March 16, 2026
அரசியல் கட்டுரைகள்

புடின்-மோடி பாதுகாப்பு ஒத்துழைப்பும் அமெரிக்காவின் இராணுவ சரக்கு விமானங்களின் இலங்கைத் தீவின் தரையிறக்கமும்?

இலங்கையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் அரசியல் ரீதியில் அதிகமான நெருக்கடிகளை வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன. பேரிடரை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளின் உதவியை நாடிய இலங்கை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்காத நகர்வுகளையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டுள்ளனர். சுனாமி பேரலைவின் போதும் இவ்வகையான நெருக்கடி ஒன்றுக்குள் இலங்கை தீவு முகம் கொடுத்திருந்தது. அது பெரும் அளவுக்கு சுனாமிக்கு முன்னரான உள்நாட்டு அரசியல் கொதிநிலையின் வெளிப்பாடாகவே கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் டித்வா புயல் ஏற்படுத்திய தாக்கம் என்பது இந்துசமுத்திர பிராந்திய அரசியல் போட்டியின் ஒரு பக்கத்தை அடையாளப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இக் கட்டுரையும் இலங்கைத் தீவின் பேரிடர் மத்தியில் சர்வதேச வல்லரசுகளுக்கிடையிலான அரசியல் போட்டியை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த04-06.12.2025 காலப்பகுதியில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் அதிக முக்கியத்துவத்தை தென்னாசிய பிராந்திய நாடுகள் எதிர்கொள்ள தொடங்கியிருந்தன. அதற்கு வலுவான ஒன்றாக இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வழிவகுத்தது. இலங்கையின் பேரிடர் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரித்ததோடு இந்தியாவுக்கு ரஷ்சிய ஜனாதிபதி மேற்பட்ட வருகை ஏனைய வல்லரசு நாடுகளை இலங்கை மீது கவனம் கொள்ள செய்திருந்தது. இது இலங்கையில் அரசியல்-இராணுவ நலன்களை முதன்மைப்படுத்தும் வல்லரசு நாடுகளை அதிக கவனம் கொள்ளச் செய்திருந்தது. இலங்கை தீவு மீது இந்தியா தனது இராணுவத்தை தரையிறக்குகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மட்டத்தில் அதிர்ச்சி நிலை ஒன்றை கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாக அமெரிக்கா அவ்வகையான சூழலை எதிர்கொள்வதற்கு பல சந்தர்ப்பங்களில் முனைப்பு காட்டி இருக்கின்றது. 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் அமெரிக்காவின் கவனம் ஈர்க்கப்பட்டு இருந்தது. அவ்வாறே சுனாமி அனர்த்தத்தின் போதும் அமெரிக்க இராணுவம் மீட்பு பணி என்ற அடிப்படையில் இந்தியாவைப் போன்று இலங்கைக்குள் பிரவேசித்தது. 2009 களில் போர் முடிபுக்கு வரும் போதும் அமெரிக்க போர்க்கப்பல்கள் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவுக்கு அண்மையாக தரித்திருந்தது. அவ்வாறே கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற போது மிலேனிய உடன்படிக்கைக்கு முயற்றதுடன் கோட்டா கேகம போராட்டத்திற்கு அடிப்படைத் திட்டங்களை தீட்டியதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. மிலேனியம் உடன்பாட்டில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை எந்தவிதமான தடையும் இன்றி இலங்கைத் தீவில் தரையிறக்க திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டது. இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதிக்கின்ற போது அமெரிக்க இராணுவத்தின் இராணுவ சரக்கு விமானங்கள் இலங்கை தீவில் தரையிறக்கப்பட்டு இலங்கை அரசியலோடு அமெரிக்க-இந்திய போட்டியின் போக்கினை வெளிப்படுத்தியிருந்தது. இதனை ஆழமாக அவதானிப்பது அவசியமானது.

முதலாவது, ரஷ்சியா ஜனாதிபதி இந்தியாவுக்கு இரண்டு நாள் அரச முறை பயணத்தை மேற்கொண்டு இருந்தது போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 1971 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பாதுகாப்பு உடன்வடிக்கைக்கு மேல் அதிகமாக இரு நாடுகளும் பரஸ்பரம் தமது நாடுகளில் இராணுவங்களையும் ஆயுதங்களையும் பரிமாற்றிக் கொள்வதற்கான உடன்பாடு (RELOS) ஒன்றை எட்டி இருந்தனர். ரஷ்சியாவின் மசகு எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்யக்கூடாது என்ற அமெரிக்காவின் விதியை மீறிய சந்தர்ப்பத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி அறவீட்டை தண்டனையாக பிரகடனப்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் நிபந்தனைகளை மீறி ரஷ்சியாவுடனான உறவினை இந்தியா கையாளுகின்றது. அமெரிக்கா இந்தியாவையும் தனது நலனுக்கேற்ற வகையில் ரஷ்சியாவிடம் இருந்து அந்நியப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தது. அவை எல்லாவற்றையும் கடந்து பிரிக்ஸ் அமைப்பை சுதேச நாணய பரிமாற்றத்திற்குள் ரஷ்சியா- இந்தியா- சீன போன்ற நாடுகளின் வர்த்தக நடைமுறையை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. ரஷ்சியாவும் இந்தியாவும் பொருளாதார இராணுவம் மற்றும் அரசியல் விடயங்களில் சர்வதேச மட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பினை புடினது இந்திய விஜயம் பலப்படுத்தி உள்ளது. இது இந்துசமுத்திரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு நெருக்கடிக்கு உள்ளது. இத்தகைய குழப்பத்தை எதிர்கொள்கின்ற விதத்தில் உடன்படிக்கைகளும் புரிந்துணர்வுகளும் இரு நாடுகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய கட்டமைப்பை தகர்ப்பதற்கான வழிமுறை இலங்கையின் நிகழ்ந்த பேரிடர் சார்ந்து அமெரிக்காவின் நகர்வு அமைந்திருக்கின்றது. ரஷ்சிய ஜனாதிபதி இந்தியாவில் இருக்கின்ற போது அமெரிக்கா தனது விமானங்களை இலங்கைத் தீவுக்கு நகர்த்துவதற்கான திட்டமிடலை மேற்கொள்ள வழி வகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது இலங்கை தீவிலும் அமெரிக்காவின் இராணுவ சரக்கு விமானங்கள் வடக்கு கிழக்கு மற்றும் தென் இலங்கை என்ற தளத்தில் அதன் நகர்வுகள் அமைந்திருந்தது. பலாலி திருவோணமலை அனுராதபுரம் கட்டுநாயக்கா போன்ற விமான நிலையங்களில் பேரிடக்கான உதவி பொருட்களோடு அமெரிக்க விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இது பெருமளவுக்கு இலங்கை தீவின் முழு ஆகாயப் பரப்பும் அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவும் வலுவான வாய்ப்புகளைக் கொண்டு தரையிறக்கம் சாத்தியப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. குறிப்பாக பலாலி விமான நிலையத்தில் இந்தியா கூறி வருவது போல் அல்லாது பாரிய இராணுவ சரக்கு விமானங்களை தரையிறக்க முடியும் என்பதை பிரித்தானிய கால இலங்கை பலாலி விமான ஓடுதளத்தின் அனுபவத்தோடு செயல்பட்டு இருக்கின்றது என்பது கவனிப்பதற்கு உரிய அம்சமாகும்.

மூன்றாவது அமெரிக்க இராணுவ பிரசன்னம் இலங்கை தீவில் தனது இராணுவத்தை தரையிறக்கும் போது இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற இராணுவம் மற்றும் மாலைதீவு கடற்படை படகுகள் நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி இருந்தனர். இது பெரும் அளவுக்கு பேரிடருக்கான நெருக்குவாரங்களில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கான உபயமாகவே தென்படுகின்றது. அவ்வகையான நடவடிக்கைகளை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் இலங்கைக்கு வழங்குவது என்பது மரபான மனிதாபிமான விடயமாகவே தெரிகிறது. ஆனால் அமெரிக்க இராணுவத்தின் இராணுவ சரக்கு விமானங்கள் இலங்கை தீவின் எல்லா பாகங்களிலும் இருந்த விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்தியா ரஷ்சிய நெருக்கம் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் தென்னாசிய பிராந்தியத்திலும் அதீதமான நெருக்கடியை அமெரிக்காவுக்கு ஏற்படுத்துகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆக்குஸ், இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் போன்றன இந்து சமுத்திரத்தை நோக்கி உபாயங்களாகவே உள்ளது. அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலிய (Hmas Stirling, Harold E. Holt) ஜப்பானில் அமைந்துள்ள குவாம் தீவு, டியாகோகாசியாத் தீவு போன்ற இடங்களில் அமைந்துள்ள இராணுவ-கடற்படைத் தளங்களை பாதுகாப்பதுவும் அவற்றின் நலன்களை தக்கவைப்பதுவும் அவசியமானது. அவை சார்ந்த இந்து சமுத்திரத்தின் அமெரிக்க தலையீட்டை ரஷ்சிய-இந்திய பாதுகாப்பு உடன்படிக்கை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை முறியடிக்கின்ற விதத்திலும் இந்தியா இலங்கை தீவில் தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்தி விடக்கூடாது என்பதிலும் அமெரிக்பா எப்போதுமே கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஓர் அமெரிக்க சதி என்று வரலாற்று ஆசிரியர் மு.திருநாவுக்கரசு 1988 ஆம் ஆண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். 2023 ஆண்டு பராளுமன்ற உரையாடலில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன் விவாதம் ஒன்றில் இலங்கை-இந்திய உடன்படிக்கை ஓர் அமெரிக்க சதி என்று குறிப்பிட்ட பதிவு ஒன்றும் உள்ளது. எனவே ஒரு நீட்சியான இராஜதந்திர அரசியலை அமெரிக்கா இலங்கை விடத்தில் நிலைப்படுத்தி வருகிறது. அவ்வாறு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையோடும், இந்திரா காந்தியின் படுகொலையோடும் சர்வதேச வல்லரசு ஒன்றின் ஈடுபாடு காணப்படுவதாக இரு படுகொலைகளையும் விசாரணை செய்த ஜெயின் தலைமையிலான கமிஷன் மற்றும் ஜே.எஸ்.வர்மா கமிஷன் என்பன உறுதிப்படுத்தி இருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. ஒரு நீண்ட வரலாற்றில் இலங்கை தீவு விடயத்தில் அமெரிக்காவின் அவதானிப்பும் பார்வையும் செல்வாக்கும் அதிகமாகவே வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கைத் தீவில் இந்தியாவின் அணுகுமுறை பொறுத்து அமெரிக்காவின் கவனம் அதீதமாகத் தெரிகின்றது. சீனாவை விட இந்தியாவே இலங்கை தீவில் காலூன்றுவது ஆபத்து என்ற ஒரு பார்வை அமெரிக்காவிடம் இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் இலங்கைத் தீவு இந்தியாவின் கொல்லைப்புற அரசியல் (Backyard Politics) என்ற கோட்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகவே தெரிகிறது.

எனவே பேரிடரை எதிர்கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் தமது பணியை முதன்மைப்படுத்துகின்ற போது மறுபக்கத்தில் அமெரிக்கா-இந்தியா-சீனா போன்ற வல்லரசுகளது நலன்களுக்கு ஏற்ற வகையில் இலங்கை தீவுக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக காணப்படுகிறது. இலங்கத்தீவின் அமைவிடம் அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்திருப்பது சர்வதேச அரசியல் பரப்பில் பொதுவான அம்சமாகத் தெரிகிறது. ஹான்ஸ் மோகன்தோ குறிப்பிடுவது போல் சர்வதேச அரசியலில் நாடுகளின் பொருளாதார உதவிகள் அதிகாரத்திற்கான அரசியல் என்கிறார். வெளிப்படையாக பார்த்தால் பேரிடருக்கான ஒத்துழைப்பாகவும் உதவியாகவும் அதிகாரத்திற்கான போட்டியாகவே உள்ளது. சர்வதேச அரசியல் நோக்கு நிலைகள் உதவிகளும் பிரசன்னங்களும் அல்லது தலையீடுகளும் அந்தந்த அரசுகளின் நலன்கள் சார்ந்த அம்சம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அத்தகைய அரசுகளின் போட்டிக் களமாகவே இலங்கைத் தீவு எப்போதும் காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)