அரசியல் கட்டுரைகள்

செம்மணித்துயரும் தோல்வியடைந்த ஈழத்தமிழரின் அரசியல் மௌனத்தை எதிர்கொள்ளலும்?

இலங்கைத்தீவின் இனப்படுகொலையின் ஓர் அங்கமாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகிறது. அத்தகைய துயரம் மிக்க வரலாற்றின் பதிவுகளை அகழ்வாய்வுகளின் மூலம் வெளிக்கொண்டு வரப்படும் மனித எலும்புக்கூடுகள் உணர்த்தி நிற்கின்றன. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றைக் குறிப்பிடும் இப்பபடுகொலை தமிழ் மக்கள் மீதான அழிவுகளை மட்டுமின்றி ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களை எவ்வகையான நியமங்களுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை கோடிட்டுகாட்டுகிறது. இதுவே ஈழத்தமிழர் தமக்கான சுய நிர்ணயத்தை கோருவதற்கும் சுயாட்சியை அங்கீகரிக்குமாறும் உலகத்திடம் கோரிவருகின்றனர். ஆனால் துயரம்மிக்க செம்மணி பொறுத்து ஈழத்தமிழரின் அரசியல் நகர்வுகள் தோல்வி அடைந்த ஒரு சமூகத்தின் பிம்பமாக இருக்கின்றது என்பதை அடையாளத்தை எதிர்கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.

தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்குமென ரஷ்சிய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் முன்வைக்கும் கருத்து முக்கியமானது. ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். எந்த சமூகம் அற்பமான விடயங்களை பெரும் தலைப்புக்களாக மாற்றி நல்லுணர்ச்சி பெறும் வகையில் சிந்தனைகளை எல்லாம் மிகைத்தனமாக இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்தச் சமூகத்தில் அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகம் என்றார். அதனடிப்படைக்குள் ஈழத்தமிழர் அரசியலை புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது, சோமரத்ன ராஜபக்ஷ (Dewage Somaratne Rajapaksa) செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு முன் தாம் சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அவரது மனைவி இலங்கை ஜனாதிபதிக்கு ஆறுபக்க கடிதமொன்றை வரைந்துள்ளார். செம்மணி படுகொலையின் பிரதான சாட்சியாக விளங்கும் சோமரத்ன ராஜபக்ஷ முன்வைத்திருக்கும் விடயம் ஈழத்தமிழர் அரசியல் சமூகங்களின் கண்களில் அதிகம் முதன்மை பெற்றதாக தெரியவில்லை. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் தமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அழிவுகளிலும் இனப்படுகொலைகளின் போதும் அதிக மௌனத்தை கடைப்பிடித்ததன் விளைவே அவர்களது அரசியலின் துயரத்துக்கு அடிப்படையாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் போரின் போதும் அதன் பின்னான கால பகுதி முழுவதும் ஈழத்தமிழர்கள் அதிகம் எதிர்வினை ஆற்றாது மௌனம் காத்தனர். தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் போர் நிகழ்கின்ற போது 19 இளைஞர்கள் தீக்குளித்தனர். போரை நிறுத்துவதற்கு அவர்களது உடலை ஆகுதியாக்கினர். ஆனால் ஈழத்தமிழர்கள் வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்காலில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது மௌனமாகவே கடந்து சென்றனர். அதற்கு பல காரணங்கள் இருந்தன என யாரும் விவாதிக்கலாம். ஆனால் அது விடுதலைக்கான போராட்ட வழிமுறை கிடையாது. அகிம்சை வழியில் போராடுவதற்கான வெளி அரசியல் தலைமைகளிடமிருந்தது. அத்தகைய மௌன-அரசியலே ஈழத்தமிழர்களது இருப்பையும் அரசியலையும் இறைமையும் பிறர் காவு கொள்வதற்கு வழி ஏற்ப்படுத்தியது. இதில் பங்கெடுத்துக் கொண்ட பிரதான பங்காளிகள் ஈழத்தமிழர் முன்னிருக்கும் பல அரசியல் பிரிவுகள் என்பதை தவிர்க்க முடியாது ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஈழத்தமிழர்களின் அரசியல் மௌனத்துக்கு பின்னால் தமிழ் அரசியல்வாதிகளின் மோதல்களும் வாக்கு அரசியலுக்கான போட்டிகளும் வலுவான காரணங்களாக இருக்கின்றன. ஈழத்தமிழர் அரசற்ற-சமூக என்ற வரையறைக்குள் தேர்தல் அரசியலை விட விடுதலை அரசியலுக்கான எண்ணங்களும் கோரிக்கைகளும் பலப்படுத்தப்பட வேண்டியது என்ற புரிதல் அவசியமானது. அதனை புரிந்து கொள்ளாத அரசியல் தலைமைகளும் கட்சிகளும் தங்களுக்குள் போட்டிகளையும் பகைமைகளையும் ஈழத்தமிழரின் அரசியல் என்று கருதும் துயரம் காணப்படுகிறது. அவர்களது எண்ணமே அனேக மக்களிடமும் புரையோடிப் போய்யுள்ளது. இத்தகைய அரசியல் மௌனத்தை கலைத்து நியாயமான கோரிக்கைகளை முன் கொண்டு செல்லும் அணுகுமுறைகள் அவசியமானவையாக உள்ளன. ஈழத்தமிழர் மிதவாத அரசியல் தலைமைகள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக எந்த பாரிய போராட்டங்களையும் நிகழ்த்தவில்லை என்றே தெரிகிறது. தந்தை செல்வா 1965 களில் நிகழ்த்திய வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்திற்கு பின்னர் ஒரு போராட்டத்தை ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் அல்லது கட்சியினர் முன்னெடுக்கவில்லை. சிவில் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் அவர்கள் பங்கெடுப்பாளர்களாகவே காணப்படுகின்றனர். இதனையே தான் செம்மணியிலும் அவர்கள் பின்பற்றுகின்றனர். அவர்களது பாராளுமன்ற உரைகளும் ஊடக அறிக்கைகளும் கடிதங்களும் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்டவை தான். அவை தற்போதும் அவசியமானவை தான். ஆனால் அவற்றுக்கு நிகராக அவர்கள் செயல்பட வேண்டிய பக்கங்கள் அதிகம் உண்டு. மக்களின் எண்ணங்களில் இருக்கும் கூட்டுத் துயரங்களை அந்த இனத்தின் அரசியலாக மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பாண்மை அவர்களுக்கு உரியது. அதனை அவர்கள் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. வடக்கு கிழக்கு தழுவிய விதத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவது இக்கால பகுதியின் தேவையாக உள்ளது. அத்தகைய கவனயீர்ப்புப் போராட்டங்கள் உலகத்திழறகு முன்; கொண்டு செல்லப்பட வேண்டும்.

மூன்றாவது, வடக்கு கிழக்கில் இருக்கும் சிவில் அமைப்புகள் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு எல்லை உண்டு என்பதை புரிந்து கொண்டு அதே நேரம் ஜனநாயக முறையில்; அவர்களது எழுச்சிகள் கூட்டுத் தன்மை பொருந்தியதாகவும் வடக்கு கிழக்கு சார்ந்ததாகவும் புரட்சிகரம் மிக்கதாகவும் இருத்தல் வேண்டும். ஈழத்தமிழர்களின் புலமையாளர்கள் சிவில் அமைப்புகள் மாணவர்கள் ஒன்று திரண்டு ஈழத்தமிழ்; உறவுகள் பட்ட துயரை கொல்லப்பட்ட கொடுமைகளை நியாயாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டிய வழிமுறை தற்போது தேவையானதாக உள்ளது. அதனை நோக்கி இச்சமூகம் விழித்தௌ வேண்டிய பொறுப்பு சிவில் அமைப்புகளுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் உரியதாகும். கேளிகைகளையும் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் இக்கால பகுதியில் வடக்கு கிழக்கு முழுவதும் கண்டுகொள்ள முடிகிறது. ஓர் இனத்தின் வலியை சுமந்து அப்பாவிகளாக ஆயுதங்கள் அற்றவர்களாக ஆயுதப்போராட்டத்தோடு எந்த தொடர்புமற்றவர்களாக குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என்ற வேறுபாடு இன்றி செம்மணி புதைக்கப்பட்டுள்ளனர். அத்தகைய கொடுமைகளின்; துயரங்களை ஈழத்தமிழர்களுடைய மனசாட்சி தட்டிப் பார்க்க தவறுகிறது. அவர்கள் மீதான வலிகளை அவர்கள் சுமந்த துயரங்களை ஈழத்தமிழர்கள் மனங்களில் நிறுத்தி செயல்பட வேண்டிய காலப்பகுதி. தினம் தினம் தோட்டப்படும் போது கிடைக்கும் உறவுகளின் என்புக் கூடுகள் சொல்லும் செய்திகள் ஈழத்தமிழர் அரசியலை மாற்றக் கூடியவை. தமதினத்தின் கடந்தகால வரலாற்றில் நிகழ்ந்த துயரத்தையும் அழிவுகளையும் சிந்திக்காத இனத்தின் அரசியல் எழுச்சி பெற்றது கிடையாது. அது மூதாதையர்களின் துயரங்களை சுமக்காத சந்ததிகளின் வாழ்வு போன்று தமிழர்களுடைய வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்.

நான்காவது, தென்னிலங்கையில் இருந்து எழுந்துவரும் எதிர்ப்பு குரல்களை பண்பாட்டு ரீதியாகவும் நியாயாதிக்க வரையறைகளுக்கூடாகவும் எதிர்கொள்ளும் தரப்பாக ஈழத்தமிழர்களின் தரப்பு விளங்க வேண்டும். ஈழத்தமிழருக்கான புலமையாளர்கள் தென்னிலங்கை அரசியலுக்கு விலை போவதை விடுத்து ஈழத்தமிழ் இனத்திற்கான அரசியலை கட்டமைக்க வேண்டிய பொறுப்பாண்மை உடையவர்களாக விளங்க வேண்டும். சட்டவாதிகளும் மருத்துவர்களும் ஊடகவியலாளர்கள் செம்மணியில் அதிகமான உழைப்பை முன்வைத்து அத்தகைய துயரத்தை வெளிக்கொண்டு வருகின்றனர். அவர்களோடு இணைந்து பயணிக்க வேண்டிய பொறுப்பாண்மை ஈழத்தமிழ் புலமையாளர்களுக்கு உண்டு. ஈழத்தமிழரின் நீண்ட மௌனத்திற்கு பின்னால் புத்திஜீவிகளின் புலமையாளர்களின் அறிஞர்களின் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளும் காரணம் என்பதை மறக்க முடியாது. ஈழத்தமிழர் தமது அரசியலை முன்னிறுத்தி செயல்பட வேண்டிய தருணங்களில் போலித்தனத்தின் அடையாளங்களுக்கு அடிபணிவதைக் தொழிலாகக் கொள்ள முயலுகின்றனர். ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை பலப்படுத்திக் கொண்டே ஈழத்தமிழன் பிற இனங்களுடன் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். அதைவிடுத்து தமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கிவிட்டு பிற இனத்தின் முன் நிமிர்வதென்பது சாத்தியமற்ற செய்முறையாகவே இருக்கும். தமிழ் இனத்தின் இருப்பையும் வாழ்விடத்தையும் தக்கவைப்பதற்கு புத்திஜீவித்தனம் அவசியமானது. அதனை நோக்கி இச்சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பாண்மை அறிஞர்களுக்கு புலமையாளர்களுக்கும் உரியது. செம்மணி விடயம் உரையாடல்களோடு மட்டுமின்றி செயல்படுவதிலும் உள்நாட்டு பொறிமுறையைக்கான மனசாட்சியை தட்டி எழுப்புவது மட்டுமின்றி சர்வதேசத்தின் மனச்சாட்சியையும் நோக்கி நகர்வதற்கு புலமைசார் அணுகுமுறைகள் அவசியமானதாக உள்ளன.

ஐந்தாவது, புலம்பெயர்ந்த உறவுகள் செம்மணி துயரத்தை அல்லது இனப்படுகொலையின் வடிவமாக சர்வதேச அரங்குகளில் முன்வைக்க வேண்டிய பொறுப்புக்கு உரியவர்களாக உள்ளனர். அந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கும் வரைவுகளுக்கும் உட்பட்டு அதன் நியதிகளை எதிர்கொள்ள கூடிய விதத்தில் தெளிவான கட்டமைப்புகளோடு இயங்க வேண்டிய சூழல் அவசியமானது. அதற்குரிய வாய்ப்பும் சந்தர்ப்பமும் புலம்பெயர் தமிழர்களிடமே அதிகம் உள்ளது. ஈழத்தமிழருடைய அரசியலில் புலம்பெயர்ந்த உறவுகளின் பக்கம் என்பது அதீதமானது. அதனை கட்டமைத்து வெற்றி கொள்ள வைப்பது அவர்களது அணுகு முறையில் தங்கியுள்ளது. பகை தொடுப்பதும் கடந்த காலங்களை மட்டும் உரையாடிக் காலத்தை வீணடிப்பதும் கைவிட்டு விட்டு எதிர்கால ஈழத்தமிழரின் அரசியலுக்கான நகர்வுகளை புலம்பெயர்ந்த உறவுகள் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பான காலம் ஒன்றை செம்மணி தந்திருக்கிறது. செம்மணியில் மீட்டெடுக்கப்படும் என்பு கூடுகள் அதன் நியாயாதிக்கங்கள் ஈழத்தமிழர் குறித்த அரசியலை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்புக்களுக்கும் உரித்துடையதாகும்.

எனவே ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனித்தனர் அதன் பிற்பாடு அரசியலையும் மௌனிப்பதற்கு விளைகின்றனர். அரசியல் மௌனம் ஈழத்தமிழினத்தின் இருப்பின் அழிவுக்கான வடிவம் என்பதை கடந்த 16 ஆண்டு காலத்தை அளவீடு செய்பவர்கள் கண்டு கொண்டிருப்பர். எனவே செம்மணி துயரத்தை மௌனமாக கடந்து செல்லாது அதனை ஈழத்தமிழரின் இனப்படுகொலையின் துயரமாக கருதுவது போன்று ஈழத்தமிழரின் அரசியலில் மாற்றத்துக்கான அங்கமாக கருதவேண்டிய பொறுப்பு அனைத்து தரப்புக்கும் உண்டு. அதனை நோக்கி இக்காலப் பகுதியை கட்டமைக்க வேண்டியது அவசியமான. ஆயுத மௌனிப்பு என்பது ஒரு வழிமுறையின் முடிபே அன்றி அரசியலின் முடிபல்ல.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)