உலகத் தொழிலாளர்களின் தினமாகிய மே முதலாம் நாள் அரசியல் கட்சிகளின் அரங்கமாக இலங்கையின் மே தினம் அமைந்துள்ளது. தொழிலாளர்களுக்கான தினத்தை அரசியல் கட்சிகள் தமது தினமாக மாற்றியதோடு தமது நலனுக்கு ஏற்ற வகையில் மக்களை தொழிலாளர்களாக அடையாளப்படுத்துவதற்கு முயன்று உள்ளனர். உலக வரலாற்றில் தொழிலாளர்களால் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும் மே தினம், சர்வதேச தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் நாளாகும். இது பெரும்பாலும் சிகாகோவில் நடந்த 1886 ஹேமார்க்கெட் சதுக்க சம்பவத்தை நினைவுகூர்கிறது. 2026 சூழல்: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு பேரணிகள் தொழிலாளர் உரிமைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. தொழிலாளர் உரிமைகள், அதிக ஊதியம் ஆகியவற்றுக்காக வாதிடும் உலகளாவிய பேரணிகள் மூலமாகவும், குடியேறிகளின் உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பான போராட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இடதுசாரி கட்சிகள் மே தினத்தை தமது நிகழ்வாக வடிவமைக்க முயன்றது போல் வலதுசாரி கட்சிகளும் அவ்வாறு தொழிலாளர் தினத்தை தமது தினமாக மாற்றியுள்ளனர். இலங்கை தீவில் நிகழ்ந்த தொழிலாளர் தினத்தில் முக்கியத்துவங்களை விளங்கிக்கொள்வது அவசியமானது.
முதலாவது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி. அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் மே தினக் கொண்டாட்டத்தை அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னத்தோடு நிகழ்த்தியது. அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தை கட்டியெழுப்புவதை கோசமாகக் கொண்டு மே தினம் ஆளும் தரப்பினால் வடிவமைக்கப்பட்டது. மே தின அரங்கில் ஆற்றப்பட்ட உரைகளும் அது தொடர்பில் வெளிவந்திருக்கும் விவாதங்களும் தொழிலாளர்களின் எண்ணங்களை விட அரசாங்கத்தின் எண்ணங்களை முதன்மைப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. அரசாங்கம் இழந்து போன மக்கள் ஆதரவை மீளவும் திரட்டுவதற்கான உத்திகளை முன்வைத்திருந்தது. நிகழ்வில் கூடிய மக்களும் கூடிய அதிகாரிகளும் உயர் வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மையினைக் காணமுடிந்தது. ஆட்சியாளர்களும் பொருளாதார மீளமைப்பையும் கட்டுமானத்தையும் மீளவும் ஒரு தடவை நினைவுபடுத்தியதை கண்டு கொள்ள முடிந்தது. தொழிலாளர் தினம் என்ற போர்வையில் பலவீனப்பட்டுள்ள மக்கள் ஆதரவை திரட்டுவதற்கான முன்வைப்பாகவே ஆளும்தரப்பின் உரை வெளிப்படுத்தியுள்ளது. அதனையே தேர்தல் காலத்திலும் ஆளுந்தரப்பு வடக்கு கிழக்கில் முன் வைத்திருந்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்றி இரண்டாவது வருடத்தை எட்டுகின்ற சூழலிலும் எத்தகைய மாற்றமும் இன்றி அதே வார்த்தைகளை மே தினத்தின் உரையாடி இருக்கின்றது. ஆளும் தரப்பு முன்வைத்த விடயங்கள் அனைத்துமே தொழிலாளர் சார்ந்ததோ தொழிலாளரின் இன்றைய பரிமாணம் சார்ந்ததோ இல்லை என்பது உரையின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ளும் போது கண்டுகொள்ள முடியும்.#
இரண்டாவது தமிழ்த் தேசியக் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் வடக்கில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்து முடிந்தது. ஊர்வலங்களாகவும் மக்கள் உரையரங்குகளாகவும் தமிழ் தேசிய கட்சிகள் மே தினத்தை கொண்டாடியிருந்தனர். தமிழ் தேசிய கட்சிகளின் பரப்பில் தொழிலாளர்கள் அல்லது உழைப்பாளர் இன்றிய ஊர்வலமும் உரையரங்குகளும் அமைந்திருந்தன. கட்சித் தொண்டர்களையும் மக்களையும் ஒன்று சேர்ப்பதற்கான தமது ஆதரவை மீளவும் தெரியப்படுத்துவதற்கான நிகழ்வாகவே மே தினம் அமைந்திருந்தது. தமிழ் தேசிய கட்சிகளின் அடிப்படையான பிரச்சினைகளை அதிகம் பிரதிபலித்ததாகவும் அத்தகைய உரைகளில் ஆளும் தரப்பை போன்று உடைகளும் அணிகலன்களும் கொடிகளும் மே தினத்தை அடையாளப்படுத்தியிருந்தன. கட்சித் தலைவர்கள் உரையாடல்களும் அதன் பங்கெடுப்பாளர்களும் உண்மையான தொழிலாளர்களையோ மே தினத்தையோ அலங்கரிக்கவில்லை. மாறாக தமது தமிழ் தேசியக் கொள்கைகளையும் அதன் மீதான விவாதங்களையும் அவ்வப்போது ஏற்படுத்தியதோடு ஒரு ஆரோக்கியமற்ற மே தின பிரகடனங்களாக காணப்பட்டன. இது தொழிலாளர்களினுடைய தினம் என்ற எண்ணத்தைக் கூட தமிழ் தேசியப் தரப்புகளிடம் தென்படவில்லை. ஆளும் தரப்பு மக்கள் ஆட்சியையும் தமிழ் -சிங்கள ஒற்றுமையை வற்புறுத்தியது போல் தமிழ் தேசிய கட்சிகளும் மே தினத்தை கட்சியின் எழுச்சி தினமாக கொண்டாடியுள்ளன.
மூன்றாவது இலங்கையின் எதிர்க்கட்சிகள் வரிசையில் தென்னிலங்கையின் மே தின கொண்டாட்டம் மக்கள் ஆதரவை திரட்டுவதும் கோசங்களை எழுப்புவதும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான உத்திகளை வகுப்பதுமாகவே காணப்பட்டது. மக்களை திரளாக்கி அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற எண்ணத்தோடு எதிர்க்கட்சிகளின் மே தின கொண்டாட்டம் நடந்து முடிந்தது. எதிர்க்கட்சிகள் தொழிலாளர்களை மறந்து அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை பற்றிய எந்த காட்சிப்படுத்தலையோ உரையாடல்களையும் முன்னெடுக்காது செயல்பட்ட ஒரு துயரத்தை கண்டு கொள்ள முடிந்தது. எஞ்சியுள்ள இடதுசாரிக் கட்சிகளும் கடந்தகாலத்தில் முன்வைத்த அதே வார்த்தைகளை மீளவும் கூட்டம் போட்டு உரையாடியுள்ளனர்.
நான்காவது அனைத்திற்க்கும் அடிப்படையாக விளங்குவது இன்றைய தொழிலாளர் பற்றிய கருத்தியல் ரீதியான எண்ணப்பாங்காகும். மே தினம் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தினமாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அத்தகைய தொழிலாளர் நிலையானது மாற்றங்களை புதிய வடிவங்களை கொண்டுள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தொழிலாளர் அல்லது உழைப்பாளர் என்ற அடையாளத்தை இயந்திரங்களும் இயந்திரங்களின் உழைப்பும் அதீதமான பங்களிப்பை உருவாக்கி விட்டது. அதனால் தொழிலாளர் தினம் என்பது உலக வரலாற்றிலே வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்ற நாடுகளிலும் வேறுபட்ட அர்த்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய தொழிலாளர்கள் பெருமளவுக்கு மூளை உழைப்பையும் உடல் உழைப்புக்கு பதிலான இயந்திர உழைப்பையும் அடையாளப்படுத்தி உள்ளனர். இதனாலே அரசியல் கட்சிகள் தமக்குரித்துடையதாக மே தினங்களை கைப்பற்றி கொண்டாட்டங்களை நிகழ்த்துகின்றதும் ஆதரவை அடையாளப்படுத்துவதிலும் முனைப்பு செலுத்தும் நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆரம்பத்தில் இடதுசாரி கட்சிகள் தொழிலாளர் தினத்தை தத்தெடுத்திருந்தனர். தற்போது உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர் தினத்தை கட்சிகளின் தினமாக தத்தெடுத்துள்ளனர். தொழிலாளர் தினம் என்ற அடையாளத்தை மாற்றியுள்ளனர்.
எனவே இலங்கையில் மட்டுமல்ல அனேக நாடுகளில் தொழிலாளர் தினம் என்பது அரசியல் கட்சிகளின் தினமாகவே கண்டுகொள்ள முடிகிறது. அடக்குமுறைக்கும் வறுமைக்கும் உள்ளான உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் தரப்பினரை கைவிட்டு மேல்நிலை வர்க்கத்தின் அரசியல் நலன்களை அடையாளப்படுத்தும் அரசியல் கட்சிகளே மே தினத்திற்கு உரித்துடையவர்களாக விளங்குகின்றனர். இலங்கையில் ஆளுந்தரப்பும் எதிர் தரப்பும் தமிழ் தேசியத்தரப்புக்களும் ஒரே வகையான அணுகுமுறைகளுக்குள்ளால் மே தினங்களை கொண்டாடி முடித்துள்ளனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
