இலங்கையின் அலரசியலில் பல சித்தாந்தங்களின் செல்வாக்கு நிலவியதை கடந்தகால வரலாறு முழுவதும் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. அதில் முதலாளித்துவம் எதிர் சோஸலிஸம் எனும் இருவேறு முரண்பாடுடைய அரசியல் சித்தாந்தம் வளர்ச்சியடைந்திருந்தது. பனிப்போர் (Cold War) நிலவிய காலம் முழுவதும் அதன் செல்வாக்கினால் கவரப்பட்ட இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் மிதவாதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சமகாலத்தில் அத்தகைய சித்தாந்தங்கள் முடிபுக்கு வந்தாலும் அதன் சிந்தனையும் அணுகுமுறையும் ஆய்வுகளிலும் பார்வைகளிலும் நிலவுகிறது. அது மட்டுமல்லாது முதலாளித்துவத்தின் வளர்ச்சியான தராளவாதத்திலும் நவதராளச் சிந்தனையிலும் சோஸலிஸம் தவிர்க்க முடியாத ஊடுபொருளாக மாறியுற்றது. அதாவது முதலாளியம் நவீனவடிவத்தை தனதாக்கியதனால் வளர்ச்சியடைந்து செல்வதைக் கண்டு கொள்ள முடிகிறது. இதற்குள்ளேயே இலங்கையின் அரசியல் சக்திகளும் இயங்க தொடங்கியுள்ளன. இது சீனாவுக்கும் கியூபாவுக்கும் முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் பொருந்தும். அதனையே இலங்கையில் இரு ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த ஜனதா விமுத்தி பெரமுன என அறியப்பட்ட தேசிய மக்கள் சக்தி பின்பற்ற முனைகிறதைக் கண்டு கொள்ள முடிகிறது. இக்கட்டுரையும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் புதுடில்லி சென்றுள்ளமையின் அரசியலை தேடுவதாக உள்ளது.
யதார்த்தத்தை நோக்கி கொள்கையை வளைத்துப் போடுவது தான் அரசியல். அத்தகைய அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தியது. ஆதிகாரத்தை கையாளுவதே அரசியல் எனவும் கூறிக் கொள்ளலாம். இலங்கைத் தீவின் அரசியல் உள்ளும் புறமுமானது. அது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் இலங்கையின் உள்ளாட்டரசியல் என்பது அயல் நாடு என்ற இந்தியாவின் நலன்களுக்குள் கட்டுப்பட்டது. இந்தியாவின் நலன் மீறப்படும் போது இலங்கைத் தீவு எப்போதும் அரசியல் கொதிநிலையை(Political Turmoil) அடைந்துள்ளது. அதனை ஜனதா விமுத்தி பெரமுன இரு தடவை ஏற்படுத்தியுள்ளது. 1971 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில். ஜே.வி.பி.இன் தோற்றம் சீன சார்ப்புக் கம்யூனிஸக் கட்சியின் சண்முகதாஸனின் (சண் அங்கிள்) தலைமையிலிருந்து பிரிந்த றோகண வீஜயவீராவினால் 1965 இல் தொடக்கப்பட்டது. அன்றிலிருந்து சமகாலம் வரை ஜே.வி.பி.இன் இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறிவிட முடியாது. அது இலங்கையிலுள்ள அனைத்து தென் இலங்கை பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் ஜே.வி.பி. வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்புவாதத்தைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜே.வி.பி ஐப் பொறுத்தவரை இந்திய எதிர்ப்புவாதம், மலையகத் தமிழர் எதிர்ப்புவாதம், ஈழத்தமிழர் எதிர்ப்புவாதம் என்பன அதன் பிரதான ஆரம்ப அரசியல் கொள்கையாகும். அதிலிருந்து தேசிய மக்கள் சக்தி மாறியிருகட்கின்றதா என்பது பிரதான கேள்வியாகும். இந்தியாவை அணுகுவதென்பது ஜே.வி.பி. இலிருந்து தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளதாகவே தெரிகிறது.
ஜே.வி.பி.இன் வரலாறு 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்,டி.பண்டரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தின் விளைபொருளாதகவே உள்ளது. ஈழத்தமிழரை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஆயுதப் போராட்டத்திற்குள் இழுத்துவிட்டதில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு பங்குள்ளது. 1972 இலும் 1989 இலும் இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்ததில் இந்தியாவுக்கே தனித்துவமான பங்கிருந்தது. தென் இலங்கையில் தோன்றிய ஆயுதப் போராட்டத்திற்கு சீனாவின் பங்கிருந்தது போல் ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்திற்கு இந்தியாவின் பங்கு தனித்துவமானதாக அமைந்திருந்தது. ஆனால் இரண்டு போராட்டங்களும் இந்தியாவின் நலனுக்கு விரோதமான போது அதனை அழிப்பதில் இலங்கை அரசியலோடு இணைந்து பயணிக்க இந்தியா ஒரு போதும் தயங்கவில்லை என்பது அதன் அணுகுமுறைகளிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது. தற்போது மிதவாத களத்தில் இலங்கைத் தீவின் அரசியல் காணப்படுகிறது. வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் அத்தகைய களத்தில் உள்ளகச் சக்திகளுக்கான போராட்டம் மட்டுமல்லாது வெளிசக்திகளது போராட்டக் களமாகவும் தென்படுகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, தேசிய மக்கள் சக்தியை ஏன் புதுடில்லி அழைத்தது என்ற குழப்பம் அனைத்து தரப்பிடமும் எழுந்துள்ளது போல் தேசிய மக்கள் சக்திக்குள்ளும் அதன் தோழமைக் சக்திகளுக்குள்ளும் எழுந்துள்ளது. இதற்கு முன்னர் 2023 இல் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுராகுமார திசாநாயக்கா தென் கொரியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு அமெரிக்கரின் அழைப்பின் பெயரில் சென்றதாக தகவல் உண்டு. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அதே நேரம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் அத்தகைய நகர்வை மேற்கொண்டதாவும் அப்போது அனுராகுமாரவை இலங்கையில் சந்தித்ததற்கான ஆதாரங்கள் அதிகம் காணப்பட்டது. எதுவாயினும் ‘அறகளய’ போராட்டத்திற்கு பின்னர் ஜே.வி.பி. இன் மீதான கவனம் பூகோள அரசுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதாவது ஜே.வி.பி. இன் மக்கள் ஆதரவு அதிகரிக்கும் நிலையில் அதனை தமது செல்வாக்குக்குள் உட்பட்ட கட்சியாக உருவாக்குவதுடன் பூகோள-புவிசார் சக்திகளது நலனுக்கு உட்படுத்தும் போக்கினை கொண்டதாக தேசிய மக்கள் சக்தியை மாற்றுவதே சந்திப்புக்களது நோக்கமாக தெரிகிறது. அந்த வகையான சந்திப்பாகவே இந்தியாவின் அழைப்பும் அனுராகுமாரவின் விஜயமும் அமைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மீதான அணுகுமுறையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கான இந்திய நட்பு நாடுகளது அணுகுமுறையும் மற்றும் மக்களின் அதிருப்தி நிலையும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனுராகுமாரவை கையாள முடியுமெனவும் அதற்கான அடித்தளத்தை போட்டுக் கொள்ளவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவே தென்படுகிறது. வரப்போகும் ஆட்சி அதிகாரத்தைக் காட்டிலும் எதிர்கால ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பி. கைப்பற்றினாலும் கையாள தயாராகும் நிலையாகவே இந்தியாவின் நகர்வு காணப்படுகிறது.
இரண்டாவது, ஜே.வி.பி. எப்போதும் சீனச்சார்ப்புக் கட்சி என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அத்தகைய சீனச்சார்பு நிலையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமாக இருந்தால் அதனால் ஏற்படும் ஆபத்து அபாயகரமானதாக அமைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டே இந்தியா செயல்படுகிறது. எதிர்காலத்தில் ஜே.வி.பி ஆட்சிக்கு வருமாக இருந்தால் அதன் மீது இந்தியா செல்வாக்குச் செலுத்தும் நிலையை உறுதிப் படுத்துவதே அனுராகுமார இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதன் அடிப்படையாகும். அனுராவின் புதுடில்லி விஜயம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. காரணம் ஜே.வி.பி.க்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஜே.வி.பி தனது புரட்சிகரமான கொள்கை எதனையும் தற்போது கொண்டிருக்காத நிலையில் இந்தியாவையோ, அமெரிக்காவையோ அணுகுவதன் வாயிலாக ஆட்சியை பிடிக்க முடியுமா எனக்கணக்கு போட்டுள்ளது. அதனால் மட்டுமன்றி புதுடில்லி, அகமபாத்,மன்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்து பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் அனுரா தனது முகப்பக்கத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்த உரையாடியதாகவும் இலங்கையின் அரசியல் எதிர்காலம் பற்றி விரிவாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை ஜே.வி.பி.க்கும் இந்தியாவுக்கும் புரிதல் ஏற்பட்டுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே தெரிகிறது.
மூன்றாவது, இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்புக் கொள்கை சார்ந்து மாலைதீவு அதிக குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. அதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அத்தகைய நிலை இலங்கைத் தீவாலும் ஏற்பட்டவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. அது மட்டமன்றி பொருளாதார ஒத்துழைப்பாலும் இராணுவ புரிதலாலும் இந்தியா இலங்கையுடன் நெருக்கமாகும் நிலையை எட்டியுள்ளது. தற்போது எட்கா உடன்படிக்கை பற்றிய உரையாடல் வலுவானமதாக உள்ளது. இந்தியாவுடனான தரைவழிப்பாதை மற்றும் எண்ணெய் எரிவாயு பரிமாற்றத்திற்கான குழாய்திட்டம் போன்றவற்றுடன் மின்சாரம் காற்றாலை மின்சாரம் தொடர்பில் இரு நாடுகளும் மிக நெருக்கமாகும் நிலையில் ஜே.வி.பி.ஐ அழைத்திருப்பது எதிர்கால இந்திய-இலங்கை உறவுக்கான அடித் தளமாகவே தெரிகிறது.இலங்கையுடன் வர்த்தக ரீதியில் அதிக நெருக்கத்தை இந்தியா ஏற்படுத்த முனைகிறது.
ஆனால் இதே நேரம் அனுராவின் அரசியல் அணுகுமுறையாக இந்திய விஜயம் அமைந்தாலும் இதற்கு முன்பு ஜே.வி.பி.இன் இரண்டாங்கட்ட தலைவரான சேமவம்சாவை இந்தியா தஞ்சம் கொடுத்து பாதுகாத்ததுடன் ஜே.வி.பி.உடனான உறவை இந்தியா தேவை கருதி பயன்படுத்துகிறது என்பதை கண்டு கொள்ள முடிகிறது. பதிலுக்கு அனுராவும் தனது அடையாளத்தை மறுக்காது வெளிப்படுத்த முனைந்ததை காணக்கூடியதாக உள்ளது. அனுராவின் இந்திய விஜயம் ஈழத்தமிழருக்கும் அதன் தலைமைகளுக்கும் பலமான செய்தியைச் சொல்லி நிற்கிற்து. அதாவது ரணில்விக்கிரமசிங்ஹா மற்றும் மகிந்த ராஜபக்ஷhக்களுக்கு பின்னரான வெற்றிடத்தை அடுத்தகட்டத் தலைவர்கள் நிரப்ப தயாராகிவிட்டனர் என்பதாகும். அதிலும் முன்னய தலைவர்களைப் போலல்லாது அதனையும் கடந்து செயல்படக் கூடிய தலைமைகளாக எழுச்சியடைகின்றன என்பதாகும். அது வெளிப்படையாகவே ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டிருந்த கட்சி என்பதுடன் ஈழத்தமிழர் எதிர்ப்புவாதத்தையும் பலமாகக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போகிறது என்ற செய்தி முக்கியமானது. இதன் விளைவு ஈழத்தமிழ் தலைமைகளுக்கு மட்டுமானதாக அமையுமாக இருக்கப் போவதில்லை. அது இந்தியாவுக்குமானதாகவே அமைய வாய்ப்புள்ளது.
எனவே இந்தியாவின் நோக்கில் ஜே.வி.பி.உடனடியாக ஆட்சிக்கு வரும் என்பதற்காகவோ அல்லது ஜே.வி.பி.ஐ இந்தியா ஆதரிக்கப் போவதென்பதற்கானதாகவோ ஜே.வி.பி.க்கான அழைப்பு மேற்கொள்ள ப்படவில்லை. மாறாக பிராந்தியத்தின் மீதான சீனாவின் தலையீட்டை கட்டுப்படுத்தவும் எதிர்காலத்தில் இந்தியாவின் இலங்கைத் தீவில் நிகழவுள்ள திட்டங்களை கருத்தில் கொண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறே எதிர்காலத்தில் ஜே.வி.பி. ஆட்சியை கைப்பற்றுமாக அமைந்தால் அதனை கையாளும் விதத்திலும் அனுராவுக்கான அழைப்பு அமைந்துள்ளதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
