August 10, 2026
அரசியல் கட்டுரைகள்

சமாதானத்தையும் போரையும் போரியல் உத்தியாக அமெரிக்க-இஸ்ரேல் பயன்படுத்துகிறதா?

அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஈரானுடனான போரினால் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலின் நலன்காக்கும் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றதாகவே தெரிகிறது. இதனை வியட்நாம் போர் உடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பீடும் அழிவும்; ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது. வியட்நாம் போரில் அமெரிக்கா அழிவுகளை அடுத்து போரை நிறுத்திக் கொண்டது. ஆனால் மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் அழுத்தத்தினால் போரை நிறுத்த முடியாமல் நெருக்கடிக்குள் வல்லரசின் பலம் சிக்கியுள்ளது. இக் கட்டுரையும் அமெரிக்கா எதிர்நோக்கும் நெருக்கடியையும் ஈரானின் பிந்திய போரியல் உத்திகளையும் நோக்குவதாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதெனவும் சமாதான உடன்பாடு எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கும் அதே வேளை போர் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார். ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் இத்தகைய இரட்டை உத்தி காணப்படுகின்றது. அதே வேளை மீண்டும் இஸ்ரேல் லெபலான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. பதிலாக ஹவுத்திக் கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பெற்றோலியக் கப்பல்களையும் இராணுவ இலக்குகளையும் நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் வளைகுடா நாடுகளில் காணப்படும் அமெரிக்கப் இரகசிய புலனாய்வுத் மையங்களையும் இராணுவ தளங்கள் மீதும் தாக்குதலை நிகழ்த்தியதன் மூலம் பாரிய சேதங்களை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆசியாவில் குவிந்திருக்கும் அமெரிக்க இராணுவ புறனாய்வுத் தளங்கள் அழிந்து கொண்டு போகின்ற நிலையில் அமெரிக்க பின் தளங்கள் மேற்காசியாவில் முடிவுக்கு வருகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பிலான விடயங்களை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது மேற்காசியாவின் அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) தனது பதவியை இராஜினாமா 17.மார்ச் 2026 இல் செய்திருந்தார். அவர், ஈரானுடனான போரை ஆதரிக்க முடியாது என்றும், இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசின் உயர்மட்ட நெருக்கடியாக கருதப்பட்டது. மேலும் அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளைத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கெவிச் (Alexus Grynkewich), தற்போது கிடைத்திருக்கும் கடற்படை வளங்கள் போதுமானதாக இல்லையென பென்டகனுக்கு எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் போர்க்கப்பல்கள் வழங்கப்படாவிட்டால், அமெரிக்க தாயகத்தின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்; அதனால் இஸ்ரேலுக்கு இதுவரை வழங்கிய அளவிலான ஏவுகணை பாதுகாப்பை தொடர்ந்து வழங்குவது கடினமாகலாம் என்று அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய வளங்கல் நீண்டகாலம் போதாது என்ற எச்சரிக்கை போருக்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, கூட்டுப் படைத் தலைமை ஜெனரல் டான் கெய்ன்(Joint Chiefs Gen. Dan Caine), ஈரானுடனான போரிலிருந்து அமெரிக்கா ஒரு வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் ராட்க்ளிப்(John Ratcliffe), வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ(Marco Rubio) மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்( JD Vance) போன்ற உயர்மட்ட ட்ரம்ப் ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏனெனில், மோதலைத் தீவிரப்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள இராணுவ வழிமுறைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், வான்படையால் மட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நோக்கங்களை அடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் ஈரானின் இலக்காக மேற்காசியாவில் உள்ள இராணுவ புலனாய்வு மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் தளங்கள் மீது நடத்திய தாக்குதல் காரணமாக ஏற்பட்டதென்றே தெரியவருகிறது. மேற்காசிய நாடுகள் மீது ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு வலுவான காரணம் ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது. தனது நாட்டு மக்கள் தாக்கப்படுகிறபோது அதற்குரிய பதில் தாக்குதல்களை மேற்காசியாவில் இருக்கும் அமெரிக்கத் தளங்களை இலக்கவைக்கப் போவதாகவும் முழுமையாக அழித்தொழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய மேற்காசியாவில் அமெரிக்காவில் இராணுவ உத்திகளும் பலமும் முடிவுக்கு வருவதாகவே தெரிகின்றது.

இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி தப்பிக்க முடியாத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சிக்கியுள்ளதாகவும் ஈரான் மீதான அமெரிக்கப் போர் நிரந்தரத் தீர்வுக்கு வராது என்றும் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர் ராபர்ட் பேப் கூறுகிறார். ஒன்று, அதிபர் ட்ரம்ப் போரைக் கைவிட்டு பாரசீக வளைகுடாவில் ஒரு வளர்ந்து வரும் சக்தியாக ஈரானைத் தொடர்ந்து வலுப்பெறச் செய்வதுடன் எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைப் பெறவும் அனுமதிக்க வேண்டும். இரண்டு, ட்ரம்ப் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும். மூன்றாவது வழி என்று எதுவும் இல்லை. ஒன்றுதான் எஞ்சியுள்ளது. அதாவது பதற்றத்தை அதிகரிக்கும் பொறி என்று அவர் கூறினார். ஹிஸ்புல்லாக்களை அழித்தொழித்துவிட்டதாக தெரிவித்த இஸ்ரேல் மீண்டும் லெபலான் மீதான தாக்குதலை ஆரம்பித்துள்ளமை அதிக குழப்பத்தை தருகிறது. இஸ்ரேல் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பின்பற்றிய லெபலானுடனான போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதே போன்று ஹவுத்திக் கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் எண்ணை கப்பல்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளமை வலுவான பிராந்திய நெருக்கடியாக மாறி உள்ளது. சவூதி அரேபியாவில் எண்ணைக் கப்பகள் ஆப்பிரிக்க கண்டத்தின் கடல் பாதைகளை பயன்படுத்தி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் அளவுக்கு மேற்காசியா உடனான உலக நாடுகளின் எண்ணை வர்த்தகத்தையும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தையும் முற்றாகவே சீர்குலைத்துள்ளது. இதன் மூலம் பெற்றோலியத்தின் விலை அதிகரிப்பு மட்டுமின்றி மேற்காசியாவுக்கான சந்தை வாய்ப்பு உலக நாடுகளுக்கும் இடையில் முடங்கும் நிலை ஏற்படும்.

மூன்றாவது அமெரிக்காவின் இலக்கு அனைத்தும் தோல்வியடைந்ததோடு இப்போரை நீடிப்பதற்கும் அதன் மூலம் ஈரானை நெருக்கடி உள்ளாக்குவதற்கும் அமெரிக்க நட்பு நாடுகளும் அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன. அதற்கான உத்திகளை அமெரிக்கா வகுத்து இருப்பதோடு போரையும் சமாதானத்தையும் சமதளத்தில் பிரயோகப்படுத்தி மாற்றங்களை எட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. கடந்த காலங்களில் இஸ்ரேல் மீதான அராபிய நாடுகளின் தாக்குதல்கள் அனேகமானவை காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் எதிர்நோக்கியிருந்த தோல்விகளை வெற்றிகளாக இஸ்ரேல் மாற்றியது. அதே உத்தியை நவீன தொழில் நுட்ப சூழலிலும் இஸ்ரேலியர்கள் பின்பற்றுகின்றனர். அதனையே இஸ்N;ரல்-அமெரிக்க கூட்டு மேற்காசியப் பிராந்தியத்தின் மீது ஏற்படுத்த திட்டமிடுகிறது நீண்ட காலத்துக்கு தாக்குப்பிடிப்பதற்கு தயாராக வேண்டும் என்பது ஈரானிய கொள்கை வகுப்பாளர்களிடம் காணப்படும் பிரதான விடயமாகவுள்ளது. இப்போரை அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு காலத்தை நீடிப்பதன் ஊடாக வெற்றிகொள்ளலாம் என்பதை முதன்மைப்படுத்தி இருப்பதோடு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவை அடிப்படையாகக் கொண்டு அதனை நகர்த்த திட்டமிடுகிறது.

நான்காவது அமெரிக்க இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கு இடையில் நிலவும் நட்புறவை கடந்து அமெரிக்க மக்களும் இராணுவ வல்லுனர்களும் புலனாய்வாளர்களும் இஸ்ரேலுக்கு எதிரான அணுகுமுறைகளை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது நிரந்தரமாகவே சாத்தியப்படாவிட்டாலும் ஈரானுடனான போரில் இஸ்ரேலியர்களுக்கு பாரிய நெருக்கடி ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பான களத்தை உருவாக்கக் கூடியதாக மாற இருக்கின்றது.15, யூலை 2026 அன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இஸ்ரேலுக்கான ஆண்டுதோறும் வழங்கப்படும் 3.3பில்லியன் அ.டொ. இராணுவ உதவியை நிறுத்தும் தீர்மானம் வாக்கெடுப்புக்குவந்தது. இந்தத் தீர்மானம் 314–104 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறினாலும் எதிரான வாக்குகள் அமெரிக்க மனோநிலையைக காட்டுகிறது. .இஸ்ரேலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையிலும் இஸ்ரேலுக்கு எதிரான நியோர்க் நகர மேயரின் கருத்துக்களும் மக்களது போராட்டங்களும் இஸ்ரேலிய-அமெரிக்க உறவில் விரிசலை தோற்றுவிப்பதற்கான முனைப்புகளை கொண்டு இருக்கின்றமை புலனாகிறது. இது உடனடியான விளைவை தராவிட்டாலும்; ஈரானுடனான போரில் பாரிய விளைவை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தக்கூடியது என்று கணிப்பீட்டுக் கொள்ள முடியும்.

எனவே குழப்பகரமான தீர்மானங்களை கடந்து தீர்க்கமான தீர்மானங்களை நோக்கி ஈரான் நகர்கின்றது. ஈரான் போரில் அதிக மாற்றங்களை அடைந்திருக்கிறது. போரை அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு காலத்தை நீடிப்பதன் மூலம் வெற்றி கொள்ளத் திட்டமிடுகின்றது. உத்தரவாதப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் சமாதானத்தையும் போரையும் சமதளத்தில் பிரயோகிப்பதில் வெற்றி கண்டு வரும் அமெரிக்கா- இஸ்ரேலிய போரில் உத்தி போரிலிருந்து வெளியே வர முடியாத ஒரு நிலையை தோற்றுவித்திருக்கிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)