April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

சுதந்திர இலங்கையில் நல்லிணக்கத்திற்கான பொறிமுறையும் தமிழர்களின் அபிலாசையும்?

சுதந்திர இலங்கையின் 78 வருடங்கள் நிறைவடைந்த போதும் நல்லிணக்கம் பற்றிய உரையாடல் இனங்களுக்கிடையே எட்டபட முடியாததென்றாக நகர்கிறது. இலங்கை தீவில் மூன்று பிரதான இனங்களும் ஒருமைப்பாட்டோடும் ஐக்கியத்தோடும் சமத்துவமான இறைமையுடனும் வாழும் ஒரு சூழலை நோக்கி செயல்பட முடியாது உள்ளன. இத்தகைய இனங்களுக்கிடையிலான முரண்பாடு கடந்த 78 வருடங்களாக நல்லிணக்கத்தின் பால்பட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து நகர்வுகளும் தோல்வியில் முடிந்தது. தற்போது இடதுசாரிகள் அல்லது சோஸலிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளப்படும் ஜே.வி.பி.யினர் மீண்டும் நல்லிணக்கம் பற்றிய உரையாடலை தொடங்கியுள்ளனர் இக் கட்டுரையும் நல்லிணக்கத்தின் சரியான பக்கங்களை அடையாளப்படுத்த முனைகின்றது.

தென் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து தரப்புக்களும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்குமாறும் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்புவதாகவும் தமிழ் அரசியல் கட்சியினர் மீது குற்றம்சாட்டுகின்றனர். கரிநாளை பிரகடனப்படுத்தி தமிழ் மக்கள் எதிர்புணர்வை சுதந்திரதினத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். இதனை நிராகரித்து கருத்துக்களை முன்வைக்கும் தென் இலங்கை ஆளும் தரப்பு நல்லிணக்கம் பற்றி உரையாட முயலுகிறது. தேசிய சுதந்திரதினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானது. இதில் எந்தவித இனமத மொழி பேதமும் இல்லை என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடதுசாரி அரசாங்கத்தின் அமைச்சர்கள் நல்லிணக்கத்தை தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல்வாதிகளிடம் கோருகின்ற நிலை ஆழமாக உரையாடப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது.

முதலாவது நல்லிணக்கப் பொறிமுறை என்பது சமமான வலுவுடைய இருதரப்புகளுக்கும் இடையில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாகும். இருதரப்பும் ஒரு விடயத்தில் சுமூகமாகவும் நன்மைபயக்கக் கூடிய விதத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையை நல்லிணக்கமாகும். அடிமைக்கும் எஜமானுக்கும் இடையில் ஒருபோதும் நல்லிணக்கம் எட்டப்படக் கூடியது அல்ல. அரசியல் ரீதியில் அதிகார அளவீட்டில் சம பலமுடைய தரப்புகள் நிகழ்த்துவது நல்லெண்ணைக்கு வழிவகுக்கும். இதில் விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு ஒத்துழைப்பு என்பன மிக அடிப்படையான அம்சங்களாகும். இதனை நோக்கி இரு தரப்புகளை கொண்டு வருவதற்காக மூன்றாவது தரப்பொன்று முயல்வது வழமையானதாக உள்ளது. அதே நேரத்தில் அத்தகைய இரு தரப்பும் குறித்த விடயத்தில் சுமூகமாகவும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் சம பலமுடையதாகவும் இருப்பது அவசியமானது. ஒரு தரப்பு குறிப்பிடும் விடையங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அதனைப் பின்பற்றுவதும் நல்லிணக்கமாகாது. ஒரு தரப்பின் கட்டளையை மறுதரப்பு ஏற்றுக்கொள்ளுகின்ற படிமுறை ஒன்று காணப்படுவது ஒருபோதும் நல்லிணக்கமாக அமைந்துவிடாது. இலங்கை தீவின் அரசியலில் தென்னிலங்கை முன்வைப்பதும் வடக்கு கிழக்கு நிராகரிக்கும் செய்முறையுமே நிகழ்ந்துவருகிறது. அல்லது வடக்கு கிழக்கு கோரிக்கை முன்வைப்பதும் தென் இலங்கை நிராகரிப்பதுமாகவே நல்லிணக்க செய்முறை நகர்கிறது. இதற்கு தென்னிலங்கை வைத்திருக்கும் பெயர் நல்லிணக்கம் என்பதாகும்.

இரண்டாவது இலங்கை தீவின் நல்லிணக்க பொறிமுறை மிக நீண்ட காலமாக தமிழ் மக்களால் அவர்களின் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பண்டா- செல்வா உடன்படிக்கை முதல் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நிகழ்ந்த ஆறுகட்ட பேச்சுக்கள் வரையும் அத்தகைய நல்லிணக்கம் முயற்சி ஒன்று தமிழர் தரப்பினாhல் தென்னிலங்கை அரசாங்கங்களோடு மேற்கொள்ளப்பட்டது. அவை எதுவும் தெளிவான முடிவுறுத்தல்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை. அகிம்சை வழியில் அல்லது மிதவாத அடிப்படையில் பயணித்த அரசியல் கட்சிகள் தென்னிலங்கை அரசாங்கங்களோடும் ஆட்சியாளர்களோடும் பல்வேறுபட்ட உடன்படிக்கைகளை நல்லிணக்கம் நோக்கி கையெழுத்திட்டுக் கொண்டனர். அவை அனைத்தும் அமுல்படுத்தப்படாமலே காணாமல் போயிருந்தது. ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த நல்லிணக்க செய்முறையும் எத்தகைய பயனும் இன்றி முறிவடைந்தது.

மூன்றாவது விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லிணக்க செய்முறை ஆறுகட்ட பேச்சுக்கள் டோக்கியோ வோசிங்டன் நிதி மகாநாடுகள் மற்றும் சுனாமி பொதுக்கட்டமைப்பு போன்ற அனைத்துக்கூடாகவும் முன்னெடுக்கப்பட்டு தோல்வி அடைந்ததோடு நல்லிணக்க செய்முறை முடிவுக்க வந்தது. அரசாங்க தரப்பும் சர்வதேச நாடுகளும் விடுதலைப்புலிகளே நல்லிணக்க செய்முறையை முறியடித்தவர்கள் என்ற குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் விடுதலைப்புலிகளை அவ்வகையான முறிவை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர நகர்வுகளையும் தந்திரோபாய செயல்பாடுகளையும் அரசாங்கமும் பிராந்திய சர்வதேச சக்திகளும் இணைந்து மேற்கொண்டு முறியடித்தனர். எல்லா பேச்சுவார்த்தை மேசைகளிலும் ஒப்புக்கொண்டவற்றை செயல்படுத்தாமல் காலத்தை இழுத்து அடித்து விடுதலை புலிகளை போருக்குள் தள்ளினர். விடுதலைப்புலிகள் போரை தொடங்குவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் தென்னிலங்கை ஆட்சியாளர்களும் பிராந்திய சர்வதேச அரசுகளும் மேற்கொண்டனர். இறுதியில் விடுதலைப்புலிகளின் அழிவோடு போருக்கான மூலகாரணம் விடுதலைப்புலிகள் என்று பிரச்சாரப்படுத்தி தமிழ் மக்களின் மூளைகளை வெற்றிகரமாக சலவை செய்தனர். தமிழ் அரசியல் தலைமைகளும் அதற்கு இசைந்து தமிழ் மக்களின் அரசியலை வீதியில் நிறுத்தினர். தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து தமிழரசியல் தலைமைகளும் தமிழ் மக்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போது மீண்டும் நல்லிணக்க பொறிமுறை ஒன்றின் அவசியம் பற்றி உரையாட இடதுசாரி அரசாங்கம் முன் வந்துள்ளது. இது உரையாடல் மட்டுமே அன்றி நடைமுறை அர்த்தங்கள் எதனையும் தரக்கூடியது அல்ல.

நான்காவது நல்லிணக்க செய்முறையின் இரண்டு பிரதான தரப்புகள் ஈடுபாடு செலுத்துகிறபோது சிறுபான்மை தேசியத்தின் அளவாலும் அதிகார இன்மையினாலும் பலவீனமான தமிழர் தரப்பு பல்வேறு சந்தர்ப்பத்தில் நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்டு தோல்வி அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தென்னிலங்கையின் நிலப்பரப்பையோ தென்னிலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையோ தென்னிலங்கை மக்களின் மனித உரிமைகளையோ நிராகரிக்கவில்லை. ஆக்கிரமிக்கவுமில்லை. அந்த மக்களை அடிமைப்படுத்தவுமில்லை. மாறாக தென்னிலங்கை தரப்புகளே வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நிலப்பரப்பு மீதும் வாழ்வாதாரத்தின் மீதும் உரிமைகள் மீதும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நல்லிணக்கம் தென்னிலங்கை தரப்புகளிடமிருந்து ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் எப்போதும் நல்லிணக்கத்திற்கு தயாராக இருக்கும் ஒரு இனமாகவே காணப்படுகின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அவர்களின் அரசியல் தலைமைகள் எல்லையற்ற விட்டுக்கொடுப்புகளை நல்லிணக்கத்திற்காக வழங்கி உள்ளனர். இடதுசாரிகள் நல்லிணக்கத்தின் செய்முறைகளை கடந்த காலங்களில் நிராகரித்தவர்.

எனவே நல்லிணக்க செய்முறை என்பது ஒரு தரப்பாக மட்டும் நிகழ்த்த முடியாது. சமமான இரு தரப்புகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை அடையும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவது நல்லிணக்க செய்முறையாகும். இதற்கான இரு தரப்புக்களும் உடன்பாடுகளையும் விட்டுக் கொடுப்புகளையும் ஒத்துழைப்புகளையும் அதிகம் கொண்டிருக்க வேண்டும். இலங்கை தீவின் அரசியலில் தமிழர்கள் அதிகம் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய போதும் எத்தகைய மாற்றங்களும் சாத்தியப்படவில்லை. தென்னிலங்கையில் இடதுசாரி வலதுசாரி என்ற வேறுபாடு இன்றி தமிழ் மக்களை சமமானவர்களாகவோ அங்கீகாரத்துக்குரியவர்களாகவோ இறைமை உடையவர்களாகவோ கருதாத நிலை காணப்பட்டதன் விளைவே நல்லிணக்கங்கள் அனைத்தும் காணாமல் போவதற்கான படிமுறையாகும். இலங்கைத் தீவில் நல்லிணக்கத்திற்கான படிமுறைகளைவிட நல்லிணக்கம் தோற்றத்தற்கான படிமுறையே அதிகமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)