அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் உலக அரசியலில் ஏற்பட போகின்ற மாற்றங்களை அதிகம் ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன. அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தனித்துவமானதாக அமைவதற்கான வாய்ப்பினை அதிகம் கொண்டுள்ளது போல் தெரிகிறது. கடந்த தடவை ஆட்சியில் இருந்தபோது பின்பற்றிய வெளியுறவு கொள்கை தொடர்ந்து கடைபிடிக்க முயலுகின்ற போக்கினை அவரது தேர்தல் பிரச்சாரங்கள் வெளிப்படுத்தியிருந்தனர் இக்கட்டுரையும் டொனால்ட் ட்ரம்ப்பினுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் ஏற்பட இருக்கின்ற முக்கியத்துவத்தினை தேடுவதாக அமையவுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு மென்றோ (Monroe Policy) கொள்கையை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது அவ்வப்போது ஆட்சிக்கு வரும் தலைமைத்துவங்கள் தமது தனித்துவத்தை மென்றோ கொள்கைக்கூடாக நகர்த்துகின்ற போக்கினை அவதானிக்க முடிகின்றது. பெருமளவுக்கு அதிலிருந்து விலகாமல் அதே நேரம் குடியரசு கட்சி ஜனாதிபதிகளும் ஜனநாயக கட்சி ஜனாதிபதிகளும் தமது கட்சிகளுக்கு அமைவான கொள்கைகளை மென்றோ கொள்கைக்கு உட்பட்டு மேற்கொள்வது வழமையான ஒன்றாக காணப்படுகின்றது. மென்றோ கொள்கை ஜனநாயகம், பாதுகாப்பு, மேலாதிக்கம், பொருளாதார மற்றும் உலக சமாதானம் என்பனவற்றை மையப்படுத்திய கட்டமைக்கப்பட்டு வருகின்றது. அதன் மூலம் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமது ஆளுமைக்கு உட்பட்ட விதத்தில் வெளியுறவை வகுக்குன்ற போது அமெரிக்க தேசிய நலன் முதன்மையானதாக அமைந்திருப்பதனை அவதானிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே டொனால்ட் ட்ரம்ப் தனது வெளியுறவு கொள்கை தனித்துவமான திசையில் நகர்த்தப் போவதாக தேர்தல் பிரச்சாரத்தை கோடிட்டு காட்டி இருந்தார் அதனை விரிவாக நோக்குவது அவசியமானது
முதலாவது உக்ரையின் ரஷ்சியப் போரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சி காலம் திட்டமிடுகிறது. அதற்கான நகர்வுகளை ரஷ்சிய ஜனாதிபதி விளாடினர் புட்டினோடு மேற்கொள்ள திட்டமிடும் உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. காரணம் உக்கிரேனுக்கும் ரஷ்சியாவுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் போரானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பாதித்ததோடு ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. நேரடியாக ஐரோப்பாவை பாதித்திருக்கும் அதே சந்தர்ப்பத்தில் அமெரிக்கா மறைமுகமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. பொருளாதார என்பதை உலக அமைதியின் தங்கியிருக்கின்ற ஒர் அம்சமாக காணப்படுகிறது இதனால் உலக அமைதி என்பதை அல்லது ஐரோப்பாவின் அமைதி என்பதை சிதைக்கும் விதத்தில் இத்தகைய போர் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி இருப்பதோடு ஐரோப்பிய அமெரிக்க உறவில் அதிக குழப்பங்களையும் உருவாக்கத் திட்டமிடுகின்றது. இவற்றுக்கு அப்பால் ரஷ்சியாவின் ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க உறவு மிக வலுவானதாக மாறுவதும் உக்ரைன் தனது இருப்பை இழப்பதும் முக்கியமான விளைவாக அமெரிக்கா கருதுகிறது. ஊக்ரையின் முப்பது ஆண்டுள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனவே ஒரு தூர நோக்கில் இப்போர் அதிக நெருக்கடியை ஐரோப்பிய அரசியலில் ஏற்படுத்தக் கூடியது. அவ்வாறே இப்போரில் ரஷ்சியாவும் பலவீனமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. ரஷ்சியாவின் இராணுவ வீரர்களின் பற்றாக்குறை இப்போரில் வடகொரியாவை ஈடுபடுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இது உலகம் போருக்கான முனைப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் என்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது. உலகம் போர் முனைப்புக்குள் நகரமாக இருந்தால் மட்டுமே உலகப் பொருளாதார அரசியல் பலம் பேணப்படும். ரஷ்சிய-உக்ரையின் போரை மையப்படுத்தி அமெரிக்கா மேற்கொண்டு வந்த அரசியல் முகாமைத்துவம் பெரிய அளவில் அமெரிக்க பொருளாதாரத்தை எழுச்சியுறச் செய்யவில்லை. எனவே இவற்றை கருத்தில் கொண்டே இப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற இலக்கோடு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வெளியுறவை முதன்மைப்படுத்த முனைகின்றார்.
இரண்டாவது இஸ்ரேல் கமாஸ் போரையும் முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய எண்ணங்களை அமெரிக்கா ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்றார். அதற்கான உரையாடல்களை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பகிர்ந்து கொண்டிருப்பதுடன் போரில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனைகின்ற போக்கு காணப்படுகின்றது. காரணம் இஸ்ரேல் அமெரிக்காவில் தங்கியிருந்தே போரை நிகழ்த்துகின்றது. அமெரிக்காவின் இராணுவ உத்திகளும் ஆயுத தளபாடங்களும் பெரியளவில் இஸ்ரேலின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியமாக காணப்படுகிறது. எனவே அமெரிக்கா இப்போரை மட்டுப்படுத்தவும் கையாளவும் முனையுமாக இருந்தால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என விமர்சனங்கள் காணப்படுகின்றன. அதனால் டொனால்ட் ட்ரம்ப் மேற்காசி அரசியலில் ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு இப்போரை முடிவுக்கு கொண்டு வரமுனைகின்றனர். கடல் போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மற்றும் அமெரிக்க பிரஜைகளின் பாதுகாப்பு போன்ற பல விடயங்களை இப்போது நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இதனால் இப்போரை மட்டுப்படுத்துகின்ற அளவில் போராக மாற்றுகின்றதோர் எண்ணம் அமெரிக்க ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது. அதே வேலை இஸ்ரேலின் தனித்துவம் பாதுகாப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கின்ற வேலையை கடந்த கால ஆட்சியின் போது மேற்கொண்டது போன்று செயல்படுத்த ட்ரம்ப் முயலுகின்றார். ஆனால் இப்போது முடிவுக்கு கொண்டு வருவது என்பது இஸ்ரேலியர் தரப்பை பொறுத்தவரையில் அமெரிக்க நலனை சார்ந்து கொண்டாகவும் அதன் அடிப்படையில் பார்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகவும் காணப்படுகின்றது. அதனால் இப்போரை மட்டுப்படுத்தப்பட்ட போராக நகர்த்துவதற்கு அமெரிக்க இஸ்ரேலிய புதிய கூட்டு திட்டமிடுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.
மூன்றாவது அமெரிக்காவின் வெளியுறவு மிகப் பிரதானமான சவால் மிக்க நாடாக ஈரான் காணப்படுகிறது. ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி அதனை மேற்கொள்ளுகின்ற இராணுவ நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுகின்றன. மேற்காசியாவின் அமைதியை பேணுகின்ற அதே சந்தர்ப்பத்தில் ஈரானின் இராணுவத் திறன்களை பலவீனப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் அதிகம் அமெரிக்க வெளியுறவை பிரயோகப்படுத்த வாய்ப்பு காணப்படுகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் போர் என்பதை விட மட்டுப்படுத்தப்பட்ட போர் ஒன்று க்கான முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப்ன் கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலிய- அமெரிக்க நலனுக்கு உட்பட்டு அத்தகைய போர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது. இதனை எதிர்கொள்வதில் ஈரானின் இருப்பு என்பது தவிர்க்க முடியாத நெருக்கடிகளை சந்திப்பதற்கான வாய்ப்பை கொண்டிருக்கும். காரணம் ரஷ்சியாவுக்கு வழங்கும் ஒத்துழைப்பும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கும் பாரிய ஆதரவும் நெருக்கடிக்குள்ளாகின்ற சூழல் ஒன்றை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்தக் கூடியவராக காணப்படுகின்றார்.
நான்காவது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க வெளியுறவு சீனாவுக்கு எதிரான வெளிப்படையான கொள்கைகளை கொண்டிருப்பது வர்த்தகம் பொருளாதார மற்றும் சந்தை அடிப்படை சீனாவோடு பாரிய முரண்பாடுகளை அமெரிக்கா எதிர்கொள்ளம் நிலைக்கு அவரது வெளியூராகும் அமைய வாய்ப்புள்ளது. கடந்த பதவிக்காலத்தில் ட்ரம்ப் அதீதமான நெருக்கடிகளை சீனாவுக்கு வழங்கியிருந்தார். அது ஒரு வகையில் அமெரிக்காவுக்கு ஆபத்தாகவும் அமைந்து முடிந்தது. ஆனால் மீண்டும் அதே முறைமைகளுக்கு உள்ள சீனாவை கையாள முயலுகின்ற ஒரு வெளியுறவையே ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் முன் வைத்திருந்தார். எனவே சிலசயம் சீனாவுக்கு எதிரான பொருளாதார நெருக்கடி என்பது டொனால்ட் ட்ரம்ப்பினுடைய ஆட்சிக்கால பகுதியில் முதன்மைப்படுத்தக்கூடிய ஒர் அம்சமாக காணப்படுகின்றது இதன் விளைவுகள் அமெரிக்கா பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப முனையும் இது ட்ரமட்ப்க்கு ஒரு நெருக்கடி மிக்க சூழலை தரக் கூடியது என்ற விமர்சனங்கள் உண்டு அதே நேரத்தில் 2049 களில் உலகத்தின் முதல் தர பொருளாதார சக்தியாக சீனா எழுச்சி புறம் என்ற உரையாடலாம் வலுவானதாக உள்ளது.
ஐந்தாவது இந்திய அமெரிக்க உறவு கடந்த காலத்தை போன்று பலமானதாக ட்ரம்ப்னுடைய வெளியுறவு கொள்கையில் காணப்படும் அதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பாக நரேந்திர மோடி அரசாங்கத்துடனான உறவு மிகப் பலமானது. அத்தகைய உறவை சீர் செய்வது ஊடாக இந்திய பொருளாதாரத்திற்கான சந்தையே அமெரிக்க பொருளாதாரத்திற்கான சந்தையாக மாற்ற முயலும். இதன் மூலம் இந்தியாவில் சீனாவுக்கு எதிராக கொள்கைகளை கட்டமைக்க முடியும் என அமெரிக்கா கருத வாய்ப்புள்ளது. இது மறுபக்கத்தில் இந்தியாவை பலப்படுத்துவதாக அமையும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஏற்கனவே பிரிக்ஸ் அமைப்பு சீனாவையும் இந்தியாவையும் சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கு முயலுகின்ற சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி வெளியுறவு அதற்கு எதிரான ஒரு சூழலை தெரிவிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் இந்தோ பசுபிக் உபாயத்தை பலப்படுத்தவும் குவாட் நாடுகளை பலமான நிலைக்கு கொண்டு செல்லவும் ட்ரம்ப்ன் வெளியுறவு காத்திரமான பங்கு ஆற்றக்கூடியதாக காணப்படுகிறது.
ஆறாவது மனித உரிமை மனிதாபிமானம் ஜனநாயகம் சுதந்திரம் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கப்படக்கூடிய ஒரு வெளியுறவின் அணுகுமுறை ஒன்றை பின்பற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனை அவரது தேர்தல் பிரச்சாரங்களை உத்தரவாதப்படுத்தி இருக்கின்றார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவை இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் உத்தி என்பது மனித உரிமை பொறுத்தம் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே உலகளாவிய ரீதியில் அமைதியையும் சமாதானத்தையும் அமெரிக்க தேசிய நலனுக்கும் அதனுடைய வாய்ப்புகளுக்கும் ஏற்ப கடைபிடித்துக்கொண்டு நடைமுறையில் அத்தகைய அம்சங்களை நிராகரிக்கின்ற எதிர் முரணிய கோட்பாட்டை பின்பற்றுகின்ற போக் கொன்றை அமெரிக்காவின் வெளியுறவு ஜனாதிபதி ட்ரம்ப் செயல்படுத்த முனைகிறார்.
ஏற்கனவே ஜனாதிபதி ட்ரம்ப்ன் வெளியுறவு மன்றோ கோட்பாட்டுக்கு அமைய அமைகின்ற அதே சந்தர்ப்பத்தில் அமெரிக்க தேசிய நலனின் அல்லது அமெரிக்க இலக்கம் ஒன்று என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற போக்கொன்றை பிராந்தியத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஜனாதிபதிட்ரம்ப் கடைபிடிக்க முயலுவார். அதன் விளைவுகள் உலகளாவிய ரீதியில் அதீதமானதாகவும் அதே சந்தர்ப்பத்தில் உலகளாவிய அதிகாரப் போட்டி சக்திகளுக்கிடையே அதிக போட்டித் தன்மைகளையும் அதன் விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்கின்ற நிலையும் கண்டுகொள்ள முடியும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)