அரசியல் கட்டுரைகள்

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதால் ஈழத்தமிருக்கு கிடைக்கும் பயன் என்ன?

இலங்கைத் தீவின் அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வாக அதிகம் காணப்படுகிறது. தென் இலங்கை பிரதானமாக மூன்று வேட்பாளருக்கிடையே பலமான போட்டி கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய மும்முனைப் போட்டியில் வாக்காளர்கள் பங்கீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மை சிங்கள-பௌத்த மக்களுடன் மட்டுப்படாது ஏனைய தேசியங்களின் வாக்குகளையும் அம் மூன்று வேட்பாளரும் பெறுவதில் கவனம் கொள்கின்றனர். அதனை வெளிப்படையாக மேற்கொள்ளாது இரகசியமாக பெறுவதில் கரிசனை காட்டுவதாகவே தெரிகிறது. காரணம் வெளிப்படையாக தமிழ், முஸ்லீம், மலையக வாக்காளர்களை அணுகினால் பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்காளர்கள் நிராகரித்துவிடுவார்கள் என்ற அச்சம் அவர்கள் மூவரியமும் உள்ளது. அது மட்டுமல்லாது தமிழர்களுக்கு, முஸ்லீம்களுக்கு, மலையகத் தமிழருக்கு இலங்கை அரசியலில் பங்கு கொடுப்பதற்கான பேரம்பேசல் ஏற்பட்டுவிடும் என்ற குழப்பமும் அவர்களிடம் உண்டு. இதனால் இரகசியமாக தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும், அது தமது வெற்றியை தீர்மானிக்கும் எனக் கணக்குப் போட்டு இயங்குகின்றனர்.இந்த சந்தர்பத்திலேயே தமிழ் மக்கள் தமக்கான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரையாடல் தமிழரிடம் வலுவடைந்து வருகிறது. ஆனால் அதிக குழப்பமும் கேள்விகளும் சதிக்கேட்பாடுகளும் தமிழ் வேட்பாளர் பற்றி மேல் எழுகிறது. தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது, இலங்கைத் தீவின் அரசியலில் ஜனாதிபதி தேர்தல் என்பது ஆரம்பமான காலம் முதல் தமிழ் மக்கள் தென் இலங்கை வேட்பாளர்களுக்டகு வாக்களித்துள்ளார்கள். அனேகமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவரை தீர்மானிப்பவர்களாகவும் விளங்கியுள்ளனர். பல சர்தர்பங்களில் தோல்வியடைந்த வேட்பாளரையே ஆதரித்துள்ளனர். ஆனால் முடிந்தவரை வெற்றியை தீர்மானிப்பவராக விளங்கினர். அதிலும் சந்திரிகா குமாரதுங்காவையும் மைத்திபால சிறிசேனாவையும் தமிழ் மக்கள் வாக்களித்தே வெற்றி பெறவைத்தனர். இங்கு கேள்வி என்னவென்றால் அவர்களை வெற்றி பெறவைத்து தமிழ் மக்கள் அடைந்த பயன் என்னவென்பதேயாகும். வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டதா? பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுக்க முடிந்ததா? பங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடிந்ததா? வழிபாட்டு உரிமை உட்பட தமிழருக்குரிய வாழ்வுரிமைகள் கிடைத்ததா? அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா? குடியேற்றங்களின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டதா? எதுவுமே நிகழவில்லை. அப்படியாயின் தமிழ் மக்கள் ஏன் தென் இலங்கை வெட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

சில தமிழ் பராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை நிராகரிப்பதற்கு அடிப்படையில் அவர்களது தனிப்பட்ட நலன் முதன்மையானதாக உள்ளது. அவர்கள் ஈழத்தமிழரது அரசியலை மேற்கொள்ளவில்லை. மாறாக தனிப்பட்ட நலனை அடைவதற்கு வெற்றி பெறும் வேட்பாளருடன் பேரம்பேசத் தயாராகின்றார்கள். அதற்காக சதிக் கோட்பாடுகளை கட்டமைக்கிறார்கள். ஈழத்தமிழரது 2009 பின்னான அரசியலில் சதிக் கோட்பாடுகளும் பெரும்கதையாடல்களும் இலக்கை அடையவிடாது தடுத்துள்ளது. வாய்ப்புக்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளன. அறிவியல்பூர்வமாக சிந்திக்கவிடாது தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளர் என்பது இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணானது கிடையாது. அது மட்டுமன்றி அது விருப்பத் தெரிவு என்ற எண்ணத்தையும் அரசியலமைப்பே கொண்டுள்ளது. அரசியலை அறிவியல் மயமாக்க வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு தேசியங்களும் அரசியலை அறிவியலாகவே செயல்படுத்துகின்றனர். ஈழத்தமிழர் கற்பனைக்குள்ளாலேயே அரசியலை பார்க்கிறார்கள்.

இரண்டாவது, ஈழத்தமிழரின் கூட்டுவாழ்க்கைக்கு எதிராகவே தென் இலங்கை செயல்படுகிறது. குடியேற்றங்களை அத்தகைய இலக்குடனேயே நகர்த்துகிறது. அதனால் அத்தகைய பெருந்திட்டத்தை தடுக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் தமது ளழடனையசவைல வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் கூட்டாக உள்ளனர் என்பதை உலகத்திற்கோ தென் இலங்கைக்கோ காட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்கள் தமக்கிடையே கொண்டுவருதல் வேண்டும். அத்தகைய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தென் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமது ளழடனையசவைல இழந்துள்ளார்கள். அதனை மீளமைக்க வேண்டும். தமிழர்கள் பிரதேசமாக, மதமாக பிரிந்துள்ள நிலையை உடைத்து எறிய வேண்டும். சதிக்கோட்பாடுகள் மூலமும் பெரும்கதையாடல்கள் மூலமும் தனிப்பட்ட அரசியல் அபிலாசைக்காகவும் வடக்கு கிழக்கு இணைப்பென உதட்டவில் உரையாடும் அரசியல் வாதிகளையும் அரசியல் தனத்தையும் நிராகரிக்க வேண்டும். தமிழ் தேசியம் புரட்சிகரமானதாக கட்டமைக்கப்பட வேண்டும். அது எந்த தேசியத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் உணர்த்த வேண்டும். தமிழ் தேசியம் வன்முறையற்ற கருத்தியல்ரீதியானதாக வடிவமைக்க வேண்டும். அதற்கான களத்தை இலங்கை அரசியலமைப்பின் ஜனாதிபதி தேர்தல் தமிழருக்கு வழங்கியுள்ளது. அதனை பிரயோகிப்பதன் மூலம் ஒருமைப்பாட்டையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.

மூன்றாவது, Political Will அரசியல் சித்தம் அல்லது அரசியல் விருப்பு ஈழத்தமிழரிடம் ஏற்பட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூசோ (1712-1778)என்ற தத்துவவியலாளரால் முன்வைக்கப்பட்ட சிந்தனையே பொதுவிருப்பாகும் (General Will). அத்தகைய பொது விருப்பின் தளத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றிணையவும் ஐக்கியப்படவும் தமது பிரச்சினைகளை ஐக்கியமாக வெளிப்படுத்தவும் பொது வேட்பாளர் என்பது அவசியமாகிறது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசையை கூறுவது மட்டுமல்ல அத்தகைய அரசியல் சித்தத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையிலும் கூட்டிணைவு காணப்படுகினறது. அதனை அடைவதற்கான வழிமுறையாக பொது வேட்பாளர் விளங்குவதோடு அத்தகைய அரசியல் விருப்பையும் ஈழத்தமிழர் கொண்டுள்ளனர் என்பதை காட்டுவதற்கும் அவசியமாகிறது.

நான்காவது, ஈழத்தமிழர் அரசியல் உச்சமான வளர்ச்சியை எட்டி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இளைஞர்கள், சமூக அக்கறையுடையவர்கள் பொது நலனுக்காக உழைப்பவர்கள் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர். புலம்பெயர்வதே தமது அரசியல் பொருளாதார இருப்பெனக் கருதுகின்றனர். பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்வதே தமது எதிர்காலமெனக் கருதுகின்றனர். அதற்கான அடிப்படை அவர்களது அரசியல் இருப்பு மட்டுமல்ல வடக்கு கிழக்கின் அரசியல் இருப்பும் காணாமல் இருப்பதுவும் அடிப்படைக் காரணமாகும். அத்தகைய நிலையை மீட்டெடுக்க வேண்டுமாயின் ஈழத்தமிழரது அரசியல் இருப்பு உறுதியாக்கப்பட வேண்டும். புலம் பலமபாக இருக்கும் போது மட்டுமே புலம்பெயர்ந்தவர்களால் உறுதியான முடிபுகளுக்கு உதவ முடியும். யூதர்கள் பல நூற்றாண்டுகளாக புலம் பெயர்ந்தார்கள். ஆனாலும் குறித்த யூதமக்கள் தமது நிலத்தில் பேராட்டத்தின் மத்தியிலும் வாழ்ந்து கொண்டே அரசியலைக் கட்டமைதர்தார்கள். அதுவே அவர்களது பிந்தய அரசியல் இருப்புக்கு உதவியது. அத்தகைய நிலையை ஈழத்தமிர்கள் தக்க வைக்க வேண்டுமாயின் தமது அரசியல் அபிலாசைக்கான இருப்பினை சரி செய்து கொள்ளவேண்டும். அதற்காகனதாகவே பொது வேட்பாளர் என்பது அடிப்படையானதாக உள்ளது. இது எந்த தென் இலங்கை வேட்பாளருக்கும் எதிரானதல்ல. காரணம் இவர் ஒன்றும் வெற்றியாளர் கிடையாது. இவர் ஈழத்தமிழரது அசியல் அடையாளம். ஈழத்தமிழரது அரசியல் அபிலாசையின் வெளிப்பாடு.

ஐந்தாவது, ஈழத்தமிழர் உலக நியதிகள் எதனையும் நிராகரிக்கவில்லை. ஈழத்தமிழர் ஒரு தேசியமாக, வடக்கு கிழக்கில் தாயகமாக வாழ்வதோடு சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்களாகவும் உள்ளனர் என்பதை நிறுவுதல் அவசியமானது. பொது வேட்பாளர் என்பது அத்தகைய அபிலாசைகளின் விளைநிலமாக உள்ளார். ஈழத்தமிழன் அறிவுடையவனாகவும், முதுகெலும்புள்ளவனாகவும், இலங்கைத் தீவில் மட்டுமல்ல இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலில் உள்ளனர் ன்பதை வெளிப்படுத்த பொது வேட்பாளர் உதவக்கூடியவராக உள்ளார். அவர் ஈழத்தமிழரது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தப் போகின்றார். ஆனால் ஈழத்தமிழர் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என இலங்கையின் அரசியலமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் முன்மொழியவில்லை. இது அரசியலமைப்புக்கு விரோதமானது கிடையாது.

எனவே தமிழ் பொது வேட்பாளர் என்பது தேசியமாக சிந்திக்கும் ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டிய அரசியலாகும். இதற்கு எதிராக முன்வைக்கப்படும் சதிக்கோட்பாடுகளையும் பெரும் கதையாடல்களையும் விட்டுவிடுங்கள். ஆனால் ஈழத்தமிழன் வடக்கு கிழக்கில் நிலைத்திருக்க வேண்டுமாயின் உரிமையுடன் எதிர்கால சந்ததியாவது வாழவேண்டுமாயின் பெரும்பான்மை மக்களைப் போல் சுயநிர்ணயத்துடன் வாழ வேண்டுமாயின் ஐக்கியமும் புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது தனித்து பிறதேசியங்களுக்காவல்ல. ஈழத்தமிழருக்கானதே. அதனை நோக்கி பயணிப்பதே தற்போதைய யதார்தமாகவுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)