அரசியல் கட்டுரைகள்

இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவும் ரஷ்யாவின் இராணுவ எழுச்சிவாதமும்!

சர்வதேச அரசியலின் பல திருப்புமுனைகளுக்கான ஆதாரமாக இரண்டாம் உலகப்போர் அமைகின்றது. நடைமுறையிலும் பல அரசியல் நிகழ்வுகளின் குறிகாட்டியாக இரண்டாம் உலகப்போர் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களாலும், சர்வதேச அரசியல் தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் நாளை வெற்றி நாளின் 78ஆம் ஆண்டு விழாவை கடந்த மே-09 அன்று ரஷ்யா கொண்டாடியுள்ளது. குறித்த நிகழ்வினை ரஷ்ய ஜனாதிபதி புடின் சமகால ரஷ்யா-, உக்ரைன் போரை தொடர்புபடுத்தி ஒழுங்கமைத்துள்ளதுடன், ஐரோப்பாவை குற்றம்சாட்டும் வகையில் தனது உரையை வடிவமைத்துள்ளார். இக்கட்டுரை. ரஷ்யாவின் இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டத்தின் சர்வதேச அரசியல் உள்ளடக்கத்தை தேடுவதாக உள்ளது.

20 மில்லியனுக்கும் அதிகமான ரஷ்யர்களை கொன்று குவித்த மாபெரும் தேசபக்தி போர் என ரஷ்யா அழைக்கும் நாஜி ஜெர்மனியின் தோல்வியை வெற்றி நாளாக நினைவுகூருகிறது. ஆண்டுவிழாவில் பொதுவாக நாடு முழுவதும் வெற்றி அணிவகுப்புகள் நடத்தப்படும். எனினும் இந்த ஆண்டு முதல்முறையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில், மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நேரடியாக வெற்றி இராணுவ அணிவகுப்பு நடைபெற, அது நகரம் மற்றும் சுரங்கப்பாதையில் பெரிய வடிவ வெளிப்புற திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. ​ெமாஸ்கோவின் தெருக்களில் உருளும் ராட்சத இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நவீன அர்மாடா டாங்கிகள் ரஷ்ய இராணுவ வலிமையின் காட்சிப் பொருட்களாக உருமாறின. இரண்டாம் உலகப் போரின் காட்சிகளை சித்தரித்த இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாள் கொண்டாட்டமானது, உக்ரேனிய எதிர்ப்பை நசுக்குவதற்கான அதன் தற்போதைய போராட்டத்துடன் சோவியத் தியாகத்தை கடந்த போரில் சமன்படுத்தும் கிரெம்ளினின் முயற்சியையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவின் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆர்மேனியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உட்பட, புடினுடன் கூட்டாளிகள் உடன் இருந்தனர். உக்ரைன் போருக்கு மத்தியில் மிகப்பெரிய பொது நிகழ்வுகளை நடத்துவதில் புடின் மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த வாரங்களில் உக்ரைன் கிரெம்ளின் கோட்டையை நோக்கி இரண்டு ட்ரோன்களை அனுப்பியதாக மாஸ்கோவின் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டிற்குப் பிறகு, ரஷ்ய அதிகாரிகள் தங்கள் தலைவர் மீது ‘கொலை முயற்சி’ என்று முத்திரை குத்தினார்கள். இக்குற்றச்சாட்டுக்குப் பிறகு, புடின் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்வாகும். இந்நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிரெம்ளின் படைகள் உக்ரேனிய இலக்குகள் மீது ஏவுகணைகளை பொழிந்த சிறிது நேரத்திலேயே, மேற்கின் “அடங்காத இலட்சியங்களால் ரஷ்யாவுக்கு எதிராக உண்மையான போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசபக்தியை மையப்படுத்தி நிகழ்த்தப்படும் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் புடினின் உரை சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் நுணுக்கமாக அவதானிக்கப்படுகின்றது.

ஒன்று, இரண்டாம் உலகப்போரை தாண்டியதொரு நெருக்கடியில் ரஷ்யா காணப்படுவதாக புடின் சித்தரிக்க முற்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வியைக் கொண்டாடும் வருடாந்த நினைவுக் கூட்டத்தில் புடின், “இன்றைய நாகரிகம் மீண்டும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் உள்ளது. எங்கள் தாய்நாட்டின் தலைவிதிக்கான தீர்க்கமான போர்கள் எப்போதும் புனிதமானவை” எனத்தெரிவித்துள்ளார். வெளிப்படையாக ரஷ்யா-−உக்ரைன் போரை ஹிட்லரின் நாஜிகளுக்கு எதிரான போரிலும் கடுமையானது என்ற சாடலையே அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, ரஷ்யா, -உக்ரைன் போரில் ரஷ்யாவை அமெரிக்கா மற்றும் மேற்கு நாட்டு கூட்டணி தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகவே ரஷ்ய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா, -உக்ரைன் போரின் போது புத்துயிர் பெற்ற மேற்கத்திய கூட்டணியை ‘உலகளாவிய கூட்டணி’ என்று எக்காளமிட்டார். இப்பின்னணியிலேயே உலகளாவிய கூட்டணிக்கு எதிரான ரஷ்யப் போரை புடின் நாஜிகளுக்கு எதிரான போரிலும் மேலானதாக சித்தரிக்கின்றார். ஆனால் உக்ரைன் போரினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் உலகம் ஒன்றுபடவில்லை என்று ஒரு நெருக்கமான பார்வை வெளிப்படுத்துகின்றது. புடினை தனிமைப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியினால் பொருளாதாரத் தடைகள் முழுமைப்பட முடியவில்லை.

இரண்டு, ரஷ்யா-, உக்ரைன் போரை மேற்கின் விருப்பாக புடின் பிரசாரப்படுத்தியுள்ளார். “மேற்கின் அடக்கப்படாத லட்சியங்கள், ஆணவம் மற்றும் தண்டனையின்மை ஆகியவையே மோதலுக்கு காரணம்” என்று புடின் தனது உரையில் வலியுறுத்தினார். 2022ஆம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து, புடின் உக்ரைனில் நடக்கும் போரை மேற்கத்திய நாடுகளுடன் பினாமி மோதலாக மீண்டும் மீண்டும் வடிவமைத்துள்ளார். போர் பற்றிய கிரெம்ளினின் உத்தியோகபூர்வ விவரிப்பு மேற்கு நாடுகளுடனான இருத்தலியல் மோதலின் படத்தை வரைந்துள்ளது. ​ெமாஸ்கோவின் பார்வையில் ரஷ்யாவை அழிக்கவும், அதன் வரலாற்றை மீண்டும் எழுதவும் மற்றும் அதன் பாரம்பரிய மதிப்புகளை நசுக்கவும் ஒரு கருவியாக உக்ரைனைப் பயன்படுத்துகிறது. அந்த நிகழ்வுகளின் பாதிப்பு ரஷ்ய அரசு ஊடகங்களில் போர் பற்றிய செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் புடின் தனது வெற்றி நாள் உரையில், 1941இல் அடால்ப் ஹிட்லர் சோவியத் யூனியனை ஆக்கிரமித்தபோது ​ெமாஸ்கோ எதிர்கொண்ட சவாலுடன், ரஷ்யாவைச் சிதைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாக உக்ரைனில் நடந்த போரை புடின் பலமுறை ஒப்பிட்டுள்ளார். குறிப்பாக, “மேற்கத்திய நாடுகளின் குறிக்கோள், நமது நாட்டின் சரிவையும் அழிவையும் அடைவது, இரண்டாம் உலகப் போரின் முடிவுகளைக் கடந்து, இறுதியாக உலகளாவிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டத்தின் அமைப்பை உடைப்பது மற்றும் எந்தவொரு இறையாண்மை மையங்களினதும் கழுத்தை நெரிப்பதும் ஆகும்” என்று புடின் தெரிவித்துள்ளார்.

மூன்று, இராணுவத்துக்கான உற்சாக நிகழ்வாகவும் வெற்றி நாள் கொண்டாட்டத்தை புடின் வடிவமைத்துள்ளார். “ரஷ்யாவுக்கு! எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு வெற்றி!” என அணிவகுப்பில் கலந்து கொண்ட உக்ரைனில் சண்டையிடும் வீரர்களை வரவேற்று, தனது உரையை புடின் முடித்தார். முன்னதாக, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெறும்​ெ மாஸ்கோ அணிவகுப்பு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக கப்பல் ஏவுகணைகளை கட்டவிழ்த்து விட்டது. கிரெம்ளின் படைகள் உக்ரைன் முழுவதும் 25 ஏவுகணைகளை ஒரே இரவில் ஏவியது. ஒரு டெலிகிராம் இடுகையில், எட்டு கலிபர் கப்பல் ஏவுகணைகள் கருங்கடலில் உள்ள கேரியர்களில் இருந்து கிழக்கு நோக்கியும் 17 மூலோபாய விமானங்களிலிருந்தும் ஏவப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் ​ெமாஸ்கோ செஞ் சதுக்கத்தில் அதன் முதன்மை அணிவகுப்பின் போது ஒரு சக்தியைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் வழியாக உயர்மட்ட இராணுவ உபகரணங்கள் முழக்கமிட்டதும் முன்னாள் சோவியத் நாடுகளின் தலைவர்கள் புடினுக்கு அருகில் நிற்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது சோவியத் புத்துணர்ச்சியை ரஷ்ய இராணுவத்துக்கு வழங்குவதாக அமைகின்றது. மேலும், புடினின் வார்த்தைகளில், “பல நாடுகளில், சோவியத் வீரர்களுக்கான நினைவுச்சின்னங்கள் இரக்கமின்றி அழிக்கப்படுகின்றன. இதனால் நாஜிக்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் உண்மையான வழிபாட்டு முறை உருவாக்கப்படுகிறது” என சித்தரிப்பதனூடாக ரஷ்யா இராணுவத்தின் சமகால போர் நடவடிக்கை இரண்டாம் உலகப்போரின் நாஜிகளுக்கு எதிரானதை ஒத்ததாக விம்பப்படுத்துகின்றார்.

நான்கு, சமீபத்திய ஆண்டுகளில், புடின் ரஷ்யர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றின் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பதிப்பை அறிவதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் முழுமையான வெளிப்பாடாகவே வெற்றி கொண்டாட்டத்தின் எழுச்சியும் புடினின் உரையின் உள்ளடக்கமும் அமைகின்றது. இது 2014 இல் கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்தது உட்பட அதன் பல வெற்றிகளை ஆராய்கிறது. வெற்றிகரமான கதை மற்றும் அதன் மரபுகள், மழலையர் பள்ளி முதல் ரஷ்ய சமுதாயத்தின் அனைத்து குழுக்களிலும் அரசு அதிகாரத்துவ இயந்திரத்தால் எதிர்காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் கருப்பொருள் வகுப்புகளை அறிமுகப்படுத்தியது. இது இளம் ரஷ்யர்களுக்கு உக்ரைனில் ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்று கிரெம்ளின் அழைப்பதன் முக்கியத்துவத்தை விளங்கச் செய்கிறது. வெற்றி தினத்தில், நாட்டின் இளைஞர்களுக்கு இராணுவக் கருப்பொருள்களை வழங்குவது ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது. ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, மழலையர் மற்றும் பிற பள்ளிக் குழந்தைகள் இராணுவ வீரர்களுக்கு கடிதங்கள் எழுதி, கைவினைப்பொருட்கள் தயாரித்து உணர்வுத்திறனை உயர்த்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நமது மக்களின் வீரத்தில் பெருமிதம் மற்றும் இராணுவத்தின் மீது நிலையான ஆர்வம் ஆகியன ரஷ்ய மாணவர்களிடத்தில் வளர்க்கப்படுகின்றது.

எனவே, இரண்டாம் உலகப்போர் வெற்றி விழாவை ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்குக்கு எதிரான பிரசாரமாகவும், ரஷ்சியர்களின் தேசபக்தியை ஒழுங்கமைக்கும் ஓர் களமாகவுமே வடிவமைத்துள்ளார். போர் நீண்டு கொண்டு செல்கையில் இயல்பாக சில சோர்வுகள் ஏற்படுவதை யதார்த்தமானதாகவே போரியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையிலேயே 14 மாதங்களுக்கு மேலாக அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டணியுடன் மோதும் ரஷ்ய இராணுவத்தினருக்கான புத்தெழுச்சியை மற்றும் நம்பிக்கையை அளிக்க வேண்டிய தேவை ரஷ்யாவிடம் காணப்பட்டது. அதனை சோவியத்தின் தேசபக்தியை கொண்டாடும் வெற்றி நாள் கொண்டாட்டத்தினூடாக புடின் திறன்பட கையாண்டுள்ளார். இதனூடாக ரஷ்யா, -உக்ரைன் போரில் கே.ஜி.பி-இன் நுண்புலமையை புடின் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)