இலங்கைதீவானது புவிசார் அரசியல் ரீதியில் இந்திய பாதுகாப்புடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த போது இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தலை இலங்கை மண்ணிலிருந்து ஏற்படுத்த அனுமதிக்காது என்பதை இராஜதந்திர உரையாடலாக தொடங்கியது. இலங்கை தீவு இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்து நிலையில் இருந்து அத்தகைய உரையாடல் தொடக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியும். அதனை கருத்தில் கொண்டே 38 வருடங்களுக்கு பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இக்கட்டுரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்ன் (Rajnath Singh)இலங்கை வருகையின் நோக்கத்தை தேட முயலுகிறது.
09.09.2026 முதல் மூன்று நாள் இலங்கைக்கான விஜயத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்டிருந்தார். அவரது இலங்கை வருகை இலங்கைத்தீவின் அதிகரித்துவரும் உலக நாடுகளின் செல்வாக்கு சார்ந்துதாகவே கருதப்படுகின்றது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் மூன்று பிரதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார் அத்தகைய உடன்பாட்டின் முதலாவது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை விமானப்படையிடம் உள்ள எல் 70 ரக விமான எதிர்ப்பு பிரங்கிகளை மேம்படுத்துவது தொடர்பானதாகும். இரண்டாவது ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணிகளுக்கு (NCC) இடையிலான ஒத்துழைப்பை எட்டப்பட்டுவதாகும். இவை அனைத்தும் ஏற்கனவே உரையாடப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் இராணுவப் பயிற்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் துறையில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கையின் காணப்படும் சீதா-எலியா ஆலயத்துக்கான வழிபாடு மற்றும் ஆளும்தரப்புக்கள் மற்றும் எதிர்த்தரப்புகளுடனான சந்திப்புகளும் முக்கியத்துவம் பெற்றதோடு இலங்கையின் முன்னாள் கிறிகெட் ஜம்பவான்களுடனான சந்திப்பும் நிகழ்ந்து;ளளது. அத்துடன் இலங்கை இந்திய பண்பாட்டு உறவு பற்றிய புரிந்துணர்வை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சரது விஜயம் அமைந்திருந்தது. அத்தகைய பிராந்திய வல்லரசான இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரின் வருகை சார்ந்து முக்கியமான சில விடயங்களை புரிந்து கொள்வது அவசியம்.
முதலாவது பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகை இலங்கைக்கு இந்தியாவுக்குமான உறவில் நிலவும் சந்தேகங்கள் பற்றிய அல்லது அச்சுறுத்தல் பற்றிய பிரதிபலிப்பாக நோக்கப்படுகிறது. அதாவது இலங்கை மண்ணில் அந்நிய சக்திகளின் எல்லையற்ற ஊடுறுகளும் செல்வாக்கும் அதீதமாக வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கை தீவின் மீது எல்லையற்ற செல்வாக்கை வளர்த்து வருகின்ற சூழலில் இந்தியா இலங்கை பொறுத்து அச்சத்தை ஏற்படுத்த வழி வகுத்துள்ளதாகவே கருதுகிறது. ஈரான் மீதான அமெரிக்கப் போர் அதன் பாதுகாப்பு பொறுத்து தெற்காசிய பக்கம் திரும்பி உள்ளது. இது அதிகமான நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி உள்ளதாகவே தெரிகிறது. இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு அயலில் உள்ள வெடிகுண்டாகவே கருதப்படுகிறது. இதனால் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் நேரடியான தொடர்புகளை அதிகம் கொண்டிருக்கிறது. அதனால் இலங்கை மீதான கவனத்தை இந்திய தரப்பு பிரதிபலிப்பதோடு இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது என்பதை பாதுகாப்பு அமைச்சரின் வருகை உணர்த்தி இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் (K.C. Pant)இலங்கைக்கு வருகை தந்த பின்னர் தற்போது ரஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரண்டாவது இந்திய நலன்களோடு இலங்கை சேர்ந்து பயணிப்பதை அதிகம் முதன்மைப்படுத்தி உள்ள இந்திய தரப்பு இலங்கையின் சாத்தியமற்ற வழிமுறை ஊடாக அதனை எதிர்கொள்ள முனைகின்றது. அவ்வாறாயின் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு எல்லைக்குள் செயல்பட தவறுகிறது என்பதை பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் உணர்த்துவதாக புரிந்து கொள்ளப்படுவது தவறானதாக தெரியவில்லை. அதாவது ஏற்கனவே உரையாடப்பட்ட அம்சங்களின் தொகுதிக்கான உடன்பாடுகளின் மீது இன்னொரு அழுத்தங்களை கொடுத்து செயல்பட வைப்பதற்கான நகர்வொன்றையே பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை தந்திருக்கின்றதாக தெரிகிறது. இது இலங்கை இந்தியாவுக்கு இடையில் எத்தகைய புரிதலும் நிலவவில்லை என்பதை காட்டுவதாக எடுத்துக் கொள்ளவும் முடியும். பாரிய நிதி உதவிகளை வழங்கியும் பொருளாதார ஒத்துழைப்பை சாத்தியப்படுத்தியும் இலங்கை இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் விரோதமாக செயல்படுகிறது என்பதை பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் மறுபக்கப் புரிதல்; உணர்த்தியிருக்கிறது. இது ஒரு இயலாமையின் பிரதிபலிப்பான நகர்வாகவே தெரிகின்றது. இத்தகைய அணுகுமுறைசார் இயலாமை இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுக்கு வழிவகுக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த முனைகிறது. பெரிய தேசத்தின் இயலாமை என்பது தந்திரோபாய ரீதியானதே அன்றி மூலோபாய ரீதியானதல்ல. 2800 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவு இந்தியாவை கையாண்டு கொண்டு அரசாக விளங்குகின்றது என்பதே கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஏற்கனவே உரையாடப்பட்ட அம்சங்களை உறுதிப்படுத்துவதற்கு ஒரு பாதுகாப்பு அமைச்சரின் வருகை தேவையானதாக உள்ளதெப்பதே கேள்வியாகும்.
மூன்றாவது இலங்கை இந்தியாவை இராஜதந்திர ரீதியில் கையாண்டு கொண்டு சீனா அமெரிக்க வல்லரசுகளின் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி செயல்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சு கொள்ளும் அச்சமும் இலங்கை மீதான குழப்பமும் சாத்தியப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அச்சுறுத்தல் தவிர்க்க முடியாது அண்மை காலங்களில் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. இந்திய நலன்களுக்கு அப்பால் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அதிகமான நெருக்கத்தை கொண்டிருக்கும் இலங்கை கடல் பாதுகாப்பு தொடர்பில் சீனா-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகம் பெறுவதற்கும் முயலுகிறது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த சீன தூதுவரும் அமெரிக்கத் தூதுவரும் கொண்டிருக்கின்ற எல்லையற்ற நலன்களுக்கான நடவடிக்கைகள் இந்தியாவை அதிகம் அச்சத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. எனவேதான் இந்தியா பாதுகாப்பு அமைச்சு ஊடாக இராணுவ ரீதியான ஒரு கையாளுகை ஒன்றை இலங்கைக்கு மறைமுகமாக ஏற்படுத்த முயல்வாதாக கூட பாதுகாப்பு அமைச்சரின் வருகையை விளங்கிக் கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகளையும் கரையோர கடல் பாதுகாப்புக்கான சிறிய வகைத் தாக்குதல் படகுகளையும் விஞ்சுகின்ற அளவுக்கு தனது ஆயுத தளபாடங்களுக்கு ஊடாக இலங்கையை இணைத்து வைத்துக் கொள்ளுதல் என்பது இந்தியாவுக்கு பிரதான தேவையாக உள்ளது.
நான்காவது இலங்கை அரசாங்கம் இந்திய தரப்புடன் கடல் பாதுகாப்பு கரையோர பாதுகாப்பு மற்றும் விமான பாதுகாப்பு தொடர்பில் அதிக முக்கியத்துவத்தை வழங்கிய போதும் இலங்கை இந்தியா மீனவர் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் பற்றிய நெருக்கடிகள் தீர்வின்றிய உரையாடல் நிகழ்த்தியுள்ளது. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும் இருநாடுகளும் இணைந்து இப்பிரச்சினைக்கு நடைமுறை ரீதியான தீர்வொன்றை காண்பது தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை கருத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பெருமளவுக்கு கடல் பாதுகாப்புச் சார்ந்திருக்கின்ற அல்லது இலங்கைத் தீவின் பாதுகாப்பு சார்ந்திருக்கின்ற முக்கியத்துவத்தை உணர்த்திய போதும் மீனவர் தொடர்பில் ஏற்பட்டிருக்க கூடிய நெருக்கடிகள் பற்றி எத்தகைய கரிசனையும் கொள்ளாது இந்திய-இலங்கை நலனுக்கு உட்பட்டதாகவே உரையாடப்பட்டுள்ளது.
ஐந்தாவது இலங்கை தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அணுகுமுறை முழுமையாக ஈழத்தமிழர் சார்ந்து எதனையும் கொண்டிருக்கவில்லை. எத்தகைய அம்சங்களையும் பிரதிபலிப்பதாக அமையவில்லை. இதுவரையும் இலங்கைக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் வெளிவிவகார அமைச்சர் அமைச்சின் செயலாளர்கள் தமிழ் தரப்புடனான உரையாடலை ஓர் அரசியல் பதிவாக செயல்படுவது வழமையானது. ஆனால் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை தீவில் ஆளுந்தரப்பு எதிர்தரப்பு மற்றும் மலையக மக்களின் தரப்புகளை சந்தித்து உரையாடியதோடு அவரது விஜயம் நிறைவடைந்துள்ளது. ஈழத்தமிழர்கள் சார்ந்து பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அவசியமில்லை என்று கருதுவதாகவே தெரிகின்றது. ஆனால் புவிசார் அரசியல் ரீதியில் இந்தியாவின் பாதுகாப்போடு பாக்கு நீரிணையும் ஈழத்தமிழரின் கரையோரமும் முதன்மையானதாக காணப்படுகிறது என்பதை இந்திய தரப்பு உணராத ஒரு நிலையை பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. மீண்டும் இந்திய தரப்பு ஈழத்தமிழரின் புவிசார் அமைவிடத்தில் முக்கியத்துவத்தை பொறுத்து தவறுவிடுவதாகவே தெரிகிறது. இதனை ஏனைய சக்திகள் பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக உணரப்படுகிறது. ஈழத்தமிழர்களின் அமைவிடம் சார்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ள துறைமுகங்கள் கரையோரப் பகுதிகள் இந்திய பாதுகாப்புக்கு எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சு தென் இலங்கையிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என்று கருதுகின்ற சூழல் ஒரு புறம் அமைய மறுபுறம் ஈழத்தமிழர்கள் இந்திய பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்த முடியாதவர்களாக உள்ளனர் என்ற அதீத எண்ணம் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கையில் உணர்த்தப்பட்டுள்ளது. இலங்கை தீவு முழுமையாக தென் இலங்கை மயமாதல் என்பது சீன மயமாதலுக்கு உட்படக் கூடியது என்றும் அப்போது இந்திய தரப்பு இத்தகைய நகர்வையும் இலங்கை தீவில் சாத்தியப்படுத்த முடியாது என்பதையும் உணருகின்ற சூழல் அதீத ஆபத்துக்களை தரக் கூடியதாகும். ஈழத்தமிழரின் அமைவிடம் இந்திய நலன்களுக்கு உட்பட்டது என்ற புரிதல் இந்திய தரப்புக்கு ஏற்படாத வரையில் அபாயமான போக்கே இந்தியாவுக்கு ஏற்படக் கூடியதாக அமையும்.
எனவே இந்திய பாதுகாப்புத் தரப்புக்கு ஈழத்தமிழர்கள் எந்த விதத்திலும் பயனுள்ளவர்களாக உணரப்படாத வரையில் இந்திய தரப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்பது வரலாற்றின் பாடமாக அமையும். அத்தகைய பாடத்தை இந்திய தரப்பு கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மிக குறைவானதாகவே உள்ளது. அடிப்படையில் உலக வல்லரசுகளால் ஆதிக்கத்துக்குள்ளாகப் போகின்ற இலங்கை தீவை இந்திய தரப்பின் பாமுதுகாப்புச் சூழலை உத்தரவாதப்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றது. எதிர்காலத்தில் இந்திய தரப்பு இலங்கையின் இறைமையை பாதுகாக்க முயல்வதன் விளைவுகளை அனுபவிக்க தயாராகிறது. மேற்காசியப் போர் இலங்கைத் தீவின் இருப்பை இந்திய அந்நிய சக்திகளிடம் ஒப்புவிக்க வழிவகுத்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் பின்னரும் இலங்கை தீவு வலுவான இரு வல்லரசுகளின் கால்களில் நின்று கொண்டு இந்தியாவை நோக்கத் திட்டமிடுகிறது.
போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
