தென்னிலங்கையில் ஆட்சித் துறையின் இயலாமை வாராவாரம் அதிகரித்துச் செல்கிறது. கடந்த வாரத்தில் நிகழ்ந்த நிதி மோசடியில் உரையாடல் முடிவுக்கு வர முன்னர் இன்னொரு மோசடியின் தகவல் வெளிவந்துள்ளது. ஜே.வி.பி. அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நிகழும் மோசடிகளும் ஊழலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியானதாக நிகழ்ந்து வருகிறது. இது இலங்கை தீவின் அரசியல் கலாச்சாரத்தின் அங்கமாக அடையாளம் காணப்படுகிறது. இலங்கையின் மறுபக்கமாக ஊழலும் மோசடியும் காணப்படுகிறது என்ற செய்தியை வலுப்படுத்துகின்றது. அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் இலங்கை ரூபாய்களை ஊடுருவிகள் கைப்பற்றியுள்ளதாக மோசடியென்று அம்பலமாகியுள்ளது. அது தொடர்பிலான யதார்த்தத்தை தேடுவதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலோடு பின்னிப்பிணைந்ததென்றாக ஊழலும் மோசடியும் திருட்டும் விளங்குகிறது. தொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சியும் நாணயப் பரிமாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கும் அத்தகைய மோசடிக்கான வாய்ப்பினை அதிகப்படுத்திவருவதாக தெரியவருகின்றது. அமெரிக்க தபால் செலவினத்துக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய்கள் அமெரிக்கா அரசாங்கத்துக்கு சென்றடையவில்லை என்ற தகவல் வெளிவந்ததன் பின்னரே மோசடி நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது நிதி நிறுவனங்களுக்குள் நிலவும் அடிப்படையான பிரச்சினையாக பார்க்கப்பட்டாலும் அதனுடைய விளைவுகள் அதிகமானவை. ஆபத்து மிக்கவை. இலங்கை போன்ற வறுமையான நாட்டிற்கு பாரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தக் கூடியது. பொருளாதார சுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்துகிறது. அதனை விரிவாக தேடுதல் அவசியமானது.
முதலாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடன் பரிமாற்ற செய்முறைக்குள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெ.டொலர் நிதியினை ஊடுருவிகள் கைப்பற்றிவிட்டதாகவும் அதற்கான விசாரணை ஒன்று நிகழ்ந்து வருகின்றது என்பதும் தகவலாக உள்ளது. தற்போது அமெரிக்கா தபால் திணைக்களத்தின் சேவைக்காக பரிமாற்ற வேண்டிய 200 மில்லியன் இலங்கை ரூபாய்களை ஊடுருவிகளிடம் அரசாங்கம் இழந்துள்ளது. இது ஆட்சியாளர்களின் பலவீனத்தையும் நிதி நிறுவனங்களின் பணியாளர்களின் இயல்பான மோசடியின் பங்களிப்பையும் காட்டுகிறது. இவ்வகை மோசடிகளுக்கான வாய்ப்புகள் நிதி நிறுவனங்களின் பணியாளர்களில் திறமையின்மையால் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ஆனாலும் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நியமித்த உயர் அதிகாரிகளும் அவர்களது பலவீனமும் திறமையின்மையும் இதற்கான அடிப்படை காரணம் என்ற விவாதமும் மேலெழுந்துள்ளது. குறிப்பாக நிதி மூலங்களை கையாளுகின்ற திறன் என்பது தனித்துவமானது. அதனை அரசியல் நியமனங்களுக்குள்ளால் ஒருபோதும் நிரப்பீடு செய்ய முடியாது. இலங்கை தீவைப் பொறுத்த வரையில் திறமைகளை விட அரசியல் நியமனங்களாகவே பணிக்குழுவின் நியமனங்கள் காணப்படுகின்றன. உயர்பதவிகளும் நியமனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே முக்கியத்துவமான மோசடிகளுக்கு துணை போவதற்கும் மோசடிகளை நிகழ்த்துவதற்க்கும் காரணமாக அமைந்து விடுகிறது. ஆசியாவில் ஜப்பான் மட்டுமே திறமையின் ((Merit) அடிப்படையில் பணிக்குழு நியமனங்கள் நிகழ்வதாக ஹம்சா அலவி (Hamza Alavi) எனும் பின்காலனிய சிந்தனையாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இன பிரச்சினையினால் எழுந்த போரினால் பணிக்குழுவின் மீது வகைதொகையற்ற அரசியல் தலையீட்டுக்கு வழிசமைத்துள்ளது. அதனுடைய விளைவுகளே இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கும் ஊழலுக்கும் மோசடிக்கும் பின்னால் இருக்கும் வலுவான காரணமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இரண்டாவது மோசடிகள் பற்றி உரையாடப்படுகின்ற சம சந்தர்ப்பத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்பந்தக்காரருக்கு இரண்டு முறை கொடுப்பனவு அரசாங்கத்தின் பணப்பரிமாற்ற தொழில்நுட்பத் தவறினால்; மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. நிதிகளையும் நிதி கூற்றுக்களையும் பிரயோகப்படுத்துகிறபோது திறைச்சேரி மத்தியவங்கி நிதி அமைச்சு என்பன மிகப் பிரதானமான வகிபாகத்தை கொண்டிருப்பது என்பது உலகின் பிரதான நடைமுறையாகும். அரசியல் தலையீடுகளைக் கடந்து நிதியுனுடைய கையாளுகையை திறனோடும் உத்திகளோடும் சரியான உபாயங்களோடும் பின்பற்ற தவறுகின்ற சூழல் ஏற்படுகின்ற போது திறைச்சேரி மோசடிகள் இலகுவான செய்முறைகளை கொண்டிருக்கும். அவ்வகை மோசடிகளின் நீட்சி இலங்கைப் பொருளாதார சிதைவின் அடிப்படைக்கு வழிவகுக்கும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பத்திர மோசடி. Perpetual Treasuries Limited என்ற நிறுவனம் அதிக இலாபம் பெற்றதாக கூறப்பட்டது. இதில் அரசியல் தொடர்புகள் மற்றும் உள்ளக தகவல் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகள் வெளிப்படுத்தின. ஊழியர்களின் சேமிப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதி (ETF) ஆகிய ஊழியர்களின் நிதியினை தவறான முதலீடுகளால் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்க்கப்பட்டது. இது பங்குசந்தை ஒப்பந்தங்களில் அரசு நிதி இழப்புக்கு வழிவகுத்திருந்தது. இறக்குமதி ஏற்றுமதி மற்றும் வரி ஏமாற்றுகள் என்ற அடிப்படையில் சுங்க வரி தவிர்ப்பு தவறான மதிப்பீடு முறைகேடு மூலம் அரசிற்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக வாகன இறக்குமதி மற்றும் எரிபொருள் ஒப்பந்தங்களில் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசாங்க கொள்முதல் முறைகேடுகள் என்ற அடிப்படையில் பாரிய அளவிலான அரசாங்க ஒப்பந்தங்களில் அதாவது உள்கட்டமைப்பு திட்டங்கள், பாதுகாப்பு கொள்முதல் இலஞ்சம் மற்றும் கமிசன் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. வெளிநாட்டு கடன்கள் மற்றும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை குறைபாடுடையதாகவும் அமைந்திருந்தது. 2005 ஆம் ஆண்டு 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியான திறைசேரி மோசடியும் ஊழலும் அரங்கேற்றப்பட்டிருந்தது. அவை எவையும் மீட்டெடுக்கப்படவோ அதற்கு உரித்தான மோசடிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை செயல்படுத்தியதாகவோ இதுவரையில் எந்த தகவலும் இல்லை. மாறாக அத்தகைய மோசடிகள் பற்றிய அரசியலை முதன்மைப்படுத்திக் கொண்டு ஆட்சி மாற்றங்களும் புதிய ஆட்சிகளும் தோன்றுகின்றன. வலதுசாரிகளிடமிருந்து இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றுகின்ற செய்முறை நிகழ்ந்த முடிந்திருக்கிறது. இலங்கை தீவின் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் நிகழும் மோசடிகளிலும் ஊழலிலும் இனரீதியான தீர்வு இல்லாமையிலும் ஒரே மாதிரியான இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. வறுமையின் உச்ச அளவை அனுபவிக்கும் இலங்கைத் தீவின் சாதாரண மக்கள் மேலும் வறுமைக்கு உட்படுகின்ற பொறிமுறைகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்துகின்றனர்.
மூன்றாவது மோசடிகளின் நீட்சி என்பது இலங்கை பொருளாதாரத்தை பாரிய நெருக்கடிக்குள் உள்ளாக்குகின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. தனிப்பட்ட நபர்களாக மோசடிகள் இனம் காணப்படுவதும் அதன் மீது ஜே.வி.பி. அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதும் வளமையான அரசியல் பொறிமுறையாக அமைகின்றது. ஆனால் ஜே.வி.பி. இன் ஆட்சியிலேயே மோசடியின் முயற்சி தொடர்கின்றது. இத்தகைய மோசடிகளே ஜே.வி.பி. அரசாங்கத்தின் அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கி மாற்று தலைமைகளுக்குரிய வாய்ப்பை நகர்த்த திட்டமிடுகிறது. அதற்கான வாய்ப்பை வழங்குகின்ற விதத்திலே ஜே.வி.பி.யினுடைய ஆட்சியில் மோசடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே அடுத்து வரும் அரசியல் கட்சி ஒன்றிற்கான அரசியல் முதலீடாக மாற இருக்கின்றது. இவ்வாறு மாற்றங்கள் நிகழ்கிறதே அன்றி மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சூழலையோ நாட்டின் பொருளாதார உறுதித் தன்மையோ இடதுசாரி ஆட்சியாளராலும் கொண்டுவர முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
நான்காவது இலங்கைத் தீவின் நிகழ்ந்த மோசடிகளுக்கும் ஊழலுக்கும் அடிப்படையாக விளங்குவது இன பாரபட்சமான ஆட்சிமுறையாகவே காணப்படுகிறது. தொடர்ச்சியான போர் இலங்கையின் நிர்வாக இயந்திரத்தையும் பணிக்குழுவினரையும் மோசடிக்கும் ஊழலுக்கும் பயிற்சி அளித்துள்ளது. எத்தகைய மோசடியும் மேற்கொண்டுவிட்டு போருக்கு ஒழித்துக் கொள்ளலாம் என்பதை உருவாக்கியுள்ளது. அத்தகைய பயிற்சியின் அங்கமாகவே புதிய அரசாங்கமும் உள்ளது. ஊழலை ஒழிப்பது புதிய அரசாங்கத்தின் உத்தியாக பிரச்சாரப்படுத்திக் கொண்டாலும் அதன் பங்காளராக போரின் போது ஜே.வி.பி.இனர் காணப்பட்டனர். இலங்கையின் பணிக்குழு இலங்கையின் உயர் வர்க்கம் உயர் அதிகாரிகள் குழுமம் என்று எல்லா தரப்புக்களுமே ஊழலையும் மோசடியையும் போர்க்காலத்தை முன்னிறுத்திக் கொண்டு நிகழ்த்தியிருந்தனர். அதிலிருந்து தப்பிக்கொள்வது ஒன்றும் கடினமானதாக அமைந்திருக்கவில்லை. இலங்கை தீவில் எந்த ஆட்சியாளர்களும் ஊழலுக்கு எதிரான தண்டனை பெறவில்லை. விசாரணைகளும் குற்றச்சாட்டுகளும் வாக்குமூலங்களின் பதிவுகளும் அரசியல் அரங்கை பிரதிபலிக்கின்ற விதத்தில் நிகழ்கிறது. அன்றி நடைமுறையில் அதற்கு எதிரான தீர்வுகளை ஜே.வி.பி. அரசாங்கத்தினாலும் வழங்கக் கூடியதாக அமையவில்லை.
எனவே இலங்கைத்தீவின் மோசடி மற்றும் ஊழலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்கான தீர்வை ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டோ தாராண்மை ஜனநாயக ஆட்சிக்கு உட்பட்டோ சாத்தியப்படுத்த முடியுமா என்பது பிரதானமான கேள்வியாக உள்ளது. உலகில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கும் பொருளாதார வசதி படைத்ததாக கருதப்படும் அமெரிக்காவில் தோமஸ் பிக்குற்டி(Thomas Piketty) என்ற அறிஞர் குறிப்பிடுவது போல் 99 சதவீதமானவர்களின் உழைப்பை ஒரு சதவீதமானவர்கள் அனுபவித்து செல்கின்ற துயரம் ஒன்றை கண்டுகொள்ள முடிகின்றது என்பது போலே இலங்கை தீவிலும் மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களை உத்தரவாதப்படுத்துவதற்கான செய்முறைகள் மட்டுமே அரசாங்கங்களாலும் ஆட்சியாளர்களாலும் வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் அசமந்தமான சூழலைப் போன்று இலங்கையிலும் ஒரு அசமந்த போக்கு ஒன்று வலுவான பொருளாதாரம் குறிகாட்டியாக மாறியுள்ளது. அசம்மந்தமே இலங்கைப் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது. உயர் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் ஆட்சி துறையும் அதன் அலகுகளும் மோசடியையும் ஊழலையும் அபாயமான விடயமாக அடையாளம்காண தயாராக இல்லாத நிலை நிலவுவதற்கான அடிப்படையாகத் தெரிகிறது. அதில் இலங்கையின் இடதுசாரிகளும் விதிவிலக்கானவர்கள் கிடையாது என்பதை திறைசேரி மோசடிகள் உணர்த்துகின்றன.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.
(நன்றி :தினக்குரல்)
