இலங்கை தீவின் அரசியல் இனபடுகொலையை மையப்படுத்தி செயல்படுகின்ற போக்கை கொண்டிருக்கிறது. கடந்த காலம் முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனம் படுகொலையின் வடிவங்கள் சிங்கள மக்களுக்கு எதிரான படுகொலையின் வடிவங்களும் மீளவும் உரையாடலை உலக அரங்கில் ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. 06.03.2025அன்று அல்ஜசீராவின் தொலைக்காட்சியின் முன் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியும் அமைச்சரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரம்சிங்கம் உடனான நேர்காணல் அத்தகைய சர்ச்சையின் உண்மைகளை படம்பிடித்து காட்ட வழிவகுத்துள்ளது. அல்ஜஸீரா என்பது 110 கோடி முஸ்லிம் மக்களால் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மக்களாலும் ஈர்க்கப்படுகின்ற ஒரு தொலைக்காட்சி சேவையாக மாறியுள்ளது. அதற்கான அடிப்படையை அல்ஜசீராவின் பணியாளர் மெஹ்தி ஹசன் (Mehdi Hasan) ஏற்படுத்தியிருந்தார். ஊடகவியலாளர்கள் எல்லோருக்கும் வரைவிலக்கணம் தந்த ஒரு ஊடகவியலாளராக தன்னை தகவமைத்திருந்த பெருமை ஹசனக்குரியது அதிலும் ஈழத் தமிழர்கள் ஹசனின் அணுகுமுறையை அதிகம் நேசிப்பவர்களாக உள்ளன. இக் கட்டுரையும் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்திய போரின் சாட்சியங்களையும் இனப்படுகொலையின் சாட்சியங்களையும் புரிந்து கொள்ள முயலுகிறது.
அல்ஜசீராவுடன் நேர்காணல் இரண்டு பிரதான விடயங்களை இனப்படுகொலை சார்ந்து சர்வதேச விதிகளை மீறி இருப்பதாக ரணில்விக்ரம்சிங்கஹ ஒப்புதல் அளிக்கின்றனர். ஐக்கிய நாடு சபையின் பன்னாட்டு குற்றங்கள் தொடர்பில் அது முன்வைத்த நிபந்தனைகளும் மற்றும் தீர்ப்பாயங்களின் அறிக்கைகளும் மனிதாபிமான வரைவுகளை மீறுவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது. அத்தகைய இனப்படுகொலைக்கான விடையங்களே ரணில் விக்ரமசிங்ஹ அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தியது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். அதனை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டாலும் அதன் அடிப்படை நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்துள்ளார். இனப்படுகொலை தொடர்பில் சர்வதேசத்துக்கும் உள்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் நன்கு தெரிந்த விடயம். ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை மறைப்பதற்கு முயற்சித்தனர். அதனைக் கூட பன்னாட்டு குற்றம் இனப்படுகொலையின் ஓர் அம்சம் என்று வரையறுக்க முயல்கிறது. அப்படியாயின் அதனை கடந்து ஆட்சிக்கு அனுசரணை வழங்கிய எல்லா காலப்பகுதிகளிலும் தென்னிலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பயணித்த ஒருவர் முதல் தடவையாக இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். அது மட்டுமின்றி பட்டலந்தவதை முகாம் தொடர்பில் எழுப்பப்பட்டு கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்க தவறியதோடு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு கரிசனை இருந்தது என்பதை அவரது ஒப்புதல் தெளிவுபடுத்தி உள்ளது. அவற்றை விரிவாக விளங்கிக் கொள்ளுவது அவசியமானது.
முதலாவது வைத்தியசாலைகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதலை நிகழ்த்தியது என்பதை ஏற்றுக்கொண்டிருப்பதுடன் அத்தகைய தாக்குதல் பாரிய அளவிலான இன அழிப்பை செய்தது என்பது ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் தமது வாழ்விடத்தையும் இருப்பையும் மட்டுமின்றி உயிர் வாழ்தவையும் மீறப்பட்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. 1953 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மிக நீண்டதாகவும் அதனை ஒப்புதல் அளிக்கும் விதத்திலும் ரணில்விக்ரம்சிங்ஹாவின் வெளிபாடு அமைந்திருக்கின்றது. கடந்த காலம் முழுவதும் விமான தாக்குதல்களும் குண்டு தாக்குதல்களும் இராணுவ நடவடிக்கைகளும் இனப்படுகொலையே மேற்கொண்டது என்பதை அத்தகைய மேற்கோள் உறுதிப்படுத்துகின்றது. ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் இன்னொரு இனத்தை அழித்தொழிப்பது என்பது திட்டமிடப்பட்ட செயல்பாடாக இல்லாத போதும் நடவடிக்கைகள் முழுவதும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் போர்க்காலத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய நாடு சபையின் அமைப்புகள் என்பன அனைத்தும் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தி இருந்தன. அரசாங்கத்தில் ஒப்புதலோடு அத்தகைய விடயம் மேற்கொள்ளப்பட்டது. எனவே இங்கு முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழ் மக்களை ஒன்றிணைத்து திட்டமிடலாகவே காணப்படுகிறது. அவ்வகையான ஒரு நடைமுறை வரைவுகளிலும் உடன்படிக்கைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடமுடியாது.
இரண்டாவது அவ்வாறு முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச விதிகளுக்கும் நியதிகளுக்கும் உட்பட்ட மனிதாபிமானச் சட்டத்தை மீறும் வகையில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியது என்பதை ரணில்விக்ரமசிங்ஹ அல்ஜசீரா முன் ஒப்புதல் அளித்துள்ளார். இது முழுமையாக மனிதாபிமான சட்டங்களை மீறுகின்ற செய்முறையாக காணப்படுகிறது. இது ஒரு இனப்படுகொலை வடிவம் என்பதை சர்வதேச நியதிகள் ஏற்றுக்கொள்கின்றது. இவ்வகை நடவடிக்கையில் குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணித்தாய்மார்கள் முதியவர்கள் அனைவரதும் அடிப்படைத் தேவைகளை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழிப்பதுள்ளனர் என்பது இனப்படுகொலையே. இது முள்ளிவாய்காலில் மட்டுமல்ல அடிப்படைத் தேவைகளை வடக்கு கிழக்கு நோக்கி வழங்குவதில் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் பொருளாதாரத் தடைகளை விதித்து இனப்படுகொழலை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய தடைகளின் அணுகுமுறை என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் வடிவமே. ஒவ்வொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்காது தடை செய்தது போன்று மக்களை முள்ளிவாய்க்காலுக்குள் அழைத்து இந்த அடிப்படை தேவைகளை வழங்க மறுத்தமை ஆடசியிலுள்ள அரசாங்கங்களின் இன படுகொலைக்கான வடிவமாகவே அமைந்திருக்கின்றது என பன்னாட்டு குற்றங்களும் தீர்ப்பாயங்களும் உறுதிப்படுத்துகின்றன.
மூன்றாவது மேற்படி ஒப்புதல் வாக்கு மூலத்தை ஆட்சியாளர் ஒருவர் வெளிப்படுத்தி இருப்பது என்பது சர்வதேச பொறிமுறைகளுக்கும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்றின் வடிவமாகவே காணப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொதலை நிகழ்ந்து கொண்டிருக்கின்றபோது நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் அதனை கண்காணித்துக் கொண்டு பார்த்துக் கொண்டும் இருந்தன. அதனால் ரணில்விக்ரம்சிங்ஹாவின் ஒப்புதல் வாக்குமூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை உடனடியாக ஏற்படுத்தி விடாது. மாறாக அதனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது ஜனநாயக ரீதியிலான போராட்டத்தையும் வெளிப்படுத்தல்களையும் மேற்கொள்ளுதல் வேண்டும். ஆவ்வகை செய்முறை ஒன்று தமிழ் மக்களின் மனிதாபமான மனித உரிமை சார்ந்த மீறல்களை ஜனநாயக போராட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. அல்ஜசீராவின் ஹசன் வெளிப்படுத்திய விசாரணைகள் முழுமையாக உலகத்தின் கண்களில் ஈழத்தமிழர்களின் அரசியல் உயிர்த்துடிப்போடு இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது. இதனால் ஈழத்தமிழர்களின் ஜனநாயக வழி போராட்டங்கள் அதற்கான அணுகுமுறைகளும் அரசியல் என்ற வார்த்தையை கடந்து நியாயபூர்வமாக விளைவுகளை ஏற்படுத்திய கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசுகள் அல்லது நாடுகள் நலன்களோடு இயங்குகின்ற அரசியலுபக்குள்ளேயே அரசற்ற இனம் தனது இருப்பை உலகத்தின் முன் நிறுத்த வேண்டிய தேவை தவிர்க்க முடியாது உள்ளது.
நான்காவது பட்டலந்த வதை முகாமை அல்லது அது சார்ந்து முன்வைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராகும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈழத்தமிழர் மீது 1953ல் இருந்து இன்று வரை நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய தேவை தவிர்க்க முடியாது எழுந்துள்ளது. எவ்வாறு மனம்பெரிக்கு நீதி கோரி புதிய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் பெற்றக் கொடுத்தார்களே அவ்வாறே பட்டலந்தை வதை முகாமையும் முன்னெடுத்துள்ளனர். பட்டலந்தைவதை முகாமில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமாராக 160 க்கும் 180 க்கும் இடைப்பட்டது என சில தகவல்கள் ஊடகங்களில் உண்டு. அதனோடு ஒப்பிடுகின்ற விதத்தில் முள்ளிவாய்க்காலில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கின்ற செய்தி புதிய அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 1979 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ சட்டத்துக்குள் வாழும் இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து அழிவுகரமான செயல்பாடுகளும் விசாரணை செய்யப்பட்டு உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். பட்டலந்தவதை முகாமை மட்டும் அதன் விசாரணை அறிக்கை மட்டும் முன் வைத்து விட்டு புதிய அரசாங்கம் அல்லது இடதுசாரி அரசாங்கம் பயணிக்க முடியாது. ஒரு நாட்டில் சமத்துவம் என்ற ஒரு வார்த்தை பிரயோகப்படுத்தப்படுகிற போது விசாரணைகளும் விசாரணைகளின் மூடி மறைப்புகளும் அழிவுகளும் தமிழ் இனத்தின் மீதும் முஸ்லீம் மக்கள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ளது. எல்லா இனத்தின் மீதும் அத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் பட்டலந்தை வதை முகாம் போன்று ஈழ்தமிழர் மீதான அனைத்து அழிவுகளும் விசாரணை கமிஷங்களின் கிடப்பில் போடப்பட்ட மறைக்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் மீள விவாதத்துக்கு கொண்டு வந்து நியாயத்தன்மைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு அன்றி இந்த அரசாங்கம் கடந்தகால ஆட்சியாளரைப் போன்று செயல்படுமாக இருந்தால் அது குறிப்பிடும் இனவாதம் சார்ந்த அரசாங்கம் என்ற முத்திரை தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இதனை அவதானித்துக் கொண்டிருக்கும் உலக சமூகங்களுக்கும் உடையதாகும்.
எனவே ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையின் ஒப்புதல் வாக்குமூலம் ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளும் நிலை தவிர்க்க முடியாது ஏற்பட்டுவிட்டது. அதனை நியாயபூர்வமானதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் அதனுடைய அடிப்படைகளை தேட வைப்பதும் ஈழத்தமிழ் அரசியல் சமூக பரப்பில் உள்ள அனைவருக்கும் உரியது. ஒன்றிணைந்து ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நியாயங்களை கோருவது என்பது அவசியமானது. அதனை நோக்கி ஈழத்தமிழர்களுடைய அரசியல் சமூகம் பயணிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இது ஈழத்தமிழருக்கு மீளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனை கட்டமைப்பதும் தொழிற்பட வைப்பதும் அதனை உலகளாவிய ரீதியில் முதன்மைப்படுத்துவதும் ஈழத்தமிழரின் அரசியல் சமூகத்திற்குரியது. இது தனித்து மேற்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இதில் ஒரு கூட்டுத்தன்மையும் ஒருமைப்பாடும் அவசியமானது. ஈழத்தமிழர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்ற அரசியல் கட்சிகளும் அரசியல் சமூகத்தில் முன்னோடிகளும் அது தொடர்பிலான கருத்துக்களை கொண்டிருப்பவர்களும் கரிசனை கொள்ள வேண்டிய காலப்பகுதியாக அமைந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் சமத்துவக் கொள்கை விரைவில் தமிழ் மக்களாலும் உலகத்தாலும் புரிந்து கொள்ளப்படும். அம்மையார் மேரி கொல்வின் பிரான்சிஸ் ஏ.போய்லி கலம் மக்கரே போன்று மெஹ்தி ஹசனுக்கும் ஈழத்தமிழர் இதயங்களில் தனியிடமுண்டு.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)
