June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

ஒஸ்லோ இரு தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்ட பிரகடனமா? அல்லது நிலைப்பாட்டு ஆவணமா?

ஈழத்தமிழரது அரசியல் மீளெழுச்சி பெறமுடியாத அறிவியல் வறுமைக்குள் அகப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் அவ்வப்போது வேறுபட்ட கோணத்தில் தந்திரோபாயங்களை மேற்கொண்டாலும் அவை அனைத்துமே விரும்பியோ விரும்பாது எதிரிக்கு சேவையாற்றுவதாகவே தெரிகிறது. அத்தகைய தெரிவுகளில் கட்சி நலன் முதன்மையானதாக தோன்றினாலும் கணிசமான தீர்மானங்கள் தனிப்பட்ட நலன்சார்ந்து எடுக்கப்படுகிறது. அத்தகைய தனிப்பட்ட நலன்கள் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லுக்கூடாக கையாளப்படுகிறது. இத்தகைய ஏமாற்றுத்தனத்துக்குள் கட்சிகள் மட்டுமல்ல கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமல்ல அத்தகைய நலன்விரும்பிகளது ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சேர்ந்து செயல்படும் நிலையையே ஈழத்தமிழரர் தமிழ் தேசியம் என்று கருதுகின்ற நிலைக்கு வழியமைக்கிறது. இக்கட்டுரையும் மீளப்பேசப்படும் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் (Oslo Communique) பற்றியதாக அமையவுள்ளது.

ஒஸ்லோ நிலப்பாட்டு ஆவணத்தின் உள்ளடக்கத்திலுள்ள பிரதான விடயங்களை தெரிந்து கொள்ளவது அவசியமானது. அதன் பிரகாரம் நோர்வே தலைநகரில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுக்களில் இலங்கை அரசாங்கத் தரப்பு விடுதலைப்புலிகள் தரப்பு மற்றும் நோர்வே மத்தியஸ்த்த தரப்பு என்பன ஒன்றிணைந்து நிலைப்பாட்டு ஆவணத்தை தயாரித்தன. அதனை நோர்வே தரப்பு அறிக்கையாக (05,டிசம்பர்,2002) வெளியிட்டது. அதில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுரீதியான வாழ்விடப்பிரதேசங்களில் உள்ளக சுயநிர்ணயக் கொள்கை தொடர்பில் கண்டறியப்பட்டதொரு தீர்வினை ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதற்கு இக்குழுக்கள் உடன்பட்டன. இத்தீர்மானமானது அனைத்தச் சமூகங்களுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதையும் இரு தரப்புக்களும் ஏற்றுக் கொண்டன.

இந்த இலக்கினை வழிகாட்டியாகக் கொண்டு இருதரப்புக்கள் பின்வரும் பிரச்சினைகள் போன்ற ஆனால் மட்டுப்படுத்தப்பட்டிராத முக்கிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு உடன்பட்டன. அதன்படி, மத்திக்கும் பிராந்தியத்திற்கும் இடையிலானதும் மத்திக்குள்ளுமான அதிகாரப் பரவலாக்கல், புவியியல்சார் பிராந்தியங்கள், மனித உரிமைப்பாதுகாப்பு, அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறைகள், பொதுமக்கள் நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. இவைசார்ந்து கலந்துரையாடல் நிகழ்துள்ளதை அந்த அறிக்கையில் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. இதன் முழுமை போரும் சமாதானமும் என்ற விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நூலில் கண்டு கொள்ள முடியும்.

இதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் பொது வேட்பாளர் பொறுத்து வெளியிட்ட அறிவிப்பின் உள்ளடக்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட கடைசிவிடயம். அதற்கு பாதிப்பு குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான முடிவு எதையும் தமிழ் பொது வேட்பாளர் என்ற விஷப்பரீட்சை ஊடாக செய்வதற்கு தமிழரசுக் கட்சியினர் இணங்கிவிட -இறங்கிவிட கூடாது. என்பதாக அமைந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் அறிக்கையில் அதிகமான சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. அதன்படி,

ஒன்று, ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் விடுதலைப் புலிகளாலும் அரசாங்கத்தாலும் எட்டப்பட்ட உடன்படிக்கையா என்பது முதன்மையானதாகும். நோர்வேயின் பேச்சுவார்த்தையாளர்கள் ஒவ்வொரு பேச்சுக்களுக்கும் பின்னர் வெளியிடும் பத்திரிகை அறிவிப்பாகவே இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர். இதனை நோர்வே பிரகடனம் அல்லது ஒஸ்லோ பிரகடனம் என்றும் அழைத்துள்ள தன்மை காணப்பட்டது. ஆனால் உடன்படிக்கையாகவோ அல்லது பிரகடனமாகவே இதனைக் கொள்ளலாமா என்பது அதன் வடிவத்தைக் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. உடன்பாடு என்பது இரு தரப்பாலும் ஒப்பமிட்டிருக்க வேண்டும். 2015 போல் இதயங்களால் எட்டப்பட்ட உடன்பாடு என்றுகூட 2002 ஊடக அறிக்கையைப் பற்றி எந்த தகவலும் இரு தரப்பாலோ அல்லது ஒரு தரப்பாலோ முன்வைக்கப்படவில்லை. உடன்பாடு எட்டப்படுவதற்கு ஆராயும் முயற்ச்சியாக மட்டுமே தெரிகிறது. இதனை பிரகடனமாகவோ உடன்பாடாகவோ கொள்வதற்கான முனைப்புக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பது அதன் பிரதியை பார்க்கும் போது கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் அது ஒரு தெளிவான வடிவத்தை ஆராயத் தலைப்பட்டுள்ளதைக் கண்டுகொள்வது அதிகம் கடினமானதாக தெரியவில்லை. இது ஒரு நிலைப்பாட்டு ஆவணமாகவே தெளிவாகத் தெரிகிறது.

இரண்டு, இதனை ஒரு பிரகடனமாக அல்லது உடன்பாடாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அதன் கீழ் பணயணிப்பது தமிழ் மக்களுக்கு பொருத்தமானதும். அவசியமானதும். சுயநிர்ணயம் உள்ளகம் வெளியகம் என்பதற்கு அப்பால் சுயநிர்ணம் தனித்துவமானது. சுயநிர்ணயத்தை உள்ளக வடிவத்தில் ஏற்றுக் கொள்வதென்பது கூட தமிழ் மக்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தப் போதுமானது. அதனது அர்த்தம் முழுமையாக விளங்கிக் கொள்வது மட்டுமல்ல நடைமுறைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் போது மட்டுமே சாத்தியமான வடிவத்தை எட்டக்கூடியதாக அமையும். அதனால் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள் என்பதை காட்டுவதற்கான அங்கீகாரமாகவே பேசப்பட்ட விடயம் உள்ளது. ஆனால் அது இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளாத வரையும் அதன் உள்ளடக்கம் அனைத்தும் ஆய்வுக்குரியது. அதாவது சாத்தியமாகுமா அல்லது இல்லையா என்பதும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்வதில் தங்கியுள்ளது என்று அறிக்கையே கூறுகிறது. அதனால் உடன்பாடு எட்டப்படாத ஒன்று பற்றி அதனை எப்படி பிரகடனமாகக் கொள்வது. அதன் மீது எப்படி நம்பிக்கை கொள்வது. உலகம் இப்படி ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறிவிட முடியுமா? அல்லது இலங்கை அரசு இவ்வாறான உடன்பாட்டை தான் எட்டியுள்ளதாக கூறிவிட முடியுமா?

மூன்று, இணைந்த வடக்கு கிழக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கியே தமிழ் மக்களது அபிலாசையாக உள்ளது. நோர்வேயின் பிரகடனத்தின் கீழ் அவ்வகைத் தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பதை 2015 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு வரைபில் ஏன் உள்ளடக்கப்படவில்லை என்பது தமிழ் மக்களிடமுள்ள கேள்வியாகும். ஏக்கய ராட்சியம் என்பதற்கு அதிக விளக்கமளித்த தரப்புக்கள் 2002 பிரகடனத்தை இலகுவாக உள்வாங்கியிருக்க முடியும். ஏன் அப்போது அத்தரப்புக்களால் அத்தகைய விடயத்தை முன்னகர்தத்த முடியவில்லை என்பது இன்னோர் கேள்வியாகும். இதற்கு யாரும் ஏதாவது சப்பைக்கட்டு விளக்கமளிக்க முயலலாம். ஆனால் எதனை குறிப்பிட்டாலும் அக்காலப்பகுதியில் நோர்வே பிரகடனத்தை உள்வாங்காததன் நோக்கம் மட்டுமல்ல தற்போது அத்தகைய பிரகடனத்தை(?) முன்னகர்த்த வேண்டிய தேவை தவிர்க்க முடியாது அத்தகைய தரப்புக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னகர்த்தி தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தியலை முடிபுக்குக்கு கொண்டுவர முயலுகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழர் அரசியலை உயிர்ப்பிக்கும் உத்தி ஒன்றாக உள்ளது. இதில் வெற்றி அதிகவாக்குகள் என்றெல்லாம் அதிக குழப்பம் கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்குள் அடங்கியுள்ள தமிழர் அரசியல் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியாயின் அனைவரும் இணைந்து அத்தகைய தமிழர் அரசியலை ஏன் வென்றெடுக்க முடியாது என்ற கேள்வி இயல்பானது. நிராகரிப்பவர்கள் ஒன்றிணைந்து அதிக வாக்குகளை எட்ட முடியும். ஏன் அதற்கு அத்தகைய தரப்புக்கள் முன்வரத் தயாரில்லாதுள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் கொழும்புடன் சங்கமிக்கவில்லை. தமிழ் மக்களில் ஒரு குறிப்பிடப்பட்ட தரப்பினர் கொழும்பு அரசியலுடன் சங்கமித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகவோ சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்களாகவோ வடக்கு கிழக்கு தமிழர் தேசம் என்று கருத முடியாத நிலை வேகமாக அரங்கேறுகிறது. இதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சியினரும் பொறுப்புடையவர்கள் என்பதை நிராகரிக்க முடியாது. தமிழ் பொது வேட்பாளரை நிராகரிக்கும் தரப்புக்களிடம் இருக்கும் தமிழ் மக்களது தேசியம், ஐக்கியம், சுயநிர்ணயத்திற்கு அமைவான மாற்றுத்திட்டத்தை முன்வைக்க கோருவது தேவையாக உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலையை தென் இலங்கையும் கருத்தில் கொள்ளாது, பிராந்திய அரசான இந்தியாவும் அதனை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காது. சர்வதேச அரசியல் சூழலும் அதற்கு இசைவாக செயல்படாது. தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல் விடயத்தில் சரியான உத்திகளை வகுத்துச் செயல்படாது. அப்படியாயின் தமிழ் மக்களது அரசியல் இருப்பு அடிமையாகி, சிதைந்து, அழிந்து போவது மட்டும் தானா?

நான்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது முட்டாள்தனமான யோசனை (It’s Silly Idea)மற்றும் பைத்தியக்காரத்தனமான திட்டமும் கூட(Crazy Idea too) இது தமிழ் மக்களின் எதிர்காலத்தை ஆபத்திற்குள் சிக்கவைக்கும் விஷப்பரீட்சை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை ஒன்றிணைப்பது முட்டாள்தனமா? தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முயல்வது தவறான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களது அரசியலை மீளமைக்க தமிழ் பொது வேட்பாளரைப் நிறுத்துவதன் மூலம் சாத்தியமாக்க முடியும் எனக்கருதுவது பைத்தியக்காரத்தனமானதாக அமையுமா? இது விஷப்பரீட்சை எனில் அரசியல் என்பதெல்லாம் எத்தகைய பரீட்சை. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவது அரசியல் என்பது அடிப்படையான நியதியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் அரசியலை மீட்க முடியுமென கருதுவது புரட்சிகரமான பரிசோதனையாகும். அத்தகைய பரிசோதனையில் ஈடுபடுவதென்றும் முட்டாள்தனமானதாக தெரியவில்லை. இதயத்தால் ஒன்றிணைந்து எட்டப்பட்ட உடன்பாட்டின் முடிபில் அடைந்த நிலையை விட அரசியலுக்கான பரிசோதனை ஒன்றும் பைத்தியக்காரத்தனமாக தென்படவில்லை. தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை கோருவது ஈழத்தமிழர் மத்தியில் முட்டாள்தனமானதாகவும் பைத்தியக்காரத்தனமானதாகவும் ஆகிவிட்டதென்பதே எஞ்சியுள்ள கட்சி அரசியலாகுக உள்ளது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசுக் கட்சிக்குள் தலைமைக்கான போட்டியில் தேர்தல் வேண்டாம் என்ற போதும் கட்சியின் பிணக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்ற போதும் அதனை கட்சி உறுப்பினர்கள் யாரும் கேட்கவில்லை. தற்போது எப்படி தமிழ் வேட்பாளருக்காக செயல்படும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கோருவது. எப்படி அதனை நியாயப்படுத்துவது. ஒஸ்லோ பிரகடனமும் அதற்கான கோரிக்கையும் தமிழ் பொது வேட்பாளரை பலவீனப்படுத்தும் செய்முறையாகவே தென்படுகிறது. தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்களிடம் வாக்குக் கோரும் அரசியல் கட்சிகளே முன்னின்று செயல்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர்கள் தட்டிக்களித்தாலேயே சிவில் அமைப்புக்கள் முன்வந்துள்ளன. சிவில் அமைப்புக்களது முயற்சியையும் பலவீனப்படுத்த முயலுவது தமிழ் மக்கள் அசியலை பலவீனப்படுத்துவதாகவே அமையும். தமிழ் மக்கள் அரசியல் பலவீனம் தமிழ் அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)