மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் போர் தீவிர தன்மையையும் விரிவாக்கத்தையும் கொண்டதாக மாறி வருகிறது. அமெரிக்கா ஈரான் ஆகிய இரு தரப்பும் போரில் முனைப்பு பெறவும் வெற்றி கொள்ளவும் நமது எல்லைக்குட்பட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரான் மீதான வான்வழி தாக்குதல் இரண்டாவது வாரத்தையும் கடந்துள்ள நிலையில் ஈரானின் பதில் நடவடிக்கைகள் அமெரிக்க தாக்குதலுக்கு நெருக்கடியை கொடுத்திருப்பதாக தெரிகின்றது. ஈரானின் வான் பாதுகாப்பு பொறிமுறை பலமடைந்திருப்பதாகவே அமெரிக்க புலனாய்வு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கு பின்புலத்தில் ரஷ்சியா காணப்படுவதாக அமெரிக்கத் தரப்பு கருதுகின்றது. இக்கட்டுரையும் இரு தரப்பும் போரை வெற்றி கொள்வதற்கான மேற்கொள்ளும் உத்திகளை தேடுவதாக உள்ளது.
முதலாவது அமெரிக்க வெள்ளை மாளிகை ஏனைய மேற்காசிய நட்பு நாடுகளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவதில் கவனம் கொண்டு வருகின்றது. குறிப்பாக சவூதி அரேபியாவோடு அணுசக்தி உடன்பாடு ஒன்றை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அறிவிப்பை(22.07.2026) வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ திட்டமிடப்படும் அணுசக்தி உடன்படிக்கை ஏறக்குறைய ஈரானின் அணு ஆயுத பலத்துக்கு சமதையான சக்திகளை மேற்காசியாவில் உருவாக்குவதற்கான உத்தியாகவே நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது. ஆனால் சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி உடன்பாடு சிவில் (Civil Nuclear) மட்டத்தில் முதன்மைப்படுத்துவதாகவே உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் போது இடப்பட்ட அடித்தளத்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அமைதியான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை முறைப்படி அறிவித்தன. இந்த உடன்பாடு அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு அணுகலை வழங்குவதோடு சவூதி அரேபியாவின் உள்நாட்டு அணுசக்தித் திட்டத்திற்கான வரையறைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் அத்தகைய உடன்பாட்டை அறிவித்த 24 மணித்தியாலத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு முக்கியமானதாக அமைந்தது. அவ்வறிவிப்பானது 2020 இல் அமெரிக்காவின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட ஆபிரகாம் (Abraham) உடன்படிக்கையின் பிரகாரம் சவூதி அரேபியா இஸ்ரேலுடனான உறவை அங்கீகரிக்கும் போதே உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் எனத்தெரிவித்துள்ளார். அதாவது இஸ்ரேலுடனான இராஜதந்திர பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் சார்ந்து ஏற்பட இருக்கும் வளர்ச்சி நிலையையே அணுசக்தி உடன்பாட்டுக்கான நகர்வாக அமையும் என்று வெள்ளை மாளிகை வெளிப்படுத்தி உள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கை இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே முறையான தூதரக பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தியதுடன் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவான தொடர்ச்சியான கூட்டு ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கையாகும். செப்டம்பர் 15, 2020 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஆரம்ப ஒப்பந்தத்தில் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து மொராக்கோவும் சூடானும் இதில் இணைந்தன. ஆபிரகாம் உடன்பாடு இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான உறவினை விரிவாக்கம் செய்து பலமான ஒரு கூட்டு ஒத்துழைப்பு பலத்தை அமெரிக்கா தலைமையில் மேற்கு ஆசியாவில் உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. அத்தகைய நோக்கத்துக்கு சவூதி அரேபியா கொடுக்கும் முக்கியத்துவமே அணுசக்தியின் உடன்பாட்டுக்கான ஒத்துழைப்பாக அமையும் என்ற விவாதத்தை அமெரிக்க தரப்பினர் முன்வைத்திருக்கின்றனர். இது மறைமுகமாக ஈரானின் அணு ஆயுத பலத்தை சமப்படுத்துவதற்கான அல்லது எதிர் நிலையை கட்டமைப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. அமெரிக்கா ஈரான் அணு ஆயுதத்தை பரிசோதித்து விட்டது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதாகவே உணரப்படுகிறது. ஏனைய பிராந்தியங்களைப் போன்று மேற்கு ஆசியாவும் அணு ஆயுதப் போட்டியை ஏற்படுத்தி நிலையான மோதல் பிராந்தியமாக மாற்றுவதற்கு அமெரிக்கா முனைகிறது. இது ஈரான் அமெரிக்கா போரின் இன்னோர் விளைவாகத் தெரிகிறது.
இரண்டாவது ஈரான் ஆதரவு பெற்ற ஹீவுத்திக்( Houthi) கிளர்ச்சியாளர்களை முன்னிறுத்தி கொண்டு செங்கடல் மீதான கப்பல் போக்குவரத்தை ஈரான் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது போரின் விரிவாக்கமாக பார்க்கப்பட்டாலும் சவூதி அரேபியாவின் அதீத பெற்றோலிய ஏற்றுமதிக்கான பிரதான கடல் பகுதியை முடக்குவதாக தெரிகின்றது. சவூதி அரேபியா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடலை பெரிதும் நம்பியுள்ளது. ஹார்மூஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறுகளால் தனது கிழக்கு-மேற்கு குழாய்வழி மூலம் யான்வு(Yanbu) துறைமுகத்தை ஒரு முக்கிய மாற்று வழியாகப் பயன்படுத்துகிறது. சமீபத்திய ஹீவுத்தி கிளர்ச்சியாளர்களது கடல்வழித் தடை அச்சுறுத்தல்கள் மற்றும் செங்கடலில் எண்ணெய் கப்பல்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தற்போது சவூதி அரேபியாவின் முதன்மையான ஏற்றுமதிப் பாதைக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. யான்வு துறைமுகம் புனரமைக்கப்பட்ட கிழக்கு-மேற்கு குழாய்வழி மூலம் எண்ணெய் மேற்கு நோக்கிச் செல்வதால் சவூதி அரேபியா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்க்கும் அதிகமானவற்றை கையாளுகிறது. பாப் அல்-மண்டேப் நீரிணை(Bab el-Mandeb Strait) வழியாக ஆசியா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் பயன்படுத்தும் சவூதி அரேபியா செங்கடலின் தென் முனையில் உள்ள ஒரு முக்கியமான போக்குவரத்து நெரிசல் பகுதியை பயன்படுத்தி வருகிறது. என்செலியா மற்றும் லைலா போன்ற எண்ணெய்க் கப்பல்கள் மீது சமீபத்தில் ஹீவுத்தி கிளர்ச்சிக் குழு நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அதனை பயன்படுத்தும் எண்ணைக் கப்பல்கள் திரும்பிச் செல்லவோண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் அதற்குப் பதிலாக சுயஸ் கால்வாயை நோக்கி வடக்குத் திசையில் செல்லவோண்டிய கட்டாயப்படுத்தை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய எரிசக்தி குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளன. இது ஏறக்குறைய ஈரானின் இன்னொரு போர்க்களமாகவே மாறிவருகின்றது. இப்போர்க்களத்தை எதிர்கொள்வற்கு அமெரிக்கா சுமூகமான ஒரு சூழலை எட்டுவதற்கு திட்டமிட்ட போதும் அது சாத்தியமான விளைவுகளை அமெரிக்கத் தரப்புக்கு வழங்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேற்கு நாடுகளின் பெற்றோலிய தேவையில் பாதிப்பினை ஏற்படுத்தவுள்ளது.
மூன்றாவது அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானிய மக்களின் குடியிருப்புகளையும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கின்ற விதத்தில் நிகழ்ந்து வருகின்றது. பதிலுக்கு அமெரிக்க இராணுவம் கொல்லப்படுவதும் அமெரிக்கத் தளங்கள் நிர்மூலமாக்கப்படுவதும் பிரதான இராணுவ நகர்வாக மாறி இருக்கின்றது. வளைகுடாப் பிராந்தியத்தில் காணப்படும் அமெரிக்காவின் உளவு மையங்கள் இராணுவத்தளங்கள் கண்காணிப்பு வலையங்கள் போன்ற அனைத்துமே ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் அழிவுக்கு உள்ளாகிவருகிறது. இதற்கு பின்னால் ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சீனாவின் பலமான கண்காணிப்பு பரிமாற்றங்கள் காரணமாக அமைகின்றன என்று அமெரிக்க புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் போரின் இன்னொரு பரிமாணத்தை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. தீவிரமான விமான தாக்குதலை ஈரான் மட்டப்படுத்தியிருப்பதாகவும் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அழிக்கப்படுவதனால் ஈரான் மீதான சரியான இலக்குகளை அமெரிக்கா அடைய முடியாமல் இருப்பதும் போரின் பிந்திய வளர்ச்சியாக காணப்படுகிறது.
நான்காவது அமெரிக்க காங்கிரஸ்ல் ஈரான் மீதான போரின் 37.5 பில்லியன் டொலர் செலவீனத்தை அடையாளப்படுத்தியுள்ள பாதுகாப்பு செயலாளர் பீட் கற்செற்(Pete Hegseth) அமெரிக்கா போரைத் தொடர்வதற்கு மேலும் நிதி உதவிய கோரி விண்ணப்பித்தனர். அதே நேரம் அவசரகால நிதி கூடுதலாக 87.6 பில்லியன் அ.டொலர் வழங்குமாறும் காங்கிரஸிடம் கோரியுள்ளது. இதில் சுமார் 67 பில்லியன் அ.டொலர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளுக்காகவும் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் 17.3 பில்லியன் அ.டொலர் தேவையெனவும் தெரிவித்துள்ளது. இது மட்டுமன்றி பாதுகாப்பு செயலாளர் 2027 ஆம் ஆண்டிற்குள் சுமார் 1.5 டிரில்லியன் அ.டொலர் மதிப்பிலான ஒரு பிரம்மாண்டமான அடிப்படை இராணுவ வரவுசெலவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும் அதற்கு முழுமையாக நிதி ஒதுக்கத் தவறினால் அது நாட்டிற்கு பெரும் முதன்மையான அச்சுறுத்தலாக மாறும் என்றும் குறிப்பிடுகிறார். அது தொடர்பிலான மோதல்களும் விவாதங்களும் எதிர்ப்பு நகர்வுகளிடம் காங்கிரஸ்ல் நிகழ மறுபக்கத்தில் ஜனாதிபதி அமெரிக்காவின் வல்லரசு நிலையை சிதைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் உரையாடுகின்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அமெரிக்கா ஈரான் போர் புதிய வடிவத்தை நோக்கி நகர்கிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்களின் தோல்வியும் ஹீவுத்திகளின் நிலைத்திருப்பும் மேற்காசியா அரசியலில் போரில் மாற்றத்திற்கான பொறியாக அளவிடப்படுகிறது. அதே போன்று சவூதி அரேபியா நோக்கிய அணு சக்தி உடன்பாட்டுக்கான எத்தனம் மேற்காசிய பரப்பை அணு ஆயுத மையமாக மாற்றும் இன்னொரு முகமும் இப்போரில் விளைவுகளாக தெரிகின்றது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
