October 4, 2026
அரசியல் கட்டுரைகள்

திலீபனின் உருவச்சிலையும் ஈழத்தமிழரது அரசியலும்!

ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிகழ்த்திய தியாகி திலீபன் மற்றும் அன்னை பூபதி ஈழத்தமிழருடைய அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தினர். அவர்கள் இருவரது தியாகமும் அளப்பரியது. இந்திய அரசின் இராணுவ நகர்வுகளை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் இருவரது தியாகம் ஆயுதப் போராட்டத்தின் மத்தியில் துணிச்சலான விளைவைத் தந்திருந்தது. அதன் பயன்களை ஆயுதப் போராட்ட காலம் அனுபவித்திருந்தது. அகிம்சை வழியில் ஆயுத வழியிலும் சமகாலத்தில் போராடிய போராட்டக் களத்தை ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டனர். அத்தகைய தியாகம் மிக்க செயலுக்கான நினைவு கோரலை வடக்கு கிழக்கு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த 27.09.2026 அன்று திலீபனின் உருவச் சிலையை பொலீசார் அகற்றியதிலிருந்து ஈழத்தமிழருடைய அரசியலில் மீண்டும் ஒரு நெருக்கடி மிக்க காலப்பகுதி அடையாளப்படுத்தியது. அதில் ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி.யும் தமிழர் அரசியல் கட்சிகளும் ஓர் அரசியல் அரங்கை நிகழ்த்திக் காட்டினர். அத்தகைய அரசியல் அரங்கின் யதார்த்தமான பக்கங்களை இக்கட்டுரை தேட முயல்கின்றது.

முதலாவது ஜே.வி.பி. அரசாங்கம் தனது தேர்தல் காலப் பகுதியில் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஈழப்போராட்டத்தின் கடந்த கால வரலாறுகளை நினைவு கொண்டு அனுசரித்து வெற்றியை தமதாக்கிக் கொண்டது. ஆனால் தியாகி திலீபன் உருவச்சிலையை அகற்றும் நிகழ்வை பொலீசார் மேற்கொண்ட போது அரசாங்கத்தின் இரு அமைச்சர்களும் வேறுபட்ட தகவல்களை வெளிப்படுத்தி தமது சுயரூபத்தை காட்டிக் கொண்டனர். வடக்கு கிழக்கு அதிகம் பேசப்படுபவரும் மீன்பிடித்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் பின்வருமாறு திலீபனின் உருவச்சிலை அகற்றல் தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார். மேலும் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போது சிலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதா? அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதனைத் தொடர்வது அல்லது அகற்றுவது தொடர்பான தீர்மானத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்து உரிய நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாநகரசபையே முன்னெடுக்க வேண்டியிருந்ததாகவும் மாநகரசபை மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், பொலிஸார் தமது சட்டரீதியான பொறுப்பின் அடிப்படையில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாருடைய வேலையைப் பொலிஸார் செய்திருக்க வேண்டும். மாநகரசபையினுடைய வேலையை மாநகரசபை செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டு விடயங்களும் தலைகீழாக நடைபெற்றுள்ளன. அதன் விளைவாகவே திலீபனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமைச்சர் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

அவ்வாறே தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) அரசாங்கத்தின் ஊடக பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29.09.2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை அமைச்சர் பின்வருமாறு கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்டது என்றும் அரச பொறிமுறையின் பகுதியாகவே பொலீசார் செயல்பட்டனர் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 2011 ஆகஸ்ட் 29ஆம் திகதிக்குரிய 19ஃ21(2) இலக்க வர்த்தகமானிக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஊக்குவித்தல் தொடர்பாக இலட்சினைகள் கொடிகளை காட்சிப்படுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த இடத்தில் கடந்த வருடங்களில் சில நினைவு கோரல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் செப்டம்பர் 27ஆம் திகதி பொலீசார் நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலை வழக்கு பொருளாக பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தால் பொலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 27ஆம் திகதி அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் அரச பொறிமுறையின் பகுதியாக பொலீசார் செயல்பட்டனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தகவல்களாகும். தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் ஏமாற்றுகிறார்கள் மறுபக்கம் ஆளும்தரப்பான ஜே.வி.பி.ஏமாற்றுகிறது. இரு அமைச்சர்களது அறிவிப்பும் வேறுபட்ட அறிவிப்புகள் என்பது கண்டுகொள்ளக் கூடிய செய்தியாகும். தமிழ் மக்கள் மீது ஜே.வி.பி அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளது போல் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் அதன் மனோநிலை புரிந்து கொள்ளத்தக்கதாகும். இனவாத மனோநிலையோடு தமிழர் மக்கள் மீதான அரசியலை அணுகுகிறது என்பதை தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளது. இதன் விளைவு இது மட்டுமானதல்ல. பிராந்திய சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களது அரசியலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்பதை உலகிற்கு காட்டுவதற்குமான அரவணைப்பே தமிழ் மக்கள் மீதான அரவணைப்பாகும்.

இரண்டாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை நிறுவ முயன்ற போது பின்பற்றிய நடைமுறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. மாநகரசபையின் எல்லைக்குள் சிலை நிறுவப்படுகிற போது அதற்கான அனுமதியை மாநகர சபையிடமிருந்து பெற்றிருக்கின்றது ஆனால் அது தற்காலிகம் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் சிலையை நிரந்தரமானதாக நிறுவுவதில் கவனம் கொண்டது தவறான விடயமே. சட்ட ரீதியாக தற்காலிகம் என்பதற்குரிய காலப்பகுதி வரையறுக்கப்பட்டதை அத்தரப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அப்போது அந்த விடயம் அரசியலாக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது அது ஒரு காலதாமதமான நடவடிக்கையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது.

மூன்றாவது திலீபனது உருவச்சிலையை நிறுவுவதற்கு தற்காலிக அனுமதியை வழங்கியதன் நோக்கத்தை தமிழரசு கட்சியின் தரப்பினர் இதுவரையும் முன் வைக்கவில்லை. ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திலீபனது உருவச்சிலைக்கு ஏன் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியது. யாழ்ப்பாணம் மாநகர சபை தென் இலங்கை பெரும்பான்மை கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மாநகர சபை தமிழரசு கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதும் ஈழத்தமிழருக்கு தெரிந்த விடயம். சமஸ்டி கோரிய கட்சி பின்னர் பிரிந்து செல்வதற்கான வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்த கட்சி என்ற அடிப்படையில் அத்தகைய கேள்வி வலுவானதாகும். தேர்தல் காலங்களில் மட்டுமன்றி எல்லா சந்தர்ப்பங்களிலும் விடுதலை புலிகளுக்கான அனுசரணையை வழங்குவதாகவும் போராளிகளுடன் சேர்ந்து பயணிப்பதாகவும் கூறிக்கொள்ள முயலுகின்ற கட்சி ஏன் தற்காலிகமான அனுமதியை வழங்கியது என்பது சந்தேகத்திற்குரியதே.

நான்காவது தமிழ் தரப்பினரின்; அணுகுமுறைகளை அவதானித்தால் தமக்கான அரசியல் செல்வாக்கை பெற்றுக் கொள்ளுகின்ற விதத்தில் கடந்த கால போராட்டங்களையும் போராட்டத்தின் தியாகங்களையும்; தமது நலனுக்கு பாவிக்கும் எண்ணதோடு செயல்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக் கட்சி திலீபன் சார்ந்த போராட்டத்தை வடக்கு கிழக்கு முழுவதும் நீண்டகாலமாக முன்னெடுத்துவருகிறது. அதன் செயல்பாடு ஈழத்தமிழருக்கான அரசியலை முன்னிறுத்துவதற்கு அவசியமானதாகவே தெரிகிறது. அதனோடு சேர்ந்து அத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் உரிய பணியாகவே தெரிகிறது. ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கை தமது செல்வாக்கை இழக்க செய்துவிடும் என பிற அரசியல் சக்திகள் கருதும் போது கட்சிகளின் செயல்பாடுகளுக்குள் மோதல் உருவாகிறது. இது தமிழ் அரசியல் தரப்புக்களின் அரசியல் செல்வாக்குக்கான வாய்ப்புகளை நோக்கி போராடுவதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டிய உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி திலீபனது உருவச்சிலையை நிறுவுகின்ற போது மக்கள் மத்தியில் அதற்கான செல்வாக்கு வளர்ச்சி அடைந்து விடும் என்ற அச்சமும் அதனை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விடயத்தை கொண்டு செல்ல ஓர் அரசியல் களத்தை திறப்பதும் மோதலுக்குரிய அடிப்படையாக தெரிகின்றது. இத்தகைய இழுப்பறியே தென்னிலங்கை வெற்றிகரமான அரசியலை வடக்கு கிழக்கில் நகர்த்தி செல்வதற்கு காரணமாகிறது. இவ்வாறான மோதல்களே பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள் ஜே.வி.பி. பக்கம் சாய்வதற்கான அடிப்படை காரணமாகும். ஈழத்தமிழரது அரசியலை மேற்கொள்வதற்கு பதிலாக கட்சி அரசியலையும் தனிப்பட்ட அரசியலையும் அடைவதற்கான மோதலாகவே ஈழத்தமிழரது கட்சி அரசியல் உள்ளது.

எனவே இத்தகைய அபாயமான ஒரு களத்தையே 2009 க்கு பின்னர் வடக்கு கிழக்கு அரசியலில் கண்டுகொள்ள முடிகின்றது. தமிழர் அரசியலில் கட்சிகளும் அதன் நலன்களும் கட்சிகளுக்குள் இருக்கும் தனிப்பட்ட நலங்களும் மோதலுக்குரியவையாக மாற்றப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பி விடுகின்ற போக்கு நிலவுகிறது. இதன் விளைவுகளே தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகளின் செல்வாக்கு வளர்ச்சி அடைப்பதற்கு பின்னால் உள்ள வலுவான காரணமாகும். இரு அமைச்சர்களது அறிக்கைகளும் தமிழ் கட்சிகளை எப்படி மோதவிட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளப் போதுமானது. ஒட்டுமொத்தத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையே ஈழத்தமிழருடைய அரசியலின் தோல்விக்கும் தென்னிலங்கையின் வெற்றிகரமான பக்கத்திற்கும் சர்வதேச அரங்கில் கிடைக்கும் வாய்ப்புகள் கைகளுவிப்போவதற்;கும் காரணமாக அமைந்துள்ளன. இது மீட்கப்படாத வரை ஈழத்தமிழருடைய அரசியல் சாத்தியம் அற்றது. கடந்த வரலாறு முழுவதும் நிகழ்த்தப்பட்ட துயரங்களின் விளைவுகள் தவிர்க்க முடியாமல் துயரங்களாகவே நகருகின்ற நிலைக்குள் கட்சி நலன்களும் தனிமனித நலன்களும் ஆதிக்கம் பெற்றுவிட்டன. இத்தகைய யதார்த்தத்தை புரிந்து கொண்டு புதிய வாய்ப்புகளை தமிழ் மக்கள் அடையாளம் காணுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:யாழ்.தினக்குரல்)