ஈரான் அமெரிக்க போரின் பக்கங்களை மதிப்பீடு செய்ய முடியாத நிலைக்கும் ஊடகங்களும் ஆய்வாளர்களும் விளங்குகின்றனர். அடிப்படையில் அமெரிக்கா போரில் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. போரின் அமெரிக்காவின் தோல்வி அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சியை உறுதிப்படுத்துவதோடு டொலரின் வீழ்ச்சி என்பது அமெரிக்கா வல்லரசுக்கான முதல் நிலையை இழக்க வைப்பதாக மாறிக் கொண்டிருக்கின்ற அச்சமும் காரணமாக தெரிகிறது. இதனாலே அமெரிக்கா போரில் வெற்றி கொள்வதற்கு அனைத்து மார்க்கங்களையும் கையாள முனைகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபை விவாதத்துக்கு வருகை தந்த ஈரானியத் தலைவர்களை அமெரிக்க இராஜதந்திரிகள் ஆணுகி உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் போருக்கான முனைப்புகள் தீவிரம் பெற்று வருகின்றது. அத்தகைய ஈரான் அமெரிக்கப் போரின் பிந்திய நிலையை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவது நியூயோர்க்கில் நிகழ்ந்த இரு நாட்டு இராஜதந்திர உரையாடல் பற்றிய தகவல்களை இரண்டு நாட்டு தரப்புக்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அப்பேச்சு வார்த்தையின் உண்மையான நம்பகமான செய்திகள் வெளிவராத நிலையை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா தரப்பு ஈரானுடன் பேச்சுக்களை நிகழ்த்திக் கொண்டிருக்க மறுபக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஈரான் விரைவில் சரணடையும் என தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஈரானின் அவகாசத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈரான் முன்வைத்த முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு பேசுவதற்கு முன்வந்துள்ளது. ஈரானிய வெளிவகார அமைச்சர் அபாஸ் அராக்ச்சி போர் நிறுத்தம் தொடர்பான ஈரானிய முன்மொழிவை மற்றும் ஹார்மூஸ் நீரணையில் கப்பல் போக்குவரத்தை மீளவும் சீரமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து அமெரிக்காவில் பதிலை ஈரான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 28.09.2026 அமெரிக்க அதிகாரிகள் மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. ஆனாலும் உரையாடலின் முழுமையான அறிக்கையிடல் வெளிவராத நிலையில் ஈரான் ஏழு நாள் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. ஈரான் மற்றும் லெபனான் மீதான அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதுடன் பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்கள் மீதான முடக்கத்தை நீக்குவது, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவில் முற்றுகையை முற்றாக நீக்குதல் ஆகியவை பிரதான அம்சங்களாக காணப்பட்டன. இதன் அடிப்படையில் ஹார்மூஸ் நீரிணை திறப்பதற்கான அனுமதியை வழங்க முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யூரினியத்தை கைப்பற்றுவது அல்லது அழிப்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்ன்; விருப்பம் ஆகியவை தொடர்பில் ஈரானின் நிலைப்பாட்டை நோக்கி கோரிக்கை முன் வைத்துள்ளது.
இரண்டாவது அமைதிப் பேச்சுவார்த்தையின் முறிவு சாத்தியப்படக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருப்பதாக ஊடகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்கள் இரண்டு தரையிறக்கும் குழுக்களையும் கொண்ட கப்பல்கள் மேற்காசியவை நோக்கி விரைகின்றன என்று அமெரிக்கா அதிகாரி ஒருவர் அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார். ஈரானைச் சுற்றி மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களும்
இரண்டு தரையிறங்கும் குழுக்களும் நிலைநிறுத்தப்படுவதற்கு ரூஸ்வெல்ட் தாக்குதல் குழுவும், 2,000 கடற்படை வீரர்களைக் கொண்ட மேக்கின் தீவுப் படையும் (Makin Island)சான் டியாகோவிலிருந்து(San Diego) புறப்பட்டுவிட்டதாகவும், முழுமையான படைக் குவிப்பு நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். .அதே நேரம் பேச்சுவார்த்தை காலப்பகுதியில் அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நிகழ்த்திய போதும் ஈரான் ஒரு போதும் பேச்சுவார்த்தை தவிர்க்கவில்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷஸ்கியான் குறிப்பிட்டுள்ளார். இதே நேரம் ஹார்மூஸ்ன் நீரிணையில் எதிரியின் நடமாட்டத்தை தடுப்பதில் ஈரானிய படையினர் வெற்றிகரமாக செயல்பட்டதாக ஈரானிய உயர் தலைவர் முஸ்தபா ஹாமேனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஹார்மூஸ் பகுதியை எதிரிகள் நெருங்க முடியாது தமது படையினர் வீரத்துடன் செயல்படுவதாகவும் அராபியக் கடல் பகுதியிலேயே எதிரி தடுத்து நிறுத்தப்படுவதாகவும் விரைவில் அராபிக் கடல் பகுதியில் இருந்தும் அவர்கள் முற்றிலுமாக விரட்டி அடிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி விரைவில் ஈரான் சரணடையும் எற்றும் அப்போது உலக சந்தையில் பெற்றோலியத்தின் விலை வீழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தனது ரூவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது ஹார்மூஸ் வழியாக போர்ச்சூழல் இடம்பெறும் போதும் எண்ணைக் கப்பல்கள் பயணிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதே நேரம் பிரிட்டனின் 2.5 மில்லியன் பரல்களை ஏற்றிய தமக்கு சொந்தமான எண்ணைக்கப்பல் ஒன்று அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்து கொண்டிருப்பதாக பிரிட்டன் கடற்படை அறிவித்துள்ளது.
மூன்றாவது இவ்வாறு இரு தரப்பும் பரஸ்பரம் உரையாடலை வெளிப்படுத்திக் கொண்டாலும் நடைமுறையை போர் நீடித்த செயல்பாட்டை கொண்டிருப்பது அமெரிக்காவினால் முழுமையாக ஈரானை தோற்கடிக்க முடியாத நிலை நீடிக்க வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த வரும் ஜனாதிபதி தேர்தல் வரை போர் எதிர்கொள்ளுகின்றதாகவே அமையும் என்பது மட்டும் தெளிவாகிறது. ஆனாலும் அமெரிக்காவும் ட்ரம்ப்ன’ காலப்பகுதியில் இப்போரை முன்னெடுத்து இருந்தாலும் அதன் விளைவுகளை அடுத்து வரும் காலப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடுவதாகவே தெரிகிறது. ஆனால் ட்ரம்ப்ன் அதிகாரத்தை இரண்டாவது தடவை உத்தரவாதப்படுத்துகின்ற போது ஈரான் மீதான போர் அமெரிக்காவின் முதல் நிலைக்கும் பொருளாதார இராணுவ வளர்ச்சிக்கும் அவசியமானதாகவே அமைந்திருந்தது. அதன் ஒரு பங்குதாரராக இஸ்ரேலின் இருப்பை மேற்காசியாவில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. இதனால் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பாலஸ்தீனத் தலைவர் அபாஸ்க்கு வீசா வழங்க மறுத்த அமெரிக்கா ஈரானிய ஜனாதிபதிக்கும் வெளிவிகார அமைச்சர் மற்றும் ஈரானிய குழுவினருக்கும் விசா வழங்கியமை கவனத்திற்குரிய விடயமாகவே தெரிகிறது.
நான்காவது அமெரிக்கப்படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறுகின்ற செய்தி முக்கியமானதாக உள்ளது. ஈராக்கிலிருந்து படைகள் வெளியேறுவது, அப்பகுதியில் அமெரிக்காவின் பலம் குறைந்து வருவதைக் காட்டுகிறது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐசுபுஊ) தளபதியின் மூத்த ஆலோசகரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா தெரிவித்துள்ளார். .கணிசமான இழப்புகளைச் சந்தித்த பின்னர் ஈராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேற நிர்பந்திக்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈராக் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது அமெரிக்காவின் பலம் சார்ந்ததன்றி படைகளை விலக்கிக் கொள்வதென எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படை என மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் படைகளை ஒன்றிணைப்பதில் கவனம் கொள்வதாகவே அதிகம் உரையாடப்படுகிறது.
எனவே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ஈரான் மீதான போரை மிக நீண்ட காலமாகவே திட்டமிட்டு இருந்தனர். அதற்கு வாய்ப்பான தலைமைத்துவமாக டொனால்ட் ட்ரம்ப் அடையாளம் கண்டது மட்டுமின்றி போரின் எதிர்பார்த்த இலக்கை சாத்தியப்படுத்த முடியாத நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டாலும் அமெரிக்கா போரின் மூலம் மேற்காசியாவுக்கு ஏற்படுத்திய விளைவுகள் அதிகமானது. மீண்டும் மேற்காசிய தேசியவாதத்தை முறியடிப்பதில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வெற்றி கண்டுள்ளது. மேற்காசியாவின் நிலைத்திருப்புக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கின்றது தவிர்க்க முடியாமல் சீன ரஸ்சிய வடகொரியாவின் பிரசன்னமே அமெரிக்காவை பொருளாதார அடிப்படையிலும் இராணுவ அடிப்படையில் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 70 சதவீதமாக இருந்த அமெரிக்க டொலரின் உலகளாவிய பாவனை 57 சதவீதமாக வீழ்ச்சியடைய வழிவகுத்தது. உலக சந்தையில் அமெரிக்க டொலரை பாவனைக்கு உட்படுத்த தொடங்கிய சவுதிஅரேபியா இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் தனது எண்ணைய் வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயத்தில் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இது உலக சந்தையில் டொலருக்கு ஏற்பட்ட பாரிய நெருக்கடியாகவே விளங்குகிறது. டொலரின் வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதார வீழ்சியாகவே அமைய வாய்ப்புள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
