமெரிக்கப் போட்டி நிலவும் வரையும் அத்தகைய வாய்ப்பு ஈழத்தமிழருக்கு ஏற்படும். அதனை ஈழத்தமிழர் அரசியல் புரிந்து கொள்வதோடு பயன்படுத்தவுதம் தயாராக வேண்டும். அதற்கான முகாந்திரம் இல்’லாத வரையில் எந்த வாய்ப்பும் பயன்படுத்தப்படாததாகவே முடிவுறும். ஆனால் அமெரிக்காவின் நகர்வு ஈழத்தமிழருக்கானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் ஈழத்தமிழரது அரசியலும் சமூகமும் செயல்வடிவத்தை பெற வேண்டும்.

எனவே அமெரிக்காவின் கடற்படைத்தளபதி மீதான தடையுத்தரவு அமெரிக்காவின் இலங்கைத் தீவு மீதான நலன்சார்ந்த விடயமாகவே தெரிகிறது. அது தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சி நீடிப்பை சாதகமாக்குவதாகவே உள்ளது. ஆனால் அதற்கு புறவயமாக எழுந்துள்ள தீவிர சிங்கள அரசியல் வாதிகளது நகர்வுகள் மீளவும் நெருக்கடியை நோக்கிய நகர்வுக்கு வழிவகுப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது. அதே நேரம் இலங்கையின் கடற்படைத் தளபதிக்கு அமெரிக்க தடைவிதிக்கும் சமகாலத்தில் இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர். சௌத்திரி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக சீனாவின் இலங்கைத் தூதுவர் வெதமுல்லைக்கு விஜயம் செய்வதாகவும் அண்மையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அத்தகைய விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவை சந்தித்துள்ளமை அனைத்தும் கவனத்திற்குரியதாகும். இவற்றுக்கு பின்னால் தெளிவான அரசியல் போட்டி அரங்கேறுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)