இஸ்ரேல்- ஈரான் போர் எட்டாவது நாளை கடந்து தீவிரமடைந்துள்ளது. போரின் அழிவுகளை இரு தரப்பும் எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் ஈரானின் எழுச்சியானது இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் டெல்அவிவ் மீதான தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. இஸ்ரேலின் நிலப்பரப்பு முழுவதும் ஏவுகணைகளால் துடைத்து அழித்து வரும் இராணுவ வலுவை ஈரான் மேற்கொண்டுள்ளது. இது உலகமே எதிர்பார்க்காத ஒன்றாக மாறியுள்ளது. காசாவில் கட்டிடங்களின் தோற்றம் எப்படி இருந்ததோ அவ்வாறே இஸ்ரேலின் நகரங்களும் சிதைவடைந்துள்ளன. பாலஸ்தீனர்;கள் கொல்லப்பட்டது போன்று யூதர்களும் கொல்லப்படுகின்ற துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இராணுவ ரீதியில் ஈரானின் எழுச்சி அரசியல் ரீதியில் அவர்களுக்கு வாய்ப்பான சூழலை கொடுத்துள்ளது. ஆனாலும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராஜதந்திரம் என்பது அதிக எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டியது. இக்கட்டுரையும் ஈரானின் வாய்ப்புக்களையும் இஸ்ரேலியர் பலவீனத்தையும் தேடுவதாக உள்ளது.
ஈரானின் இராணுவ வலு ஈரானுக்கே உரியதாக தென்படவில்லை. மாறாக வடகொரியா சீனா ரஷ்சியா போன்ற நாடுகளில் பலத்திலேயே ஈரானியின் பதில் தாக்குதல் அமைந்திருக்கின்றது. மறுபக்கத்தில் ரஷ்சியாவின் ஆதரவு ஈரானின் அணு ஆயுதம் தொடர்பான ஒத்துழைப்பில் அதிகம் தங்கியுள்ளது. ஈரானின் அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் ரஷ்சியாவை உட்பட்டுள்ளது. காரணம் ரஷ்சிய அணு ஆய்வபளர்களும் பணியாளர்களும் ஈரானில் பணிபுரிகின்றனர்.சீனாவும் ரஷ்சியாவும் இணைந்து வடகொரியாவுடன் ஈரானின் பாதுகாப்புக்கான ஆயுத தளவாடங்களையும் இராணுவ நகர்வுகளையும் திட்டமிட்டு நகர்த்தி வருகின்றனர். இதுவே ஈரானின் இருப்புக்கான பலமாகவும் இஸ்ரேல் மீதான தாக்குதலை கட்டமைக்க வழிவகுத்தது என்றும் புரிந்து கொள்ள முடியும். ஈரானுக்கு சீனா மற்றும் ரஷ்சியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இன்னொரு பிரதானமான காரணம் இஸ்ரேலின் நிலப்பரப்பில் அமைந்துள்ள அயன் டோம் (Iron Dome) மற்றும் அயன் வீம் (Iron Beam) என்ற வான் பாதுகாப்பு அமைப்புக்களாகும். இவற்றின் திறன் மட்டுப்படுத்தப்பட்ட தென்பதை ஈரான் கவனத்தில் கொண்டிருந்தது. ஈரானின் ஏவுகணைகளை தடுக்கும் தொழில்நுட்பத் திறன் ஏவுகணைகளின் பரவலான தாக்குதலால் தகர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய தாக்குதல் உத்தியை ஈரான் தெளிவாகவே முதல் இரு தாக்குதல்களில் பரிசோதித்து பார்த்திருந்தது. ஒரே தடவை 150 தொடக்கம் 400 வகையான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தியதுடன் 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் களத்தில் நிறுத்தியது. இதுவே ஈரானின் மிகப் பிரதான உத்தியாக அமைந்திருந்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஆயுதம் ஒரே தடவை அது கையாளக்கூடிய எதிர்ப்புத் திறனை கடந்து அதன் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்கிறது. இதுவே இஸ்ரேலை பாரிய நெருக்கடிக்குள் கொண்டு வந்த நிறுத்தி உள்ளது.
உலகம் மீது யூதர்கள் எல்லையற்ற பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தார்கள் அது மட்டுமல்லாது இராணுவ அழிவுகளையும் மக்கள் மீதான படுகொலைகளையும் ஈவிரக்கமின்றி மேற் கொண்டிருந்தனர். இதனை யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உலக நாடுகள் எங்கும் ஏற்படுத்தி வந்தனர். அத்தகைய பிரமிப்பூட்டும் சூழலை கடந்த பல தசாப்தங்களாக முதலீடாக்கி அரபியர்களை முறியடித்துவந்தனர். இதனை அராபியர்கள் முறியடிக்க முடியாது திணறிக்கொண்டிருந்தார். அது மட்டுமின்றி இஸ்ரேலியர்களுடைய இருப்பு என்பது அமெரிக்கர்களின் இருப்பாவே பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் ஆயுத தளபாடங்கள் முழுமையாகவே இஸ்ரேலியரிடம் இருந்ததோடு அனைத்து தாக்குதல்களிலும் மேற்குலகத்தின் இராணுவ இராஜதந்திர பொருளாதார உதவி காணப்பட்டது. உலகத்திலேயே தொடர்ச்சியாக தன்னுடைய நாட்டை கண்காணிக்கும் விமானத்தை பறக்க விடும் நாடாக இஸ்ரேல் மட்டுமே காணப்படுகிறது. இவை எல்லாம் இஸ்ரேலின் இருப்பையும் அதன் ஆதிக்கத்தையும் படம்பிடித்துகாட்டியது. ஒரு பக்கம் இராணுவ வளர்ச்சியும் மறுபக்கம் விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியான உத்திகளும் பொருளாதார ரீதியான செழிப்பும் உலகம் முழுவதும் சுரண்டி ஆதிக்கம் செய்கின்ற செய்முறையும் இஸ்ரேலியர்களை பலப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் ஈரானின் நகர்வு இவ்வகை அனைத்து அம்சங்கள் மீதும் கேள்வியையும் சந்தேகத்தையும் பலவீனத்தையும் அடையாளப்படுத்தி உள்ளது. யூதர்களுக்கு கிடைத்த தேசத்தை யூதர்கள் தமது அயல் நாடுகளோடு பகிர்ந்து கொண்டு நாகரிகமான அரசியலை செய்ய முடியாததன் விளைவென்றே தெரிகிறது.
ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இன்னொரு பிரதான காரணி வாய்பைக் கொடுத்துள்ளது. அதாவது இஸ்ரேலின் புவியியல் பரப்பெல்லையாகும். 22, 145 சதுரக்கிலோ மீட்டர் பரப்பை மட்டுமே கொண்டது. 420 கி.மீ. நீளத்தையும் 115 கி.மீ அகலத்தையும் கொண்டது. இஸ்ரேலின் நிலப்பரப்பானது மிகக் குறுகியதாக அமைந்திருப்பதனால் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் முன் அது இலகுவாக தகர்க்க கூடிய நகரமயமாக்கல் பண்பையும் கட்டமைப்பையும் கொண்ற தேசமாகவுள்ளது. இதனால் ஈரானிலிருந்து மிக இலகுவாக தாக்கி அளிக்கக்கூடியவாய்ப்புகளைக் கொண்ட பிரதேசமாக இஸ்ரேல் காணப்படுகிறது. இஸ்ரேலின் மொஷhட் தலைமையகம் மீதும், சொரேகா மருத்துவமனை மீதான தாக்குதல்கள் மட்டுமின்றி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரம் முழுமையாக உருக்குலைந்து இருப்பதற்கு அது முக்கிய காரணமாக உள்ளது. இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டமை மிக குறைந்தளவில் உள்ளமைக்கு காரணம் அவர்கள் ஏற்கனவே பதுங்கு குழிகளில் வாழும் பழக்கத்தையும் அனுபவத்தையும் கொண்டிருப்பதுடன் அறிவியல் ரீதியில் உறுதியான சமூகமாக உள்ளது.
இது மட்டுமல்ல ஈரானிய ஆட்சியாளரின் உளவியல் உணர்வும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணமாகும். இதுவரை பல அணு விஞ்ஞானிகளையும் இராணுவ தளபதிகளையும் ஆயிரக்கணக்கான பொது மக்களையும் இஸ்ரேலியர் கொன்று குவித்திருந்தமை வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத பதிவாக உள்ளது. இதனால் ஈரானியர்களின் தற்காப்பு யுத்தமாக இதனை கருதுகின்ற நிலை காணப்படுகிறது. இஸ்ரேலியரின் உத்திகளும் ஈரானியர்களால் முறியடிக்கப்பட்டு இருப்பது என்பது மிகப் பிரதான அரசியல் எழுச்சியாகும். இஸ்ரேலின் பலவீனத்தை காசா நிலப் பரப்பில் ஹமாஸ் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை மீட்டெடுக்க முடியாத போதே ஈரானுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.
ஈரான் இராணுவ ரீதியான பலத்தை மட்டுமின்றி இராஜதந்திர ரீதியான நகர்வுகளையும் சமகாலத்தில் மேற்கொள்ளும் திறனோடு நகர்வுகளை முதன்மைப்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஜெனிவாவில் நிகழும் சந்திப்பு இராணுவுக்கு கிடைத்த இராஜதந்திர ரீதியான நகர்வாகும். அது மட்டுமின்றி சீனா, ரஷ்சியா போன்ற நாடுகள் இராஜதந்திர ரீதியான நகர்வில் பங்கெடுப்புக்கு தயாராக இருப்பதோடு இராணுவ நகர்வுகளையும் தோற்கடிப்பதில் கவனம் கொண்டிருக்கின்றமை ஈரானுக்கு வாய்ப்பான சூழலை கொடுத்துள்ளது. அது மட்டுமன்றி ரஷ்சிய ஜனாதிபதி இரு நாட்டுக்குமான போரை முடிபுக்கு கொண்டுவரும் பேச்சுக்களை தலைமை தாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்ததுடன் பேச்சுக்கள் ஐரோப்பிய யூனியன் (French Minister for Europe and Foreign Affairs Jean-Noel Barrot, British Foreign Secretary David Lammy, German Foreign Minister Johann Wadephul and European Union High Representative for Foreign Affairs and Security Policy, Kaja Kallas-June,20) கண்காணிப்பில் நிகழ்வதும் கவனத்திற்குரியதாகும்.
எனவே இஸ்ரேல்-ஈரான்பு போர் இரண்டு பிரதான மாற்றங்களை உலக அரசியல் ஏற்படுத்தி உள்ளது. ஒன்று இஸ்ரேல் மீதான கணிப்பீடுகளும் அச்சங்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஈரானிய தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும் யூதர்கள் துயரத்தை எதிர்கொண்டிருப்பதும் பிரதான மாற்றமாகும். இரண்டாவது ஈரானுடன் அமெரிக்கர்களே போரில் ஈடுபடுவதற்கு முடியாத அரசியல் சூழலை அல்லது இராஜதந்திர சூழலை அமெரிக்கா எதிர்பார்க்காத விதத்தில் ஈரானும் அதன் நட்பு நாடுகளும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது உலக ஒழுங்கு ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்சியா சீனா ஈரான் வடகொரியா என்பன அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டினை நெருக்கடிக்கு தள்ளியள்ளதாகவே தெரிகின்றது. இதன் விளைவுகள் ஈரானின் பேச்சு வார்த்தையின் நகர்வுகளைப் பொறுத்து அமைய வாய்ப்புள்ளது. ஈரான்-அமெரிக்க உடனான அணு ஆயுதம் பற்றிய பேச்சுவார்த்தை நகர்வுகளின் விளைவாகவே அதன் நீடித்த தன்மை புரிந்து கொள்ள முடியும். ஆனால் சமகாலத்தை ஈரான் ஒரு வலுவான அரசியல் இராணுவ சமநிலையை மேற்காசியாவில் தக்க வைத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)