அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பத்தில் அடம்பிடித்தாலும் இறுதி நேரத்தில் வெள்ளை மாளிகையை விட்டு விலகிச் சென்றுள்ளார். அதிகாரத்தின் மீதுள்ள அவாவும் கிறுக்குத்தனமும் அவரது இரண்டாவது பதவிக்கான வாய்ப்பினை பறித்ததென்றே கூறமுடியும். உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளான ஜனாதிபதியாக விடைபெற்றுள்ளார். அவரது நடவடிக்கைகளால் அமெரிக்கா அதிக நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதிலிருந்து மீள்வது கடினமானதாகவே அமையப்போகிறது என்பதை ஜோ பிடன் உணர்ந்துள்ளார். இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில் புதிய ஜனாதிபதி ஜோ பிடனுக்குள்ள சவால்கள் அதிகமானவை அதனைத் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜோ பிடன் பதவியேற்றதும் பதினைந்துக்கு மேற்பட்ட தீர்மானங்களில் ஒப்பமிட்டு சாதனை படைத்துள்ளதாக தெரியவருகிறது. பதவியேற்றதுடன் எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத பணியை ஜோ பிடன் ஆரம்பித்துள்ளார். அதற்கு அவரது எட்டுவருட துணை ஜனாதிபதி காலம் ஒரு காரணமாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட ஆபத்தான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு உடையவராக ஜோ பிடன் காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. குறிப்பாக அவரது பதவியேற்பு விழாவில் அவராற்றிய உரையும் அவரது முதல் நாள் பணியையும் அவதானிக்கும் போது சில விடயங்கள் தெளிவாகின்றன.
ஒன்று, பதவியேற்பில் அவர் ஆற்றிய உரை அமெரிக்க மக்களையும் அதன் தேசிய ஒருமைப்பாட்டையும் சீர்செய்வதாக அமைந்திருந்தது. இன ஒற்றுமை பற்றியும் அமைதியான வாழ்வு பற்றியும் அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தார். அமெரிக்காவையும் அமெரிக்க மக்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்பைப் பற்றி அச்சமடையத் தேவையில்லை என்ற கருத்தினை வெளிஜப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவினால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கான 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அது மட்டுமன்றி ஜனநாயகத்திற்கான வெற்றி எனப்பெருமிதம் கொண்ட ஜோ பிடன் ஜனநாயக விரோத செயல்களை கண்டனம் செய்தார்.ஜனநாயத்தின் வெற்றிக்காக முன்னர் உழைத்த ஆபிரகாம் லிங்டனையும் மாட்டின் லூதரையும் நினைவு கோர்ந்தார். அதனையே துணை அதிபரான கமலா ஹரிசும் சுட்டிக்காட்டினார். பெண்விடுதலை பற்றியும் இன ஒற்றுமை பற்றியும் அவரது ஆரம்ப உரை அமைந்திருந்தது. அவரது உரையின் சாரம் அமெரிக்க தேசியம் அதன் இன ஐக்கியம் மற்றும் சமாதானத்தின் அவசியப்பாடு என்பதாகவே தெரிகிறது.
இரண்டு, ஜோ பிடன் ஒப்பமிட்ட விடயங்களாக அமைந்திருப்பவை அனைத்தும் அமெரிக்கா உலகத்துடன் கொண்டுள்ள நட்புறவு சார்ந்ததாகும். குறிப்பாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையவுள்ளது என்பதற்கான கோடாகவே அவரது ஒப்பமிட்ட விடயங்கள் காண்பிக்கின்றன. குறிப்பாக பருவநிலைமாற்றம் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றிய தீர்மானத்தை இரத்து செய்துள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகிக் கொண்டமையை இரத்து செய்தமை மெக்ஸ்சிக்கோ-அமெரிக்க எல்லையில் மேற்கொண்ட சுவர் எழுப்பும் தீர்மானத்தை விலக்கியமை உலக சுகாதார நிறுவனத்தில் மீண்டும் இணைவதற்கான ஒப்புதலை முன்வைத்தமை சில முஸ்லீம் நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு நுழைவதற்கு விதித்திருந்த தடைகளை நீக்கியமை பாலின சமத்துவத்தையும் இன சமுத்துவத்தையும் அங்கீகரித்தமை மற்றும் அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிமை என்பன அதில் அடங்குவனவாக உள்ளன.
இவற்றை அவதானிக்கும் போது ஜோ பிடனது நிர்வாகம் பாரிய அதிர்வுகளில்லாத மிதமான போக்குக்குரிய தன்மை வெளிப்படுத்துவது போல் தெரிகிறது. உலகத்தோடு ஒத்து இயங்கும் போக்கினை அடுத்துவரும் நான்கு ஆண்டுகளில் அமெரிக்க அரசியல் நகரப் போகின்றதென்பதைக் கோடிட்டக் காட்டுகிறது.அதே நேரம் அமெரிக்கா ஒரு வல்லரசாக விளங்கும் போக்கானது சீன, ரஷ்சிய அரசுகளின் தற்போதைய நிலையினால் இலகுவானதாக அமையப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஜோ பிடனுக்குரிய சவால்கள் அதிகமானவை.
முதலாவது, உள்நாட்டில் எழுந்துள்ள இன ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் மீளக்கட்டியமைக்க வேண்டி பொறுப்புக்குள் தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக கறுப்பினத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர் மீதான ட்ரம்ப்ன் அணுகுமுறைகளால் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர்செய்யத் தவறினால் அமெரிக்காவின் எதிர்கால ஐக்கியமும் ஒருமைப்பாடும் சிதைந்துவிடும். இது 1860களை நோக்கிய நிலைக்குள் அமெரிக்காவை இட்டுச் செல்லும். பல்லினத் தேசயித்தைக் கொண்ட தேசம் என்பதை இழக்கும் நிலைக்குள் அமெரிக்கா தள்ளப்படும்.
இரண்டாவது, உள்நாட்டில் எழுந்துள்ள ஜனநாயக மறுப்புக்கான போராட்டம் வன்முறையை நோக்கிய அமெரிக்காவை உருவாக்கும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. அதனால் அமெரிக்காவுக்குள் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலை பாரியளவில் வளர்ந்துள்ளது. ஜனநாயகமே அமெரிக்க தேசியத்தின் அடிப்படையாகும். அமெரிக்காவே உலகத்திற்கு நவீன தேசிய ஜனநாயகத்தை தந்த நாடு என்ற பெருமை கொண்டிருந்தது. அதற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீக்கப்பட வேண்டும். மீளவும் அமெரிக்க தேசிய ஜனநாயகம் அவசியப்பாட்டை எட்ட வேண்டிய பொறுப்பு ஜோ பிடனுக்குரியது.
மூன்றாவது, கொவிட்-19 ஏற்படுத்திய அழிவானது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் அமெரிக்காவின் அழிவு சரிசெய்ய முடியாத கட்டத்தை எட்டியுள்ளது. இதனை வெற்றி கொள்வது ஜோ பிடன் முன்னேயுள்ள பிரதான சவாலாகும். தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல மரணத்தை முதலில் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புக்குரியவராக ஜோ பிடன் காணப்படுகின்றார். நுகர்வுச் சமூகத்தினையே அமெரிக்கா இழந்துள்ளது. அதனை நிரப்புவது கடினம் என்பது மட்டுமல்ல பொருளாதார ரீதியில் ஆபத்தானதாகவே அமையப் போகிறது.
நான்காவது, அமெரிக்கா உலகத்தின் முதன்மை நாடு என்பதை மீள நிறுவ வேண்டிய பொறுப்பாண்மை ஜோ பிடனுக்குரியதாகும். முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இலாபநட்ட கணக்குப் பார்ப்பது போல் உலகத்தையும் உலக நாடுகளையும் அணுகியதனால் எழுந்துள்ள சரிவை ஜோ பிடன் நிரப்ப வேண்டும். தென் பூகோள நாடுகளுடனான அணுகுமுறையில் பின்பற்றிய போக்குகள் அனைத்துமே மீளமைக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.
ஐந்தாவது, சீனாவுடனான உறவில் எழுந்துள்ள போட்டியை எதிர் கொள்ளும் பலம் அவசியமானதாகும். சீனா மிகத்தெளிவாகவே உலகளாவிய அதிகாரத்தை கைப்பற்ற தொடங்கியுள்ளது. அதற்கான வலையமைப்புக்களையும் உபாயங்களையும் கடந்த நான்கு ஆண்டுகளும் மிகத் தெளிவாக விரிவாக்கம் செய்துள்ளது. அமெரிக்காவால் தனித்து எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதில் வர்த்தகப்பொறியானது உலகளாவிய தளத்தில்அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிப்பதாகவே தெரிகிறது. அதனை எதிர்கொள்வதா அல்லது முறியடித்து பயணிப்பதா என்பது ஜோ பிடனுகுக்குரிய சவாலாக உள்ளது. எதனைத் தெரிவு செய்தாலும் ஆபத்தானதாகவே தெரிகிறது. அதாவது சீனாவை முறியடிப்பதும் கடினம். அதே நேரம் சீனாவுடன் ஒத்துழைப்பதும் ஆபத்தமானதே.
ஆறாவது, இராணுவ ரீதியில் ரஷ;சியாவின் வ6ளர்ச்சியும் ஆதிக்கமும் தொடரும் விடயமாகவேஅமைந்துள்ளது. தொடர்ச்சியாக ஆயுத பரிசோதனைகளையும் வலுமிக்க ஆபத்தான ஆயுத தயாரிப்புகளையும் கொண்ட தேசமாக ரஷ்சியா விளங்குவது அமெரிக்காவுக்கு மிக முக்கிய சவலாக அமைந்துள்ளது. ஜோ பிடனது காலமானது இராணுவ ரீதியில் ரஷ்சியாவை எதிர் கொள்வதில் பாரிய நெருக்கடியென்று தோன்றுவதற்கான காலமாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி அமெரிக்கா வலுவாக இருந்த பிராந்தியங்களில் ரஷ்சியாவின் கை ஓங்கியுள்ளது. அத்தகைய பிராந்தியங்களில் ரஷ்சியா இராணுவக் கூட்டுக்களையோ அல்லது அணிகளையோ உருவாக்கி நகர்த்தி வருகிறது.
ஏழாவது, மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு எழுந்துள்ள பாரிய சவாலாக ஈரான் துருக்கி மற்றும் இஸ்ரேலின் அணுகுமுறைகள் ஜோ பிடனுக்கு சவால்மிக்க காலமாகவே தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளும் ட்ரம்ப் பின்பற்றிய கொள்கைகளால் அதிக இழப்புக்களை அமெரிக்கா எதிர்கொண்டுள்றளது. அதனை சரிசெய்வது இலகுவான விடயமாக அமையப் போவதில்லை. அது மட்டுமனட்றி அத்தகைய இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு நாடும் தனது இருப்பினை தக்கவைக்க வேண்டிய உபாயங்களை வகுத்துள்ளன. நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கி ரஷ்சியாவின் நெருக்கமான நட்புறவுக்குள் இருப்பதுடன் இராணுவ ரீதியில் மிக நெருக்கமான தொடர்புகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறே வெனிஸுலேவா, வடகொரியா போன்ற நாடுகளது அணுகுமுறையும் காணப்படுகிறது. வடகொரியாவுடனான அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வி வரலாற்றில் மீளமைக்க முடியாத விடயமாகும்.
எனவே ஜோ பிடனுக்குரிய சவால்களில் இரண்டும் பரிமானம் கொண்டவை. ஒன்று உள்நாட்டு மட்டத்திலுள்ளவை. இரண்டு சர்வதேச மட்டத்திலானவை. இரண்டையும் இலகுவில் வெல்வது கடினமானதாகும். வெற்றி கொள்ளத் தவறுமாயின் அமெரிக்க உலகளாவிய ஆதிக்கம் சரிவை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாக அமையும்.
-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
