August 31, 2026
அரசியல் கட்டுரைகள்

காணாமலாக்கப்பட்டோரின் போராட்டமும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் முகத்திரையும்?

ஈழத்தமிழரின் அரசியல் 2009 வரையான போர் ஏற்படுத்திய துயரங்களின் நீட்சி ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணப்படுகிறது. புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் கொண்ட விருப்பு மற்றும் நம்பிக்கை படிப்படியாக அகன்று போகின்ற நிலை ஒன்றை தொடர்ச்சியாக கண்டு கொள்ள முடிகிறது. இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் தென்னிலங்கை ஆட்சியும் ஆளும் வர்க்கமும் ஈழத்தமிழர்க்கு எதிரான அழிப்பையும் வன்முறையையும் அரசியலாக கொண்டு செயல்பட்டதன் நிகழ்ச்சியை ஜே.வி.பி. உம் அரங்கேற்றி வருகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் 25.08.2026 நிகழ்த்திய போராட்டத்தை ஜே.வி.பி. அரசாங்கம் ஒடுக்கியவிதம் அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியிருந்தது. இக்கட்டுரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஏற்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேட முயலுகின்றது.

ஜே.வி.பி.அரசாங்கம் உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை யாழ்ப்பாணத்தில் 25.08.2026 இல் நிகழ்த்தியது. புதிய அரசாங்கம் அதனை ஒரு சாதனையாக அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக நிகழ்த்தி வரும் போராட்டம் எதிரொலியாக 30.08.2026 இல் யாழ்ப்பாணத்தில் மாகாநாடு ஒன்றை நிகழ்த்த தீர்மானித்துள்ளனர். இதே நேரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கேட்போர் கூட்டத்தில் நடந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திற்கான நிகழ்வினை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை நிகழ்த்தியிருந்தனர். அப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கை மிக மோசமான மனித உரிமை மீறலாகவே தெரிகின்றது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் மனோநிலை எப்படியானது என்பதை கண்டு கொள்ள அத்தகைய சம்பவங்கள் சான்றாக தெரிகிறது. இதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது அடிப்படை உரிமை, மனித உரிமைகள் மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றி அதிக உச்சாடனங்களைச் செய்யும் ஜே.வி.பி. அரசாங்கம்; காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கொள்ளும் உலகளாவிய தினத்தை எதிர்த்து போராட்டத்தை நிகழ்த்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிக மோசமானதாகவே கண்டுகொள்ள முடிந்தது. இது உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், சமூக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல்–சமூகப் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டியது. அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான நடவடிக்கை ஒன்றும் ஈழத்தமிழ் மத்தியில் போராடும் மக்களுக்கு புதியதல்ல. ஆனாலும் ஜே.வி.பி. அரசாங்கம் போராடுவதற்கான உரிமையையும் போராடுவதற்கான வாய்ப்பையும் தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கின்ற என்ற துயரத்தை அத்தகைய காட்சிகள் வெளிப்படுத்தி இருந்தன. போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த ஜே.வி.பி.தரப்பினர் தற்போது போராட்டத்தை தடுக்கும் ஆட்சியாளர்களாக மாறியுள்ளனர். இது வடக்கு கிழக்கில் எவ்வகையான அணுகுமுறைகளை அரசாங்கம் பின்பற்றுகிறது என்பதற்கு மிக நேர்த்தியான சாட்சியாக பதிவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக போராடுவது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவே அரசியல் கோட்பாடுகளும் நடைமுறைகளும் சர்வதேச விதிகளும் கூறுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்தை முன்னெடுப்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய அடிப்படை உரிமையாகும். அத்தகைய உரிமைக்கான போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முயல்வது ஜே.வி.பி.அரசாங்கத்தின் மிக மோசமான அணுகுமுறையாகவே தெரிகின்றது.

இரண்டாவது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் முன் வைத்திருக்கும் அறிக்கைகளும் அது சார்ந்த விவாதங்களும் அதிக போலித் தன்மை வாய்ந்தது என்பதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர். ஐக்கிய நாடு சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட Office on Missing Persons (Establishment, Administration and Discharge of Functions Act. No. 14 of 2016)  சார்ந்த சட்டமூலம் 11 ஓகஸ்ட் 2016 இல் பராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது. இதன் பிரகாரம் அமைந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் முன்வைக்கும் அறிவிப்புகள் ஆதாரங்களோடும் உண்மைத் தன்மை பொருந்தியதாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் எத்தகைய உண்மை தன்மைகளையும் வெளிப்படுத்தாமல் நிவாரணம் வழங்குவது என்றும் 31 பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும் தமது விருப்பிற்கேற்ப தகவல்களை வெளிப்படுத்த அரசாங்கத் தரப்பு முயலுகின்றதாக காணாமல் ஆக்கப்பட்டோர் தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதன் மீது கேள்வி எழுப்ப வேண்டிய கடப்பாடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரித்துடையது. அதற்கு பதிலளிக்க வேண்டிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதன் மூலம் மாற்றத்தை செய்து விட்டதாக அறிவிப்புகளை வெளியிட முயல்கிறதே அன்றி மக்களுக்கு பதிலளிக்க தயங்குகிறது. முன்னைய ஆட்சியை விட ஜே.வி.பி. காணாமல் ஆக்கப்பட்டவருக்கு எல்லா வகையான ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறிக்கொள்ள மட்டுமே அரசாங்கம் முயல்கிறது. ஆனால் அவற்றின் நியாயத்தன்மை இல்லை என்றும் ஆதாரம் அற்ற செய்முறைகளை கொண்டிருக்கின்றது என்றும் முன்னே அரசாங்கங்களைப் போன்று ஜே.வி.பி. போலிதனமான நகர்வுகளை மேற்கொள்கிறது என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்; உறவுகள் குற்றம் சாட்டுவது தவறானதாக தெரியவில்லை.

மூன்றாவது காணாமல ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதான பணிகள் சட்ட வரம்புக்குள் வரையறுக்கப்பட்டுள்ன. குறிப்பாக காணாமல் போனவர்களைத் தேடுதல். அவர்கள் காணாமல் போன சூழ்நிலைகளை தெளிவுபடுத்துதல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் வழங்குதல். காணாமல் போனவர்களும் அவர்களது குடும்பங்களும் கொண்டுள்ள உரிமைகளைப் பாதுகாத்தல். நிவாரணம் அல்லது தீர்வுக்கான வழிகளை அடையாளம் காணுதல். காணாமல் போனோர் தொடர்பான தரவுத்தளத்தை உருவாக்குதல். என்பன முக்கியமான பணிகளாக உள்ளன. இது நிறுவன ரீதியான தேசிய அமைப்பாக இருப்பதாக சட்டவரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகளை தண்டிப்பது அல்ல. முதன்மையாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையும் அந்த நபர் எங்கே இருக்கிறார்? என்பதையும் உயிருடன் உள்ளாரா? என்பதையும் இறந்திருந்தால் என்ன நடந்தது? என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு அலுவலகத்திற்கு உரிய பணியென சட்ட வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காவது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் உறவினர் யாழ்ப்பாணத்தில் மாகாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். அத்தகைய மகாநாடு உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமையும் என்ற அச்சம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது. அதனை தோற்கடிக்கும் விதத்திலேயே காணாமல் ஆக்கப்படடோருக்கான உலகளாவிய தினத்தை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்துவதற்கு அரசாங்கம் முன்வந்தது என்ற சந்தேகம் வலுவானதாக உள்ளது. வெளிப்படையாக காணாமல் போன தமது உறவுகளுக்கு நிகழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு அவ்வாறு வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கம் கோருவது தவறானதாக தெரியவில்லை. அடிப்படையில் முன்னைய அரசாங்கங்கள் போருக்கு பின்னர் கையளிக்கப்பட்ட, இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, வேண்டுமென்றே காணாமல் செய்யப்பட்ட பெரும்; எண்ணிக்கையானவர்களை ஈழத்தமிழ் உறவுகள் இழந்து நிற்கின்றன. அதற்குரிய தீர்வினை வழங்குவது மட்டுமின்றி அதற்கு பதிலான விளைவுகளுக்கான தீர்வுகளையும் ஈழத்தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதே பிரதானமான நோக்கமாக உள்ளது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நிகழ்த்தப்படுகின்ற போராட்டங்கள் உறவுகளின் எண்ணங்களை மட்டும் பிரதிபலிப்பதில்லை. ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் மனோநிலையில் எண்ணமாகக் காணப்படுகிறது. 30.08.2026 அன்று நிகழ்கின்ற மகாநாடு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கைத்தீவின் அணுகுமுறைகளின் பலவீனத்தையும் போலித்தன்மையையும் வெளிப்படுத்துவதோடு நீண்ட போராட்டத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற கோரிக்கைக்கு தென்னிலங்கை செவி சாய்க்காத போதும் ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவை அது சார்ந்த விழிப்புகளை ஏற்படுத்துவதற்கான அணுகுமுறையாக அமைவது அவசியமானது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி.யாழ்.தினக்குரல்)