நவீன இலங்கையின் வரலாற்றில் பௌத்த மதம் அரசமதமாக விளங்குகிறது. இந்தியாவில் இருந்து அரசியல் நோக்கத்தோடு சோழப்பேரரசின் ஆதிக்கத்தின் படர்ச்சியாக இலங்கை தீவுக்குள் நுழைந்த பௌத்தம் நிலையான அரச மதமாகவும் ஆட்சி மதமாகவும் காணப்பட்டு வருகிறது. அத்தகைய பௌத்தமதம் சமகாலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது தொடர்பிலான உரையாடல்களும் விவாதங்களும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளது. முன்னாள் ஆட்சியாளர்கள் பௌத்தத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்ற 1972-1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் அடிப்படைகளை வலியுறுத்தி வருகின்றனர். இக் கட்டுரையும் இடதுசாரிகள் ஆட்சியிலிருக்கும் சமகாலத்தில் பௌத்த மதம் பெறும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாறு முழுவதும் பௌத்த மத வரலாறாகவே அடையாளம் காணப்படுகின்ற நிலையென்றே நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டின் பௌத்த மதம் இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக நிலை நிறுத்துவதில் வெற்றி கண்டு வருகிறது. அதனை முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் விதத்தில் பௌத்தமதத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் விகாரைகளையும் தேவாலயங்களையும் சமதூரத்தில் முன்னிறுத்தி உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. தென் இலங்கையில் இடதுசாரி அரசாங்கம் ஒன்றின் ஆட்சிக்குள் இவ்வகை உரையாடல் அதிக முக்கியத்துவத்தை பெற்றதாக தெரிகின்றது. அதனை விரிவாகவும் நோக்குவது அவசியமானது.
முதலாவது இலங்கைத்தீவில் இடதுசாரிகளுக்கு உலகில் இல்லாத ஒரு தனித்த பண்பொன்று கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன, மத, மொழி போன்ற சமூகம் முரண்பாடுகளை கடந்து வர்க்க முரண்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அடிமைகளுக்காகவும் போராடுகின்ற தரப்பென்ற கருத்தியலிலேயே இடதுசாரித் தத்துவம் நோக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீடுகளுக்கு ஊடாகவே மதத்தின் முக்கியத்துவத்தை நிராகரிப்பவர்களாக இடதுசாரிகள் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆனால் இலங்கை தீவில் இடதுசாரிகளே மதப் பிரியார்களாகவும் மதவாதிகளாகவும் மதத்திற்கு பாதுகாப்பு அளிப்பவர்களாகவும் காணப்படனர். அதில் முதன்மையானவராக விளங்கியவர் கொல்வின் ஆர்.டி.சில்வா என்பதை நிராகரிக்க முடியாது. அவரே 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிதாமகனாக விளங்கினார்.
இரண்டாவது அத்தகைய கொல்வின் ஆர்.டி.சில்வா சுதந்திர கட்சியோடு சேர்ந்து 1970 ஆண்டு ஆட்சி அமைத்திருந்த போது 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பை உருவாக்குகின்ற பிரதானிகளில் ஒருவராக விளங்கினார். ஏறக்குறைய 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொல்வின் ஆர்.டீ.சில்வாவின் அரசியல் யாப்பாகவே அமைந்திருந்தது. 1956 ஆம் ஆண்டு பௌத்த மதத்தை அரச மதமாக்க பண்டரநாயக்கா எடுத்த முயற்சியை கொல்வின் அரசியல் அமைப்பின் பிரதான விதியாக மாற்றினார். அத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய இடதுசாரிகள் பௌத்தத்தை அரச மதமாக மாற்றினர். பௌத்தமதத்தை அரசமதமாக அரசியல் அமைப்பு அங்கமாக உள்ளடக்கியதன் விளைவையே தற்போது இலங்கைத் தீவு அதிக துயரத்தையும் இனவன்முறையையும் அனுபவித்துக் கொண்டிருகிறது. அதனையே 1978 ஆண்டு அரசியல் யாப்பின் திருத்தத்திலும் உள்ளடக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரிகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் இணைந்தே அத்தகைய யாப்பு உருவாக்கத்தை சாத்தியப்படுத்தினர்.
மூன்றாவது இலங்கைத் தீவில் பௌத்தத்தின் முதன்மைகளை முன்னிறுத்துவது என்பது அரசியல் அமைப்பின் அடிப்படை என்பதை கடந்து அரசின் மதமாக பௌத்தம் இருத்தல் என்பதை அங்கீகரிப்பதாக மாறியது. அதனால் இலங்கைத் தீவில் பௌத்தமதம் தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்தியாவில் பௌத்தம் தோன்றிய போதும் ஏனைய மதங்களின் ஆக்கிரமிப்பினால் பௌத்த மதம் காணாமல் போனது. இலங்கை தீவில் அத்தகைய அனுபவத்தை முன்னிறுத்திக் கொண்ட மதவாதிகள் பௌத்த மதத்தை அரசின் மதமாகவும் ஆதிக்கத்தின் மதமாகவும் கொள்ளுகின்ற மனோநிலையை அங்கீகரித்துக் கொண்டனர். இதுவே இலங்கையில் பௌத்த மதம் பாதுகாக்கப்படுவதற்கான அடிப்படை காரணமாகும். பௌத்த மதம் பாதுகாப்பதும் போணுவதும் பராமரிப்பதும் விஸ்தரிப்பதும் அரசின் கடமையாக கொள்ளப்படுகிறது. வடக்கில் தையிட்டி விகாரை போன்று பல இடங்களில் வழிபாடற்ற விகாரைகள் திட்டமிட்டு கட்டப்படுகிறது. பின்னர் அந்தப் பிரதேசங்களில் சிங்கள பெரும்பான்மை மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். அந்த நிலம் படிப்படியாக பௌத்த மக்களின் நிலமாக மாற்றமடைகிறது. இது அதிக முரண்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்திவருகிறது. தென்னிலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தின் ஆட்சியின் போதும் அத்தகைய ஆக்கிரமிப்புக்கள் நிகழ்கிறது. ஜே.வி.பி. தன்னை ஒரு இடதுசாரியாக அழைத்துக் கொண்டாலும் நடைமுறையில் பௌத்தத்திற்கு எதிராக செயல்படாதது மட்டுமன்றி ஏனைய மதங்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது அரசியல் மட்டும் மேற்கொண்டு வருகிற அரசாங்கமாக விளங்குகிறது. ஜே.வி.பி. கூறும் இனவாதம் என்பது பௌத்த மதத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. பௌத்தமதத்தின் ஆதிக்கமே இனவாதத்தின் மூலவேராகும்.
நான்காவது பௌத்தம் இடதுசாரி கொள்கைக்கு நிகரானது என்ற வாதம் உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் வன்முறையையும் ஆக்கிரமிப்பையும் கொண்டதாக பௌத்தமதம் விளங்குகிறது. புத்தபகவான் பௌத்தத்தை ஒரு மதமாக போதிக்கவில்லை. இந்துமதத்தின் குறைபாடுகளை சரி செய்வதற்காகவே அவரது கருத்துக்களும் போதனைகளும் அமைந்திருந்தாக வரலாறு கூறுகிறது. உயிர்களை கொள்வது பாவமென்ற கொள்கையை முன்னுறுத்திக் கொண்டே அவரது அஹிம்சை தத்துவம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு நேர் மாறாகவே இலங்கைத் தீவின் பௌத்தமத அடையாளம் மகாவம்ச பௌத்தமாக செயல்படுகிறது. அதனையே மகாவம்ச மனோநிலை என்று கருத்து நிலவத் தொடங்கியது. அதாவது ஆதிக்க மனோநிலையாயைக் குறிப்பதாகும். இது அடிப்படையில் பௌத்த மதத்தின் போதனைகள் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு பிற மதங்கள் மொழியைப் பின்பற்றுவோர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றின் மீது விகாரைகளை அமைத்துக் கொண்டு செயல்படும் ஆக்கிரமிப்பாளர்களாக பௌத்தமதத்தினர் காணப்படுகின்றனர். இது இடதுசாரிகளின் மூலமாக வலுப்பெற்று வளர்ச்சி பெற்ற அம்சமாகும். இதற்கான மூலவர்களாக இடதுசாரிகளே காணப்பட்டனர்.
ஐந்தாவது இடதுசாரிகள் பௌத்த மதத்தின் மகாசங்கங்கள் அணுகுவதும் ஆலோசனை பெறுவதும் அவர்கள் முன் அரசாங்கத்தை மண்டியிட வைப்பதும் வழமையான மரபாக உள்ளது. பௌத்தமத பீடங்களின் கொள்கைகளை பின்பற்றுவதும் அதனை வளர்ப்பதுவும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. இடதுசாரிகளும் அத்தகைய ஆட்சியாளர்களிலிருந்து வேறுபட்டவர்களும் அல்ல. இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் தொழில் கட்சியை தொடங்கிய ஏ.ஈ.குணர்சிங்கா முதல் தற்போதைய ஜே.வி.பி.ஆட்சியாளர்கள் வரையும் இடதுசாரி மனோநிலை என்பது மகாவம்ச மனோநிலையாகவே உள்ளது. அத்தகைய மனோநிலைக்குள்ளேயே ஆட்சியும் அதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கில் இருக்கும் விகாரதிபதிகளும் விகாரைகளின் பிரதானிகளும் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்திலே தையிட்டி விகாரை அமைந்துள்ளது என்றும் அது தவறு என்றும் சுட்டிக்காட்டிய பிற்பாடும் இடதுசாரிகளின் பிரதானிகள் மௌனத்தை கடைபிடிக்கின்றனர். தமிழ் மக்களின் நிலம் தொடர்பில் எந்தகைய கருத்தையும் வழங்க முடியாதவர்களாக இடதுசாரிகள் காணப்படுகின்றனர். இலங்கை தீவில் இடதுசாரிகள் வலதுசாரிகள், முதலாளித்துவவாதிகள், தாராண்மைவாதிகள், என்பது அனைத்தும் பௌத்த மதத்தின் அடையாளத்திற்கு உட்பட்டதே. பௌத்தமதத்துக்கும் பெரும்பான்மை மக்கள் பேசுகிற சிங்கள மொழிக்கும் முதன்மை கொடுப்பது என்பது சரியானது. ஆனால் அதே போன்று ஏனைய மதங்களும் மொழியும் இன பிரிவுகளும் மதிப்பளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு பேணப்பட வேண்டும். அதுவே இலங்கை தீவின் சமமான அல்லது சமத்துவமான இடதுசாரி சிந்தனையாகும். அதுவே சமத்துவமான சூழலை சாத்தியப்படுத்தும்.
எனவே இலங்கைத் தீவின் பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வரைபை அரசியலமைப்பில் முன்னிறுத்திய இடதுசாரிகள் அடிப்படையில் இனவாத அரசுக்கு வித்திட்டவர்களாவார். தற்போது ஆட்சியில் உள்ள இடதுசாரி அரசாங்கமும் அதன் பிரதானிகளும் அவ்வாறு செயல்படுவார்கள் என்பது தெளிவானதாகவே தெரிகிறது. 21 ஆம் நூற்றாண்டு இலங்கையின் பௌத்தம் என்பது முழுமையாகவே ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தீவில் கட்டமைக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கான சூழலை இடதுசாரி ஆட்சியாளர்கள் வழங்கி வருகின்றனர். இடதுசாரிகளின் பெயரில் நிகழும் பௌத்தமத ஆட்சியாகவே ஜே.வி.பி.இன் ஆட்சி காணப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
