அரசியல் கட்டுரைகள்

தேசிய மக்கள் சக்தியின் அரசியலாகும் பட்டலந்த வதைமுகாம்?

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து பிற்பாடு இலங்கை அரசியலில் குழப்பநிலை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கை தீவின் அரசியலில் மாற்றங்கள் எதவுமின்றி அத்தகைய சூழமைவுக்கான எத்தனைங்கள் அரசியலாக பரிமாணம் பெற்று வருகின்றது. மேட்டுக்குடி அரசியல் களத்தை மீளமைக்க வேண்டிய நிலைக்குள் தேசிய மக்கள் சக்தி அவ்வகை விம்பங்களை தோற்றுவிக்கிறதா என்ற சந்தேகம் எழத்தொடங்கி இருக்கிறது. இலங்கையின் இனப் பிரச்சினையாக இருக்கட்டும் நாளாந்த பொருளாதார அடிப்படை தேவைகளாக இருக்கட்டும் அனைத்துக்கும் ஒரு பரிமாணத்தை கொடுக்கப் போவதாக நம்பிக்கை ஊட்டிக்கொண்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகின்ற உத்தியை மரபார்ந்த சக்திகளைப் போன்று அரசியல் செய்யும் ஒன்றாகவே தேசிய மக்கள் சக்தியின் போக்கும் காணப்படுகிறது. இக்கட்டுரையும் பட்டலந்த வதைமுகாமும் தேசிய மக்கள் சக்தியின் அரசியலும் என்ற கருப்பொருளில் கட்டமைக்கப்பட இருக்கின்றது.

பட்டலந்த வதைமுகாம் தொடர்பிலான விசாரணையும் விவாதங்களும் மீளத் தொடக்கப்பட்டுள்ளது. இலங்கை தீவின் அரசியலில் கொலைக்கு பதில் கொலை என்ற ஜனநாயக வரைபொன்றை எழுதியிருந்தது. இலங்கையின் ஜனநாயகம் ஒரு போதும் அதன் நியமங்களுக்குள் இயங்கவில்லை. ஆட்சி மாற்றம் ஒரு ஜனநாயக செய்முறையே அன்றி அதுதான் ஜனநாயகம் என்று இல்லை. தேசிய மக்கள் சக்தி உட்பட இலங்கையில் ஆட்சியில் வழங்குகின்ற அனைத்து தரப்புகளும் படுகொலை அரசியலை ஜனநாயகம் என்று போதித்து கொண்டவர்கவே காணப்படுகின்றனர். ஆனால் அத்தகைய படுகொலைகளையும் வதை முகாங்களையும் அதன் மீதான விசாரணைகளையும் மீள முதன்மைப்படுத்துகின்ற பெயரில் தேர்தல் அரசியலை நிகழ்த்திவந்தனர். 1994 பட்டலந்தை பற்றிய உரையாடல் மேல் எழுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்காவின் அரசியல் தேவைக்கானதாக அமைந்திருந்தது. அது எத்தகைய நீதியையும் நியாயாதிக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோன்று பட்டடந்தை வதைமுகாமின் இரண்டாவது விசாரணை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அரசியலாகவே நகர்ந்து செல்கிறது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கும் வந்தபின்னரும் நடைபெற்ற தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு அடிப்படையிலான ஒரு அரசியலை மேல்நிலைச் செய்து அதன் பெயரால் தேர்தல்களை வென்று ஆட்சியை உறுதிப்படுத்த முனைகிறது. அத்தகைய நடவடிக்கை இலங்கையின் செயல் பூர்வமான இயங்கு நிலையில் உட்படக்கூடிய ஓர் அரசியல் மரபை தோற்றுவிக்க முடியாது. அது மட்டும் அல்ல அத்தகைய அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் திறன் இலங்கை தீவில் உள்ள எந்த ஆட்சியாளர்களுக்கும் கிடையாது. தற்போதுவரை அனைத்து ஆட்சியாளர்களது கரங்களும் ஏதோ ஒர் அடிப்படையில் படுகொலைகளையும் கொலைகளையும் நிகழ்த்துவதற்கான பின்புலங்களை அல்லது பின்னூட்டல்களை கொண்டதாகவே உள்ளது. அதன் அடிப்படைக்குள்ளேயே தேசிய மக்கள் சத்தியம் அகப்பட்டுள்ளது. இதனை விளங்கிக் கொள்ள மேலும் சில அம்சங்களை முன்வைப்பது அவசியமானது.

முதலாவது தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலை முதன்மைப்படுத்துகிற போது ஊழலை அல்லது ஊழல் ஒழிப்பை ஒரு அரசியலாக முன்னெடுத்திருந்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே காரணம் என விவாதித்தது. அத்தகைய ஊழல் அரசியல் மட்டத்திலும் நிர்வாக மட்டத்திலும் நிகழ்ந்ததாக அதிகம் பிரஸ்தாபித்தது. ஆனால் தனது முடிந்து போன ஆட்சிக்காலப் பகுதியில் ஊழல் சார்ந்த எத்தகைய நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகள் மீது முழுமையாக மேற்கொள்ளவில்லை. நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் ஒன்று, இரண்டு சம்பவங்களை முன்னிறுத்தி செயல்பட்டிருக்கிறது. அன்றி அரசியல் தலைமைகளை நோக்கி எந்த விதமான நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ள தயாராகவில்லை. ஜனாதிபதி தேர்தலையும் அதன் பின்வந்த பாராளுமன்ற தேர்தலையும் நோக்கியதாகவே ஊழல் அரசியல் அமைந்திருந்தது. ஊழலை மேலெழச் செய்வதன் ஊடாக தேசிய மக்கள் சக்தி மீது அனுதாபத்தையும் ஆதரவையும் மக்கள் மத்தியில் திரட்டுவதற்கான நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்புக்கு உரித்தாக்கியது. எனவே ஊழல் ஒழிப்பு என்பதை அது ஒரு அரசியல் சுலோகமாக மட்டுமே தேசிய மக்கள் சக்தி கொண்டிருக்கின்றது என்ற கேள்வி பலமானதாக உள்ளது.

இரண்டாவது புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடல் ஒன்றை ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகம் பிரச்சாரப்படுத்தியது. பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்கு முடிவடைந்த காலப்பகுதியில் புதிய அரசியல் யாப்பில் உருவாக்கம் தமது ஆட்சி காலப்பகுதியில் நிகழும் என்றும் அதற்கான கால சூழல் அதிகமானது என்றும் புதிய உரையாடலை தொடங்கியது. அரசியல் யாப்பு என்பது ஒரு தேசத்தின் அரசியல் கலாச்சாரம். அத்தகைய அரசியல் கலாச்சாரத்தை நவீன முடியாட்சி பாரம்பரியத்தைக் கொண்ட ஒர் அரசியல் யாப்பில் இருந்து கட்டி எழுப்ப முடியாது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மன்னர்களையும் மன்னர் ஆட்சி முறைகளையும் அதற்கு அடிமைகளையும் மட்டுமே தோற்றுவிக்க முடியும். அத்தகைய தோற்றப்பாட்டில் இருந்து ஒரு போதும் நாகரிகமான அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியாது. அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு என்ற பிரச்சாரம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ஆதரவுக்கான மக்களின் திசைதிருப்பலுக்கான பொருத்தலாகவே அமைந்திருக்கின்றது.

மூன்றாவது இலங்கைதீவின் பொருளாதாரம் நெருக்கடிக்கு தீர்வு எட்டுவது என்ற குறிக்கோள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் காணப்பட்டது. அத்தகைய பொருளாதார முயற்சிக்கான நடைமுறை என்பது சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் பெறுகை உபயமாக மாறியது அன்றி நடைமுறையில் இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையோ உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளையோ சாத்தியப்படுத்தவில்லை. இலங்கை தீவு முழுவதும் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து உண்டு கழிக்கும் பொருளாதாரமாகவே காணப்படுகிறது. உப்புக்கும் புளிக்கும் தேங்காய்க்கும் அல்லாடுகின்ற ஒரு சமூக இருப்பை இலங்கைத்தீவு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பொருளாதாரப் பொறிமுறை எந்த அடிப்படையில் மாற்றம் செய்வதற்கான வழிமுறை ஒன்றும் இதுவரையில் கட்டி எழுப்பப்படவில்லை. அதனால் இந்த அரசாங்கம் அல்லது தேசிய மக்கள் சக்தி பொருளாதாரத்தை நிமிர்வடைய செய்கின்றது என்ற சுலோகத்தை அரசியலாக மட்டுமே முன்னிறுத்தியது. அத்தகைய அரசியலுக்கு ஊடாக வாக்குகளை திரட்டியதோடு ஆட்சி அதிகாரத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு உறுதிப்படுத்திக் கொண்டது.

நான்காவது இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்வைக்கப்படுவதற்கு அதிக பிரச்சாரங்களை தேர்தல் காலத்தில் முன்னிறுத்தியது. புவிசார் பூகோள அரசியல் களங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் சுமூகமான இலங்கை தீவின் இருப்பை உத்தரவாதப்படுத்த போவதாகவும் பிரஸ்தாபித்துக் கொண்டது. அதனால் அத்தகைய பிரஸ்தாபத்தின் விளைவுகளை தமிழ் மக்கள் எதிர்பார்த்தே தேசிய மக்கள் சக்தியின் பக்கம் தமது வாக்குகளை செலுத்தியிருந்தனர். நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரமும் உரையாடல்களும் காணப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த அவர்களது ஆட்சிக் காலத்தில் எத்தகைய மாற்றத்தையும் தேசிய இன பிரச்சனை பொறுத்து அவர்களால் முன் வைக்க முடியவில்லை. இராணுவ வாதத்தையும் ஆக்கிரமிப்பு வாதத்தையும் அவர்களால் ஒருபோதும் நிறுத்த முடியவில்லை.

ஐந்தாவது உயிர்த்தஞாயிறுத் தாக்குதலுக்கு கொடுத்து அதிகமான கவனமும் ஈடுபாடும் பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் அதிகமாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்தது. நியாயம் வழங்கப்படும் என்று குற்றவாழிகள் நீதி முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித்தோடு பல உரையாடல்களை பாராளுமன்ற தேர்தல் காலத்தில் முன்வைத்தது. தேர்தல் முடிந்து பிற்பாடு பேராயர் விசாரணைக்கு காலக்கெடு விதிக்கும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

ஆறாவது இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகவே பட்டலந்ததை வதைமுகாம் விசாரணை அரங்கேற்றப்படுகிறது. உள்ளூராட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து பட்டலந்தை வதை முகாமின் அரசியல் மேலெழச் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையோடு அதன் விசாரணை பாராளுமன்ற விவாதத்துக்கான திகதிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் காலத்தை தேசிய மக்கள் சக்தி இலங்கை தீவில் முடிந்து போன தீர்வற்ற கிடப்பில் போடப்பட்ட விடயங்களை மேற்கொண்டு வருவதும் அதனூடாக வாக்கு சேகரிப்பதும் அதிகாரத்தை தக்க வைப்பதும் அதனுடைய இலக்காக காணப்படுகிறது. இவை எதுவும் எத்தகைய மாற்றத்தையும் விளைவையும் நியாயத்தையும் தரப்போவதில்லை. மாறாக விசாரணை அறிக்கைக்கு இன்னொரு விசாரணை குழுவும் அறிக்கையும் தேசிய மக்கள் சக்மதியால் ஏற்படுத்தப்படும்.. அது ஒரு நியாயமான செய்முறையாக அமையுமென நம்பிக்கை கொள்ள முடியாது. முடிந்துபோன ஆட்சிக்காலம் முழுவதும் தேசிய மக்கள் சக்தி எடுத்துக் கொண்ட அனைத்து விடயங்களையும் அவ்வாறே கையாண்டிருக்கின்றது.

எனவே இலங்கைத்தீலவின் அரசியலில் காட்சிகளும் அதற்குரிய விசாரணைகளும் அரசியலாக மாறிவிட்டது. அதற்கு அரசியல் களம் கடந்த சுதந்திர கால பகுதியிலிருந்து கண்டுகொள்ள முடிகின்றது. விசாரணைக்கு பதில் விசாரணை ஆணைக்குழுக்களுக்கு பதில் ஆணை குழுக்கள் நியாயமற்ற செய்முறைக்கு பதில் நியாயமற்ற செய்முறை என்ற அடிப்படையிலே இலங்கை தீவின் அரசியல் கலாச்சாரம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியும் முடியாட்சி மரபுகளையும் மன்னர்களையும் அடிமைகளையும் அதற்கான அதிகார வர்க்கத்தையும் கட்டமைது வருகிற பணியையே மேற்கொள்கிறது. தற்போதைய அரசியல் யாப்பில் அதனையே மேற்கொள்ள முடியும். கனவான்களையும் உயர் குடியினரையும் தோற்கடிக்கின்ற பெயரில் புதிய கனவான்களையும் புதிய உயர் குடியினரையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்கும் அரசியலை உருவாக்கி வருகின்றனர். இதற்கு பெயர் இடதுசாரியா? வலதுசாரியா? ஆல்லது இரண்டும் கெட்ட வடிவமா? கலப்பு வடிவமா? எதுவுமே கிடையாது. இலங்கைத் தீவில் அத்தகைய எந்தம வடிவமும் இல்லை என இரு அரசறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவர் குமாரி ஜெயவர்த்தனா மற்றயவர் ஜெயதேவ உயாங்கொட.

-போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)