தென்னிலங்கை அரசியலில் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்; நாமல் ராஜபக்சா கைது செய்யபட்டதை அடுத்து தென் இலங்கையில் கொதிநிலையை எதிர்கட்சியின் தரப்பினர் ஏற்படுத்த முயலுகின்றனர்;. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் தென்னிலங்கையின் கைது திருவிழாவாக மாறிவிட்டது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களை நிறைவு செய்யும் தறுவாயில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் பல கைதுகளை நிகழ்த்தியுள்ளது. ஆனால் அவற்றின் விளைவுகள் ஏதுமற்றதாக விளங்குகிறது. அத்தகைய கைதுகளில் எதுவும் போர் குற்றச்த்திற்காகவோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைக்கானதோ அல்ல. அதனால் தமிழ் மக்கள் தென் இலங்கை கைதுகள் பற்றி எத்தகைய வெளிப்படுத்துகையும் இன்றி காணப்படுவது யதார்த்தமானதே. இக் கட்டுரையும் நாமல் ராஜபக்சாவின் கைது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கும் கட்சி அரசியல் இழுபறியை உரையாடுவதாக உள்ளது.
முதலாவது நாமல் ராஜபக்சாவின் கைது மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா மற்றும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கைது செய்யப்படுவதும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் சிலர் சிறையில் அடைக்கப்படுவதும் நீதித்துறையின் செயல்பாடாக அரங்கேறியுள்ளது. இது வீழ்ச்சி அடைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவை மீள நிலைநிறுத்துவதற்கு இத்தகைய கைதுகள் அவசியமானது என ஆளும் தரப்புக்கு உணருகிறது. கைதுகளின் விளைவுகள் அரசியல் ரீதியாக மக்களின் ஆதரவை திரட்டுவதற்கானதாக மட்டும் காணப்படுகிறதாகத் தெரிகிறது. கைதுகள் மீதான விசாரணைகளும் வழக்குகளும் எந்தவித மீள்; நிதிச் செலுத்துகையையோ, ஊழலில் நிகழ்த்தப்பட்ட பாரிய நிதியையோ மீள கையளிப்பதற்கான எந்தகைய செய்முறையும் இதுவரை கொண்டிருக்கவில்லை. மாறாக ஆளும் தரப்பு மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுகிற நோக்குடன் எதிர் தரப்பை சிறைச்சாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ள முயலுகிறது. அடுத்தவரும் தேர்தலுக்கு அரசியல் முதலீடாக்க திரட்ட திட்டமிடுகிறது. ஒரு வகையில் தென்னிலங்கை அரசியல் தரப்புகள் தமக்கான அரசியல் முதலீடுகளை மாறி மாறி செயல்படுத்துவதற்காக வெற்றிகரமான ஓட்டத்தை நிகழ்த்தி வருகின்றர்.
இரண்டாவது தென் இலங்கையின் அரசியல் சூழலை மாற்றுவதற்காக எதையும் ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதை கடந்த இரண்டு வருடங்கள் ஆட்சி தெளிவுபடுத்தியுள்ளது. திறைசேரியின் பற்றாக்குறை அதன் மீதான திருட்டுகள் தொடர்கின்ற அதே சந்தர்ப்பத்தில் சாமானிய மக்களின் நிலை அவ்வாறே காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஆட்சிகள் எவ்வாறு இயங்கியதோ அதேபோன்று ஆட்சி மாற்றக் காலமும் நிகழ்ந்து வருகிறது. சமானியனது வாழ்க்கை முறையில் மேலும் சுமைகளை அதிகரித்த நடைமுறையே காணப்படுகிறது. அவர்களது வாழ்க்கை முறையில் எத்தகைய தாக்கத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை கைது செய்வதற்காக அரசியல் அரங்கை ஜே.வி.பி. கட்டமைத்திருக்கின்றதாகவே தெரிகின்றது. இலங்கை தனது சொந்த நிதியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக கூறிக் கொண்டாலும் சாமானிய மக்களின் போசாக்கின்மை வறுமை வரிச்சுரண்டல் எல்லைற்ற விதத்தில் தொடர்கின்றது. செல்வந்தர்களைப் பாதுகாக்கும் அதே வேளை சமானியனது இருப்பு கேள்விக்கு உட்பட்டதாக மாறிவருகிறது. நாடு எத்தகைய மாற்றத்தையும் அடைந்ததாக தெரியவில்லை. அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட்ட ஆளுந்தரப்பு நாட்டுக்குள் விஜயங்களையும் வெளிநாடுகளுக்கான அரச முறைப் பயணங்களையும் அதே வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. ரயில்வே கடவைகளை சீரமைக்க பார்வையிடுவதும் கோயில் திருவிழாக்களில் தரிசனத்திற்கு பிரவேசம் செய்வதும் அமைச்சுகளின் பிரதான பணியாக மாறிவிட்டது. இத்தகைய நிகழ்வுகள் அனைத்திலுமே ஜே.வி.பி. தரப்பினர் காட்சி அளிப்பதும் சைகை காட்டுவதும் அதனை வலைத்தளங்களில் பதிவிடுவதும் அரசியல் மரபாக மாறிவிட்டது. இதுவா முறைமை மாற்றம் எனக கேட்கத் தோறன்றுகிறது.
மூன்றாவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை காணாமல் போனோர், காணி ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களை வெளிப்படுத்துவதோடு வீதி வீதியாக தமது உறவுகளை தேடும் துயரம் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஜே.வி.பி. இன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சப்பை கட்டுக்கு வார்த்தையாலங்களை கடந்த இரண்டு வருடங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்தார்களே அன்றி நடைமுறையில் எந்த மாற்றத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறி விட்டு போர் குற்றவாளிகள் தாம் இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் மற்றும் இனவாதமின்மை என்ற சொற்களின் பிரயோகம் மாறிவிட்டது. அப்பாவித் தமிழ் மக்கள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்ததை போர் குற்றம் இல்லை என்ற விவாதிக்கும் நிலை ஜே.வி.பி.இன் ஆட்சியிலும் தொடர்கிறது. இது ஜே.வி.பி.இன் பங்களிப்பும் போரில் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதுடன் நீதி என்பது சாத்தியமற்றதென்பதை தெளிவுபடுத்துகிறது. இது மிக மோசமான அரசியல் களமாக இலங்கையை மாறியிருப்பதைக் காட்டுகிறது. ஊழல்வாதிகளை கைது செய்வதே இந்த அரசாங்கத்தின் ஆட்சித்துறையின் பணியாக உள்ளது. கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் காணாமல் போன தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் சாத்தியமற்றது என்பது உணர்த்துகிறது.
நான்காவது தென் இலங்கையின் அரசியல் கொதிநிலை அதிகாரத்திற்கான போட்டி என்பதே அன்றி இலங்கைத் தீவின் மீள் எழுச்சிக்கான போட்டியாக தென்படவில்லை. எதிர்க்கட்சிகளின் வெளிபாடும் ஆளுங்கட்சியின் பதிலும் ஒன்றையே வலியுறுத்துகிறது. புதிதாக எதனையும் ஏற்படுத்தவில்லை. மாறாக தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு சில மாற்றங்களை செய்ய முயற்சிக்கின்ற போது அதனை எல்லா தரப்பும் புதியதென்றும் முறைமை மாற்றம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனை கடந்து ஜே.வி.பி. ஆக்கபூர்வமான இலங்கை தீவை கட்டி எழுப்ப முடியாது என்பதை இரண்டு வருடங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறது. முடிந்த இரண்டு வருடங்களில் ஊழல் வாதிகள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது நீதித்துறை வழக்குகளை முன் வைப்பதற்கு வாய்ப்பான ஒரு களத்தை ஜே.வி.பி. அரசாங்கம் தந்திருக்கிறது. அதனைக் கடந்து எதுவும் நிகவில்லை. மாறாக கோடிக்கணக்கான நிதியை ஒரு சில குடும்பங்கள் அனுபவிப்பது என்பது இலங்கை தீவின் நியதியாகிவிட்டது. பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞரான தோமஸ் பிக்கொட்டி( Thomas Piketty) முதலாளித்துவம் பற்றி விவாதிக்கின்ற போது 99 சதவீதமானவர்களின் உழைப்பை ஒரு சதவீதமானவர்கள் அனுபவிக்கின்ற பொருளாதார நிலை ஒன்றை காணமுடிகிறது என குறிப்பிடுகின்றார். இதில் மாற்றம் செய்வதே 21ம் நூற்றாண்டின் சமத்துவம் என்பது பிக்கொட்டியின் உரையாடல். அதனையே தான் இலங்கையிலும் ஜே.வி.பி. ஆட்சியாளர்களும் முன்னய ஆட்சியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர். பாரிய மாற்றங்கள் எதனையும் நிகழ்த்த முடியாத நிலையில் அடுத்து வரும் ஆட்சியாளர்களை சிறையில் அடைப்பதன் மூலம் மாற்றங்களை அடைய முடியுமா என்பது பிரதானமான கேள்வியாகும். இதே சட்ட வரம்பும் நீதி அமைப்புகளும் கடந்த காலத்திலும் இலங்கை தீவில் ஆட்சி முறையின் அங்கங்களாகவே இருந்தது. அதனை தான் புதிய ஆட்சியாளர்கள் இடதுசாரி ஆட்சியாளர்கள் முறைமை மாற்றத்துக்குரிய ஆட்சியாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் பின்பற்றுகிறார்கள். இது இலங்கை தீவுக்கு எத்தகைய விளைவையும் தந்துவிடாது. 1949 ஆம் ஆண்டு சீனாவின் மாவோ-சேதுங்ன் புரட்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 1959 ஆம் ஆண்டு கியூபாவின் புரட்சி கியூபாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அத்தகைய மாற்றங்களுக்கான செய்முறையே இலங்கை தீவுக்கு அவசியமானது. தேசிய மக்கள் சக்தி பொது ஜன பெரமுன போன்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி போன்றும் ஓர் அரசியல் கட்சி மட்டுமே. அது புரட்சிகரமான அமைப்புக் கிடையாது.
ஐந்தாவது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை சமானிய சிங்கள மக்களிடம் ஏற்படவில்லை. மாறாக அரசியல்வாதிகள் மத்தியில் குழப்ப நிலை ஒன்று தோன்றியிருக்கின்றது. அவர்களது பிரச்சாரமும் அவர்களது ஊடக வளமும் பாரிய நெருக்கடி ஒன்றை தென்னிலங்கை எட்டப் போவதாக உரையாடுகிறன. ஆனால் எதார்த்தமாக சாதாரண மக்களிடம் அத்தகைய எதிர்ப்புணர்வுகளை பெரிய அளவில் கொண்டு செல்ல முடியாதவர்கள் விளங்குகின்றனர். இது எதிலும் எதார்த்தத்துக்கு ஒத்துப் போகக் கூடிய விதத்திலோ அல்லது மக்களின் துயரத்தில் இருந்து நிகழ்ந்திருக்கிறதோ அல்ல. மறுபக்கம் இது தென்னிலங்கையின் கட்சி அரசியல் போட்டியை மட்டுமே பிரதிபலிக்கிறது. இலங்கை பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் வாதிகளின் குழப்பமே அன்றி தேசத்தின் மாற்றத்திற்கான குழப்பம் கிடையாது.
எனவே நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கையின் அரசியல் போட்டியின் பிரதிபலிப்பே அன்றி முழுத் தீவுக்கான குழப்பத்துக்கு உட்பட்டது அல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் அடுத்து வரும் ஆட்சியாளர்களை சிறையில் அடைப்பதன் மூலம் ஆட்சியை முழு நீள ஆட்சியாக மாற்ற திட்டமிடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் சீன பாணியிலான ஒரு கட்சி அரசியலை நோக்கி ஜே.வி.பி. நகர்கிறதா என்ற சந்தேகத்தை ஆழப்படுத்துவதாகவே தெரிகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
