August 2, 2026
அரசியல் கட்டுரைகள்

செம்மணி நோக்கிய அருளாளர்களின் போராட்டமும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையும்?

இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி புதைகுழியை நோக்கி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி மற்றும் சமாதானக் குழுவின் ஏற்பாட்டில்  அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஒன்றிணைந்து 30.07.2026 இல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இனப்படுகொலையின் சாட்சியமாக விளங்கும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணை முன்னிறுத்தியும் அமைதி வழியில் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். செம்மணி நோக்கிய நீதி மற்றும் சமாதாக்குழுவினர் மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டம் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக காணப்படுகிறது. சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்பல்கலைக்கழகங்களும் மௌனமாக இருக்கின்ற போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியதுடன் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இது ஒரு போராட்டம் மட்டும் கிடையாது. தமிழ் மக்கள் மத்தியில் தேங்கிக் கிடக்கும் மனவுணர்வுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதென்றாக உள்ளது. அருட்தந்தையரது போராட்டத்தைத் தொடர்ந்து அனைத்துத் தரப்புக்களும் அதற்குரிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. அருள்தந்தையர்களது போராட்டம் முன்னோடியானது. ஏனைய தரப்புகளையும் செம்மணிக்கு நீதி கோரி போராட வேண்டிய தேவைப்பாட்டை உணர்த்தியுள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு வேண்டி நியாயத்தின் கோரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது மட்டுமே இழந்தவற்றுக்கான நீதியை நோக்கி நகர முடியும்.

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அனைத்து போராட்ட வழிமுறைகளையும் கைவிட்டு சரணடையும் மனோநிலையோடு காணப்படுகின்றனர். தோல்வி கண்ட சமூகத்தின் உணர்வுகளோடு ஈழத்தமிழர்கள் காணப்படுவதுடன் தோல்வி கண்ட சமூகத்தின் ஆலோசனையோடு பயணிக்கின்ற ஒரு துயரத்தை எதிர்கொண்டுள்ளவர்களாக விளங்குகின்றனர். அதிலிருந்து விடுபட முடியாதவர்களாகவும் அச்சமுடையவர்களாகவும் எதற்கும் தயாரில்லாதவர்களாகவும் தென்படுகின்றனர். தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்குமென ரஷ்சிய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் (Anton Pavlovich Chekhov) முன்வைக்கும் கருத்தை மீளவும் இப்பகுதியில் நினைவு கொள்ள வேண்டிய நிலையில் ஈழத்தமிழரது அரசியல் உள்ளது. ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். எந்த சமூகம் அற்பமான விடயங்களை பெரும் தலைப்புக்களாக மாற்றி நல்லுணர்ச்சி பெறும் வகையில் சிந்தனைகளை எல்லாம் மிகைத்தனமாக இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்தச் சமூகத்தில் அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகம் என்றார். செக்கோவ் குறிப்பிடுவது போல் தோல்விகண்ட சமூகம் உண்மைகளை விட போலிகளையும் பொய்களையும் புனைவுகளையும் அதிகம் முன்னிறுத்தி செயல்படும். அவ்வாறு செயல்படுவதற்கான தூண்டுதல் தொடர்ச்சியானதாக இருக்கும். அதனை ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அதனுடைய போலிகளை உண்மை என்று உரைத்து அதில் அவர்கள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும், மேன்மைத்தனமும் அடைகிறார்கள். கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி பேராட முடியாதவர்களாக விளங்கும் அளவுக்கு மனிதமற்றவர்களாக ஈழத்தமிழர் மாறிவிட்டனர்.

ஈழத்தமிழர் மத்தியில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்வது மட்டுமின்றி கொள்கையற்ற மக்கள் நலனற்ற வாக்குகளை குவிப்பதற்கான உத்திகளை வகுப்பவர்களாக உள்ளனர். தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமிழ்த் தேசிய உணர்வோடு உண்மையாக பயணிப்பவர்கள் என்றால் பாராளுமன்றத்தில் இருந்து உள்ளூராட்சி மன்றம் வரையும் தமது கட்சி உறுப்பினர்களை செம்மணிக்கு முன் நிறுத்துவார்களேயாயின்அது ஒரு நீண்ட வலிமையான போராட்டமாக விளங்கும். ஈழத்தமிழர்கள் யாருக்கும் எதிராக போராட வேண்டியதில்லை. தமக்கான நீதியைக் கோரி போராடுவது ஒன்றும் அரசுக்கோ ஆட்சிக்கோ விரோதமானதல்ல. அகிம்சை ரீதியில் நீதியை கோரி போராடுவது ஈழத்தமிழருக்கான உரிமையாகும். அதனை கட்சிகள் முன்னெடுப்பதற்குரிய அவசியமும் காலமும் செம்மணியில் புதையுண்டு போயுள்ள உறவுகளது என்புகள் தந்திருக்கிறன. தமது அரசியல் கட்சி உறுப்பினர்களையும் தொண்டர்களையும் செம்மணிக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதற்கான பதிலும் சர்வதேச கவனமும் அதிகரிக்கும். அவ்வகையான சூழல் ஒன்றை நோக்கி செம்மணியை கட்டமைக்க முடியும். அதற்கு அரசியல் கட்சிகளும் அதன் தொண்டர்களும் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் தயாராக வேண்டும்.

ஈழத்தமிழரது அரசியலில் அதிக கவனம் கொண்டிருக்கும் சிவில் அமைப்புகள் தமக்குள் மோதிக்கொள்வதும் போராட்டத்திற்கு உரிமை கோருவதும் அரசியலாக மாறி இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்புகளை செய்வதும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதுமாக கடந்து செல்ல முயலுகின்றனர். அவர்களால் முழுமையாகவும் திரட்சிமிக்கதாகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத சூழல் ஒன்றை கண்டுகொள்ள முடிகிறது. இதன் விளைவு ஈழத்தமிழரது அரசியல் கட்சிகள் போன்றே சிவில் அமைப்புகளது நடவடிக்கைகளும் நெருக்கடிமிக்கதாக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தி ஒன்றிணைத்து தீவிரமான நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு சிவில் அமைப்புகள் வேண்டும். அத்தகைய தரப்புகள் சரியான முறையில் நியாயத்தை முன்வைத்து நீதியை கோருமாக இருந்தால் அதனை நோக்கி மக்களை ஒன்று சேர்ப்பத்தும் உலகத்தின் கவனத்தை கொண்டுவரவும் முடியும். அதற்கான முயற்சிகளை சிவில் தரப்புகள் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பாண்மை காணப்படுகிறது.

அருட்தந்தையரின் நடவடிக்கைகள் போன்றே வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வியை போதிக்கும் நிறுவனங்கள் என்பன ஒன்று சேர்ந்து செம்மணிக்கான நீதியை கோருவது அவசியமானதாக காணப்படுகிறது. கோரிக்கையின் அடிப்படை ஒன்று சேர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது அதற்கான பதிலை உலக நாடுகளும் தென்னிலங்கையும் வழங்க வேண்டிய நெருக்கடிக்குள் உள்ளாக்கப்படும். அதற்கான திட்டமிடலையும் நகர்வுகளையும் அமைதியாகவும் நாகரிகமாகவும் சாத்தியப்படுத்த முயல்வது முக்கியமான அம்சமாக விளங்குகிறது. அனைத்து நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் செம்மணி படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொருவருடைய உறவுகள் சார்ந்தவர்களாகவே காணப்படுவார்கள். அத்தகைய உறவுகள் அனைத்தும் ஒன்று சேருகின்ற போது சர்வதேச நீதியை சர்வதேச விசாரணைக்கு உட்பட்ட நீதியை ஈழத்தமிழருக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும். இது தனித்து கோரிக்கையாக அன்றி யதார்த்தத்தில் அத்தகைய அடைவை நோக்கி கிளர்ந்து எழுவது ஒவ்வொரு ஈழத்தமிழரதும் கடமையாக உள்ளது.

எனவே ஆத்ம விடுதலையை முன்னிறுத்திய அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும் செம்மணிக்கு நீதி கோரும் போது இதர ஈழத்தமிழர்களும் மத அமைப்புகளும் அத்தகைய எண்ணத்தோடு நியாயம் கோருவது அவசியமானது. அவர்களது முன்னோடியான நகர்வுகளை பின்தொடர்ந்து ஈழத்தமிழர்கள் திரட்சி பெற்று நீதியை கோருவது அவசியம். இதன் வாயிலாக ஈழத்தமிழர் அடைந்த துயரங்களையும் அடையப்பட வேண்டிய இலக்கையும் முன்னோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஈழத்மிழனுக்கும் உண்டு. அதனை உணர்த்தும் அம்சமாகவே செம்மணி மனிதப் புதைகுழி விளங்குகிறது. செம்மணியை நோக்கி ஈழத்தமிழர்கள் திரட்சி பெறுவது நீதியை கோருவதும் அதற்கான நியாயத்தை பெற்றுக்கொள்ளவும் அதன்படி ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மௌனம் காக்கும் ஓரினம் இறுதியில் மௌனமாக காணாமல் போகும் என்பதை நினைவு கொள்ளுவது அவசியமானது.

போராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:யாழ்.தினக்குரல்)