தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இராஜதந்திர அனுபவத்தில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் என்பதை இப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியை அடையாளம் காணுகின்ற நோக்கில் இப்பகுதி உரையாடப்படுகிறது. குறிப்பாக ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்(NPP) பிரதானிகள் ஐவர் அடங்கிய குழுவினர் ஐந்து நாள் (27.9.2026-01.10.2026) இந்திய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியின் அழைப்பின் பெயரில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ரில்வின் சில்வா தலைமையில் இரண்டாவது இந்திய விஜயம் எனத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனைவிட ஜே.வி.பி. கட்சியினர் மற்றும் ஜனாதிபதி அநுரா குமாரதிஸாநாயக்கா பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆகியோர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கட்சியின் கொள்கை வகுப்பிலும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பிலும் அதிக கரிசனை கொள்ளும் ஜே.வி.பி.இன் பொதுச் செயலாளர் இந்திய ஆளும் தரப்பினால் அதிகம் அணுகப்படுபவராக உள்ளார். ஜே.வி.பி. குழுவினர் இந்தியாவுக்குமேற்கொண்டிருக்கின்ற விஜயத்தை சம்பிருதாயமானதாக கருதிவிட்டுச் செல்ல முடியாது என்றே தோன்றுகிறது. அதனை இராஜதந்திர ரீதியில் புரிந்து கொள்வது பொருத்தப்பாடுடையதாக தெரிகிறது. இது இருபக்க இராஜதந்திரத்தின் பரிமாணமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
ரில்வின் சில்வா தலைமையிலான பிரதானிகள் குழாம் மேற்கொண்ட விஜயம் தொடர்பில் இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கும் போது பா.ஜ.க – ஜே.வி.பி. இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல், இரு கட்சிகளினதும் அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் என பா.ஜ.க.வின் வெளியுறவுத்துறை செயலர்; விஜய் சௌதை வாலே வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் தெரியவருகிறது. ரில்வின் சில்வா தலைமையில் ஜே.வி.பி.மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா, பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா, மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேச விவகாரப் பிரிவு உறுப்பினர் கல்பனா மதுபா~pனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில், பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச் செயலாளர் பி. எல். சந்தோ~; உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஜே.வி.பி. குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் புதுடில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோருடனும் கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையகத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ள ஜே.வி.பி. குழுவினர், இந்திய பாராளுமன்றம் மற்றும் டெல்லி பா.ஜ.க. மாநில அலுவலகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 5-12.2026 வரையான காலப்பகுதியில் பொதுச் செயலாளர் உட்பட்ட குழுவினரது விஜயத்தின் போது இந்திய கலாசார உறவுகளுக்கான பேரவை (ICCR)இன் சிறப்பு விருந்தினர் அழைப்பின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளர்ச்சி, தொழில்நுட்பம் சமூகநல அனுபவங்களை அறிதல் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்திய துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்~; சங்கவி கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடனான சந்திப்புக்கள் நிகழ்த்தியிருந்தனர். மேலும் ICCR மூலமான அரசியல் வளர்ச்சியின் தொடர்புகளையும் இருநாட்டு வளர்ச்சி வாய்ப்புகளையும் சமூகநலத் திட்டங்களையும், கல்விக்கான ICCRபுலமைப்பரிசில்கள் Digital ID பேரிடர் மேலாண்மை, சக்திவளம், வேளாண்மை, நகர்புற அபிவிருத்தித் திட்டங்கள் விண்வெளி மையங்கள் மற்றும் Vizhinjam துறைமுகம் என்பவற்றை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விஜயத்தின் முக்கியத்துவமாக அமைந்திருந்தது. ஜே.வி.பி.இன் தலைமைக்கும் இந்தியாவுடன் நேரடி உயர்மட்ட தொடர்பை ஏற்படுத்திய முக்கியமான முதல் பயணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனாலும் இத்தகைய விஜயங்களுக்கு பின்னால் உள்ள இராஜதந்திர முக்கியத்துவத்தை உரையாட வேண்டிய அவசியப்பாடு இலங்கைத் தமிழர் தரப்பில் காணப்படுகிறது. காரணம் இலங்கைத் தமிழர் சார்ந்த அரசியலோடும் அதை கையாளுகின்ற விதத்திலும் ஜே.வி.பி. இன் இந்தியப் பயணங்கள் முக்கியம் வாய்ந்ததாக உள்ளன. அதனடிப்படையில் தற்போதைய இந்தியப் பயணத்தின் முக்கியத்துவத்தை விரிவாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது தென்னிலங்கை இந்தியாவோடு முரண்படக் கூடாது என்பதில் கவனம் கொள்வது மட்டுமின்றி இந்தியாவை கையாளுவது எப்படி என்ற கலையை ஆழமாக புரிந்து வைத்துள்ளது. ஈழத்தமிழர்கள் சென்னையுடனும் முழுமையாக உறவை பேணாத நிலையில் காணப்படுகிற போது கொழும்பு சென்னையை கருத்தில் கொள்வதை விட புதுடில்லியோடு நெருக்கமான உறவை தொடர்ச்சியாக பின்பற்றுவதுதன் மூலம் தமது நலனுக்கு சாதகமானதென கருதி செயல்படுகிறது. இந்தியாவின் இருப்பும் பலமும் புதுடெல்லி சார்ந்தது என்பதை வரலாறு முழுவதும் அடையாளம் கண்ட கொழும்பு அதனை இராஜதந்திர நகர்வாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் அதிகாரத்தை நோக்கிய நகர்வது தொடர்ச்சியானதாக அமைகின்ற போது தவிர்க்க முடியாமல் உறவின் முக்கியத்துவம் வலிமையானதாக மாறுகிறது. அத்தகைய உறவின் பாரம்பரியத்தை இலங்கை ஆட்சியாளர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்தனர். அதனையே ஜே.வி.பி. அரசாங்கமும் புரிந்து கொண்டது மட்டுமின்றி செயல்படுவதிலும் கரிசனை கொண்டு விளங்குகிறது. பிரச்சினைகளை முன்னிறுத்தாது பயணங்களை மேற்கொள்ளது உரையாடல்களை செய்வது கைலாகு கொடுப்பது கட்சி சார்ந்தும் அனுபவம் சார்ந்து சந்திப்புகளை மேற்கொள்வது முக்கியஸ்தவர்;களோடு உரையாடுவது கட்சியின் பிரதானிகளை அழைத்துச் செல்வது போன்ற அம்சங்கள் இராஜதந்திர பரிமாற்றங்களாக காணப்படுகிறது. இதன் மூலம் உடன்படிக்கைகளும் கட்சியின் கட்டமைப்பு பற்றிய அம்சங்களை கற்றுக் கொள்வதும் இந்தியாவின் ஆட்சி முறை பற்றி தெரிந்து கொள்வதும் நிகழ்கிறதாக வெளிக்காட்டப்படுகிறது. ஆனால் அதன் மூலம் பரஸ்பரம் இரு தரப்புக்கும் நம்பிக்கை வலுவடைய காரணமாகிறது. இதனால் உறவு ஆழமாகிறது. தெளிவான ஒரு புரிந்துணர்வு மேற்கொள்வதற்கான முயற்சி நிகழ்கின்றது.
இரண்டாவது ஜே.வி.பி. ஐ. பொறுத்தவரை இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலமே தனது அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும் என கருதுகின்றது. இலங்கை தீவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பது தென் இலங்கையின் ஆட்சியாளர்களின் வெளியுறவுக் கொள்கையில் தங்கியிருக்கின்றது என்பதை கடந்த காலம் அனுபவம் முழுவதும் உணர்த்தி நிற்கிறது. அதனால் இந்தியாவை அணுகுவதன் மூலமும் கையாளுவதன் மூலமும் ஆட்சியின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதோடு எதிர்கால அரசியலுக்கான நிலைப்படுத்தலை சாத்தியப்படுத்த முடியும் என கணக்கு வைத்துள்ளது. ஆகவே ஜே.வி.பியிருடைய ஆட்சி நீடித்து நிலையானதாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவுடனான உறவை நல்லுறவாக்குவது அவசியமானதாக இருக்க வேண்டும். அதனுடைய ஓரங்கமாகவே இந்தியாவை தொடர்ச்சியாக அணுகுவதும் உரையாடுவதும் உள்நாட்டு நிலைமைகள் தொடர்பில் கருத்துரைப்பதும் பி.ஜே.பி. கட்சியின் கட்டமைப்பு சார்ந்த விடயங்களையும் மற்றும் ஆட்சியதிகாரம் பற்றிய அம்சங்களையும் கற்றுக் கொள்ள விஜயம் செய்வதாக கூறிக் கொள்கிறது. அவ்வாறு கூறிக்கொண்டு இந்தியாவை தன்னுடைய பலமான நட்பு சக்தியாக நிலைப்படுத்துவதற்கு ஜே.வி.பி.முனைகின்றது.
மூன்றாவது இந்தியா பலமான நட்பு சக்தியாக தென்னிலங்கை ஆட்சிக்கு கை கொடுக்கும் போது பிராந்திய களத்தை பாதுகாக்க திட்டமிடுவதாகவே தெரிகிறது. பி.ஜே.பி. ஜே.வி.பி.ஐ தொடர்ச்சியாக அணுகுவதில் முனைப்புக் கொள்கிறது. இந்தியாவை திருப்திப்படுத்துவதன் மூலம் உள்நாட்டை விரும்பிய விதத்தில் கையாளலாமென ஜே.வி.பி. கருதுகிறது. இலங்கைக்குள் ஒரு கட்சி ஆட்சி முறையை உள்ளடக்கினாலும் ஊழல் ஒழிப்புகளை தீவிரப்படுத்தினாலும் இந்தியாவின் நட்பு சக்திகளை சிறையில் அடைத்தாலும் இந்தியாவை அணுகுவதன் மூலம் அவற்றின் மீதான இந்திய கரிசனையை தவிர்த்துக் கொள்ள முடியும் என ஜே.வி.பி எண்ணுகிறது. அதற்கு அமைவாகவே இந்திய நட்பு சக்தியான பொதுஜனப் பெரமுனவையும் அதன் அரசியல் வாரிசுகளையும் சிறையில் அடைத்து விட்டு இந்தியாவின் நெருக்கடியை தவிர்ப்பதற்கு இந்தியாவுடன் நட்பு பாராட்ட அதிகம் விளைவதாகவே தெரிகிறது. அதற்காகவே இந்தியா நோக்கிய அனுசரிப்புகளும் விஜயங்களும் அமைகின்றன. குறிப்பாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோ~; ஜா ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் சந்திப்பதும் சமதளத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுடன் உரையாடுவதும் வழமையான அரசியல் செய்முறைக்கு பின்னால் இருக்கும் முக்கியமான விடயங்களாகவே தெரிகின்றது.
நான்காவது இலங்கைத் தமிழருக்கும் புதுடில்லிக்கும் உள்ள முரண்பாட்டை கொதிநிலையில் வைத்துக் கொள்வதன் மூலம் தமிழரது அரசியல் பிரச்சினைக்கு தீர்வற்றதாக்க முடியும் என ஜே.வி.பி.கருதுகிறது. அல்லது புதுடில்லி இலங்கைத் தமிழர் பற்றிய அரசியலை முன்னெடுக்க முயலாது செயல்பட வேண்டுமாயின் தென் இலங்கை புதுடில்லியுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வது அவசியம் என்பது அவர்களுக்கு தெரிந்த விடயமே. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதனையே 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கைக்கு பின்னர் வெற்றிகரமாக செயல்படுத்தியவர். உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு கிழக்கு தற்காலிகம் என்பதை ஜே.ஆர். வரைபில் கொண்டுவந்தார். அதனை ஜே.வி.பி. 2007 இல் நீதி மன்ற நடைமுறை மூலம் முற்றாகவே இல்லாமல் செய்தது. இதனாலேயே புதுடில்லியை ஜே.வி.பி. இறுக்கமாக பிடித்துக் கொள்வதன் வாயிலாக இலங்கைத் தமிழரது அரசியலை உள்நாட்டுக்குள் கையாளுவதற்கான உத்தரவாதத்தை சாத்தியப்படுத்த முனைகிறது.
எனவே ரில்வின் சில்வா தலைமையிலான பிரதானிகள் குழுவினது இந்திய விஜயம் இந்தியாவின் ஆட்சி முறை பற்றியோ கட்சி அரசியல் பற்றிய விடயங்களை கற்றுக்கொள்வதைவிட இந்தியாவை அரவணைப்பதன் மூலம் நிலையானதும் நீடித்ததுமான ஆட்சியையும் ஈழத்தமிழர் அரசியலையும் கையாளலாம் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவை எப்படி கையாளுவது என்பது தென் இலங்கைக்கு தெரிந்ததே. தென் இலங்கையின் அணுகுமுறையை இந்திய தரப்பு வரவேற்கும் ஒன்றாகவே உள்ளது. இந்தியாவை திருப்திப்படுத்தினால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை கொள்ளுகின்ற மனோநிலை கொண்டவர்கள். தென் இலங்கையில் நடவடிக்கைகளை எந்தவித விசாரணையுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். அதன் விளைவுகளை அடுத்துவரும் ஆட்சியாளர்கள் அனுபவிப்பதுடன் விமர்சனத்திற்கு உள்ளாவது மட்மே நிகழும். அவ்வாறான கொள்கை வகுப்பினால் இரண்டு பிரதமர்களை இந்தியா இழந்திருந்ததை மறுக்க முடியாது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி தினக்குரல்)
;
