பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், ஆட்சியில் மக்களின் பங்களிப்பை நேரடியாக பேணுவதற்காகவும் திருப்பி அழைக்கும் உரிமை என்ற எண்ணக்கரு பிரயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலனுக்கு எதிராக செயற்படுகையில் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமை (Right to Recall) பயன்படுத்தப்படுகின்றது. தேசிய மட்டத்திலும் உள்ளுர் நிர்வாக மட்டத்திலும் சர்வதேச நாடுகள் சில பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, அமெரிக்க, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இத்திருப்பி அழைக்கும் உரிமை பயன்பாட்டில் உள்ளது. இவ் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் அரசியல் விவாதங்கள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தப் பரிந்துரைகளில் திருப்பி அழைக்கும் உரிமை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
சுவிற்சர்லாந்து மாதிரி:
திருப்பி அழைக்கும் உரிமை மாதிரியில், சுவிற்சர்லாந்தில் முதன்மையான விவாதத்தைப் பெறுகின்றது. எனினும் இம்மாதிரியும் சில தனித்துவமானதாக பின்பற்றப்படுகிறது. சுவிற்சர்லாந்து செயலூக்கமான கருவியாக இல்லாமல், ஓர் அரசியலமைப்பு பாதுகாப்பு அடைப்பான் (Security Valve) என்ற அடிப்படையில் சுவிஸ் அரசியலில் பயன்படுத்தப்படுகிறது. மக்களால் தேர்தெடுக்கும் பிரதிநிதியை பதவியிறக்கும் முறை என்பது அடிப்படையில் ஒரு செயலற்ற ஆயுதமாக உள்ளது. நடைமுறையில் சுவிஸ் குடிமக்கள் ஒரு முழுமையான பதவியிறக்கத்தை அரிதாகவே மேற்கொள்கின்றனர். மாறாக கன்ரன் (Cantons) அரசியலமைப்புகளில் அது இருப்பதே ஒரு சக்திவாய்ந்த தடுப்பாகச் செயல்பட உதவுகிறது. கன்ரன் மற்றும் நாடாளுமன்றங்களும் நிர்வாகங்களும் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அவற்றை முழுமையாகக் கலைப்பதற்கான இறுதி சட்ட அதிகாரம் பொதுமக்களிடம் உள்ளது என்பதை அறிந்து, அவற்றை மிகவும் பொறுப்புள்ளவையாக வைத்திருக்கும் ஓர் அரசியலமைப்பு பாதுகாப்பு அடைப்பானாக செயல்படுகிறது.
அரசியல் ஒருமித்த கருத்து மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாத்தல் -சுவிஸ் சமூகம் அரசியல் நிலைத்தன்மை, கணிக்கக் கூடிய தன்மை மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றை ஆழமாக மதிக்கிறது. முழுமையான திரும்பப் பெறுதல் என்பது சுவிஸ் மக்களால் மிகவும் சீர்குலைக்கும் ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது முழு சட்டமன்ற அல்லது நிர்வாக அமைப்பையும் கலைத்து, உடனடி அரசியல் நெருக்கடி மற்றும் திடீர் தேர்தல்களைத் திணிக்கிறது. எனவே, குடிமக்கள் திடீர் அமைப்புரீதியான அதிர்ச்சிகளை விட நிறுவனத் தொடர்ச்சியை விரும்பி, இதை ஒரு முழுமையான கடைசி முயற்சியாகக் கருதுகின்றனர்.
தனிநபர் பழிக்கு மேலான கூட்டுப் பொறுப்பு -அமெரிக்க அல்லது பிரிட்டி~; மாதிரிகளில் ஒரு ஊழல் அரசியல்வாதியைத் தனியாகக் கண்டறிந்து பதவியிலிருந்து நீக்க முடியும் என்பதற்கு மாறாக, சுவிஸ் கன்ரன் அமைப்பு முழுமையான பதவி நீக்கத்தை (முழு அமைப்பையும் கலைத்தல்) மட்டுமே அனுமதிக்கிறது. சுவிஸ் வாக்காளர்களின் மனோநிலையில்,ஆட்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். எனவே, குடிமக்களின் அரசியல் வாழ்க்கை ஒரு அமைப்பு சார்ந்த பார்வையைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, முழு அமைப்பையும் பொறுப்புக்குள்ளாக்குகிறார்கள். என்ற தனித்துவமான உரையாடல் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசியல் கலாச்சாரம், பிரிப்புகள் சார்ந்ததாக இல்லாமல், தனித்துவமான முறையில் பிரச்சினை சார்ந்ததாக உள்ளது. தங்களின் அன்றாட குடிமை வாழ்வில், சுவிஸ் குடிமக்கள் அரசியல்வாதிகளை அல்ல, சட்டங்களை மாற்றுவதையே விரும்புகிறார்கள். அதற்குரிய பலமான நேரடி ஜனநாயக வழிமுறைகளை அரசியலமைப்பில் கொண்டுள்ளார்கள்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம் – சில பஞ்சாயத்து (Panchayat) பதவிகளுக்கு திரும்ப அழைக்கும் (Recall) நடைமுறையைக் கொண்டுள்ளது. சத்தீஸ்கர் – சில உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் உள்ளன. பீகார் – உள்ளாட்சி அமைப்புகளின் சில பதவிகளுக்கு மாநிலச் சட்டத்தின் கீழ் பதவி நீக்க நடைமுறைகள் உள்ளன.
இலங்கையில் திருப்பி அழைக்கும் உர்மைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் 2015/2016 காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழு(Public Representations Committee on Constitutional Reform – PRC) நாடெங்கிலும் உள்ள மக்களிடம் கருத்துக்களைப் பெற்றது. அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், இலங்கையின் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதிகள் கட்சி மாறினாலும் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டாலும் அவர்களைப் பதவிக்காலம் முடிவதற்குள் நீக்குவதற்கான Right to Recall (திருப்பிஅழைக்கும் உரிமை) இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பல சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளராட்சி மன்றங்கள் ஆகிய மூன்று மட்டங்களிலும் 20% வாக்காளர்கள் கையெழுத்திட்டுத் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரினால், ஒரு பிரதிநிதியைத் திருப்பி அழைப்பதற்கான உள்ளுர் வாக்கெடுப்பை (Local Referendum) நடத்தலாம் என்ற மாதிரிப் பரிந்துரைகள் இதில் விவாதிக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் போது, மக்களாணை இழந்த மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
(Source: Shroff.B, (2025), The Right to Recall in India: Deepening Democracy or Destabilizing Governance? A Critical Analysis, International Journal of Humanities and Arts Vol. 7, Issue 1, Part F,Pp 443-450,online.)
