அரசியல் கட்டுரைகள்

ஈரானிய வெளியுறவு அமைச்சரது ரஷ்சியா விஜயமும் ஈரான் மீதான அமெரிக்கப் போரும்?

ஈரான் மீதான அமெரிக்க போர் ஓய்வு நிலையில் நீடிக்கிறது. அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஏறக்குறைய தோல்வியை நிலையெடுத்துள்ளது. அதற்கான பதில் ஈரானின் போரின் பரிமாணமாகவே தெரிகிறது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் போரை முடித்து வைக்கவும் முடியாது போரில் வெற்றி பெறவும் முடியாத இக்கட்டு நிலையே ஏற்படுத்தியது. ஆனாலும் மீளவும் ஓர் எத்தனத்தை அமெரிக்க-இஸ்ரேலிய தரப்பு ஈரான் மீது நிகழ்த்தப் போகிறதாக தெரிகிறது. ஈரான் மீளவும் 14 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளது. ஈரானின் போர் முகம் தீவிரமான அணுகுமுறைகளை கொடுத்த அதே நேரம் ஈரானின் இராஜதந்திர போரும் பலமான சூழலை ஈரானுக்கு ஏற்படுத்தயுள்ளது. இக்கட்டுரையும் ஈரானின் வெற்றிகரமான இராஜதந்திர நகர்வுகளை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய மதத் தலைவர் மற்றும் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதை அடுத்து எழுச்சி பெற்ற ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராக்ச்சி (Abbas Araghchi  ) மற்றும் ஈரானிய பாராளுமன்ற சமாநாயகர் முகமது ஹபார் ஹலியார் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரேஜா தலாய்-நிக் (Reza Talaei-Nik) போன்ற தலைமைகளின் அணுகுமுறைகளை புதிய மதத்த தலைவர் மொஸ்தபா ஹமேனி (Mojtaba Khamenei) வழிப்படுத்துகிற போது ஆரோக்கியமான அரசியல் இராஜதந்திரம் நகரத் தொடங்கியது. போரின் அடைய முடியாதவற்றை சமாதான உரையாடலில் அடைவது இராஜதந்திரத்தின் முதல் இலக்கணமாகும். ஆனால் ஈரானைப் பொறுத்தவரை போரிலும் சமாதானத்திலும் சம வலுவோடு பங்களித்திருக்கின்றது என்று தெரிகின்றது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்சியாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயம் உலக அரசியலின் அதிக முக்கியத்துவத்தை முடிந்த வாரத்தில் எதிர்நோக்கியுள்ளது. மேற்குலகத்தின் சர்வதேச ஈரானின் பரிமாணத்தை நாகரீகமான சர்வதேச உறவின் (Civilization IR) மூலம் முறியடித்திருப்பதோடு பூகோளரீதியான சர்வதேச உறவுப் (Global IR) பரிமாணம் ஒன்றின் முனைப்பை ஈரானின் அணுகுமுறை அடையாளப்படுத்துகிறது. ஐரோப்பிய சர்வதேச உறவுக்கான (European Centric IR) பரிமாணத்திற்குள் ஈரானின் வெளிவிவகாரம் தனித்துவமான பங்கை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது ரஷ்சிய ஜனாதிபதி புட்டினை ஈரானிய வெளிவார அமைச்சர் சந்தித்தபோது இருவரும் வெளிப்படுத்திய உடல் மொழி இரு நாட்டுக்குமான இராஜதந்திர செய்முறையில் தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்படுகிறது. உலக வல்லரசில் இரண்டாவது நிலையில் இராணுவ ரீதியாக அளவிடப்படும் ரஷ்சியாவுடனான உறவு ஈரானுக்கு அதிகம் பாதுகாப்பானதாகும். அது மட்டுமன்றி அணு ஆயுதத்தை அதிகம் கொண்டிருக்கும் ரஷ்சியாவுடனான ஈரானின் உறவானது புவிசார் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை உக்ரையின் போரிலும் ஈரான் மீதான அமெரிக்கா போரிலும் பரஸ்பரம் கண்டு கொள்ள முடிந்தது. வெளிப்படையாக அவதானித்தால் ஈரானிய இருப்பை அமெரிக்காவின் இருப்புக்கு சமநிலைப்படுத்தும் கூட்டுக்களோடு ஈரான் இராஜதந்திர பரிபாசையை நிகழ்த்தி வருகிறது. இதில் சீனாவுக்கும் ஒரு பங்கு உண்டு. சீனா வடகொரியா ரஷ்சியா போன்ற நாடுகள் பலமான ஈரானிய ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிற போது அமெரிக்க இராணுவ சமநிலை இராஜதந்திர ரீதியில் சமப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை அடைந்துள்ளது. அது மட்டுமன்றி எதிர்காலத்தில்ரஷ்சியாபோரில் வகிக்கப்போகும் இராஜதந்திர வகிபாகத்தையும் ஈரானிய வெளியுறுவு அமைச்சர் மொஸ்கோவில் தெரிவித்திருந்தார். இராஜதந்திரம் தீர்வுக்கான ஒரு சாத்தியக்கூறும், மோதலுக்கான மற்றொரு சாத்தியக்கூறும் எங்களிடம் உள்ளது என்று கூறினார். இந்த இரண்டு விடயங்களிலும் ரஷ்சியாஒரு முக்கியப் பங்கை வகிக்கப் போகிறது என்று அராக்ச்சி மேலும் தெரிவித்தார்.

இரண்டாவது ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்சியாவுடனான உறவை பலப்படுத்தியதோடு அமெரிக்க இஸ்ரேலிய கூட்டின் இலக்கான அணு ஆயுதம் பற்றிய உரையாடலை போர் அரங்கில் இருந்தும் இராஜதந்திர அரங்கில் இருந்தும் முற்றாகவே விலக்கியுள்ளார். அத்தகைய சூழல் என்பது ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை சாத்தியப்படுத்த வழிவகுத்து இருக்கின்றது என்பது தெரிகிறது. ஈரானும் ஏனைய நாடுகள் போன்று அணு ஆயுத வல்லரசுகளுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இருப்பதுடன் இது அதன் அணு ஆயுத திறனை வலுப்படுத்துகின்ற அணுகுமுறையாகவே தென்படுகிறது. வடகொரியா பாகிஸ்தான் இஸ்ரேல் போன்ற நாடுகள் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கின்றபோது அணு ஆயுத வல்லரசுகளுடனான ஒத்துழைப்பு பிரதானமானதாகவே காணப்பட்டன. எனவே அத்தகைய சூழலுக்குள் ஈரான் நகரத் தொடங்கி இருக்கின்றது. அதற்கான இராஜதந்திர செய்முறைகளை கட்டமைத்து வருகிறது.

மூன்றாவது ஈரானை சூழவும் ஹமூர்ஸ் நீரிணையை மையப்படுத்தியும் அமெரிக்க இராணுவ முற்றுகை கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனை உடைத்தெறிவதற்கான நகர்வுகளை ஈரானிய அரசு சீனா போன்ற நாடுகளில் கப்பல்களை தமது பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதித்தது மூலம் வெற்றிகரமான உடைப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. அமெரிக்க கடல் படையின் பலத்துக்கு முன்னே ஈரானிய கடல் படையின் பலவீனம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தனது நட்பு நாடுகளை முன்னிறுத்தி இலகுவாகவே அமெரிக்காவின் கடற்படையின் வலுவை சமப்படுத்தி உள்ளது. இது ஈரானின் இராஜதந்திரத்தின் முக்கியமான பரிமாணமாகவே தெரிகின்றது. ஈரானின் நாகரீகங்களின் சர்வதேச உறவுக்கான பரிமாணமாக நோக்கப்பட வேண்டும். இதனை ரஷ்சிய ஜனாதிபதி வெளிப்படுத்தும் போது ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக எவ்வளவு துணிச்சலுடனும் வீரத்துடனும் போராடுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம் என்று அராக்சியிடம் கூறினார். மேலும் அவர்கள் ஈரானியர்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்துவிடுவார்கள் என்றும் அமைதி நிலவும் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது மட்டுமல்லாது ரஷ்சிய தரப்பில் கூடிய விரைவில் அமைதியை அடைவதற்காக ஈரானிய நலன்களுக்கும் பிராந்திய மக்கள் அனைவரின் நலன்களுக்கும் உகந்த அனைத்தையும் ரஷ்சியா மேற்கொள்ளும் என்று புட்டின் தெரிவித்துள்ளார்.

நான்காவது ரஷ்சியாவுடன் ஈரான் மேற்கொண்ட உடன்படிக்கைகள் ஆளில்லாத விமானங்கள், ஆளில்லாத கடல் கலங்கள், ஏவுகணை தொழில்நுட்பம், வான்பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்றவற்றின் பங்களிப்பை அதிகம் முதன்மைப்படுத்தியதோடு பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்தும் விதத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சரின் ரஷ்சிய விஜயம் உணர்த்துகிறது. ஏற்கனவே இஸ்ரேலிய அமெரிக்க போர் விமானங்களும் உலங்குவானூர்திகளும் சுட்டு வீழ்த்தப்படும் நிலையில் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமாக இருந்தால் ஏறக்குறைய அமெரிக்க இஸரேலியா கூட்டு போரின் இருந்து ஈரான் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்க முடியும். ஈரானின் ரஷ்சியா உடனான உறவானது ஈரானிய இராணுவ இருப்பை பலப்படுத்துவதாக விளங்குகிறது.

எனவே ஈரானின் ரஷ்சியாவுடனான உறவு அதன் இராணுவ உத்திகளைப் போன்றே இராஜதந்திர ரீதியிலும் பலமானதாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கான ஆலோசகர்கள் அமெரிக்காவை ஈரானுடன் நடைபெறும் போரிலிருந்து விலகுமாறு நிர்பந்திக்கின்றனர். மறுபுறத்தில் போரின் வெற்றிகளை எட்ட முடியாத ட்ரம்ப்ன் நிர்வாகம் உள்நாட்டிலும் சர்வதேச அரசியலிலும் திணறுகிறது. ஆமெரிக்கா மேற்குலக மற்றும் சர்வதேச நாடுகளுடனான உறவுப் பரிமாணத்தை இழந்து வருகிறது. ஈரானியர்களின் இராஜதந்திர உத்திகள் வியப்பான அம்சங்களை வெளிப்படுத்தியதோடு ஈரானின் எதிர்காலத்தை மட்டுமின்றி கீழைத்தேசத்தரின் எதிர்காலத்தையும் வரைவதில் வெற்றி கண்டு வருகிறது. ஆனால் இதற்கு பதிலை இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு ஈரான் மீத மட்டுமல்ல உலகத்தின் மீது சதி செய்வதிலும் தலைமைகளை கொலை செய்வதிலும் அடக்கு முறையை கையாளுவதையும் கைவிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

(நன்றி :தினகரன்)