இலங்கைத் தமிழரின் மிதவாத அரசியல் அதிக முரண்நிலைக் காலப்பகுதியாக விளங்குகிறது. சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும் தமிழரின் மிதவாதம் இயல்பான தோற்றப்பட்டினாலும் கற்பிதங்களாலும் வரையறைக்கு உட்பட்ட விடயதானமற்ற முரண்பாட்டாலும் அரசியலை எதிர் கொண்டு வருகின்றது. இலங்கை தீவுக்கான மிதவாத அரசியலின் கூர்ப்பு எடுத்த பரிமாணத்தை அப்படியே பின்பற்றுவது என்ற மேதாவித்தனத்தினால் தம்மை ஒடுக்கும் முறைகளையும் அழிப்புகளையும் தமது கரங்களாலே மேற்கொண்டுவருகின்றனர். இத்தகைய துயரமான அரசியலினாலேயே தமிழ் மக்களின் அரசியல் வெறுமை நீடிக்கிறது. அதில் ஓரங்கமாகவே ஆறு கட்சிகளின் மேடையின் மறைமுகமான நடவடிக்கைகள் அமையந்துள்ளன. இக்கட்டுரையும் ஆறு கட்சிகளின் மேடை வடிவமைத்திருக்கும் தமிழர் அரசியல் எதிர் நிலையை உரையாட முனைகிறது
1970களில் முதலாளித்துவத்தின் செல்நெறி தொடர்பிலும் மார்க்சிஸ மரபில் ஏற்படுத்தப்பட்ட பின்னய உரையாடல் பற்றியும் பல கோட்பாடுகள் அரசியல் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில் குண்டா பிராங் ( Andre Gunder Frank)என்னும் பொருளாதார சிந்தனையாளர் எதிர்முரணியம் என்ற கருத்தியலை தனது பொருளாதாரக் கொள்கையில் கட்டமைத்திருந்தார்.எதிர்முரணியம் (Ironies) என்பது எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். இது வெறும் துரதிஷ்டவசமாகவோ அல்லது ஒரு சாதாரண தற்செயலோ அல்ல. மாறாக என்ன நடக்கும் அல்லது என்ன சொல்லப்படும் என்று நீங்கள் நினைப்பதற்கு முற்றிலும் நேர்மாறாக அமையும் ஒரு கூர்மையான திருப்பமாகும். எதிர்முரணியம் என்பது தமது உழைப்பினாலும் தமது முன்னோர்கள் கட்டமைக்கப்பட்ட வடிவங்களை வேகமாக தாமே அழிவுக்குள்ளாக்கும் செய்முறைக்கு நிகராக புதிய வடிவங்கள் எதனையும் உருவாக்குவதில்லை என்பதாகும். தமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கி கொண்டு அதற்க்குள் வாழ்கின்ற ஆசியா ஆபிரிக்க இலத்தீனமரிக்க நாடுகளின் பின் காலனி அரசியல் பற்றிய எண்ணங்களை குண்டா பிராங் வெளிப்படுத்தியிருந்தார். அத்தகைய எண்ணங்களே ஆசியா ஆபிரிக்க மற்றும் இலத்தீனமரிக்க நாடுகளின் அரசியல்-பொருளாதார மற்றும் கலாச்சாரத்தை சிதைவடையச் செய்கிறது என்ற நியாயபூர்வமான அறிவியல் உண்மையை விவாதத்துக்கு உட்படுத்தினார். இது எதிர்பார்ப்பிற்கும் நிகழ்வுக்கும் இடையில் நிலவும் முரண் நிலையைக் குறிப்பதாகும். எந்தக் கருத்தும் இறுதியான உண்மை அல்ல. அதனால் எமது சொந்த நம்பிக்கைகளைக் கூட தொடர்ந்து விமர்சனமாக ஆராயும் தத்துவ நிலைப்பாடு. அவரது சார்புநிலைக் கோட்பாடு (Dependency Theory ) வலுவான விவாதங்களை தென்பூகோள நாடுகளின் பொருளாதாரச் சிந்தனையில் ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய எதிர் முரணிய மரபுக்குள்ளேயே இலங்கை தமிழர்கள் கடந்த 75 வருடங்களுக்கு மேல் இலங்கைத்தீவின் அரசியலில் பயணம் செய்திருக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை முதலமைச்சர்களாகவும் உள்ளூராட்சிமன்ற கட்டமைப்புகளுக்கான உறுப்பினர்களாகவும் தமிழர்களே தமது பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள். அரசாங்கத்தின் பணிக்குழுவினரும் அத்தகைய மரபுக்குள் தீவிரமாக இயங்குகின்ற சேவகர்களாக விளங்குகின்றனர். அத்தகைய செயல்பாடுகளை அவர்கள் முன்வைக்கின்ற போது இலங்கை அரசியல் வரைபுகளோடும் இலங்கை பெரும்பான்மை இன அரசியலின் ஆட்சி முறையோடும் இசைந்தும், பிணைந்தும் பயணம் செய்துள்ளனர். அவ்வாறு பயணம் செய்கின்ற சூழலிலே பல எதிர்முரணான செயல்களை தமிழர்களுக்கே தமிழர்கள் செய்துள்ளனர். அவர்களது செயல்கள் ஒவ்வொன்றும் தமது தமிழர்களுக்கே அழிவுகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய அம்சங்கள் வரலாற்றில் பலவற்றை கண்டு கொள்ள முடிகிறது. அண்மைய காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பயணித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக ஆயிரம் விகாரர்களை வடக்கு கிழக்கு அமைப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்முரணிய அரசியல் கலாச்சாரத்தை இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தோற்றுவித்திருந்தனர். தமது நிலத்தின் மீது பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் குடியேற்றங்களை அமைப்பதற்கும் ஆதரவு அளித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தற்போது அதற்கு எதிராக போராடுகின்றனர். இதே போன்று ஆறு கட்சிகளின் மேடை எதிர்த்தரப்புக்கு சேவை செய்யும் மறைமுகமான அரசியல் ஒன்றை அண்மையில் அரங்கேற்றியுள்ளது. அதனை விரிவாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
முதலாவது சமீபகாலத்தில் தமிழ் தேசியப் பேரவை 2009 க்கு பின்னர் தமிழகத்தோடு நெருக்கமான அரசியல் உறவென்றை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு தமிழகத்தோடு இலங்கைத் தமிழருக்கு நெருக்கமான உறவிருந்ததோ அவகையான ஒரு சூழலை நோக்கி 2026 களில் தமிழ்த்தேசியப் பேரவை முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இத்தகைய முன்னெடுப்பு இலங்கைத் தமிழரின் அரசியலில் பலமான ஒத்துழைப்பையும் இனச் சகோதரத்துவ மனோநிலையையும் உருவாக்குவதற்கான காலப்பகுதியாக புரிந்து கொள்ளப்பட்டது. 1987 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழருக்கும் தமிழகத்துக்கும் புதுடில்லிக்குமான உறவு சுமூகமானதாகவே இருந்தது. அத்தகைய உறவை உடைப்பதில் இந்திராகாந்தியின் மரணம், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை, பின்னர் ராஜீவ் காந்தியின் மரணம் என்று ஒரு தொடரான துயரங்களை திட்டமிட்டு கட்டமைத்திருந்தனர். இலங்கை ஆட்சியாளர்களும் உலக வல்லாதிக்க சக்திகளும் இணைந்து அத்தகைய நட்புறவை உடைப்பதில் வெற்றி கண்டிருந்தனர். இத்தகைய துயர்நிலையிலிருந்து மீளவும் தமிழகத்துடன் நட்புறவை ஏற்ப்படுகின்ற ஒரு சூழல் தோன்றுகின்ற போது ஆறு கட்சிகளின் மேடை அதனை உடைப்பதற்கு எதிர்முரணாக திட்டமிடுவதை மேற்கொள்வதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் ஆறு கட்சிகளின் மேடை முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒன்றிணைத்து உரையாட முயலுகிறது. அத்தகைய முன்முயற்சி ஆரோக்கியமானது. அவ்வாறு அமைந்தாலும் அதன் வடிவம் கொள்கையற்ற போக்கு என்பன அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. அதற்கு மேலதிகமாக வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் தமக்குள் ஒரு இணைவை எட்ட முடியாத சூழலில் இலங்கை தீவு முழுவதுமான மேடை ஒன்றை அமைப்பது என்பது எந்த அளவுக்கு தர்க்கரீதியான விளைவை தரக்கூடியது என்பது கேள்வியாகிறது. அத்தகைய தக்கரீதியான உண்மைகளை உருவாக்குவதற்கு ஆறு கட்சிகளின் மேடைக்கு இருக்க வேண்டிய அடிப்படை நியதிகளையும் இணைப்புக்கான வரைவுகள் எதனையும் அது கொண்டிருக்கவில்லை. வெறுமையாக ஒரு சந்திப்பை நிகழ்த்தியதன் மூலம் இலங்கை முழுவதுமான தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு முன் வைக்கப்படும் தீர்வை அது பொதுமைப்படுத்தி கொள்ள முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே. அவ்வாறு அது பொதுமைப்படுத்த முயல்வது என்பது மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையையா? வடக்குக் கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களின் தனி அலகுபற்றியதா? அல்லது வடக்குக் கிழக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையா? என்ற கேள்வி அல்லது அவை எல்லாவற்றினது கோரிக்கைகளையும் ஒன்று சேர்க்கப்படும் முயற்சியா? என்ற எந்த புரிதலும் அத்தனை மேடையிடம் இருப்பதாக தெரியவில்லை. அடிப்படையில் தெளிவான வரைப்புகளோடு அத்தகைய மேடை கட்டப்படாதது ஏன் என்பதே பிரதான விவாதம். அப்படியாயின் ஏதோ ஒரு நோக்கத்துக்காக அத்தரப்பு ஒன்று சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அத்தரப்பின் ஐக்கியமானது இன்னும் ஒரு தரப்பிற்கு சேவை செய்வதுடன் இன்னோர் தரப்பின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்த எடுத்த முன்முயற்சியாகவும் புரிந்து கொள்ளப்பட முடியும்.
இரண்டாவது இத்தகைய முன் முயற்சிகள் ஒற்றை ஆட்சி மரபின் தொடர்ச்சியை பேணுவதற்கான இலங்கை முழுவதுமான பிரகடனமாகவே தென்படுகிறது. ஆறு கட்சிகளின் மேடை முன்வைத்த பிரதான கோரிக்கைகளான புதிய அரசியல் யாப்பு, மாகாண சபை தேர்தல், மற்றும் காணி தொடர்பிலான தீர்வு என்பன ஒற்றை ஆட்சி மரபின் இருப்பை பலப்படுத்துவதற்கான குறிப்புகளாகவே உள்ளன. ஆறு கட்சிகளின் மேடை உருவாக்க முனையும் ஒற்றையாட்சி முறைமை என்பது தமிழ் பேரவையின் தமிழகம் நோக்கிய பயணத்தின் கோரிக்கையான சமஷ்டியை நிராகரிப்பது போன்று உள்ளது. அடிப்படையில் சமஷ்டி பற்றிய விவாதம் இலங்கை தீவில் ஆழமானதாக உரையாடப்படுகிற போது அல்லது அவசியமானது என விவாதிக்கப்படுகிற போது ஆறு கட்சிகளின் மேடை கடந்த கால ஆட்சிகளில் அங்கம் பெற்ற மேடையின் உறுப்பினர்கள் அத்தகைய ஆட்சியையும் அதிகார வரம்புகளையும் பாதுகாப்பதற்கு முயல்வது என்பது ஆளும் தரப்பின் நலன்களை அல்லது தென் இலங்கையின் நலன்களை பாதுகாப்பதற்கான மறைமுக திட்டமிடலாகவே தென்படுகின்றது. இலங்கைத் தமிழருக்கும் தமிழகத்துக்குமான உறவு சீர்குலைக்கப்படுவதும் புதுடில்லிக்கும் இலங்கைத் தமிழருக்குமான உறவின் சிதைவும் சமமான தாக்கத்தை தரக்கூடியது. இலங்கைத் தமிழரை இந்தியாவுடனான பகையாளியாக்கியதன் மூலம் அவர்களை பயங்கரவாதிகளாகவும் ஆட்சியின் விரோதிகளாகவும் கட்டமைப்பதில் தென்னிலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் வெற்றி கண்டிருந்தனர். அதை வெற்றியின் பயணமே 2009 முடிவும் அதற்குப் பின்னரான சிதைவின் தொடர்ச்சிக்கும் அடிப்படையாகும். அதனால் அது மீள சரி செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே ஆறு கட்சிகளின் மேடையின் நகர்வுகள் எதிர்முரணான விளைவை தென்னிலங்கை சக்திகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இது தென் இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்புக்களையும் மறைமுகமாக திருப்திபடுத்துவதாக புரிந்து கொள்ளப்படுகின்றது.
எனவே இலங்கைத் தமிழர்கள் தாமே தலைமை தாங்கி தாமே தனது இனத்தை அழிப்பதற்கு உத்திகள் வகுத்து கொடுக்கின்ற எதிர்முரணிய மனோநிலையாக காணப்படுகிறது. இறுதிப் போரை வழிநடாத்திய தளபதிக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்ததும் நல்லாட்சியோடு கூட்டு சேர்ந்ததும் வரவு செலவுத் திட்ட வரைவுகளுக்கு வாக்களித்து ஆட்சிகளை பாதுகாத்ததும் அத்தகைய எதிர்முரண் நிலையையே காட்டுகிறது. இது தமிழர்களே தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சமதையானது. அதனையே ஆறு கட்சிகளின் மேடையும் அரங்கேற்றி இருக்கின்றது. அதன் பிரதான நோக்கமும் உத்தியும் வரைவும் இல்லாத சூழலில் அதனைப் பற்றிய விவாதங்களை விட அது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளின் விவாதங்களே அவசியமானது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
