அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச அணுகுமுறையாக பல நாடுகளில் போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அமைதியை சாத்தியமாக்கியுள்ளார். அந்த வரிசையில் முதன்மையானதும் அவசியமானதுமாக கருதப்படும் காசா மீதான தாக்குதலை அவரது இருபது அம்சத் திட்டம் மூலம் போரை நிறுத்தியுள்ளது. ஆனாலும் காசா போர் நிறுத்தம் மீதான நம்பிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றது. இதே நேரம் ரஷ்சிய உக்ரையின் போர் நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த பல முயற்சிகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இரு நாட்டுக்குமான போர் நிறுத்தல் உடன்பாடு சாத்தியமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளது. அதற்கான அடிப்படை காரணங்களை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடைவ ஆட்சிப் பொறுப்பை எட்டுவதற்கு முயற்சித்த போது 24 மணித்தியாலங்களில் உக்ரையின்-ரஷ்சியப் போரை நிறுத்ப்போவதாக பிரச்சாரம் செய்திருந்தார். அதற்கான அணுகுமுறைகள் பலவற்றை அமெரிக்க தரப்பிலிருந்து மேற்கொண்டார். அலாஸ்காவில் இரு தலைவர்களும் சந்தித்து உரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். காசா போர் நிறுத்தத்திற்கு பின்னர் மீண்டும் அதற்கான ஒரு முயற்சியை எடுத்து வருகின்றார். அவரது முயற்சிக்கு நோபல் பரிசு பெறுவது இலக்கு என்ற வாதம் ஊடகபரப்பில் அதிகம் உண்டு. ஆனால் அதனை கடந்து அமெரிக்காவின் நலன்களை அடைந்து கொள்வதில் உலக அமைதிக்கு பங்கு இருப்பதாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகள் ஏனைய நாடுகளால் சாத்தியமாகிய போதும் உக்ரையின்-ரஷ்சிய போரில் சாத்தியப்படுத்த முடியவில்லை. அதற்கான காரணங்களை விரிவாக நோக்குதல் அவசியமானது.
முதலாவது ரஷ்சிய-உக்கரையின் அமைந்திருக்கும் நிலப்பகுதி புவிசார் அரசியல் ரீதியில் உலகத்துக்கே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பின்னரும் இருதய நிலம் என்பது தனித்துவமானதாகவே பார்ப்படுகிறது. ரஷ்சியாவிடம் இருக்கும் ஆயுத தளபாடங்களும் அவற்றின் தாக்குதல் உத்திகளும் நகர்வுகளும் இருதய நிலம் என்ற நியமத்திற்குள் கட்டி எழுப்பப்பட்டதென்றே. 1919 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக ஆய்வாளர்களால் ரஷ;சியா பொறுத்து வழங்கப்படும் அங்கீகாரமாக இருதய நிலம் உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் அதன் நிலப்பகுதியாகவே காணப்படுகிறது. அதனால் அந்நிலபரப்பின் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அந்த நிலப்பரப்பின் தனித்துவமான பலத்தை நிறுவுவதாக அமைந்திருக்கின்றது. ரஷ்சியாவின் அரசியல் புவியியல் இருப்பிடமானது ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளை ரஷ்சியாவுக்கு வழங்கியுள்ளது. உக்ரையின் இருதயநிலத்தின் பிரதான காப்பரணாகும். காப்பரணாக விளங்கும் நிலப்பரப்பை எதிரிகளிடம் ஒப்படைப்பது என்பது ரஷ்சியாவின் பாதுகாப்பை எதிரிகளிடம் ஒப்படைப்பதற்கு சமனானது. அந்நிலபரப்பை நோக்கியே மேற்கு ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றது. அந்நிலப்பரப்பு மேற்கு ஐரோப்பாவிடம் இருந்தால் ரஷ்சியாவின் பலத்தை பெருமளவுக்கு தோற்கடிக்க கூடியது என்று மேற்கு ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. இதுவே இப்போரை நிறுத்த முடியாமல் இருப்பதற்கான வலுவான மூல காரணமாக உள்ளது.
இரண்டாவது ரஷ்சியா-உக்ரையின் போர் என்பது ரஷ்சிய எதிர் மேற்கு ஐரோப்பிய போராகவே காணப்படுகிறது. ரஷ்சியாவுக்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு வலுவான எதிர்ப்பினைக் கொண்டு இயங்குகிறன. மேற்கு ஐரோப்பாவே ரஷ்சிய இராணுவ பலத்துக்கு சவால்விடக் கூடியதாக உள்ளது. அது மட்டுமின்றி ரஷ்சியாவின் பொருளாதாரத்தை விட பல மடங்கு பொருளாதார வலிமை கொண்ட பிராந்தியமாக மேற்கு ஐரோப்பா காணப்படுகிறது. எனவே தான் ரஷ்சியா எதிர் மேற்கு ஐரோப்பியர்கள் போர் முகமாகவே காணப்படுகிறது. அதனால் போரை நிறுத்த முடியாத நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் ரஷ்சிய-உக்ரையின் போரை தொடங்குவதற்கு மேற்கு ஐரோப்பாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. அத்தகைய போருக்கான ஆயுதங்களையும் புலானாய்வு நடவடிக்கைகளையும் உக்ரைனுக்கு வழங்கியிருந்தது. அது மட்டுமன்றி உக்ரையினுக்கான பொருளாதார ஒத்துழைப்புகளையும் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவைப் போன்றே வழங்கி இருந்தது. உக்ரையினை வலுப்படுத்திய அமெரிக்கா நிர்வாகம் டொனால்ட ட்ரம்ப்பின் வருகையின் பின் நிலைப்பாட்டை மாற்றி சமாதானத்தை சாத்தியப்படுத்துதல் என்பது பிரதான குழப்பமாக உள்ளது. போரை நிறுத்துவதற்கான சாத்தியப்படுத்தல் நிகழக்கூடியதான புறச்சூழல் ஐரோப்பாவாலும் ஏற்படுத்த முடியவில்லை. அமெரிக்காவினாலும் ஏற்படுத்த முடியவில்லை. உக்ரைன்-ரஷ்சியப் போரை முதன்மைப்படுத்திக் கொண்டே ஐரோப்பா-அமெரிக்க முரண்பாடு வலுவடைந்தது. அத்தகைய வளர்ச்சியிலேயே மேற்கு ஐரோப்பா உக்ரேனுக்கு தனியாக இராணுவ பொருளாதாரம் உதவிகளை கைமாற்ற முயற்சித்தது. அதாவது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்சியா மீதான போர் அவசியமானதாக உள்ளது. இதுவே இப்போரை அமெரிக்க ஜனாதிபதியால் நிறுத்த முடியாமல் உள்ளது. இது ஒரு பல்துருவ உலக ஒழுங்கு (Multi-Polar World Order) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவது அமெரிக்காவின் நேரடி தலையீடோ அல்லது கட்டுப்பாட்டிலோ உக்ரையின் காணப்படவில்லை என்பது உக்ரையின் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் வெளிப்படுத்திய விடயம் உணர்த்தியுள்ளது. அதனால் உக்கரையனின் இருப்பு என்பது அமெரிக்காவில் முழுமையாக தங்கியிருக்காத போக்கு நிலவுகிறது. உக்ரையின் உத்திகளையும் தந்திரங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்காக வகுத்துக் கொள்ளுகிறது. இத்தகைய உக்ரையின் அமெரிக்காவின் இயல்பான வரைவுக்குள் வரும் என்பதும், கட்டுப்படும் என்பதும் கேள்விக்குரியது. உலகத்தின் முதல்நிலை நாட்டின் முதல் தர குடிமகனுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்பதை கூட கையாளத் தெரியாத ஜனாதிபதியுடன் எவ்வாறு போர் நிறுத்தத்தை அமெரிக்கா சாத்தியப்படுத்துவது. அலாஸ்கா மாநாடு எத்தகைய வெற்றி வாய்ப்பையும் உலகத்துக்கு தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் இரு தலைவர்களுக்கான உரையாடல் எத்தகைய அரசியல் நாகரீகத்துடன் நகர்ந்தது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவே உக்ரைன் தலைமையின் பலவீனமான இராஜதந்திரமும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான போரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தலைவராகவே ஜெலன்ஸ்கியும் போர் நிறுத்தம் சாத்தியமற்றது என்பதற்கான காரணமாக தெரிகிறது.
நான்காவது அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஆரம்பத்தில் ஜெலன்ஸ்கி மறுத்தார் என்று குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தற்போது ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் உடன்பட மறுக்கிறார் என்று விவாதிக்கின்றார். அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முன்மொழிகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அமெரிக்க நிர்வாகம் ரஷ்சியாவுக்கு எதிரான உத்திகளை வகுத்து செயல்படுத்திக் கொண்டு இயங்குகிறது. புட்டினது இந்திய விஜயத்தை தடுப்பதற்கு பல்வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ரீதியில் கருங்கடலை நோக்கி போர்க்கப்பல்களை நகர்த்துகிறது. ஆயுத தளபாடங்களை உக்ரேனுக்கு வழங்குவதை அமெரிக்கா முற்றாக நிறுத்தவில்லை. தற்போது கூட ரஷ்சியாவின் இரு எண்ணைய் ஏற்றுமதி நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது. இவ்வாறு பல விடயங்களை மறைவில் மேற்கொண்டு செயல்படும் அமெரிக்க நிர்வாகம் ரஷ்சியாவுடன் உக்கரையின் விடயத்தில் போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தலாம் என்பது கேள்விக்குரியதாகவே தெரிகிறது. அமெரிக்கா- ரஷ்சியா ஆகிய இரு சக்திகளும் உலகளாவிய ரீதியில் வலுவான அதிகார சமநிலையை கொண்டிருக்கும் நாடுகள். அந்த அடிப்படையிலேயே உக்ரையின் போர் பற்றிய விடயத்தையும் போர் நிறுத்தம் பற்றிய விடயத்தையும் அளவீடு செய்து கொள்ள வேண்டும்.
எனவே அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடுவது போல் ஏனைய போர்களை நிறுத்தியது போன்று உக்ரையின்-ரஷ்சியப் போரை நிறுத்த முடியாது. இஸ்ரேல் உட்பட போர் நிறுத்தம் மேற்கொண்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குபவை. அமெரிக்காவை உலகமெனக் கருதுபவை. அதனால் அத்தகைய போர் நிறுத்தங்கள் சாத்தியமாகியன. ஆனால் ரஷ்சியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் சமவலுக் கொண்ட நாடு என்ற அடிப்படையில் போர் நிறுத்தம் அமெரிக்க பக்கம் இருந்து சாத்தியமற்றது. ரஷ்சியா பக்கமிருந்தே சாத்தியமாக வேண்டும். அவ்வாறே உக்கரையினும் அமெரிக்காவை விட மேற்கு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் ஒரு நாடு. உக்ரையின் படையில் போரும் போருக்கான உத்திகளும் மேற்கு ஐரோப்பாவுக்கே உரியது. இதனாலே இப்போரை நிறுத்துவதில் சாத்தியமற்ற தன்மை நிலவுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
