அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசியல் பொருளாதார அணுகுமுறைகள் உலக அரசியல் அதிக மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இந்தியா –சீனா மீது ரஷ்சியா தொடர்பில் விதிக்கப்பட்ட வரி அதிகரிப்பு இரு நாடுகளையும் பங்காளியாக மாற்றும் நடவடிக்கையை தூண்டியுள்ளது. இது ஆசிய யுகத்தை வடிவமைத்துள்ளதாகவே தெரிகின்றது. அதிலும் இந்தியா பொறுத்து அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் பொருளாதார அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடியை அமெரிக்காவுக்கும் உலக ஒழுங்குக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் அணுகுமுறை உலக ஒழுங்குக்கான தெளிவான பிரிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமும் ரஷ்சியாவுடனான அணுகுமுறையும் புதிய உலக ஒழுங்கை நோக்கிய திசையை கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறது. இக்கட்டுரையும் அதற்கான வாய்ப்புகளை தேடுவதாக அமையவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (Jaishankar) சீனாவுக்கும் பின்னர் ரஷ்சியாவுக்கும் மேற்கொண்ட பயணம் அதிக வெற்றிகரமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறே சீன வெளியுறவு அமைச்சரின் வாங் ஜி (Wang Yi) இந்திய வருகையும் எதிர்காலத்தில் ரஷ்சிய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகை தருவதற்கு திட்டமிட்டு இருப்பதும் மேற்குலக நாடுகளின் அரசியலில் அதிக நெருக்கடியை தோற்றுவித்திருக்கின்றது. பொருளாதார அடிப்படையிலும் அரசியல் ரீதியிலும் மேற்குலக நாடுகளின் நலங்களுக்கு உள்ளால் சீனா இந்தியாவின் தனித்துவத்தையும் ஆளுகையையும் கடந்த காலத்தில் இழந்ததோடு புதிய அணுகுமுறைகளை நோக்கி நகர முடியாத தடைகளை மேற்குலக நாடுகள் ஏற்படுத்தி வந்தன. இராணுவ அடக்குமுறைகளுக்கு ஊடாகவும் தொழில்நுட்பத் திறனூடாகவும் கீழைத்தேச அரசுகள் மீது ஆதிக்கம் செலுத்திய சூழல் முடிபுக்கு வருவது முக்கியத்துவம் உடையதாகும். காலனித்துவ காலத்திற்கும் பின்காலனித்துவ காலத்திற்கும் முடிவு கட்டும் விதத்தில் இத்தகைய அணுகுமுறை போக்கு எழுச்சி பெற தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான சூழலை வளர்த்து விடுவதன் மூலம் அல்லது பிரித்தாளும் தந்திரத்தில் அடிப்படையில் கீழைத்தேச நாடுகளை கையாண்ட மேற்குலக சிந்தனை அதிக பதட்டத்துக்குள் அகப்பட்டிருக்கின்றது. சீனாவும் இந்தியாவும் எல்லை பிரச்சினை பொருளாதார வர்த்தக பிரச்சனைக்கான பரிமாணங்களாக கருதுகின்ற நிலை எழுந்திருக்கின்றது. ரஷ்சியாவுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவை விட ரஷ்சியாவின் பெற்றோலியத்தையும் எரிவாயுவையும் அதிகம் கொள்ளளவு செய்கின்ற நாடுகளின் பட்டியலில் சீனாவும் ஐரோப்பிய நாடுகளுமே முன்னணி வகிக்கின்றன என்றார். ஆனால் அமெரிக்காவின் இந்தியா மீதான அதிக வரி நடவடிக்கை ஏன் என்று கேள்வியை முதன்மைப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அதிக அதிர்ச்சியானதாகவே தெரிகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கால இருப்பை மாற்றக் கூடியது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் மீதான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பணிபுரிந்த William H Avery எழுதிய China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power என்ற நூலின் தெளிவாகவே முதன்மைப்படுத்தி இருந்தார். இந்தியாவே எதிர்கால உலக ஒழுங்கின் வலுவான சக்தி என்பதை தனது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். அதன் பிரதிபலிப்பாகவே இந்திய மீதான அணுகுமுறைகளை அமெரிக்கா மாற்றிக் கொண்டது என்ற எண்ணம் முதன்மைப்படுத்தப்படுகிறது.
அதே நேரம் இந்திய-சீன உறவு என்பது மைக்மோகன் (Sir Henry McMahon) வரைந்த எல்லை கோடு சார்ந்தும் பல மோதல்கள் இரு நாட்டுக்கும் நிகழ்ந்ததோடு 1962ஆம் ஆண்டு நிகழ்ந்த போர் இரு நாட்டையும் நிரந்தர பகையாளிகளாக்கியது. இதன் விளைவுகளே கடந்த நூற்றாண்டில் இந்திய-சீன முரண்பாட்டின் அடிப்படைகளாக காணப்பட்டது. இதனை சீர் செய்யும் விதத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தின் 1988 டிசம்பர் 19-23 வரை சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏறக்குறை 34 வருடங்களுக்கு பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு பின்னால் இருந்த வலுவான காரணங்களில் அதுவும் ஒன்றென்ற விவாதம் ஆய்வு தளங்களில் பேணப்படுகிறது. ஜவகர்லால் நேருவுக்கு பின்னர் சீனாவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்ட ஒரே தலைவர் ஆக ராஜீவ்காந்தி காணப்பட்டார். அதன் பிற்பாடு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ராஜீவ்காந்தி சீனாவுடனான நெருக்கத்தின் அவசியத்தையும் இந்தியாவின் எதிர்காலம் தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது என்பதை அடையாளம் கண்டவராக காணப்பட்டார். அவரது படுகொலையோடு இந்திய-சீன உறவு காணாமல் போனது. மீளவும் பழைய மரபுக்குள் இரு நாடுகளும் பகைமைக்குள்ளால் அரசியல் பொருளாதார வர்த்தக போட்டித்தன்மைகளை முதன்மைப்படுத்திக் கொண்டனர்.
இந்திய சீன-நெருக்கம் என்பது புவிசார் பொருளாதாரத்தின் புதிய பரிமாணமாக மாறி இருக்கின்றது. 1980களில் அறிமுகமான புவிசார்-பொருளாதாரம் வலுவான ஒரு நிலைக்குள் பிறிக்ஸ் (BRICS) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெற தொடங்கியது. சீன-இந்தியா-ரஷ்சியா என்ற அடிப்படையிலும் அத்தகைய அணி நாடுகள் தென்ஆப்பிரிக்கா பிரேசில் போன்றவற்றை அரவணைத்துக் கொண்டும் மேற்காசிய நாடுகளை பிறிக்ஸ்-பிளஸ் என்ற அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டு ஒரு வலுவான கீழைத்தேச அணியை உருவாக்கியுள்ளன. இத்தகைய கீழ்த்திசை அரசுகளின் பரிமாணம் புவிசார் பொருளாதாரத்தின் இருப்பை வலுவானதாக மாற்றி வருகின்றது. இது மேற்குலக நாடுகளின் பொருளாதார இருப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பது தவிர்க்க முடியாத எதார்த்தமாகவே தெரிகிறது. இந்திய-சீன உறவு வலுவான சந்தை கட்டமைப்பை உருவாக்குவதோடு உலக அளவில் பொது நாணயத்தை அல்லது டொலரை பலவீனப்படுத்துகின்ற நிலை ஒன்றுக்கான அடிப்படையை தோற்றுவிக்க திட்டமிடுகிறது. இந்தோ- பசிபிக் உபாயத்திலும் ஜி-7 நாடுகளின் வரிசையிலும் ஜி-20 நாடுகளின் அணிக்குள்ளும் மேற்குடன் கைகோர்த்திருந்த இந்தியா மேற்குலக நாடுகளாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவே சீனாவுடனான வர்த்தக மற்றும் எல்லை பிரச்சினையைக் கடந்து இராணுவ ரீதியான பரிமாற்றங்களையும் மேற்கொள்வதற்கு இந்தியா தயாராகின்றது. எனவே இந்திய-சீன-ரஷ்சிய நெருக்கம் என்பது உலக ஒழுங்கை புதிய திசைக்குள் நகர்த்துவதில் வெற்றிகரமான நடவடிக்கையாகவே காணப்படுகிறது. இதேநேரம் இவ்அணியின் பலத்தை முறியடிப்பதற்கான மேற்குலகத்தின் உபாயங்கள் தொடர்ச்சியானதாக காணப்படுவதும் இந்தியாவை நோக்கிய அணுகுமுறைகளில் ஐரோப்பா அதிலும் குறிப்பாக மேற்கைரோப்பா தற்போதும் சுமூகமான சூழலை ஏற்படுத்த முயலுகிறது.
இத்தகைய சுமூகமான சூழல் இவ்வணிக்குள் பலவீனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது மேற்குலகத்தின் எண்ணமாக இருக்கின்றது. ஆனாலும் சீன இந்திய உறவை அதிகம் வலுப்படுத்தும் ரஷ்சியாவின் அணுகுமுறை பிராந்திய ரீதியில் ஆசிய யுகத்துக்கான வாய்ப்பை சாத்தியப்படுத்த வழிவகுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்ற கருப்பொருளுக்கு அமைவாக இந்திய-சீன-ரஷ்சிய நட்பு வலுவான சூழலை ஏற்படுத்தி வருகின்றது. இதன் இருப்பு பாதுகாக்கப்படுவதற்கேற்ற வகையில் மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் அணுகுமுறை நிலவுகிறது. அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவின் வரி முறைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் அடிப்பணியும் என்ற எதிர்பார்ப்பை இந்திய ஆட்சியாளர்கள் தகர்த்துள்ளனர். இந்திய வெளியுறவு மிக நீண்டகாலப் பகுதிக்கு பின்னர் ஒரு புதிய அணுகுமுறை ஏற்படுத்தி இருக்கின்றது. அதன் விளைவு கீழ்திசை நாடுகளை நோக்கி இந்திய அரசியல் பொருளாதார இராணுவ கட்டமைப்புகளை திசை முகப்படுத்தி இருக்கின்றது. இந்தியா அமெரிக்காவுடனான நட்புறவை பனிப்போருக்கு பின்னர் பலப்படுத்தி இருந்தது. அதன் விளைவு இந்தியா மீதான வரியை எல்லையற்ற விதத்தில் மேற்கொள்வதற்கு வாய்ப்பைக் கொடுத்திருந்தது. ஆனால் நரேந்திர மோடி அரசாங்கம் அத்தகைய வெளியுறவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கான தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. இதன் போக்கும் நேர்த்தியுமே ஆசிய யுகத்தின் அடிப்படையாக அமைய வாய்ப்புள்ளது. 1962 ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தத்துக்கு பின்னால் மேற்குலகம் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆய்வுகளின் காணப்படும் பதிவாகும். அவ்வாறே இந்திரா காந்தியிடைய படுகொலையிலும் ராஜீவ்காந்தியினுடைய படுகொலையிலும் ஆழமான செல்வாக்கினை உலக வல்லரசு ஒன்றின் கரங்கள் இருந்ததாக இருவரது படுகொலையையும் விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மாக் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்திய-சீன உறவு புதிதாக மெருகூட்டப்படுகின்ற போது உலக ஒழுங்கின் போக்கும் புதிய வடிவத்தை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பை கொடுக்கக் கூடியது. மேற்குலக நாடுகளின் வளங்களும் தொழில்நுட்பமும் உத்திகளும் தந்திரோபாயங்களும் கீழைத்தேச நாடுகள் மீதான அழுத்தத்தையும் பிரிவினையையும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டுவர கீழைத்தேச சக்திகளின் எழுச்சி அவசியமானதாக இருக்கிறது. அமெரிக்கா இந்தியா மீது ஏற்படுத்திய அழுத்தங்கள் அனைத்தும் இந்தியாவின் பலவீனமான பக்கங்களை அடையாளம் கண்டதன் விளைவு. அதில் ஒரு மாற்றத்தை நரேந்திரமோடி அரசாங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பது பொருத்தமானதாகும். ஆசிய யுகத்தை நோக்கி இவ்வணி செயல்படுவதே உலக ஒழுங்கின் மாற்றத்திற்கான ஒன்றாகும். அதனை கட்டமைப்பதே பிரிக்ஸ் அமைப்பின் பிரதான நோக்கமாக அமைதல் வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
