இலங்கை அரசியல் பரப்பில் தேக்கமுற்றுவரும் பொருளாதார நெருக்கடி அரசியல் கொதிநிலையாக நகர வழிவகுத்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டம் பலவீனப்பட்டு செல்வதும் இலங்கை அரச கட்டமைப்பு அதிகாரத்திற்காக போராடுவதுமாக தென்னிலங்கை அரசியல் போக்கு காணப்படுகிறது. மீண்டுமொரு புதிய பிரதமரை நோக்கி நம்பிக்கையூட்டப்படுகின்ற அதேவேளை பொருட்களின்றி வீதிகளில் அலைந்து திரியும் மக்கள் கூட்டத்தை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடியில் ஆட்களை மாற்றுவதை விட முழுமையான முறைமை மாற்றத்தை நோக்கி பயணித்தல் அவசியமென்பதை உணர்த்த முனைகிறது.
முதலாவது, இலங்கைத்தீவில் இன்று எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறுகிய கால நெருக்கடியின் வடிவமாகவும் அல்லது குறுகிய கால தீர்வுக்கான வடிவமாகவும் தென்படவில்லை. இலங்கையின் வரலாறு முழுவதும் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எல்லோரும் பின்பற்றிய அரசியல் பொருளாதார இராணுவ கொள்கைகளும் அதனை ஊக்குவித்த பிராந்திய சர்வதேச அரசியலின் அணுகுமுறைகளும் அடிப்படை காரணங்களாகவே தெரிகிறது. இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்த போதிலும் உள்நாட்டு நுகர்வில் உலக நாடுகளின் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் எதிர்கொண்டது. இதற்கான அடிப்படை இலங்கை அரசியலின் அரசியலமைப்பு முறைகளும் அவற்றினை ஆதாரமாகக்கொண்ட அரசியல் அதிகார கட்டமைப்புமே ஆகும். அதன் பிந்திய வடிவமே 1978ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையும் அதன் பின்னான அதீதமாக தங்கி வாழும் அரசியல் பொருளாதார அணுகுமுறையும் ஆகும். இத்தகைய அரசியல் பொருளாதாரத்தை கட்டமைத்த இலங்கை அதிகார வர்க்கமும் சர்வதேச ஒத்துழைப்பு நாடுகளும் இலங்கையை மேலும் நெருக்கடியை ஊக்குவிக்கும் விதத்தில் மறைமுகமாக செயற்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடி சார்ந்து அரசியல் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித எச்சரிக்கைகளையும் முன்வைக்க முன்வராதவர்களாகவே உள்ளனர். தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் புலமையாளர்களும் இலங்கைத்தீவு பற்றி முன்வைக்கும் எந்த கருத்தையும் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் நிபுணர்களும் ஏற்றுக்கொள்ளாத நிலையொன்று 1980களுக்கு பின்னர் எற்படத்தொடங்கியது. இதனால் இலங்கை ஒரு இனவா எண்ணங்களோடும் அரசியல் பொருளாதாரத்தை இராணுவவாதமாகவும் இனவாதமாகவும் பௌத்த மேலாதிக்கவாதமாகவுமே அடையாளப்படுத்துகின்றனர். அனைத்து அம்சங்களையும் போருக்கு உள்ளால் கட்டமைத்து தெளிவான போர் பொருளாதாரத்தை (War Economy) அனுபவித்து வந்தனர். இதனை உலக நாடுகளும் தமக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டது. இலங்கையில் நிகழ்ந்த பொருளாதார திட்டமிடல்களும் அதற்கான அமுலாக்கங்கும் போர் பொருளாதாரமாகவே எழுச்சி பெற்றது. வடக்கு கிழக்குக்காகவும் போருக்காகவும் வழங்கப்பட்ட நிதி தென்னிலங்கை மக்களின் நுகர்வை சரிசெய்தததோடு ஊழலை வெளிப்படுத்தாத இயல்பான செய்முறையிலொன்றாக அடையாளப்படுத்தியது. உலக நாடுகளின் முதலீடுகள் அனைத்தும் அரசியல் முதலீடாகவும் ஊழலுக்கான ஊக்குவிப்பாகவும் அமைந்தது. இதனால் உள்நாட்டு அரசியல் பொருளாதாரம் அரசியல் முதலீட்டு பொருளாதாரமாகவும் போர் பொருளாதாரமாகவும் இராணுவ பொருளாதாரமாகவும் பரிணாமம் பெற்றது. இவையணைத்தும் இலங்கை தீவின் உற்பத்தியை அல்லது உற்பத்தியால் ஏற்படும் நுகர்வை சாத்தியப்படுத்தா ஒரு சூழலை தரும்.
இரண்டாவது, வடக்கு கிழக்கு மீதான முப்பதாண்டு போர் வடக்கு-கிழக்கின் உற்பத்தியை மட்டுமன்றி தேசிய உற்பத்தியையும் எத்தகைய பங்களிப்பையும் இல்லாத சூழலையும் உருவாக்கியுள்ளது. போருக்கு பின்னரும் கூட வடக்கு-கிழக்கின் விவசாய உற்பத்திக்கான நிலங்களின் கணிசமான அளவை அரசு தனது கட்டப்பாட்டுக்குள் வைத்திருந்ததோடு கடல் வளத்தையும் இராணுவ கட்டுப்பாட்டுக்களுக்கூடாக மட்டுப்படுத்தி கொண்டது. அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கு வனஜீவராசிகள் திணைக்களம் தொல்லியல் திணைக்களம் போன்றவற்றின் ஆளுகைக்குள் விவசாய நிலங்கள் உற்பத்திக்கான வாய்ப்பை இழந்தது. இனரீதியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடைமுறைகளும் விவசாய உற்பத்திகளையும் கடல்வளத்தையும் மட்டுப்படுத்தியதோடு தேசிய பங்களிப்புக்கான வாய்ப்பை இல்லாமல் செய்தது. ஆக்கிரமிப்புக்களும் இராணுவ குடியேற்றங்களும் தொடர்ச்சியான பயங்கரவாத தடைச்சட்டமும் உள்நாட்டு உற்பத்தியை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. வடக்கு-கிழக்கின் பங்களிப்பு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற அந்நிய செலவாணியின் மூலம் பெறப்படுகின்ற வருமானமாக மாத்திரமே காணப்படுகின்றது. இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிய இனரீதியான சிந்தனையின் பிரதிபலிப்பால் எழுந்த ஒன்றாகவே அதிகம் காணப்படுகின்றது. போரின் செலவீனங்களும் போர் முடிந்த பின்னான காலப்பகுதியில் அதற்கான நீட்சியும் முதலீட்டையும் உற்பத்தியையும் வடக்கு-கிழக்கில் ஊக்குவிக்காத தன்மையும் சமகால அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு வலுவாக காரணங்களாக உள்ளன.
மூன்றாவது, இத்தகைய சூழலிலும் தென்னிலங்கை பாராளுமன்றமும் ஜனாதிபதியும் அதன் அதிகாரவர்க்கமும் ஆட்களை மாற்றுவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென கணக்கு போடுகிறது. மகிந்த ராஜபக்ஷhவை ஆட்சியிலிருந்து வெளியேற்றிய போது ரணில் விக்கிரமசிங்க பொருளாதார மீட்சிக்கான நபராக அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது வருகை மேலும் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை ஆபத்தான நிலைக்கு தள்ளியது. தற்பொது புதிய பிரதமர் ஒருவரது பெயரை முன்மொழிந்து அவருக்கூடாக இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமென அதிகாரவர்க்கம் உரையாடல்களை முதன்மைப்படுத்துகிறது. அடுத்துவரும் வாரங்களில் தம்மிக்க பெரேரா புதிய பிரதமருக்கான வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கரத்து தெரிவிக்கின்றன. இவ்வாறு இன்னும் எத்தனையோ ஆட்களை பிரதமராகவும் நிதியமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் கூட அதிகார வர்க்கம் ஆள் மாற்றத்தை செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்க தீரவை எட்டலாம் என கனவு காண்கின்றது. எத்தகைய ஆள்மாற்றத்தை செய்தாலும் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமான இலக்காகவே அமைய உள்ளது என்பது கடந்த காலங்களில் அனுபவமாகும். முதலில் இதனையொரு அரசியல் பொருளாதார பிரச்சினையாகவும் அதற்கான தீர்வை கண்டறிந்து அணுகுவதுமே தற்பொதைய நெருக்கடிக்கான பொருத்தப்பாடுடைய செய்முறையாகும்.
நான்காவது, அத்தகைய பொருத்தப்பாடுடைய அணுகுமுறையென்பது அரசியல் அமைப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியது ஆகும். இலங்கையின் அரசியலமைப்பானது வர்க்க நலனையும் இன உணர்வையும் பெரும்பான்மை ஆதிக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு வரைபாகவே உள்ளது. இத்தகைய வரைபினால் போரையும் அழிவுகளையும் ஏற்படுத்துவதோடு உயர்வர்க்கத்தின் நலனை மாத்திரம் பாதுகாத்தக்கொள்ள முடியும். வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் அதனூடான அரசியல் கலாசாரத்தையும் இலங்கைத்தீவில் அடையாளம் காண்பது கடினமானது என்பது யாப்பின் உருவாக்கத்தின் போது இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டது. அவர்களது தீர்க்கதரிசனம் யதார்த்தத்தை அடையாளப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. அத்தகைய யாப்பின் பிரதிபலனாகவே இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது. ஆரம்பத்தில் வடக்கு-கிழக்கு மீதான போரின் பிரதிபலிப்புகள் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தாமை நிகழ்த்த உதவியது. வடக்கு-கிழக்கு மீதான போரை வெற்றி கொள்வதற்காக இலங்கை ஆட்சியாளர்கள் தெளிவான வெளியுறவு கொள்கையை வகுத்திருந்தார்கள். அவ்வகை வெளியுறவு கொள்கை பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் பரஸ்பரம் ஒத்துழைப்பையும் இலங்கை உலக நாடுகளுக்காக திறந்து விடப்பட்டமையும் ஆயுத தளபாடங்களின் கொள்வனவினால் மேற்கு நாடுகளுக்கு ஒரு ஆயுத சந்தை கிடைத்திருந்தமையும் பொருளாதார நெருக்கடியின் வெளித்தோற்றம் காணமுடியாது போனது.
ஐந்தாவது, போர் நிறைவு பெற்றதும் இலங்கை அரசாங்கம் மேற்குலகத்தை கைவிட்டு சீனாவுடன் நெருக்கமான வெளியுறவுக்கொள்கையை வகுத்தது. அதன் பிரதிபலிப்பு மேற்கினால் இலங்கை நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் எழுந்த பொருளாதார நெருக்கடி படிப்படியாக இலங்கைத்தீவு முழுவதையும் ஆக்கிரமித்ததோடு சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்கு நாடுகள் என்ற தளத்தை பொருளாதார உதவிக்கான கோரிக்கைகள் இலங்கை ஆட்சியாளர்களால் முதன்மைப்படுத்தப்பட்டது. இதன் நீட்சியே இந்திய-அமெரிக்க-ஜப்பானிய தூதர்களும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும் இலங்கை நோக்கி விரைந்து தீர்வை எட்ட முயலுகின்றனர். அதுமட்டுமன்றி அமெரிக்க,இந்திய, சீன தரப்பை கடந்து ஜப்பானிய தூதுவரும் அவர்களது அரசியல் ஆலோசகர்களும் வடக்கு நோக்கி மேற்கொண்ட விஜயம் இலங்கைத்தீவில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப்பிரச்சினைக்கு நல்லிணக்கத்தினூடாக தீர்வை எட்ட முயற்சிக்கின்ற நகர்வாகவே காணப்படுகின்றது. இந்திய தரப்பு மிக நீண்டகாலமாக தனது பொறுப்பினை தட்டிக்கழித்து செயற்படுகின்ற போது ஜப்பான் ஒரு ஆரோக்கியமான உரையாடலை வடக்கில் ஆரம்பித்துள்ளது. இதனை நெருக்கடிக்கு உள்ளாக்க இந்தியா, அமெரிக்கா போன்ற தரப்புக்கள் முயலுமென்பது அடையாளங்காண கூடிய விடயமாகும். ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான பேச்சுவார்த்தை காலப்பகுதியில் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி ஆஹாஷp மத்தியஸ்தம் வகித்ததோடு தமிழ் மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டிய கடப்பாடும் ஜப்பான் தரப்பு கொண்டுள்ளது. ஏறக்குறைய 33தடவை இலங்கைக்கு வந்து யசூசி ஆஹாஷp 33 தடவையும் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை அலுவலகத்துக்கு விஜயம் செய்திருந்தார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானியர் அனுபவித்த துயரத்தை போன்று முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர் அனுபவித்துள்ளனர். ஏதொவொரு வகையில் குறித்த துயரத்துக்கு பொறுப்புடைய நாடாக ஜப்பான் காணப்படுகின்றது. அத்தகைய பொறுப்பான்மை அடிப்படையிலேயே ஜப்பானிய தூதுவர் மிசுகொஷ ஹிதேகி வடக்குக்கு விஜயம் செய்து முக்கிய தரப்புக்களுடன் உரையாடியது மட்டுமன்றி தற்போது எழுந்துள்ள இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினை என்றும் அதற்கான தீர்வின் அவசியம் பற்றி கண்டிறிந்ததோடு நல்லிணக்கத்தின் வாயிலாக தீர்வை எட்ட வேண்டுமென கவனம் கொண்டு உரையாடி வருகின்றார்.
எனவே, இலங்கைத்தீவில் எழுந்துள்ள அரசியல் பொருளதா நெருக்கடியின் தீர்வு ஆள் மாற்றமல்ல. மாறாக இலங்கைத்தீவில் உள்ள பல்லின சமூக கட்டமைப்பை பேணும் வகையில் புரட்சிகரமான அரசியலமைப்பை வரைந்து அனைத்து இனங்களையும் சமமாக பேணும் வகையில் அரசியலதிகாரத்தை கொண்ட அரசியலமைப்பு ஒன்றினை மக்கள் பங்கேற்புடன் முன்வைக்க வேண்டும். அதன்மூலம் பிற தேசியங்களின் இருப்பு உத்தரவாதப்படுத்துவதோடு அதற்கான அங்கீகாரத்தினை சர்வதேச மட்டத்தில் இலங்கையில் அதிகம் கரிசனை கொள்கின்ற நாடுகள் வழங்குதல் வேண்டும். அதனொரு பங்கை முதன்மைப்படுத்தும் விதத்திலேயே ஜப்பானிய தூதுவரின் வடக்குக்கான விஜயம் நோக்கப்பட வேண்டும். இலங்கைத்தீலில் அவுஸ்ரேலிய உட்பட குவாட் அங்கத்துவ நாடுகள் அதிக கரிசனை கொள்வது ஈழத்தமிழரின் அரசியல் இருப்பின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. அதற்கான முன்னகர்வுகளை தமிழ் சிவில் அமைப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் ஈழத்தமிழரசியல்வாதிகளும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
