அரசியல் கட்டுரைகள்

தமிழ் பொது வேட்பாளரை யார் நிறுத்துவது பொருத்தமானதாக அமையும்?

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளருக்கான உரையாடல் அதிக அரசியலாகிவருகிறது. வுழமையான வேட்பாளர்களுடன் புதிய சில அறிமுகங்களும் களத்தில் நிறுத்தப்படுவதற்கு தென் இலங்கையில் நகர்வுகள் நிகழ்கிறது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எப்போதும் போல் உரையாடல்களுடன் தமிழ் பொது வேட்பாளர் அரசியல் நின்றுவிடும் என்ற எதிர்பார்க்கை அனோக தென் இலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பவர்களது எண்ணமாக உள்ளது. அதனை நோக்கி செயல்படும் தரப்புக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட தற்போது அதிகமாக இல்லை என்பது தெளிவாக காணமுடிகிறது. அதனால் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது பற்றிய தமிழ் மக்களது எண்ணம் மிகவும் தெளிவானது. ஆனால் அத்தகைய பொது வேட்பாளர் பற்றிய கோட்பாட்டு ரீதியான புரிதல் தெளிவற்றதாக உள்ளது. அதனை நோக்கியே இக்கட்டுரை அமையவுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளருக்கும் வேட்பாளருக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பொதுத்தளத்தில் தவறாக புரியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு தமிழ் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் நின்று வாக்குகளைப் பெற்றுள்ளதையும் தமிழ் பொது வேட்பாளரையும் ஒன்றாகவே கருதப்படகிறது. இது அபத்தமான புரிதல். தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்களாகவோ அல்லது சிவில் தரப்பாகவோ அல்லது அன்றைய சூழலில் இயங்கிய இயக்கங்களோ அவர்கள் இருவரையும் நிறுத்தவில்லை. மாறாக அவர்களே ஜனாதிபதி வேட்பாளராக நின்றவர்கள். ஆரம்பத்தில் குமார் பொன்னம்பலமும் பின்னர் சிவாஜிலிங்கமும் அத்தகைய பரிசோதனையில் ஈடுபட்டார்கள்;. அதில் குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகள் 1,7300 என்பது கவனத்தில் கொள்ளப்பட்ட விடயமாக அப்போது காணப்பட்டது. அதனால் தமிழ் வேட்பாளருக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கும் கோட்பாட்டு ரீதியாக வேறுபாடு உண்டு. தமிழ் பொது வேட்பாளர் என்பது தேசமாகவும் தமிழ் தேசியமாகவும் நிறுத்தப்பட போகும் வேட்பாளர். அத்தகைய நியதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படும். இத்தகைய பொது அங்கீகாரத்தை எத்தரப்பு முன்வைத்தால் பொருத்தமாக அமையும் என்பதையும் விளங்கிக் கொள்வது பொருத்தமானதாக அமையும்.

முதலாவது, இத்தகைய தமிழ் பொது வேட்பாளர் தமிழ் தேசியத்தின் பொது அடையாளம். அத்தகைய பொது அடையாளத்தைக் கொண்ட வேட்பாளரை சிவில்தரப்புக்கள், தொழில்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் மற்றும் பொதுத்தளத்தில் தமிழ் தேசியத்தோடு இயங்கும் அமைப்புக்கள் தனிநபர்கள் என்ற பெரும் கூட்டின் அனுசரணையோடு நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியச் சக்திகள் தமிழ் பொது வேட்பாளர் பொறுத்து உடன்பாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அதே நேரம் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களும் மலையக மக்களும் ஆதரிப்பதற்கான சூழலை அத்தகைய தமிழ் பொது வேட்பாளரின் பிரகடனம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒரு பொதுத்தளத்தில் பொது அங்கீகாரத்துடன் தமிழ் பொது வேட்பாளர் சார்ந்த நடைமுறை உருவாக்கப்படும் போது மட்டுமே அதனை தமிழ் பொது வேட்பாளர் எனக்கணிப்பிட முடியும். அதனை நோக்கி கடந்த காலத்தில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவும் இல்லை. நிறுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட்டவர்கள் தமிழ் பொது வேட்பாளரும் இல்லை என்பது பரிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் தனியன்களாக தமது விருப்புக்கு உட்பட்டு அத்தகைய வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்தியவர்கள். குமார் பொன்னமபலம் போட்டியிடும் போது ஆயுத அமைப்புகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதனை எதிர்த்திருந்தது என்பது கவனத்திற்கு உரியது. அவ்வாறே சிவாஜிலிங்கம் போட்டியிட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகள் அதிக விமர்சனங்களை முன்வைத்தன. தற்போது அடையாளப்படத்தப்படும் தமிழ் பொது வேட்பாளர் அப்படியான தனிப்பட்ட நலனுக்கோ கட்சி நலனுக்கோ உட்பட்டவர் அல்ல. மாறாக தமிழ் தேசிய நலனுக்காகவும் தமிழ் தேசியத்தின் பொது நலனுக்காகவும் அமைவது அவசியமானது.

இரண்டாவது, இதில் கட்சிகளின் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியமா என்ற கேள்வி பொதுவானதாகவே உள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தோடு பயணிக்கும் கட்சிகள் அதிகமாக உள்ளன. அத்தகைய கட்சிகளுக்கு கட்சி நலன் பிரதானமானது. அதனை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அதனால் ஒரு கட்சியிலிருந்து தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்தால் இன்னோர் கட்சியினர் அதற்கு எதிராக அணிதிரள்வதே தமிழரது அரசியல் மரபாக உள்ளது. அதில் இருபக்கமும் நியாயத்தன்மை உண்டு போல் தெரிகிறது. காரணம் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவிடும் என்ற கோணத்தில் ஏனைய கட்சிகள் கருதும் நிலைக்கு அத்தகைய தமிழ் பொது வேட்பாளரும் பொறுப்பாவார். காரணம் தாம் பெறும் வாக்குகளை தனது ஆதரவாகவும் கட்சியின் நலனுக்கான ஆதரவு வாக்காகவும் கொண்டு செயல்படும் போக்கினை கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் கட்சிக்குள் இருந்து ஒரு தமிழ் பொது வேட்பாளரை அமையாளம் காண்பதுவோ, நிறுத்துவதோ பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும். அவ்வாறு கட்சிக்குள் இருந்து ஒருவர் நிறுத்தப்படுவதென்பது தமிழ் வேட்பாளராக அமையுமே அன்றி தமிழ் பொது வேட்பாளராக அமையாது. அப்படியாயின் தமிழ் தேசியக் கட்சிகளின் பணி எதுவாகவுள்ளது என்பது கேள்வியாக உள்ளது.

மூன்றாவது, தமிழ் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களுக்கானவை. தமிழ் மக்களின் நலனுக்கானவை. தமிழ் மக்களுக்கு எது பொருத்தமானது இலாபமானது எனக்கரும் விடயத்திற்கு ஒத்துழைப்பதும் அதற்காக செயல்படுவதும் அடிப்படையானது. எழுக தமிழ் நிகழ்விலும், பொத்துவில் முதல் பொலிகண்டிவரையுமான போராட்டத்திலும் அவைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தன. அதனை தமிழ் தேசியம் எனக்கரும் அனைத்து கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்திலும் வெளிப்படுத்தப் போகின்றன. இதில் எந்தக் கட்சிக்கும் விதிவிலக்கு இல்லை. அனைத்தக் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஒருமித்த கருத்திற்க வருதல் வேண்டும். காரணம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறும் நோக்கிலயே தமிழ் தேசியக் கட்சிகள் அதிகம் இயங்குகின்றன. அத்தகைய தீர்வில் தனித்துவம் கொண்டதாக தமிழ் பொது வேட்பாளர் காணப்படுகின்றார் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அது மட்டுமன்றி தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் உள்ள போட்டியையோ கட்சிக்குள் உள்ள போட்டியையோ தமிழ் பொது வேட்பாளர் என்ற கருதுகோள் முரண்பாட்டை ஏற்படுத்த முனையாது. முனையவும் கூடாது . அத்தனைய எண்ணத்துடனேயே தமிழ் பொது வேட்பாளரது இயங்குதிறன் அமைவது அவசியம்.

நான்காவது, தமிழ் பொது வேட்பாளரை கட்சிகள் நிறுத்த முயலும் போது தென் இலங்கை மட்டுமல்ல பிற நாடுகளின் தலையீடும் கட்டுப்பாடும் நிகழ வாய்ப்பு அதிகமுள்ளது. அத்தகைய தலையீடு நிகழ்கிறதோ இல்லையோ அது சார்ந்து உரையாடல் களம் சதிக்கோட்பாடுகளை உருவாக்கும். அவ்வாறு சதிக்கோட்பாடுகள் உருவாகும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை சரி செய்ய போராட வேண்டிய நிலை தமிழ் பொது வேட்பாளருக்கு ஏற்படும். தமிழ் பொது வேட்பாளர் என்பது பிரகடனத்திற்கானது. அத்தகைய பிரகடனம் தமிழ் மக்களது இருப்புச் சார்ந்தும் எதிர்காலம் சார்ந்ததுமே அன்றி கட்சிகளின் நலன் சார்ந்தது கிடையாது. அதனால் அத்தகைய நிலையை நோக்கி கட்சிகள் செயல்படுகின்ற மரபைக் கொண்டிருக்கவில்லை. கடந்த காலம் முழுவதும் தமிழர் வாக்குகளைப் பெற்ற கட்சிகள் தமிழ் மக்களது பொதுக் கோசத்திற்காக உழைத்ததைவிட கட்சியின் கொள்கைக்கும் தனிப்பட்ட தேவைக்காகவும் செயல்பட்டதே அதிகமாகும். ஆதனை தவறானதென கட்சியின் அரசியல் கட்டமைப்பை வைத்து குறிப்பிடுவது கடினமாகும். ஆனால் தமிழ் மக்களது நிலையைக் கருத்தில் கொண்டு அக்கட்சிகள் செயல்படுவதை விடுத்து கட்சியின் கொள்கைக்கு செயல்பட்டதே அதிகமானதாகக் காணப்பட்டது.

ஐந்தாவது, தமிழ் கட்சிகள் அனைத்தின் மீதும் தமிழ் மக்களுக்கு ஏதோ ஓரடிப்படையில் நம்பிக்கையீனம் அதிகமாக உள்ளது. மக்களுடன் சேர்ந்து பயணிப்பதில் கவனம் கொள்ளாதது மட்டுமன்றி மக்களின் துயரங்களை கவனத்தில் கொள்ளாது செயல்படுகின்றன என்ற விமர்சனம் உண்டு. அதனால் பொது வெளியில் குறிப்பிட்ட ஆதரவுத் தளத்தை தமிழ் கட்சிகள் கொண்டிருந்தாலும் முழு அளவில் தமிழ் கட்சிக்ள் தமிழ் மக்களால் ஆதரிக்கப்படும் நிலை அரிதாகவே காணப்படுகின்றது. கட்சிகளின் உறுப்பினர்களும் கட்சியின் தலைமைகளும் பொதுவெளியில் முரண்பாடடையும் நிலையை கவனத்தில் கொள்ளும் தமிழ் மக்கள் கட்சிகளை நோக்கி தமது ஆதரவை கொடுப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆரசியல் நாகரிகமில்லாத உரையாடல்களும் போலிமுகநூல் பக்கங்கள் மட்டுமல்ல போலி ஊடகப்பிரச்சார உத்திகளும் சதிக்கோட்பாட்டு உருவாக்கங்களும் அவற்றுக்கு பின்னாலுள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தலைவர்களும் என பல அருவருப்பான அரசியலை வெளிப்படுத்தும் தமிழ் கட்சிகள் மீது நம்பிக்கை கொள்வது கடினமாகவே தெரிகிறது.

எனவே தமிழ் பொதுவேட்பாளர் என்பது பொதுத்தளத்தில் உள்ள தமிழ் மக்களது ஆதரவாலும் அதன் சிவில் அமைப்புகளாலும் ஒன்று சேர்ந்து நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய வேட்பாளரே தமிழ் பொது வேட்பாளராக விளங்குவார். கட்சிகள் நிறுத்துவதென்பது தமிழ் வேட்பாளராக இருக்கலாமே அன்றி பொதுத்தன்மைக்குரியதாக அமையாது. அத்தகைய எத்தனங்களை தமிழ் கட்சிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளன. அதனால் தற்போது கிடைத்துள்ள சூழல் மிகவும் ஆரோக்கியமாகவும் தனித்துவத்துடனும் தமிழ் மக்கள் தமது இருப்புச்சார்ந்தும் சாத்தியமாக்க கூடியதென்றாகும். ஏனெனில் இது தமிழ் மக்களது அரசியல் இருப்புக்கான வடிவமாகும். ஜனநாயக வெளியை சரிவரப் பயன்படுத்துவதென்பது தமிழர்களுக்கானதாக அமைவதேயாகும். ஆதனை இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டு மேற்கொள்வதென்பது இதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தக் கூடியது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)