இலங்கை இந்தியா உறவை பலமானதாக கட்டமைப்பதற்கு இரு தரப்பும் கவனம் கொள்கிறன. 06.08.2026 வருகை தந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) அதிக உடன்பாடுகளையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தி இருந்ததுடன் இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் வாதிகளையும் சந்தித்து உரையாடி உள்ளார். மிஸ்ரியின் இலங்கை அரசியல்வாதிகளுடனான சந்திப்பு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதாகவும் பொருளாதார அடிப்படையில் பாரிய ஒத்துழைப்புகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் அது வழமையான மரபு சார்ந்த உத்தரவாதங்கள் என்று விமர்சிக்கப்படுகிறது. மறுபக்கத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவது, அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பில் அழுத்தமான சில வார்த்தைகளை வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவுச்; செயலாளர் உடனான சந்திப்புகளில் பிரதானமானதாக ஈழத்தமிழர் அரசியல் பற்றிய உரையாடல் முக்கியமானதாக காணப்பட்டது. அதன் பிரகாரம் ஈழத்தமிழருடைய அரசியலில் இரு முக்கியமான அம்சங்கள் உரையாடப்பட்டது. அதனை விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது மாகாண சபை தேர்தலை நடாத்துவதும்; அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவமாகும். இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. 39 வருடங்களுக்கு(1987) முன் கைச்சாத்திடப்பட்ட உடன்பாடு தொடர்பில் அதன் உள்ளடக்கங்களை அமுலாக்குவது பற்றி உரையாடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் மத்தியில் மாகாண சபை முறைமை சார்ந்து இருவேறு விவாதங்கள் உண்டு. குறிப்பாக மாகாண சபை எத்தகைய அதிகாரமற்றது என்ற ஒரு விவாதமும் மாகாண சபையே எஞ்சி இருக்கும் ஒரு அம்சம் என்ற விவாதமும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் மாகாணசபை முறைமை உருவாவதற்கு முன்னரும் பின்னரும் அரசியலில் சமஸ்டி முறைமையும், தனி நாட்டுக்கான கோரிக்கையும் காணப்பட்டது. ஈழத்தமிழர் தனிநாட்டை உருவாக்குவது பற்றிய அபிலாசைகளைவிட இந்தியாவே அத்தகைய கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தது என்பது நிராகரித்துவிட முடியாத வரலாறாயாகும். இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் மேற்குறித்த இரண்டு கோரிக்கைகளுக்குள்ளும் இயங்கியவர்கள். ஒரு தரப்பினர் சமஸ்டியை கோரிக்கையாக மட்டும் கொண்டிராது தமது கட்சிக்கே சமஸ்டி கட்சி (Federal Party) என்ற கருத்து நிலையில் உருவெடுத்தவர்கள். ஏனையவர்கள் தனி நாட்டுக்குரிய கோரிக்கைகான போராட்டத்தை முன்வைத்து ஆயுத வழியில் தீர்வை அடைய முயன்றவர்கள். ஆனால் அத்தகைய இருதரப்பினரும் மாகாண சபையும், அதன் மூலாதாரமான 13வது திருத்தத்தையும் முன்னெடுப்பது பற்றி இந்தியாவுடன் காலம் காலமாக உரையாடுபவர்களாக உள்ளனர். மீள மீள உரையாடுவதே இவர்களது அரசியல். இத்தகைய மாகாண சபையையும் 13 வது திருத்தத்தையும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவை முன்னெடுப்பதற்கு இந்தியாவோடு உரையாடி காலத்தை கடந்தியவர்கள். 2009 களுக்கு பின்னரான கடந்த 17வருடங்களில் ஏனும் அத்தகைய விடயத்தை ஏன் அமுல்படுத்த முடியவில்லை என்பதை அத்தரப்புக்கள் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர். மாகாண சபையையும் 13வது திருத்தத்தையும் முழுமையாக நிறைவேற்ற அவர்களது அரசியல் நகர்வினால் முடியவில்லை என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் அதே எல்லையில் உரையாடத் தொடங்கியுள்ளனர். ஆனால் அத்தகைய உரையாடல்களுக்கான உத்தரவாதங்கள் எவையும் இதுவரை இலங்கை அரசியலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அது மட்டுமல்ல இந்தியாவோடு மாகாண சபை கடந்து எந்த விடயத்தையும் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் உரையாடுவதற்கு தயாராக இல்லை. அப்படியான ஒரு சூழலை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் செம்மணி மனித உரிமை விவகாரம் நில ஆக்கிரமிப்பு போன்றவற்றை உரையாடுகின்ற அளவுக்கு இந்தியாவோடு எத்தகைய மனித உரிமை மீறல்சார்ந்த விடயங்கள் உரையாடுவதை தவிர்த்து வருகின்றனர். மாகாண சபை முறைமை உட்பட 13வது திருத்தம் சட்டமூலத்தின் முழுமையும் ஒருபோதும் சாத்தியப்படாது என்பதை புரிந்து கொள்வது அவசியமானது. இதனை தமிழ் அரசியல் கட்சிகள்புரிந்து கொள்ளாத நிலையில் இத்தகைய உரையாடலை செய்வதாக வாசகர்கள் விளங்கிக் கொள்ளக் கூடாது. தமிழ் அரசியல் வாதிகள் தமது காலத்தை கையாளுவதற்கு பயன்படுத்தும் உத்தியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டி உள்ளது. கடந்த காலத்திலும் இதனையே முன்னோடி அரசியல்வாதிகளும் செய்து முடித்துள்ளனர்.
இரண்டாவது புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைமை கோரிக்கை ஒன்றை இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் பல காணப்பட்டாலும் பிரதானமாக புதிய அரசியல் அமைப்பு ஒற்றையாட்சியை முன் நிறுத்தக் கூடாது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு அடிப்படையில் ஒற்றையாட்சி மூல காரணம் என்பதை புரிந்து கொள்ளப்பட்டதன் அடிப்படையில் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்க இருக்கும் புதிய அரசியல் யாப்பாவது சமஸ்டி அடிப்படையிலானதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையாக உள்ளது. சமஸ்டியே இலங்கையின் தேசிய இன முரண்பாட்டுக்கு தீர்வாக அமையும் என்ற எண்ணத்தோடு முன்மொழியப்பட்டுள்ளது. இராஜதந்திரிகள் அரசியல் தலைவர்களின் ஆலோசர்களாகவும் கொள்கை வகுப்பாளர்களாகவும் காணப்படுவது வழமையான புரிதலாகும். அதனை எட்டுவதற்கான உத்திகளை கடித முன்மொழிவு உள்ளதாகவே தெரிகிறது. இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை ஆட்சியாளர்களோடு உரையாடுகிற போது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை-இந்திய தரப்புக்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிட்ட இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவெரு நடவடிக்கைக்கும் இலங்கை பிரதேசம் பயன்படுத்தப்படாது என இலங்கையின் ஜனாதிபதி ஆநுர குமாரதிஸநாயக்கா உறுதியளித்த விடயத்தை மீளவும் வரவேற்று உரையாடியிருப்பதன் நோக்கங்களை அளவீடு செய்ய தவறக் கூடாது. அந்த அடிப்படைகளுக்குள் இருந்து கொண்டே இந்திய வெளியுறவுச் செயலாளர் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வகையான சந்தர்ப்பங்களில் முன்னோக்கி செல்வதற்கான எண்ணங்களை முன் வைப்பது அரசியல் கட்சிகளுக்கான அடிப்படை நியமமாகும். இலங்கை தீவு முழுவதற்கும் ஆட்சிக் கட்டமைப்பை மாற்றம் செய்யாது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படாது என்பது தீர்க்கமான முடிவாகும். அதற்காக தேசிய இன பிரச்சினை ஒன்று இல்லை என்று நிறுவும் முயலும் முயற்சிக்கான ஒத்துழைப்பு அல்ல. வடக்கு கிழக்கு பிரதேசம் எந்த உடன்பாட்டில் உத்தரவாதப்படுத்தப்படுகிறதோ இல்லையோ தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை நிராகரிக்க முடியாது. தேசிய இனம் பற்றிய புரிதலை தேசிய இன பிரச்சினைக்கான தீர்வுக்குரிய புரிதலையும் கொண்டுள்ள இடதுசாரி மற்றும் வலதுசாரி தரப்புகள் அதனையே உறுதிப்படுத்துவதாக வரலாறு துலக்குகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் சுயாட்சியோடு பாரம்பரியமான வாழ்விடத்தில் இறைமையுடன் இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்தை அரசியலமைப்பு உள்வாங்குமாக இருந்தால் அதன் விளைவு ஆரோக்கியமான இலங்கையின் எதிர்காலத்திற்கானதாகும்.
எனவே இந்திய வெளியுறவுச் செயலாளர் வருகையின் கலந்து கொள்வதற்காகவோ எண்ணிக்கைக்காகவோ செயல்படுவதை விடுத்து அக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து அதனை அடைவதற்கு முயல்வது விவாதிப்பது தமிழ் மக்களின் அரசியலுக்கான நலன் மட்டுமல்ல இலங்கை தீவுக்கான நலனாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமது கட்சிக்குள் இருக்கும் ஜனநாயக விரோத செயல்களை அடையாளப்படுத்தவும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளை முன்னிறுத்துவதும் அதனை ஒரு சாதனையாக கருதுவதும் இவர்களது அரசியல் கொண்டாட்டமாக அரங்கேரி நிறைவு பெறுகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி: யாழ்.தினக்குரல்)
