July 26, 2026
அரசியல் கட்டுரைகள்

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளின் செம்மணி நோக்கிய வருகையும் ஈழத்தமிழரின் மௌனமும்?

ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையின் சாட்சியமாக விளங்கும் செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வ பணி அதிக முக்கியத்துவம் பெற்றதாக மாறி வருகிறது. இனப் படுகொலையின் அடையாளங்களை மட்டுமின்றி படுகொலையின் கொடுமைகளின் அடையாளங்களாகவும் அவை காட்சிப்படுத்துகின்றன. செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடுகள் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் என்பனவற்றைக் கடந்து இருக்கும் நிலையிலும் தலையின்றியும் காட்சிப்படுத்தப்படுகிற போது அதன் வலி அதிகமானதாகவே தெரிகிறது. செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட என்பு கூடுகளின் வடிவங்கள் மனித நாகரீகத்திற்கு முற்றிலும் புறம்பானதாக, அநாகரீகமாக நிகழ்த்தப்பட்ட படுகொலையின் கோரத்தைக் காட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகளது வருகை செம்மணியை நோக்கி அமைந்துள்ளது. இக்கட்டுரையும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளது வருகையும் செம்மணியும் பற்றியதாக வடிவமைக்கப்படவுள்ளது.

செம்மணி படுகொலையின் மூன்றாவது அகழ்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடுகளின் எண்ணிக்கை 478 ஆகவுள்ளது. இதில் 464 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வின் 41 வது நாளில் 7 என்புக் கூடுகளும் மூன்று என்புக் கூட்டுக் குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்படும் என்புக கூடுகளின் வடிவங்கள் இனப்படுகொலையின் கொடுமைகளின் வடிவங்களாக காணப்படுகிறது. இதன் போதே ஈழத்தமிழருக்கான நீதி பற்றிய உரையாடல் சர்வதேசம் வரை முதன்மைப்படுத்தப்படுகிறது. படுகொலையின் கொடுமைகளை அடையாளப்படுத்தும் என்பு கூடுகள் ஒவ்வொன்றும் வரலாற்றில் எத்தகைய இனமும் அனுபவிக்காத துயரங்களை ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்காக அனுபவித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து இனமாக மீண்டு எழுவதற்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவு செய்யப்படுவது அவசியமானது என்பது உணரப்படுகிறது. அதனை நோக்கிய கோரிக்கையையே ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய யூனியனிடம் முன்வைத்துள்ளனர். ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளது வருகை செம்மணியின் காட்சிகளை பார்ப்பதற்கானதோ துயரத்தை பகிர்வதற்கானதோ மட்டுமல்ல அதன் வலிகளால் அழிவுண்டு போன ஓரினத்தின் இருப்பையும் சுயநிர்ணயத்தையும் அடைவதற்கு உதவுவதற்கானதாக அமைதல் வேண்டும். அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது ஐரோப்பியயூனியனின் உறுப்பினர்களின் (22.07.2026) வருகை செம்மணியின் அகழ்ந்தெடுக்கப்படும் என்புக் கூடுகளை பார்ப்பதற்கானது அல்ல. மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் வோல்கர் டக்னின் 23வழ26இ-06.2025 இல் வருகை தந்த போது நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளின் பிரதிபலிப்புகள் அதிகம் ஈழத்தமிழரை திருப்திப்படுத்தியது. மீண்டும் ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகளின் வருகை தந்துள்ளனர். ஐரோப்பிய யூனியன் தூதர் கார்மென் மோரேனோ(Carmen Moreno ) தலைமையில், உறுப்பு நாடுகளின் தூதர்களுடன் இணைந்து ஒரு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தில் மனித உரிமைகள், நிலப்பிரச்சினைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றன. இது செம்மணி பற்றிய உரையாடலை அதிகப்படுத்தியது. ஆனால் செம்மணி தொடர்பாக ஐரோப்பியயூனியன் அல்லது மேற்கு நாட்டவர்களின் வருகையும் பார்வையிடலும் எத்தகைய விளைவை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தியது என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினர், ஐக்கிய நாடு சபையின் பிரதிநிதிகள், ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகள் என பலரது வருகை செம்மணி நோக்கி இருநக்கிறது. செம்மணி தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களும் முன்வைக்கப்படும் விவாதங்களும் ஈழத்தமிழரின் எத்தகைய கோரிக்கையையும் துயரங்களையும் அழிவுகளின் நியாயமான நீதியையும் இதுவரை எந்த தரப்பினாலும் வழங்குவதற்காக உச்சரிக்கப்படவில்லை. இதனை நோக்கிய ஈழத்தமிழரின் விண்ணப்பங்களும் எதிர்பார்க்கைகளும் மட்டுமே காணப்படுகிறது.

இரண்டாவது ஈழத் தமிழர்கள் தமது கோரிக்கைகளை சர்வதேசத்தை நோக்கி கோருவதற்கான நியாயப்பாடு உள்நாட்டில் எந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களுக்கு எதிihக செயல்படாது என்பதாகும். அது மட்டுமின்றி முன்னைய அரசாங்கங்களையும் அதன் இராணுவத்தையும் கேள்விக்கு உட்படுத்த தயார் இல்லை என்பதே அடிப்படையாகும். இராணுவம் போலீஸ் என்பன அரசின் இயந்திரங்களாகும். அவை அரசாங்கத்தின் இயந்திரங்கள் மட்டும் கிடையாது. அவை அரச இயந்திரம் என்பதனால் எந்த அரசாங்கமும் அரச இயந்திரத்தை தண்டனைக்கு உட்படுத்த தயாராகாது. இலங்கையின் வரலாற்றின் ஈழத்தமிழருக்கு எதிரான படுகொலைகளை மேற்கொண்டதில் இராணுவம் பிரதான பங்கெடுத்துள்ளது. இலங்கையை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் தமிழ் மக்களை ஏமாற்ற உறுதிமொழிகளையும் வார்த்தைகளையும் முன்வைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் அரச இயந்திரத்தை நிராகரிக்காது. தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் இராணுவத்தையே முதன்மையானதாக கருதுகிறது. எனவே இராணுவம் மேற்கொள்ளுகின்ற அடக்குமுறைகளையும் அழிவுகளையும் அரசின் கட்டுமானத்தின் ஒரு அங்கமாகவே ஆட்சியாளர்கள்; கருதுகின்றனர். இதனால் இலங்கை தீவில் நிகழ்ந்த அனைத்து படுகொலைகளுக்கும் பின்னால் அரசும் அதன் இயந்திரமாகிய இராணுவமும், காவல்துறையும் உள்ளது என்பது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல உலகத்தாலும் உணரப்படுகின்ற விடயமாகும். அதனை பாதுகாப்பதே அரசாங்கங்களில் கடமையாக விளங்குகிறது. இதுவே சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்கான அடிப்படையாகும். ஆனால் அத்தகைய சர்வதேசமும் நீதியை விட அரசாங்கத்தின் மீதும் நமது அரசியல் மீதும் எல்லையற்ற விதத்தில் நடவடிக்கைகளையும் புரிந்துணர்வையும் கட்டமைக்கும் முயற்சிக்கின்றது. ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக போராடுவது என்பது ஈழத்தமிழரது அரசியல் கோரிக்கையாக இருந்தாலும் அதன் மீதான பாதுகாப்பை வழங்குவதற்கு உலகில் உள்ள நாடுகளும் நாடுகளின் அரசாங்கங்களும் தயாராக இல்லை என்பதே செம்மணி படுகொலை உணர்த்தும் செய்தியாகும்.

மூன்றாவது ஈழத் தமிழர்கள் சர்வதேசத்திலும் நீதி கோருவது என்பது நியாயமானதாக இருந்த போதும் அதற்கான அடிப்படைகளை தீவிரத்தோடும் முதன்மையோடும் மேற்கொள்ளாமை அவர்களிடம் காணப்படும் பலவீனமாக இருக்கின்றது. ஈழத் தமிழர்கள் தெளிவான அரசியல் கோரிக்கையை சர்வதேசத்திடம் முன் வைப்பதற்கு அதற்கான போராட்ட வழிமுறைகளை கூட்டாக வெளிப்படுத்துவதற்கும் தயார் இல்லாத நிலையில் செம்மணிக்கான நீதி பலவீனப்பட காரணமாகிறது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நிகழும் துயரங்களை கண்டுகொள்ளாத ஈழத்தமிழர்கள் அதனை நோக்கி போராட்டங்களை கட்டமைக்காத சூழலில் எவ்வாறு சர்வதேச நீதி சாத்தியமாகும் என்பது பிரதான கேள்வியாகும். ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் மோதிக் கொள்வதும் சமஷ்டி பற்றியும் பதின்மூன்றாவது திருத்தம் பற்றியும் தீர்வுகள் பற்றியும் உரையாடுவதும் கட்சிக் கூட்டங்களை நடத்துவதும் இயல்பான செய்முறையாக நகர்ந்து செல்கிறது. ஓர் இனத்தின் கொடுமையான படுகொலைகளை கண்டித்து திரட்சிமிக்கு ஒரு போராட்டத்தை நிகழ்த்த முடியாது கையாலாகாத இனமாகவும் இனத்தின் அரசியலாகவும் செம்மணி மீதான கவனம் காணப்படுகிறது. என்புக் கூடுகளின் துயரமான காட்சிகளை விட ஈழத்தமிழர்களின் செயல்களில் நிகழும் காட்சிகள் அதனையும் விட கொடுமையானதாக விளங்குகிறது. எவ்வகையான சூழலிலும் ஈழத்தமிழர்கள் கூட்டு திராட்சியோடு செம்மணி விடயத்தை முன் கொண்டு செல்வதற்கு தயார் இல்லாத அரசியலும் சிவில் சமூகங்களும் அவற்றின் போராட்டங்களும் வீணானதாகவே காணப்படுகின்றது. இதன் விளைவுகள் ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும். அப்போது சமஷ்டியோ பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தங்களோ தேவையற்றவையாக மாறிவிடும். அடிப்படையில் தக்க வைக்க வேண்டிய உண்மைகளை நோக்கி செயல்பட முடியாத ஓர் இனம் தீர்வுகளையும் தீர்வுகளுக்கு அப்பால் உள்ள விடுதலை பற்றியும் சிந்திப்பதில் எத்தகைய பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

எனவே ஈழத் தமிழர்கள் சர்வதேசத்திடம் நியாயம் கேட்பது என்பதும் தீர்வு கேட்பது என்பதும் கால அடிப்படையிலான செய்முறையாக அன்றி தொடர் போராட்ட செய் முறையாகவும் கூட்டுப்போராட்டமாகவும் அமைதல் வேண்டும். அரசியல் தோல்விகளுக்கு பின்னால் இந்த இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாகின்ற ஒரு நிலையை சிவில் தரப்புகளும் அவற்றின் மௌனமான நடவடிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன. செம்மணியை முன்னிறுத்தி ஈழத்தமிழர்கள் வடகிழக்கு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய காலப் பகுதியில் பலவீனமான எண்ணங்களை உரையாடிக் கொண்டும் ஆண்டு, மாத, தினக், கடமையை செய்பவர்களாக உள்ளனர். இது ஒரு போராட்ட வழிமுறையாக கொண்டிருக்க முடியாது. ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளை சந்திப்பதும் உரையாடுவதும் தீர்வுக்கான நகர்வாக காட்டிக் கொள்ளலாமே அன்றி அவை தீர்வைத் தந்துவிடாது. ஆகிம்சை வழியில் தீவிரமாக போராடுவதே தீர்வுக்கான வழிமுறையாகும். இத்தகைய மௌனத்தின் விளைவு அபாயமானதாக அமையும் என்பதே உறுதியானது.

போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:யாழ்.தினக்குரல்)