September 7, 2026
அரசியல் கட்டுரைகள்

நீதிக்கான நீண்ட பயணமும் ஈழத்தமிழரது அரசியல் போராட்டமும்

ஈழத்தமிழர்கள் அரசியல் காத்திரமான தீர்மானம் எடுக்க வேண்டிய காலப் பகுதிகளை தவறவிடுகின்ற நிலை ஒன்றை தொடர்ச்சியாக உணர முடிகிறது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் சிவில் தரப்புகளும் தொடர்ச்சியாக மோதிக்கொள்வதும் சுயநலத்துடன் இயங்குவதும் காட்டிக் கொடுப்பதும் அறிவியல் ரீதியாக இயங்க மறுப்பதும் முற்றாகவே ஈழத் தமிழரின் அரசியலை பலவீனப்படுத்துகின்றது. அரசியல் செய்தல் என்பது அரசறிவியலில் ஒரு பகுதியாகம். அத்தகைய பகுதியை அறிவியல் பூர்வமாக செய்தால் மட்டுமே அரசியல் செய்தலாக கருதப்படுகிறது. அண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஒரு போராட்டத்தை நிகழ்த்தியுள்ளார்கள். போராட்டத்தில் சாதகத் தன்மையையும் அது வளத்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இக்கட்டுரை தேடுவதற்கு முயல்கிறது.

30.08.2026 அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மாநாடும் அதற்கான உணர்வெழுச்சிப் போராட்டமும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் போராட்டம் காத்திரமானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் அதே நேரம் அறிவியல் ரீதியான பக்கங்களை வெளிப்படுத்தியிருந்தது. பெருமளவிலான கண்மூடித்தனமான தாக்குதல்கள் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் ஆகியவை போராட்டத்தின் உள்ளடக்கமாக அமைந்திருந்தது. அத்தகைய போராட்டம் வெளிப்படுத்திய பக்கங்களை ஆழமாக நோக்குவது அவசியமானது.
முதலாவது காணாமல் ஆக்கப்பட்டோர் கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்தகையப் போராட்டங்களின் தொகுப்பாகவும் சர்வதேச மட்டத்தில் விழிப்பை ஏற்படுத்தும் விதத்திலும் குற்றவியல் நீதிமன்றம் நோக்கி ஈழத்தமிழர்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்கலான நியாயத்தையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படையை தோற்றுவித்திருந்தது. முதலில் காணாமல் ஆக்கப்பட்டோரின்; புகைப்படங்களை காட்சிப்படுத்திய விதம் தனித்துவமானதாக அமைந்திருந்தது. வெள்ளை ஊர்தி (வெள்ளை வேன்) ஒன்றை அடையாளமாக (Symbol)) முன்னுருத்தியது. இலங்கையில் வெள்ளை நிற வேன்கள் (பெரும்பாலும் எண்கள் அல்லது உரிமத் தகடுகள் இல்லாதவை) உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிலவிய அச்சம் என்றே கூறலாம், இது தமிழ் மக்கள்; மீதான அச்சுறுத்தல் மற்றும் வலிந்து காணாமலாக்கல்களின் சின்னமாக உள்ளது. ஓர் இருண்ட வரலாற்றுக் காலத்தின் தொடர்பைக் கொண்டுள்ளதாகும். உலக வரலாற்றில் இடம் பிடிப்பதற்கான அடையாளமாக கண்டு கொள்ளக் கூடியது. உலகத்தில் யூதர்கள் அவ்வகை காட்சிப்படுத்தல்களை தாம் வாழ்ந்த நாடுகளில் முதன்மைப்படுத்தியதோடு தமக்கான தேசம் கிடைத்த பிற்பாடு கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமது உறவுகளது புகைப்படங்களை காட்சிப்படுத்தினர். குடும்பங்களாக முள்ளிவாய்க்காலிலும் செம்மண்ணியிலும் இன்னும் பல படுகொலைகளிலும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்படாமல் காணாமல் போனதாகவே கைவிடப்படுகின்ற நிலை ஈழத்தமிழர் மத்தியில் காணப்படுகிறது. 1958 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போன கொல்லப்பட்ட மக்களின் தகவல்களை திரட்டி காட்சி கூடம் ஒன்றை அமைத்து அதில் அவர்களுடைய பெயர்களை பட்டியல்படுத்த வேண்டிய பொறுப்பு ஈழத்மிழர்களுக்கும் புலம்பெயர்ந்த உறவுகளிடமும் உண்டு. ஈழத்தமிழர்களைவிட புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் காணப்படும் சட்டப் பாதுகாப்பும் பொருளாதார பலமும் கொண்டிருக்கின்றனர். அவர்களே காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அடையாளப்படுத்தை பாதுகாக்க முயல வேண்டும். அதற்கான ஆரம்ப நிலையை நீதிக்கான நீண்ட பயணம் ((Long March for Justice) ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

இரண்டாவது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மகாநாடு ஒன்றை நிகழ்த்தி இருப்பது எதிர்காலத்தில் அறிவியல் ரீதியாக கட்டமைக்கப்படுவதற்கான ஒரு திட்டமிடலை தந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஏற்பட்ட துயரங்களை உரையாடியது மட்டுமன்றி ஐக்கிய நாடு சபைக்கான பிரதிநிதி அனா லொரெனா டெல்கடில்லோ (Ana Lorena Delgadillo Pérez,)வருகை தந்திருந்தமை காத்திரமான பங்களிப்பாக அமைந்திருந்தது. உரையரங்கில் உரையாற்றுகிற போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் முறையானதும் நம்பகமானதுமான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதையும் அதனை முழுமையாக எதிர்ப்பதாகவும் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் உறுப்பினரான அனா பேர்ஸ் தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியதாகும். மேலும் அவர் குறிப்பிடும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அனுபவங்களையும் தாமதமின்றி முறையாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது ஈழத்தமிழருடைய அரசியலை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பான ஒரு களத்தை தந்திருக்கின்றது. அவரது உரையும் வெளிப்படுத்தி அம்சங்களும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கான ஆரோக்கியத்தை தந்திருக்கிறது. எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆய்வு மாநாடுகளை உருவாக்கி அதற்கான கருப்பொருட்களை தேர்ந்தெடுத்து அதற்கூடாக சர்வதேச மட்டத்தில் தகமையாளர்களை முன்னிறுத்தி உலக அனுபவங்களுக்குள்ளால் கொண்டு செல்வதற்கான ஓர் அடிப்படையை இந்த நிகழ்வு தோற்றுவித்திருக்கின்றது. எதிர்காலத்தில் அதற்கான திட்டமிடல்களை அமைப்பதற்குரிய காத்திரமான பங்களிப்பை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாடு அதன் ஏற்பாட்டாளர்களும் மேம்படுத்த உதவியுள்ளனர். அது தொடர்பில் எதிர்கால திட்டமிடல் ஒன்றை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழரின் சிவில் தரப்புகளிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

மூன்றாவது காணாமல்; ஆக்கப்பட்டோர் தொடர்பிலான மகாநாடு அதன் வெளிப்படுத்துகிற அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்த ஓர் ஆரோக்கியமான அமைதியான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அன்னைமார்கள் முன்னெடுத்த காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அவரது வெளிப்படுத்தல் தந்துள்ளது. போருக்கு பிந்திய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் இருப்பும் அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டமும் வடக்கு கிழக்கில் அதிகமாக காணப்படுகிறது. மேம்பட்ட பெண் தலைமை குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை நோக்கி எழும் நெருக்கடிகளையும் அவர்களது அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை போர் முடிந்த காலப்பகுதியில் இருந்து கருத்தியலாளர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எந்தவித முயற்சியும் இதுவரையில் எடுக்கப்படாத நிலையில் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம் ஒரு வாய்ப்பான சூழலை தந்திருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கு பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட தலைமை தாங்குகின்ற திராணியுடைய பெண்களையும் மையப்படுத்தி அன்னையர்களுக்கான தெளிவான கட்டமைப்புகள் எதிர்கால அரசியலில் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான ஒரு களத்தை அன்றைய மகாநாடும் போராட்டமும் வழிபடுத்தி உள்ளது.

நான்காவது அம்மாகாநாட்டில் கலந்து கொள்ளாத தரப்புகள் தொடர்பில் ஆழமான கருத்துடைய எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற விதத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு சார்ந்த அறிக்கை வெளிவந்திருந்தது. அது ஒரு நாகரீகமான அரசியலின் வடிவமாகவே காணப்பட்டது. அரசியல் கட்சிகளின் உண்மையான பக்கங்களையும் மக்களோடு சேர்ந்து செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகளையும் அடையாளம் காண்பதோடு அரசியல் கட்சிகள் மக்களுக்கானது என்பதை உணர்த்துவதற்கான அரசியல் நாகரீகத்தை அறிக்கையும் போராட்டமும் மகாநாடும் உணர்த்தி இருந்தது. இது ஆரோக்கியமான ஓர் அரசியல் களத்தை திறப்பதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் செயல்பட்டிருக்கிறது. ஒரு வெற்றிகரமான சமூக அமைப்பை ஈழத்தமிழர் மத்தியில் கொண்டு வருவதற்கான ஆரம்பப் பணியை 17 ஆண்டுகளுக்கு பின்னர் தந்திருக்கின்றனர். இது தொடரப்படுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுவதும் இதற்கு ஊடாக கடந்த காலங்களில் இழந்து போன அல்லது தோற்றுப் போன அரசியல் பக்கங்களை மீளமைக்க வேண்டிய பொறுப்பும் தமிழ் தரப்புக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதனை நோக்கி தமிழர் தரப்பு செயல்பட வேண்டும் அதுவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் தாய்மார்களின் போராட்டத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றது.

எனவே ஈழத்தமிழர் அரசியலில் பல சிவில் தரப்புக்கள் தோன்றி மறைந்துவிடும் நிலை காணப்படுகின்ற போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் காத்திரமான பங்களிப்பை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதனை கட்டிகாப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழருக்கானது. இலங்கை அரசாங்கங்கள் குற்றங்களை புரிந்தவர்களையும் தண்டிக்கப்பட வேண்டியவர்களையும் பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டு செயல்படுகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை நோக்கிய நீண்ட பயணத்தில் விளைவை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்களை நடந்து முடிந்த போராட்டமும் மகாநாடும் தந்துள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:யாழ்.தினக்குரல்)