August 31, 2026
அரசியல் கட்டுரைகள்

போரின் மத்தியில் இஸ்ரேலியரின் உபாயமாகும் மேற்குக்கரை ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனர் அழிப்பும்?

ஈரான் அமெரிக்கா போரின் மத்தியில் இஸ்ரேல் மேற்குகரையை முழுமையாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. காஸா மீதமான தாக்குதல் பெருமளவுக்கு முழுமை அடைந்த நிலையில் மேற்கு கரையை நோக்கி யூதக் குடியிருப்புகளை விஸ்தரித்து நிரந்தரக் குடியிருப்பாக மாற்றுவதுடன் எல்லையோர நாடுகள் மீது தாக்குதலை நடத்தி பாலஸ்தீன மக்களின் வாழ்விடங்களை முற்றாகவே அழித்த ஒழித்து வரும் இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் செயல்படுத்தி வருகிறது. ஈரான்-அமெரிக்க போரில் உலகம் விழிப்போடு அவதானித்துக் கொண்டிருக்கும் போது இஸ்ரேல்; மேற்குகரை மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை உறுதிப்படுத்தி வருகின்றது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கொடுக்கும் விலை அதீதமானதாக உள்ளது. பாரியளவில் மனித அவலம் நிகழ்ந்து வருகிறது. சிறுவர்கள் குழந்தைகள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இராணுவத் தாக்குதல்கள் பாலஸ்தீனர்களை கொல்வதிலேயே கவனம் கொண்டுள்ளதை காணமுடிகிறது.

ஜெருசத்திற்கு கிழக்கே உள்ள E1 பகுதியில் புதிய குடியேற்றக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் திட்டம் சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி மேற்கு கரையின் வடக்கு–தெற்கு தொடர்ச்சியை இல்லாமல் செய்து எதிர்கால பாலஸ்தீனிய அரசின் நிலப்பரப்பு தொடர்ச்சியை மிகவும் சிக்கலாக்கும் உபாயத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. ஜெருசலத்திற்கு கிழக்கே உள்ள E1 பகுதியில் புதிய குடியேற்றக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் திட்டத்தின் பிரகாரம் 1200 வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதலை இஸ்ரேலிய அரசாங்கம் அங்கீகர்த்ததை அடுத்து ஆக்கிரமிப்பு தீவிரமடைந்தது. E1 குடியேற்றத் திட்டம் மேற்கு கரையின் வடக்கு–தெற்கு தொடர்ச்சியை முற்றாகவே துண்டிக்கும் செய்முறையாக உள்ளது. இது எதிர்கால பாலஸ்தீனிய அரசின் நிலப்பரப்பு தொடர்ச்சியை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. இதனால் பாலஸ்தீனரின் நிலத் தொடர்ச்சி மட்டுமல்ல. குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள், விவசாய நிலங்களுக்கான உற்பத்தி தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனிய கிராமப்புற சமூகங்கள் இடம்பெயர்வதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின் ((Human Rights Watch) தகவலின் பிரகாரம் 2023 முதல் 2026 ஆகஸ்டில் வரை 107 பாலஸ்தீனிய குடியிருப்புக்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கமும் மேற்குக் கரையின் பகுதிகளை இணைக்கும் முயற்சிகளும் வேகமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. அது மட்டுமன்றி கிழக்கு ஜெருசலம் மற்றும் மேற்குக் கரையில் 36,973 யூதக் குடியிருப்பு அலகுகள் அங்கீகரிக்கப்பட்டதாகக் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குகரையின் முழுமையான பகுதி மீது தாக்குதலை நடத்தி பாலஸ்தீனர்கள் இருப்பிடங்களை அழித்துவிட்டு அவர்களை முகாம்களிலும் எல்லையோர நாடுகளிலும் குடியேற்ற இஸ்ரேல் திட்டமிடுகிறது. அது மட்டுமன்றி பாலஸ்தீனர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றிவிட்டு யூதர்கள் குடியேற்றப்படுகின்ற காட்சிகள் தினம் தினம் அரங்கேரிவருகின்றது. மேற்குகரை மீதான விமானத் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டு தரைவழிதாக்குதலை நிகழ்த்திவருகிறது. பாலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள், பொது கட்டிடங்கள் விமானத் தாக்குதல் மூலம் அழித்துவிட்டு தரைவழித் தாக்குதல் மூலம் யூதக் குடியிருப்புக்களை நிறுவி வருகிறது. மேற்கு கரை மீதான தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்திய இஸ்ரேல் பாலஸ்தீன குடியிருப்பாளர்களின் இருப்பிடங்களை அழிப்பதிலும் முனைப்புச் செலுத்தி வருகிறது.

பாலஸ்தீனர்கள் கைது செய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரதேசத்தின் பாலஸ்தீன குடியிருப்பாளர்களை முகாங்களுக்கு விரட்டி விட்டு முகாங்களில் இருந்து இளைஞர்களை கைது செய்வது அவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி அவர்களை இயங்க முடியாது சூழலுக்குள் தள்ளுவதும் இராணுவ நடவடிக்கையின் பிரதான அம்சமாக இஸ்ரேல் பின்பற்றி வருகிறது. யூதர்களின் குடியேற்றங்கள் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அரண்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பிரதேசம் மீது பாலஸ்தீன மக்கள் எழுச்சி பெற முடியாத சூழலில் தமது நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையை யூத இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் பாலஸ்தீனர்கள் முகாங்களில் இருந்து கொண்டு யூதக் குடியிருப்புகளின் மீதான தாக்குதல்களையும்; போராட்டங்களையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். அந்த நிலத்தின் மீது உரிமை கோரும் இயக்கங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி யூத இராணுவத்துக்கு எதிராக போராடி வருகின்ற நிலையை அவதானிக்க முடிகிறது. பாலஸ்தீன மக்கள்; தொடர்ச்சியாக காஸாவை விட்டு வெளியேறியது போன்று மேற்குக்கரையை விட்டு வெளியேற்றுவதற்கான உபாயங்களை முறியடிக்கும் விதத்தில் யூதர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடி வருகின்றனர். இராணுவ நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் கைதுகளையும் நிகழ்ந்திய போதும் பாலஸ்தீனர்;கள் தங்கள் நிலப்பரப்பிலிருந்து முழுமையாக வெளியேறாது போராடி வருகின்ற நிலையை உணர முடியும்.

பாலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளை அழித்தொழிக்கும் விதத்தில் ஐக்கிய நாடு சபையின் நிவாரணப் பணியை முடக்கும் நோக்கத்தோடு பணியாளர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. நிவாரணப் பணிக்காக அமைக்கப்பட்ட முகங்களை மூடுவதும் யூத இராணுவத்தின் பிரதான நடவடிக்கையாக விளங்குகிறது என ஐ.நா.வுக்கான நிவாரணப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் (UNRWA) தலைவர், அதன் கிழக்கு ஜெருசலம் முகாமை இஸ்ரேல் கைப்பற்றியதைக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல், அமைப்பை பலவீனப்படுத்தவும், அதன் மூலம் பாலஸ்தீனிய உரிமைகளை ஒழிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்று அவர் குறிப்பிட்டார். தற்காலிக ஆணையர் ஜெனரல் கிறிஸ்டியன் சாண்டர்ஸ் (Acting Commissioner-General Christian Saunders ஐ.நா. வளாகத்தின் அடிப்படை உரிமையை இஸ்ரேல் மீறியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கையினால் எதனையும் வெற்றி கொள்ள முடியாது என்றும், இந்த அமைப்பு எங்கும் செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதேசத்தின் மீது மக்களின் அன்றாட உணவு தேவைகளை நிறைவு செய்ய முடியாத நெருக்கடியை யூத இராணுவம் தமக்கு ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு வருவதோடு தனது நிவாரண முகாங்களை மூடுமாறும் வெளியேறுமாறும் நிப்பந்திக்கப்படுகின்ற விடயங்களை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் ஐ.நா.வின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏறக்குறைய உணவை ஆயுதமாக கொண்டு மேற்குகரையிலிருந்து பாலஸ்தீனியர்களை முழுமையாக வெளியேற்றுகின்ற நடவடிக்கையாகவே தெரிகிறது.

எனவே யூதர்கள் ஈரான்-அமெரிக்கா போரை பயன்படுத்திக் கொண்டு மேற்குகரையில் யூதக் குடியிருப்பை விஸ்தரிப்பதும் எல்லையில் இருக்கிற அரபு நாடுகள் மீது தாக்குதலை நிகழ்த்தி பாலஸ்தீனர்;களுக்கான ஆதரவை தடுப்பதும் உபாயமாகக் கொண்டு செயல்படுகின்றனர். உலகத்தின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பாலஸ்தீன மக்களையும் அவர்களது குடியிருப்கினையும் அழிப்பதில் இஸ்ரேல் முனைப்புச் செலுத்துகிறது. இதன் மூலம் மேற்குகரையை முழுமையாக கைப்பற்றி யூதக் குடியிருப்புகளை உத்தரவாதப்படுத்த யூத ஆட்சியாளர்கள் முயலுகின்றனர்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)