September 6, 2026
அரசியல் கட்டுரைகள்

தென் இலங்கையின் இராஜதந்திரத்தினால் கையாளப்படும் உலக வல்லரசுகள்?

கடந்த நான்கு வாரங்களாக இப்பகுதியில் இந்திய-சீன-அமெரிக்க தொடரில் இலங்கையின் முக்கியத்துவம் உரையாடப்பட்டது. மூன்று பிரதான வல்லரசுகளுக்கும் இடையில் இலங்கையை நோக்கிய நகர்வுகளும் அதற்கான காரணங்களும் தேடப்பட்டன. ஆனால் தற்போது மூன்று பிரதான சக்திகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்பதை பிரதான கேள்வியாகக் கொண்டு தேடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கானள அடிப்படை இலங்கையின் இராஜதந்திர பாரம்பரியம் சார்ந்ததொன்றாக புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய சூழலில் தென் இலங்கை ஆட்சியாளரின் இராஜதந்திரம் பொறுத்து அதிக விமர்சனங்கள் எழுவது வழமையான மரபாகும். குறிப்பாக ஈழத்து புலமையாளர்களும் தமிழக புலமையானவர்களும் புலம்பெயர்ந்த தளத்தில் இருப்போரும் அதிகம் சிங்கள இராஜதந்திரத்தை பலமானதாக மதிப்பிடுவதில் தயக்கம் காட்டுகிறனர். அதனால் இப்பகுதி சிங்கள இராஜதந்திரத்தின் கடந்த காலங்களை தேடுவதன் மூலம் அதனை நிறுவ வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக உள்ளது.

முதலாவது சுதந்திர இலங்கையின் இராஜதந்திரப் பாரம்பரியத்துக்கு மூலவேராக மகாவம்சமும் முடியாட்சிக்கால ஆட்சிகளும் கட்டியம் கூறுவதாக உள்ளன. இந்திய நலன்களுக்குள்; இஸ்தாதிக்கப்பட்ட பௌத்தம் உருவாக்கிய இராஜதந்திர மரபாகவே மகாவம்சத்தை மானுடவியலாளர்களும் அரசியல் புலமையாளர்களும் மதிப்பீடு செய்ய முயல்கின்றனர். காரணம் இலங்கைத் தீவின் இருப்பை கட்டமைத்ததிலும் இலங்கை தீவுக்கான அரசை உருவாக்கியதிலும் பௌத்தத்துக்கு (மகாவம்சம்) தனித்துவமான பங்கு காணப்படுகிறது. மகாநாமர் வரைந்த மகாவம்சம் ஏறக்குறைய இலங்கைத்தீவின் வெளியுறவின் முதல் அடியாக ((First Step) புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தியர்களை இலங்கை தீவில் எதிர்கொள்வதே மகாவம்சத்தின் பிரதான வெளியுறவாக இருந்தது. அதுவே இலங்கைத் தீவின் வெளியுறவின் கருப்பொருளாகும். அது சுதந்திர இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட்டு இஸ்தாபிக்கப்பட்டு முழுமையான வடிவத்தை பெற்றுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலங்கை ஒரு வெளிவகார அமைச்சை கட்டமைக்கின்ற போது வெளியுறவு பாரம்பரியத்தின் முழுமையும் வெளிவிவகாரம் அமைச்சுக்குள் முழுமையைப் பெறத்தொடங்கியது.

இரண்டாவது 1980 களுக்கு பின்னர் இலங்கையின் வெளியுறவு பிரதான அம்சமாக வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றது. அது ஒரு வகையான போர்க் கால வெளியுறவாகவும் பொருளாதாரமாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அவ்வகை காலப் பகுதியில் உலகத்தையும் பிராந்திய சக்தியான இந்தியாவையும் எதிர்கொள்வதில் சிங்கள இராஜதந்திரம் வெற்றிகரமான பக்கங்களை சாத்தியப்படுத்தியது. 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தம் அதற்கான முழுமையை வழங்கியிருந்தது. இந்தியாவை கையாளுவது என்ற பொறிமுறையை இலங்கையின் வெளியுறவு பாரம்பரியத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட்டு வந்ததென்பதை கண்டு கொள்ள முடிகிறது. அவ்வகை வெளியுறவின் பாரம்பரியம் தெளிவான இராஜதந்திரத்தினால் தொடர்கிறது. இந்தியாவை அரவணைப்பதும் இந்தியாவுடன் நட்புக்கொள்வதும் இந்தியாவை அணைத்துக் கையாளுவதும் இலங்கை இராஜதந்திரத்தின் வலுவான அம்சமாக உள்ளது. இதன் விளைவுகள் பெரும் தேசமான இந்தியாவை நேரடியாக பாதிக்காத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால் அதன் பாதிப்பு முழுவதும் ஈழத் தமிழர் மீதான அரசியலிலும் இராணுவ பொருளாதார இலக்குகளிலுமே தாக்கத்தை செலுத்துகிறது. காரணம் இந்தியாவுடனான ஈழத்தமிழரின் புவிசார் அரசியல் உறவு அதற்கான அடிப்படையை தோற்றுவித்துள்ளது. இதனால் வடக்கு கிழக்கு மீதான போர்க்காலம் முழுவதும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமன்றி இந்திய இராஜதந்தரத்தையும் தென்னிலங்கை கையாண்டு வெற்றி பெற்றிருக்கின்றது. 2009 இறுதிப் போரில் இந்தியா சீனா பாகிஸ்தான் அமெரிக்கா பிரித்தானியா போன்ற எதிர் எதிர் நாடுகளை ஓர் அணியில் பிணைக்கப்பட்டு இலங்கையுடனான உறவில் ஒன்றிணைந்து விடுதலை புலிகளை தோற்கடிக்க வழி வகுத்திருந்தன. இதனை ஏகாதிபத்தியங்களின் கூட்டு என்று மட்டும் கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது. இது இலங்கையின் இராஜதந்திரத்தில் பிரதான வியூகமாக அமைந்திருந்தது. இத்தகைய மூலோபாயத்தினால் பிராந்திய ரீதியான அரசுகளையும் சர்வதேச அரசுகளையும் ஒன்றிணைப்பதில் தென் இலங்கை இராஜதந்திரம் வெற்றிகண்டது.

மூன்றாவது இலங்கையின் பொருளாதரத்தை கட்டி எழுப்புவதில் அதே வகையான இராஜதந்திர முனைப்பை தென் இலங்கை கொண்டிருக்கின்றது. பொருளாதார அடிப்படையில் ஏற்படக்கூடிய அனைத்து நெருக்கடிகளையும் இலங்கைத் தீவின் அமைவிடம் பொறுத்து உலக நாடுகளுக்கு அவசியமானது என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தென்னிலங்கை கையாண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி என்கின்ற அனைத்து நிதி நிறுவனங்களையும் அவற்றின் கடன்படு நிலைகளையும் அமைவிடம் சார்ந்து இருக்கின்ற முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நாடுகளையும் அவற்றின் நலன்களையும் கையாண்டு வருகிறது. அதனால் இலங்கைத் தீவுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. இலங்கை தீவில் உள்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிற போதெல்லாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதும் பின்னர் நாடுகளின் அணுகல் மூலம் சரி செய்வதும் வழமையானதாக உள்ளது. அனைத்துச சூழலிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையோடு கைகோர்த்து செயல்படக் காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானமாக இயக்குகின்ற சக்திகளுக்கு இலங்கை தீவு அவசியம் என்பதனால் அத்தகைய மூலோபாயத்தை தென் இலங்கை வெற்றிகரமானதாக கையாளுகிறது.

நான்காவது இலங்கைத் தீவின் இராணுவ நெருக்கடிகள் உள்நாட்டு புரட்சிகள் கிளர்ச்சிகள் ஆட்சி மாற்றங்கள் போன்ற அம்சங்கள் எல்லாவற்றிலும் தென்னிலங்கை இராஜதந்திரம் வெற்றிகரமானதாகவே நகர்ந்திருக்கின்றது. வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் ஜே.வி.பி. யினுடைய எழுச்சியும் அவ்வப் போது எழுச்சி பெற்ற இராணுவ சதி புரட்சிக்கான திட்டமிடல்களும்(1962,1966,1971,1989) தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னால் பிராந்திய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவில் அனுசரணை பிரதான அங்கமாக அமைந்திருந்தது. தென்னிலங்கை இராஜந்திரத்தின் பிரதான மூலோபாயமாக இந்தியாவும் உலக வல்லரசு நாடுகளும் காணப்படுகிறன. அவற்றை முழுமையாகவும் தெளிவாகவும் எதிர்கொள்ளுகின்ற சூழலை தமக்குள் கொண்டிருக்கின்றது. இதனாலேயே உலக வல்லரசுகளின் பிடிக்கும் அகப்பட்டுக் கொள்ளாமல் அதே நேரம் அந்நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக இலங்கை தீவின் அனைத்து சவால்களையும் இராஜதந்திரத்தினால் எதிர் கொண்டு வெற்றிகரமாக நகர்கிறது.

ஐந்தாவது இத்தகைய சூழலுக்குள் இந்திய- அமெரிக்க- சீன ஆகிய சக்திகளை ஒன்றிணைத்து கையாளுவதில் தென்னிலங்கையின் இராஜதந்திரம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. தற்போது எழுந்திருக்கும் உலகளாவிய மாற்றங்களும் உலக ஒழுங்கில் காணப்படும் புதிய உத்திகளும் இலங்கைக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதுவே இலங்கையை நோக்கிய சர்வதேச சக்திகளின் நகர்வு தீவிரமானதாக மாறியுள்ளதற்கான அடிப்படையாகும். அதிலும் குறிப்பாக சீனாவின் பக்கம் நின்று கொண்டு இந்தியாவையும் இந்தியா பக்கம் நின்று கொண்டு சீனவையும் இலங்கை கையாளுகிறது. இந்த நாடுகளால் நெருக்கடி ஏற்படுகிற போது அமெரிக்காவையும் முன்னிறுத்திக் கொண்டு தென்னிலங்கை வெற்றிகரமான பயணத்தை தொடர்கின்றது. 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னால் இருந்த வலுவான காரணங்களை அமெரிக்காவோடு சேர்ந்து இலங்கை இராஜதந்திரம் எதிர்கொண்டிருந்தது. தற்போது புதிதாக எழுச்சி பெற்ற சீனாவுடன் நின்று கொண்டு இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிர்கொள்வது போன்று காணப்பட்டாலும் மறுபக்கத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்துக் கொண்டு சீனாவினாலும் இந்தியாவினாலும் வரும் நெருக்கடிகளை கையாளுகிறது. இந்தியா இலங்கை தீவை தரைவழி மூலமாக கையாள எடுக்கின்ற முயற்சிகளில் இரண்டு பிரதான அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றது. ஒன்று தரைவழி பாலம் ஒன்றை கட்டுவதன் மூலம் இலங்கை தீவிவென்ற வடிவத்தை இல்லாமல் செய்வது. இரண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகத்தை தனி அலகாக பிரிப்பதன் மூலம் இலங்கை தீவு இல்லை என்பதை நிலைநிறுத்துதல். ஆனால் இது இரண்டிலும் இந்தியா தோல்வியை தழுவுவதற்கு வாய்ப்பு அதிகமானதாகவே தெரிகிறது. தென்னிலங்கையின் இராஜதந்திரத்தில் வடக்கு கிழக்கை தனியலகாக உருவாதக்குவதில் இந்தியாவின் எண்ணத்தை ஏற்கனவே தோற்கடித்துவிட்டது. ஆனாலும் அது முற்றுப் பெறவில்லை என்பது தென்னிலங்கைக்கு நன்கு தெரிந்த ஓரம்சமாகும். அதே போன்று இந்தியாவுக்கும்- இலங்கைக்குமான தரைவழிப்பாதை என்பது தென்னிலங்கைக்கு ஏற்பட இருக்கின்ற பெரும் நெருக்கடி என்ற அடிப்படையில் இந்தியாவை எதிர்கொள்ளுதல் அவசியமானது. அதனை சீனாவிடம் மட்டுமன்றி அமெரிக்காவுடனும் சேர்ந்து எதிர்கொள்வதற்கு தயாராகின்றது. வடக்கு கிழக்கு தனியலகாவது அல்லது இலங்கைத் தீவு இரு துண்டுகளாக்கி மாநிலமாக மாற்றுவதை இந்திரா காந்தியின் படுகொலை எப்படி பலவீனப்படுத்தியதோ அன்வாறான சூழல் ஒன்றை தற்போது தரைவழிப் பாலம் தொடர்பில் தென் இலங்கை எதிர் கொள்ள தயாராகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்பட வசனம் ஒன்று பிரபலமாக உரையாடப்படுவதுண்டு. ஒரே உரையில் இரு வாள்கள் உறங்காதென்பது. ஆனால் தென் இலங்கையின் இராஜதந்திரத்திற்கு முன் ஒரே உரையில் மூன்று வாள்கள் அமைதியாக கையாளப்படுகின்றன என்பதை கண்டு கொள்ள முடிகிறது. அதன் இராஜதந்திரத்தின் வலுவானது இந்தியா- சீனா- அமெரிக்கா என்ற மூன்று வாள்களையும் தென்னிலங்கை புத்திபூர்வமாகக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இதற்கு முன் ஈழத்தமிழர்களின் அரசியலும் அதன் இராஜதந்திர வறுமையும் அதற்கு பின்னால் இருக்கும் அனைத்து தோல்விகளுக்குமான அடிப்படைக் காரணம் என்பதை உணர்த்துகின்றது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினக்குரல்)