குழப்பத்துக்குள்ளாகி இருக்கும் உலக ஒழுங்கு மீளக் கட்டமைக்கப்படுவதற்காக அமெரிக்கா ஈரான் போர் நீடிப்பதற்க்கான அடிப்படை காரணமாக தெரிகிறது. சமாதானமும் பேச்சுவார்த்தையும் போரும் சமதளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மேற்காசிய பிராந்தியம் தெளிவற்ற முடிவுகளை நோக்கி நகர்கின்றது. போரின் விஸ்தரிப்பு படிபடியாக நிகழத் தொடங்கி இருக்கின்றது. மீண்டும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் அமரவைப்பதில் அமெரிக்க வாழ் யூதர்கள் அதிக கவனம் கொண்டுள்ளனர். அதற்கான நகர்வுகளை ஈரான்-அமெரிக்க போர் கையாளப்படுகிறது. அதில் ஓரங்கமே அமெரிக்க-சவூதி ஆரேபியக் கூட்டாகும். இக்கட்டுரையும் சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக தாக்குதலை தொடக்கி இருக்கின்றனமை பற்றிய தேடுலாக அமையவுள்ளது.
அணுசக்தி உடன்படிக்கையில் சில நிபந்தனைகளை அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு முன்வைத்த போதும் நடைமுறையில் சவூதி ஆரேபியாவை மேற்காசிய பிராந்தியத்தின் ஈரானுக்கு இன்னொரு சவால் மிக்க அரசாக மாற்றுவதில் அமெரிக்கா கவனம் கொண்டுள்ளது. இது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டின் பிந்திய தந்திரோமாக உள்ளது. இதுவே சவூதி அரேபியாவுக்கான முக்கியத்துவம் அதிகரிப்பதற்கு காரணமாக தெரிகிறது. இஸ்ரேலின் நிலப்பரப்பு ஈரானின் நவீன தொழில்நுட்பத்தினால் வேகமாக அதன் இருப்பை காணாமல் செய்துவிடக் கூடிய இராணுவ வலிமையை மேற்காசியாவில் வளர்ந்துள்ளது. இதுவே சவூதி அரேபியாவை ஈரானுக்கு எதிராக தூண்டுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. வரலாற்று ஆதாரங்களின் பிரகாரம் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள் யூத இன வழித் தோன்றல்கள்; என்றும் யூதக்கலப்பு கொண்டவர்கள் என்றும் தகவல்கள் உண்டு. அதன் அடிப்படையில் மட்டுமன்றி சவூதி அரேபியாவின் அரசியல் புவியியலும், புவிசார் அரசியலும் மேற்காசியாவில் நிலைத்திருக்கக் கூடிய சக்தியாகவும் ஈரானுக்கு எதிரான அரசாகவும் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதன் முக்கியத்துவத்தை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது அமெரிக்காவும் ஈராக்கும், 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 48 பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 120 மேற்பட்ட விடயங்களில் (யூலை 14,2026) கையெழுத்திட்டன. இவை இராணுவப் பிரசன்னத்திலிருந்து வர்த்தகக் கூட்டாண்மைக்கான விடயங்கள் அடங்கும். மற்றும் செப்டம்பர் 30, 2026-க்குள் அமெரிக்கப் படைகளை முழுமையாகத் ஈராக்கிலிருந்து திரும்பப் பெறுவதையும் மையமாகக் கொண்டதாக உள்ளது. குறிப்பாக எரிசக்தி கூட்டாண்மையின் கீழ் பெற்றோலிய உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எக்ஸான்மொபில், செவ்ரான், ஷல், ஹாலிபர்டன் மற்றும் கே.பி.ஆர் உள்ளிட்ட அமெரிக்க (ExxonMobil, Chevron, Shell, Halliburton, and KBR) நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஈராக் கையெழுத்திட்டுள்ளது. குழாய்வழித் திட்டங்கள் கட்டமைக்கும் விதத்தில் ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, ஈராக்கை சிரியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையுடன் இணைக்கும் கச்சா எண்ணெய் குழாய்வழியைப் புணரமைத்து மேம்படுத்துவதற்காக செவ்ரான் நிறுவனம் ஈடுபட்டுள்ள திட்டங்களிலும் இரு நாடுகளும் செயல்படுவதென தீர்மானித்துள்ளன. மேலும் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் அடிப்படையில் சுகாதாரம், மின்சாரம் (GE Vernova)) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கைக்கோள் இணையத்திற்காக ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்துடன் நாடு தழுவிய சேவை ஒப்பந்தத்திலும் கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi) ஆகியோருக்கு இடையே யூலை 14, 2026 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, மீதமுள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் செப்டம்பர் 30, 2026-க்குள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கான பரஸ்பர ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. இராஜதந்திர ரீதியில் இருபது ஆண்டுகால பாதுகாப்பு சார்ந்த பணியிலிருந்து பரந்த பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிராந்திய முதலீட்டு கட்டமைப்புகளை நோக்கி இருதரப்பு உறவுகளை மாற்றுதல் என்பது முதன்மையானதாக அமைய உறுதிப்படுத்தப்பட்டது. அமெரிக்கா ஈராக் உடன்படிக்கையின் பின்னணி இஸ்லாமிய சமூகங்களிடம் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஷியா(60-70%) -சின்னி(30-40%) முஸ்லிம்கள் பிரிவினையின் அடிப்படையிலான தோற்றப்பாடாக காணப்படுகிறது. ஷியா பெரும்பான்மை அதிகாரம் நிலவுகிறது. ஆனால் ஷியா அரசியல் குழுக்களும் கூட்டணிகளும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டுள்ள போதும் நிர்வாகத் துறையை இரு பிரிவுகளும் வழிநடத்துகின்றன. தற்போதைய நிர்வாகம்; ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகச் செயல்படுகிறது, இதில் பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய தலைமைப் பதவிகள் பெரும்பாலும் ஷியா பிரமுகர்களால் வகிக்கப்படுகின்றன. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஈராக்கிய சின்னி குழுக்களுக்கு எதிராக போராடும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழும் முரண்பாட்டை அமெரிக்கா சரியாகவே பயன்படுத்திக் கொள்ள உடன்படிக்கையை நகர்த்தியது. பி.எம்.எப். (Popular Mobilisation Forces) என்பதன் மீதே அமெரிக்க-சவூதி கூட்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இது ஈராக்கிய இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போராடுவதற்காக 2014-ல் நிறுவப்பட்ட ஷியா பெரும்பான்மைக் குழுக்களின் வலையமைப்பாகும். ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான அல்-குட்ஸ் (Al-Quds) படையின் முன்னாள் தலைவரான கொல்லப்பட்ட (03.01.2020) ஈரானியத் தளபதி காசிம் சுலைமானியின் (Qassem Suleimani) மேற்பார்வையில் இயங்கியது குறிப்பிடத்தக்கதாகும். டிரம்பின் முதல் (2017-2021) பதவிக்காலத்தில் பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானோடு நேரடி போர் தோல்விகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் சவூதி அரேபியா ஈராக் போன்ற அரசுகளை தமது இலக்குக்கேற்ற வகையில் கட்டமைத்து போரை சாதகமாக்கவும் அதன் மூலம் அமெரிக்கா வல்லரசு என்பதை நிலைநிறுத்துவும் திட்டமிடுகிறது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கான தடைச் சுவராக சவூதி அரேபியாவையும் ஈராக்கையும் உடனடியாக பயன்படுத்த அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு தொடங்கியுள்ளது.
இரண்டாவது சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு முஸ்லிம் பிரிவுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் ஏறக்குறைய கூட்டுத் தாக்குதலுக்கான திட்டமிடலாக மாற்றப்படுவதையே காட்டுகிறது. ஈரான் மேற்காசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு சவூதிஅரேபியா, குவைத், கட்டார் போன்ற நாடுகள் அமெரிக்க இராணுவத்தோடு இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டமை முதல் கட்ட நடவடிக்கையாகவே காணப்பட்டது. தற்போது சவூதிஆரேபியாவையும் அதன் இராணுவத்தையும் பயன்படுத்திக் கொண்டு தாக்குதலை தொடங்கியிருப்பது இரண்டாவது மிகப் பிரதான நடவடிக்கையாக தெரிகின்றது. எனவே மேற்காசிய பிராந்தியம் யுத்த பூமியாக மாற்றுவது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு கவனம் கொள்கிறது. இது ஈரானுடைய இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவது என்பதற்கு அப்பா மேக்காசியாவின் வளங்களும் மேற்காசியாவின் அராபிய தேசியவாதமும் காணாமல் செய்வதற்கான அணுகுமுறையாக தெரிகின்றது.
மூன்றாவது மிக நீண்ட விடுதலை உணர்வை தாங்கிக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தும் குர்திஷ் விடுதலைப் போராட்ட அமைப்பை அமெரிக்காவும்-இஸ்ரேலும் பயன்படுத்திக் கொண்டு ஈரான் மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். அத்தகைய தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும் அதற்கான முனைப்புகளும் ஒத்துழைப்புக்களும் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கத்தை அதிகரிக்க செய்துள்ளது. கொள்கையற்ற விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு விலைபோவதும் இலக்கை அடைய முடியாதிருப்பதும் குர்திஷ்ன் விடுதலையின் காலம் காலமான நிகழ்வாகவே உள்ளது. இது போருக்கான முனைப்புகளை பிராந்தியத்தில் அதிகரிப்பதோடு அரேபிய தேசிய உணர்வுகளை சிதைக்க முயலும் தோற்றப்பாடாகவே உள்ளது. இது குர்திஷ்விடுதலை இலக்கை அடைவதற்கானவழி அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக செயல்பட முனைவதாகும். அத்தகைய விடுதலை எதனையும் குர்திஷ்க்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே சதாம் உஷனைக் காட்டிக் கொடுத்த குற்றத்தை நிகழ்திய குர்திஷ்கள் தற்போது ஈரானுடன் மோதலை தொடக்கியுள்ளனர். இது சீனா-ரஷ்சிய-வடகொரியாவைப் பகைப்பதாகவே தெரிகிறது. நீண்டகால நோக்கில் குர்துகளுக்கு ஆபத்தானதாகவே தெரிகிறது.
நான்காவது அமெரிக்கா ஈரான் போரின் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புவிசார் அரசியல் அடிப்படைகளும் தீவிரமான மோதலை பிராந்தியத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க தாக்குதலுக்கு பதில் அளிக்கும் நகர்வுகளை ஈரான் மேற்காசியாவுக்கு வெளியே முதன்மைப்படுத்துகின்ற போது ஆபத்தான விளைவுகளை தரக் கூடியதாக மாற்றமுறும். ஏற்கனவே உக்கரையின் இப்போரில் ஈடுபட்டுள்ளது. அது உலகளாவிய பரிமாணத்தை நோக்கி போர் விரிவடைய தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. ஈரானின் பதிலடி உக்ரையின் நிலப்பரப்பிலா அல்லது அமெரிக்காவை நோக்கி மேற்கொள்வதா என்ற விவாதத்துக்குள்ளே ஈரானிய கொள்கை வகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். அமெரிக்கா ஈரானுடனான போரில் பாரிய இழப்புகளை எதிர்கொண்ட போதும் அதன் இரண்டாவது மூன்றாவது போரியல் பரிமாணத்தை புதிய திசைக்கு கொண்டு செல்ல திட்டமிடுகிறது.
எனவே அமெரிக்கா தோல்வியின் விழிம்பில் நின்று கொண்டு வெற்றி பெற முயலுகிறது. இது இஸ்ரேலிய உபாயமாகவே தெரிகிறது. இதனை 1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் -அரேபிய நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த ஆறு நாள் போரை நினைவுக்கு கொண்டு வருகிறது. தோலிவியின் வழிம்பில் நின்று வெற்றியை அடைந்தவர்கள் யூதர்கள். ஈரான் அமெரிக்காவுடனான போரின் பாரிய அழிவுகளை ஈரான் எதிர்கொண்டாலும் அமெரிக்காவும் அதற்கு நிகரான போர் இழப்புகளை சந்தித்துள்ளது. பாரிய போர் விமானங்களை கடல் படைக் கப்பல்களை இராணுவ வீரர்களை மேற்காசியாவிலுள்ள இராணுவத் தளங்களை அமெரிக்கா இழந்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் அமெரிக்காவின் பொருளாதார இழப்புக்கள் பாரிய சவாலை அமெரிக்காவுக்குள்ளே ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இப்போரில் வெற்றி பெற தவறுமாக இருந்தால் அமெரிக்காவின் வல்லரசு காலாவதியாகும். அது இஸ்ரேலைப் பாதிக்கும். அதனால் இப்போரை வெற்றி கொள்வதில் இன்னும் முயன்று கொண்டே அமெரிக்காவின் இராணுவமும் அதன் கொள்கை வகுப்புகளும் காணப்படுகின்றனர்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
